'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 102

ஜனவரி மாதக் கடுங்குளிரில் தலைநகர் தில்லி உறைந்து போயிருந்தது.  தில்லி குளிர் ஒரு தனி சுகம்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 102

ஜனவரி மாதக் கடுங்குளிரில் தலைநகர் தில்லி உறைந்து போயிருந்தது. தில்லி குளிர் ஒரு தனி சுகம். ஒருபுறம் குளிராக இருந்தாலும், இன்னொரு புறம் பூத்துக் குலுங்கும் மலர்கள், நாற்சந்திகளில் அமைந்த வட்ட வடிவப் பூங்காக்களின் புல்வெளிகளை மேலும் அழகுபடுத்திக் கொண்டிருக்கும். மதிய வேளையில் வெயில் தலைதூக்கும்போது, அந்தப் புல்தரைகளில் நண்பர்கள் கூடி அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் காட்சி ரசனைக்குரியது.

அசோகா ரோட்டில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சோமநாத் சாட்டர்ஜியின் வீட்டில் அவரது பேட்டிக்காக நான் வரவேற்பறையில் காத்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தரப்பட்டிருந்த நேரத்துக்கு முன்பாகவே சென்றுவிட்டதால் அங்கே இருந்த ஆங்கிலப் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று அங்கே பரபரப்பு எழுந்தது. வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்கள், அதனுடன் இணைந்த உதவியாளர் அறைக்கு முண்டியடித்துக் கொண்டு செல்வதைப் பார்த்து நானும் தொடர்ந்தேன். அங்கே இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் தூர்தர்ஷனின் சிறப்புச் செய்தியாக ஒரு "ஸ்க்ரோலிங்' ஓடிக் கொண்டிருந்தது.

இப்போது போல 24 மணிநேர செய்திச் சேனல்கள் அப்போது கிடையாது. தனியார் தொலைக்காட்சிச் சேனல்களும் இப்போதுள்ள அளவுக்கு இல்லாத நேரம். பெரும்பாலான வீடுகளிலும், அலுவலகங்களிலும் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிகள்தான் இருந்தன. முக்கியமான செய்திகள் என்றால், நிகழ்ச்சிகளுக்கு இடையே "ஸ்க்ரோலிங்' போடுவார்கள்.

ஹவாலா வழக்கில் பாஜக தலைவர் எல்.கே. அத்வானி, திவாரி காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் சிங், காங்கிரஸ் தலைவர் மாதவராவ் சிந்தியா உள்ளிட்ட பல தலைவர்கள் மீது மத்திய புலன் விசாரணை அமைப்பு (சிபிஐ) உச்சநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதுதான் பரபரப்புக்குக் காரணம். மிகப் பெரிய அரசியல் பூகம்பம் வெடிக்க இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

சோமநாத் சாட்டர்ஜி உடனடியாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி. பவனுக்கு செல்ல வேண்டும் என்பதால், எனக்குத் தரப்பட்டிருந்த "அப்பாயின்மென்ட்' ரத்து செய்யப்பட்டிருப்பதாக அவரது உதவியாளர் தெரிவித்தார். வேறு வழியில்லாமல் அங்கிருந்து அகன்று, அதே சாலையில் இருந்த பாஜக தலைமையகத்தை நோக்கி நடந்தேன். அதற்குள் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அங்கே கூடிவிட்டனர்.

""முழுமையான தகவல் கிடைத்த பிறகுதான் கருத்துக் கூற முடியும்'' என்று நிருபர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் சுஷ்மா ஸ்வராஜ். ஒருவர் பின் ஒருவராக மூத்த தலைவர்கள் காரில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கே நிற்பதில் பயனில்லை என்று உணர்ந்து நகர்ந்து விட்டேன்.

உண்மையாகச் சொல்லப் போனால் ஜெயின் ஹவாலா டைரி வழக்கு என்பது உச்சநீதிமன்றம் அவசரக் கோலத்தில், தனது அதிகாரத்தைக் காட்ட உருவாக்கிய தவறான முன்னுதாரணம். நீதித்துறையின் வரம்பு மீறல்களுக்கும், தன்னிச்சையான முடிவுகளுக்கும் 1993 இரண்டாவது நீதிபதிகள் வழக்கு ஏற்கெனவே வழிகோலியிருந்தது.

1991-இல் இரண்டு காஷ்மீர் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது, ஹவாலா மூலம் தங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கிடைப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். யார் மூலம், எப்படி ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது என்கிற சிபிஐ-யின் விசாரணையில், எஸ்.கே. ஜெயின் என்கிற தொழிலதிபருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது.

தில்லியின் புறநகர் பகுதியில் அமைந்த எஸ்.கே. ஜெயினின் தோட்ட பங்களாவை சோதனையிட்டபோது, சிபிஐ அதிகாரிகள் ரொக்கமாக ரூ.90 லட்சமும் (அப்போது அது மிகப் பெரிய தொகை), ஒரு டைரியையும் கைப்பற்றினர். அந்த டைரியில் 115 அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பெயர்களும் அவர்களுக்கு நன்கொடை வழங்கியதாக ரூ.65 கோடிக்கான குறிப்புகளும் இருந்தன.

அந்தக் குறிப்புகளில் நன்கொடையாக யாருக்கு எப்போது தரப்பட்டவை என்பதற்கான தெளிவுகள் இருக்கவில்லை. அவை தேர்தல் நேர நன்கொடையாகவும் இருக்கக் கூடும். அதுகுறித்த விசாரணை தொடர்ந்ததே தவிர, சிபிஐ, அதற்குமேல் தீவிரமான முனைப்புக் காட்டவில்லை. ஏனென்றால், குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரமோ, தடயங்களோ கிடைக்கவில்லை. அதனால், ஜெயின் டைரியின் வழக்கும் கிடப்பில் போடப்பட்டது.

அதற்குப் பிறகு இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. ஹர்ஷத் மேத்தா விவகாரம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர்பதவியில் இருப்பவர்களின் ஊழல்கள் குறித்துப் பொதுவெளியில் விவாதங்கள் நடைபெற்ற நிலையில், வினீத் நாராயண் என்கிற பத்திரிகையாளர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார். ஹவாலா விசாரணையை உச்சநீதிமன்றமே நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.

""நிர்வாக ரீதியாக முடிவெடுக்க வேண்டிய பிரச்னை இது. அரசும், சிபிஐ-யும் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும், எதை விசாரிக்கக் கூடாது என்று சொல்லும் அதிகாரமெல்லாம் நீதித்துறைக்குக் கிடையாது'' என்று அப்போதே பலர் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், 1993 இரண்டாவது நீதிபதிகள் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பிறகு, நாடாளுமன்றம், நிர்வாகம் இரண்டிடமிருந்தும் அதிகாரம் நீதித்துறைக்குக் கை மாறிவிட்டிருந்தது.

அரசமைப்புச் சட்டப்படி, "உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர் நீதிபதிகளை நியமனம் செய்வார்' என்று இருந்ததை, "உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனையை ஏற்று நீதிபதிகள் நியமனம் நடைபெறும்' என்று புதிய நடைமுறைக்கு வழிகோலியது இரண்டாவது நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு. மத்திய அரசு, சட்டப்பிரிவு 356-இன் கீழ் மாநில அரசுகளைக் கலைப் பதுகூட நீதித்துறையின் விசாரணைக்கு உட்பட்டது என்று தீர்ப்பாகியது.

நரசிம்ம ராவ் அரசுடன் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கத் தயாராக இருக்கவில்லை. காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் தலைமையில் பிராந்திய கட்சிகள் என்று நாடாளுமன்றம் மூன்றாக பிளவுபட்டுக் கிடந்தது. நாடாளுமன்றத்தின் பலவீனத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்ட நீதித்துறை, அனைத்து அதிகாரங்களையும் தன்னகப்படுத்திவிட்டது.

அரசியல் கட்சிகள் அதை ஒருங்கிணைந்து எதிர்க்காததால், நீதிபதிகள் தங்களுக்குத் தாங்களே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும், விசித்திர நடைமுறை இந்தியாவில் உருவாகியது.

""அரசியல்வாதிகள் மீதும், கட்சிகள் மீதுமான நம்பகத்தன்மை குறைந்து விட்டதுதான் அதை மக்கள் வரவேற்றதற்குக் காரணம். அரசியல்வாதிகளைத் தலையிட அனுமதித்தால் தங்களது சுதந்திரம் பாதிக்கப்படும் என்று நீதித்துறை நினைத்தது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டனர். அரசியல் கட்சிகளும் எதிர்க்கத் தயாராக இருக்கவில்லை'' என்று அப்போது சட்ட அமைச்சராக இருந்த ஹெச்.ஆர். பரத்வாஜ் பின்னாளில் என்னிடம் குறிப்பிட்டார்.

வினீத் நாராயணின் வழக்கு விசாரணைக்கு வந்தது. ""போதுமான தடயங்கள் கிடைக்காத நிலையில் ஜெயின் டைரி வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை'' என்று சிபிஐ தெரிவித்தது. அதை நீதிபதி ஜெ.எஸ். வர்மா ஏற்கவில்லை. அரசியல்வாதிகளை அரசு காப்பாற்றப் பார்க்கிறது என்று சந்தேகப்பட்டார் அவர். சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகளை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

""போதுமான சாட்சிகளும், தடயங்களும் இருக்கின்றனவா என்று தீர்மானிக்க நீங்கள் யார்? டைரியில் இருக்கும் பதிவுகளின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய அனைவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுதானே உங்கள் கடமை. நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?'' என்று அவர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு வியர்க்க வைத்துவிட்டார் நீதிபதி ஜெ.எஸ். வர்மா.
பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ளது சிபிஐ. அமலாக்கத் துறையும், சிபிஐயும் செய்வதறியாது திகைத்தன. நீதித்துறையின் ஆணையை நிறைவேற்றுவதா அல்லது அரசின் வழிகாட்டுதல்படி நடப்பதா என்கிற தர்மசங்கடம் அவர்களுக்கு.

""பிரதமர் நரசிம்ம ராவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. தனது கட்சி, எதிர்க்கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் அனைத்து அரசியல்வாதிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது என்றால் பெரிய பூகம்பமே வெடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். பலமுறை எங்களிடம் கலந்தாலோசித்த பிறகுதான், நீதித்துறையின் உத்தரவுப்படி நடக்க சிபிஐ-க்கு அவர் அனுமதி அளித்தார்'' என்று வி.என். காட்கில் என்னிடம் தெரிவித்தார்.

அப்போது சிபிஐ இயக்குநராக இருந்தவர் விஜய ராமா ராவ். அவர் இப்போதும் ஹைதராபாதில் இருக்கிறார். 1996 ஜனவரி 16-ஆம் தேதி ஜெயின் ஹவாலா டைரிக் குறிப்புகளின் அடிப்படையில் பல்வேறு தலைவர்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பலருடைய அரசியல் வாழ்க்கைக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்த அந்தக் குற்றப்பத்திரிகைதான், தலைநகர் தில்லியில் மிகப் பெரிய அரசியல் விவாதத்துக்கு வித்திட்டது.

எல்.கே. அத்வானி, மதன்லால் குரானா, தேவிலால், அர்ஜுன் சிங், மாதவ்ராவ் சிந்தியா, அரவிந்த் நேதம், சரத் யாதவ், பல்ராம் ஜாக்கர், வி.சி. சுக்லா, பஜன்லால் என்று கட்சிப் பேதமின்றி குற்றப்பத்திரிகையின் பட்டியல் நீண்டது. ""தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளைப் பின்னுக்குத் தள்ளி எல்லோருமே ஊழல்வாதிகள் என்பது போன்ற பிரமையை உருவாக்க முனைகிறார் பிரதமர்'' என்று குற்றம்சாட்டப்பட்ட பலரும் விமர்சனம் செய்தனர்.

உச்சநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது நாள், சுனேரிபாக் சாலையில் உள்ள தொழில் துறை அமைச்சர் கே. கருணாகரனை சந்திக்கச் சென்றிருந்தேன். இதுபோன்ற பிரச்னைகளில் என்னிடம் மனம்விட்டு கருத்துகளைத் தெரிவிப்பவர் அவர் என்பதால், புதிதாக ஏதாவது தகவல் கிடைக்கக்கூடும் என்று நினைத்தேன். நான் நினைத்தது பொய்க்கவில்லை.

அன்று மாலையில்தான் பிரதமரை சந்தித்திருந்தார் அவர்.

""பிரதமர் என்ன சொல்கிறார்?''

""நான்கூட முதலில் பிரதமரை சந்தேகப்பட்டேன். அவர்தான் வேண்டுமென்றே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் சொன்னார் என்று நினைத்தேன். அது தவறு. அவர் இந்த விஷயத்தில் நிர்பந்திக்கப்பட்டார்.''

""நிர்பந்திக்கப்பட்டார் என்றால், அவரை யார் நிர்பந்தித்தது?''

""நீதிமன்றம் கடுமையான முடிவை எடுத்துவிட்ட நிலையில், அவரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை. தனது கட்சிக்காரர்களைக்கட அவரால் காப்பாற்ற முடியவில்லை என்கிற பழி ஏற்பட்டது குறித்துப் பிரதமர் வருத்தப்படுகிறார்.''

பிரதமருடனான தனது சந்திப்பு குறித்து அதற்கு மேல் கருணாகரன் தெரிவிக்கவில்லை. ஜெயின் டைரி குற்றச்சாட்டு அத்வானியை மிகவும் கோபப்படுத்தி இருக்கிறது என்று பிரதமர் தெரிவித்ததாக மட்டுமே அவர் சொன்னார்.

பல மூத்த அரசியல் தலைவர்களின் நெடுநாள் பொது வாழ்க்கை மரியாதையை ஜெயின் ஹவாலா டைரி குற்றப்பத்திரிகை குலைத்தது. அத்வானி தனது மக்களவை உறுப்பினர் பதவியையும், கட்சிப் பதவியையும் ராஜிநாமா செய்தார். அதிகமாக பாதிக்கப்பட்டவர் அவர்தான்.

அந்த வழக்கின் தீர்ப்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-இல்தான் வழங்கப்பட்டது. தீர்ப்பு வந்தபோது, அந்த வழக்குடன் தொடர்புடைய பலர் உயிரோடு இல்லை. அரசியல் விசித்திரமானது. ஜெயின் ஹவாலா டைரிக் குறிப்பு வழக்கு என்னவானது, எப்படி முடிந்தது என்று தெரியுமா?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com