ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரகம் பழுதடையாமல் இருக்க...!

என் வயது 74. ஆறு மாதங்களாக உயர் இரத்த அழுத்த நோய்க்கு மருத்துவர் கொடுக்கும் மாத்திரைகளை உட்கொள்கிறேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரகம் பழுதடையாமல் இருக்க...!


என் வயது 74. ஆறு மாதங்களாக உயர் இரத்த அழுத்த நோய்க்கு மருத்துவர் கொடுக்கும் மாத்திரைகளை உட்கொள்கிறேன்.  மாத்திரைகளால் சிறுநீரகம் பழுதடையாமல் இருக்க இரண்டு ஸ்பூன் பார்லி அரிசியை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்த நீரை அருந்தலாம் என்று என் நண்பர் கூறினார். அவ்வாறு செய்யலாமா?

- எஸ்.கண்ணன்,
சென்னை.

நல்ல ஒரு அறிவுரையைத்தான் தங்களது நண்பர் கூறியிருக்கிறார். வீட்டில் யாருக்காவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால், பார்லி கஞ்சி வைத்துக் கொடுப்பார்கள். காரணம் நம் உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள்தான் உடலில் நீர்ச்சத்தைப் பராமரிக்கிறது. அது அடைப்பட்டுப் போனால் உடலிலுள்ள தேவையற்ற தண்ணீர் வெளியேற வழியில்லாமல் உடலில் அப்படியே தங்கிவிடும். இதனால் காய்ச்சல் உண்டாகும். 

தேங்கிய நீரை வெளியேற்றவும், காய்ச்சலைக் குணப்படுத்தவும் பார்லிக் கஞ்சி குடிப்பது நலமே. பார்லியில் ஊட்டச்சத்துகளும் ஏராளம் நிறைந்துள்ளது.  எளிதில் செரிமாணமும் ஆகும்.

கால்களைத் தொங்கப் போட்டு பயணம் செய்யும் பலருக்கும் கால் பாதங்களில் வீக்கம் ஏற்படுவதைப் பார்க்கிறோம். அந்த நீர் இறங்க, பார்லி கஞ்சிக் குடிப்பது மிகவும் நல்லது.

பார்லிக் கஞ்சியை தினமும் குடித்து வந்தால், மிகக் கடுமையான நோய்களைக் கூடப் போக்கி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். 

இதய நோயாளிகளுக்கு உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க  பார்லி கஞ்சி பெரிதும் உதவுகிறது. எல்.டி.எல். என்ற கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, எச்.டி.எல். என்ற நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதிலும் பார்லி மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.

பார்லியில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், ரத்தக் கொழுப்பைக் குறைக்கவும் செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. உடல் எடையைக் குறைக்கவும் பார்லி அரிசியைப் பயன்படுத்தலாம்.

உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், பார்லி அரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்துகள் உடலில் படியாமல் தடுத்து, உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

அரிசியுடன் ஒப்பிடும்போது பார்லியில் மாவுச் சத்தும் மிகக் குறைவு. பார்லியில் இருக்கும் தாவர ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே புற்றுநோய் எதிர்க்கும் தன்மை கொண்டதாகும்.

இது மார்பக புற்றுநோய் ஏற்படாமலிருக்கவும் தடுக்கவும் உதவுகிறது. செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்கள் பார்லி கஞ்சித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும்குடல்களின் நலத்துக்கு மிகவும் சிறந்தது.

கருவுற்ற காலத்தில் பெண்கள் பார்லி கஞ்சியை தினமும் சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல், நீரிழிவு போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவும்.

முக்கியமாக, கை கால் போன்றவற்றில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும். ரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் பார்லிக்கு உண்டு. அதனால் நீங்கள் நண்பர் அறிவுறுத்தலை அலட்சியப்படுத்தாமல் பார்லி அரிசிக் கஞ்சியைத் தொடர்ந்து குடிக்கலாம்..

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com