'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 103

ஜெயின் சகோதரர்களின் டைரி குறிப்பில் யார் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 103


ஜெயின் சகோதரர்களின் டைரி குறிப்பில் யார் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதில் காணப்பட்ட இனிஷியல்கள் குறிப்பிட்ட நபராக இருக்கும் என்கிற யூகத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எடுத்துக்காட்டாக, "கே.என்.' என்கிற இனிஷியலின் அடிப்படையில் கமல்நாத் இணைக்கப்பட்டிருந்தார்.

எஸ்.கே. ஜெயின், என்.கே. ஜெயின், பி.ஆர். ஜெயின் உள்ளிட்டவர்கள் நடத்தி வந்த "பிலாய் என்ஜினியரிங் கார்ப்பரேஷன் கம்பெனி' என்கிற நிறுவனத்தின் மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடந்தன என்பதுதான் குற்றச்சாட்டு. அந்த நிறுவனத்தின் ஊழியரான ஜெ.கே. ஜெயின் என்பவர் மூலமாகத்தான் பணப்பரிவர்த்தனை நடந்ததாகக் கூறப்பட்டது. 

சிபிஐ நடத்திய சோதனைகளில் இரண்டு டைரிகளும், இரண்டு நோட்டுப் புத்தகங்களும் ஜெயின் சகோதரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. 1988 முதல் 1991 வரையில் பலருக்கும் பணம் தரப்பட்டிருப்பதற்கான "இனிஷியல்' குறிப்புகள் அவற்றில் காணப்பட்டன.

அந்தப் பட்டியலில் காணப்பட்ட முதல் பெயர் யாருடையது தெரியுமா? இன்றைய கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான். அதைத் தொடர்ந்து அர்ஜுன் சிங் (ரூ.10 லட்சம்), தேவிலால் (ரூ.50 லட்சம்), யஷ்வந்த் சின்ஹா (ரூ.25 லட்சம்), எல்.கே. அத்வானி (ரூ.60 லட்சம்), மாதவ்ராவ் சிந்தியா (ரூ.25 லட்சம்), வி.சி. சுக்லா (ரூ.65.8 லட்சம்),  பல்ராம் ஜாக்கர் (ரூ.61 லட்சம்) என்று பட்டியல் தொடர்ந்தது. கமல்நாத்துக்கு ரூ.12 லட்சம் வழங்கப்பட்டதாக அந்தக் குறிப்பு தெரிவித்தது.

இனிஷியல்கள் தவறாக அடையாளம் காணப்பட்டு தங்கள் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் குரலெழுப்பி மறுத்தனர். யாரும் எதிர்பாராத விதத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சரத் யாதவிடமிருந்து பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு வந்தது.

நாங்கள் சரத் யாதவின் வரவுக்காக அவரது வீட்டில் காத்திருந்தோம். மற்றவர்களைப் போல அவரும் எதிர்ப்புத் தெரிவித்து மறுக்கப் போகிறார் என்று நினைத்தால், அவர் எங்களைத் திடுக்கிட வைத்தார்.

""காங்கிரஸ் தலைவரும்,  குஜராத் முன்னாள் முதல்வருமான சிமன்பாய் படேலின் முன்னிலையில் ஜெயின் சகோதரர்களிடமிருந்து நான் ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டது உண்மை.  டைரி குறிப்பில் குறிப்பிட்டிருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் கேட்டுக் கொண்டதுபோல நான் அவர்களுக்கு எந்த உதவியும் செய்து தரவில்லை.''

சில முக்கிய நாளிதழ்களின் நிருபர்கள் சரத் யாதவின் ஒப்புதல் வாக்குமூலத்தை முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக்க அங்கிருந்து விரைந்தனர். யாரும் அவரிடம் எந்தக் கேள்வியும் எழுப்பாதது எனக்குத் திகைப்பாகவும் வியப்பாகவும் இருந்தது. பெரும்பாலும் ஹிந்தி பத்திரிகையாளர்கள் மட்டுமே இருந்த அந்த நிருபர் கூட்டத்தில், நான் எழுந்து ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியபோது சரத் யாதவின் முகம் கோபத்தில் சிவந்தது. நான் கேட்ட கேள்வி இதுதான் - 

""பணம் பெற்றுக் கொண்டது இருக்கட்டும். ஜெயின் சகோதரர்கள் உங்களிடம் கேட்ட உதவிதான் என்ன? அதைத் தெரிவியுங்கள்.''

அங்கே நிசப்தம் நிலவியது. அவரிடமிருந்து உடனடியாக பதில் வரவில்லை. பிறகு, சற்று சுதாரித்துக் கொண்டு அவர் இந்தியில் தெரிவித்த பதில் - ""அதை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள முடியாது. பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை!''

""அதுபோகட்டும், ஜெயின் டைரி குறிப்பில் உள்ள இனிஷியல்கள் சரியான நபர்களைத்தான் குறிப்பிடுகிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?''

""அது பற்றியும் நான் எதுவும் சொல்வதற்கில்லை!''

அவர் நிருபர் கூட்டத்தை சட்டென முடித்துக் கொண்டு உள்ளே போய் விட்டார். நாங்கள் கலைந்தோம். அடுத்த இரண்டு நாள்களில் சரத் யாதவ் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

ஹவாலா பணப் பரிமாற்றம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. அது என்ன, எப்படி நடைபெறுகிறது என்பது பலருக்கும் தெரியாது. உலகில் அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத, மரபுசாரா நிதிப் பரிவர்த்தனைக்குப் பெயர்தான் "ஹவாலா'. இதுவும் ஒருவகை வங்கிச் சேவைதான். ஆனால், பெயரோ, அமைப்பு ரீதியான நிர்வாகமோ இல்லாதது. நாடுகளையும், கண்டங்களையும் கடந்து, சர்வதேச அளவில் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றுப் 
பொருளாதாரம்.

அமெரிக்காவின் சிகாகோவிலோ, ஜப்பானின் ஹிரோஷிமாவிலோ, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலோ, தமிழகத்துக்குள்ளே சென்னையிலோ, கோவையிலோ ஏதோ ஓர் ஊரில் இருக்கும் நீங்கள் சென்னையில் இருக்கும் எனக்குப் பணம் அனுப்ப வேண்டும். அது வங்கிக் கணக்கில் இல்லாத, கணக்குக் காட்ட முடியாத பணம். நீங்கள் "ஹவாலா' முகவர் ஒருவரைத் தொடர்பு கொண்டால் போதும், ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாமல் பல "ஹவாலா' முகவர்கள் தன்னிச்சையாகத் தொழில் நடத்துபவர்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

சுமார் ஒரு கோடி ரூபாய் அவர்கள் மூலம் எனக்கு அனுப்புவதாக இருந்தால், என்னிடமோ உங்களிடமோ இருக்கும் ஏதாவது ஒரு டாலர், யென், ரூபாய் நோட்டை எடுத்து அதன் எண்ணைக் குறித்துக் கொள்ள வேண்டும். முகவரிடம் பணத்தை ஒப்படைக்கும்போது அந்த எண்ணையும், யாரிடம் பணம் சேர்க்க வேண்டுமோ அவர்களது முகவரி, தொடர்பு எண்ணைக் கொடுக்க வேண்டும்.

அந்த ரூபாய் நோட்டின் எண்ணை முகவரிடம் தொலைபேசி மூலம், இப்போது குறுஞ்செய்தி மூலம் நமக்குள் பகிர்ந்து கொள்வோம். அடுத்த சில நிமிடங்களில் சென்னையில் இருக்கும் "ஹவாலா' முகவர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு தேடி வருவார். ரூபாய் நோட்டின் எண்ணைக் கேட்பார். அது சரியாக இருந்தால் ரூ.1 கோடியை ரொக்கமாகத் தந்துவிட்டுச் சென்று விடுவார். 

இதெல்லாம் அரை மணி நேரத்தில் நடந்துவிடும். இதற்கான கமிஷனை பணம் அனுப்புபவரிடமிருந்து முதலிலேயே பெற்றுக் கொண்டு விடுவார்கள். எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும் "நிழல்' பணப்பரிமாற்றம்தான்.

வெளியூரில் வீடு அல்லது அசையாச் சொத்து விற்கிறார்கள். பத்திரப் பதிவுக்கு மேலே பெறப்படும் பல லட்சங்கள் "ஹவாலா' மூலம்தான் கைமாறுகிறது. அரசியல்வாதிகளின் லஞ்சப் பணம் "ஹவாலா' மூலம்தான் வெளிநாடுகளுக்கு இதுபோல அனுப்பப்பட்டு, அங்கிருந்து அந்நிய முதலீடு என்கிற பெயரில் கணக்கில் காட்டப்படும் பணமாக இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகிறது.

"ஹவாலா' தொழிலில் ஈடுபடுபவர்கள் எல்லா ஊரிலும், நாடுகளிலும் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பார்கள். பல்லாயிரம் பேர் இதில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்குள் எந்தவித அமைப்பு ரீதியான கட்டமைப்பு கிடையாது. நம்பிக்கையில் நடக்கும் நிழல் வியாபாரம் இது. போதைப் பொருள்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட வர்த்தகங்களின் பரிமாற்றங்கள் அனைத்துமே "ஹவாலா' வழியாகத்தான்.

ஜெயின் "ஹவாலா' டைரிக் குறிப்பு வழக்கு தலைப்புச் செய்தியான பிறகுதான் "ஹவாலா' குறித்த புரிதலும், சர்வதேச அளவில் நடைபெறும் மாற்றுப் பொருளாதாரம் குறித்தும் பரவலாகத் தெரியவந்தது.

1996 ஜனவரி மாதம் ஹவாலா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1997-இல் டைரி குறிப்புகள் சாட்சியங்களாகக் கருதப்படாது என்றுகூறி தில்லி உயர்நீதிமன்றம் பலரையும் விடுவித்தது. 1998-இல் உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை நிராகரித்தது. அத்வானி, வி.சி. சுக்லா உள்ளிட்ட சிலர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று அவர்களை மட்டும் விடுவித்தது.

மக்களவையில் தன்னைப் போலவே இனிஷியல்கள் உள்ள பலர் இருப்பதைச் சுட்டிக்காட்டி கமல்நாத் தன்னை விடுவித்துக் கொண்டார். ஆனாலும் வழக்கு முடிந்துவிடவில்லை. ஹபீப், ஆரிஃப் என்பவர்களுடன் ஜெயின் சகோதரர்கள் தொடர்பில் இருந்தனர் என்றும், அவர்கள் டாலரில் அனுப்பிய பணத்துக்கு ஜெயின் சகோதரர்கள் இந்திய ரூபாய் வழங்கினார்கள் என்பதும்தான் வழக்கு.

1988 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் 26 சட்டவிரோத பரிமாற்றங்கள் மூலம் 2,26,50,000 டாலர் இந்திய ரூபாயாக மாற்றப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-இல் ஒட்டுமொத்த வழக்கும், தகுந்த ஆதாரமில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டது. 

ஜெயின் ஹவாலா வழக்கு நிராகரிக்கப்பட்டதில் நியாயம் இருக்கிறது. சிபிஐ முழுமையாக விசாரிப்பதற்கு அவகாசம் வழங்காமல், உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.எஸ். வர்மா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் சொன்னபோது, கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் சிபிஐக்கு ஏற்பட்டது. 1988 முதல் 1991 வரையிலான நிகழ்வு தொடர்பான வழக்கில், 1992 முதல் 1995 வரையிலான தொலைபேசிப் பதிவுகளை சாட்சியமாக்கினால் வழக்கு தள்ளுபடியாகாமல் என்ன செய்யும்?

தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருந்த நிலையில், ஒன்றன் பின் ஒன்றாகப் பிரச்னைகளை எதிர்கொண்டார் பிரதமர் நரசிம்ம ராவ். ஜெயின் ஹவாலா டைரி வழக்குக்குப் பிறகு நிறைய அமைச்சரவை சகாக்களையும், கட்சித் தலைவர்களையும் பிரதமர் பகைத்துக் கொண்டிருந்தார். 

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அவர் வளைந்து கொடுத்திருக்கக் கூடாது என்று அவர்கள் வெளிப்படையாக விமர்சித்தனர்.

துக்ளக் ரோடிலுள்ள அமைச்சர் அஜித் சிங்கை சந்திக்கச் சென்றிருந்தேன். வழக்கம்போல, புல்தரையில் நாற்காலி போட்டுத் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார். 

எந்தக் கட்சியில் என்ன நடக்கிறது என்பதில் தொடங்கி, அரசியல் அரங்கில் நடக்கும் எல்லா திரைமறைவு நகர்வுகளையும் தெரிந்து வைத்திருப்பவர்களில் அவர் ஒருவர். 

""பிரதமருக்கும் சோனியா காந்திக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்களே, உண்மையா?''

""பனிப்போர் என்று சொல்ல முடியாது. சோனியாவுடன் சமரசமாகப் போகப் பிரதமர் விரும்புகிறார். ஆனால், சோனியா அதற்குத் தயாராக இல்லை என்று தெரிகிறது. நட்வர் சிங்தான் இருவருக்கும் இடையே தூது போய்க் கொண்டிருக்கிறார்.''

""சோனியா அரசியலுக்கு வரப் போகிறாரா?''

""தெரியவில்லை. தன்னைப் பற்றி சிலர் சோனியாவிடம் தவறான போதனைகளைச் சொல்வதாகவும், சோனியாவின் கோரிக்கைகள் அனைத்தையும் தான் நிறைவேற்றிக் கொடுத்தும் அவர் தன்னிடம் வெறுப்புக் காட்டுவதாகவும் பிரதமர் தெரிவித்ததாக நட்வர் சிங் என்னிடம் தெரிவித்தார். தான் பதவி விலக வேண்டும் என்று சோனியா சொன்னால் உடனே பதவி விலகத் தயாராக இருப்பதாகப் பிரதமர் அவரிடம் தெரிவித்திருக்கிறார்.''

""அதற்கு சோனியா காந்தி என்ன சொன்னாராம்?''

""அது எனக்குத் தெரியாது. நட்வர் சிங் எதுவும் சொல்லவில்லை.''

""பிரதமர் மீது சோனியா காந்தி கோபமாக இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?''

அஜித் சிங் சிரித்தார். பிறகு தொடர்ந்தார்.

""ஒரே ஒரு காரணம்தான். ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணை விரைவாக நடத்தப்படவில்லை. குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை. தனது கணவரின் கொலையாளிகளைப் பழி வாங்க வேண்டும் என்கிற அவரது ஆத்திரத்தைப் பிரதமர் உணர்ந்து, விரைந்து செயல்படாமல் இருப்பதுதான் கோபத்துக்கான காரணம்.''

""பிரதமர் விசாரணையை தாமதப்படுத்துவதாக சோனியா காந்தி நினைக்கிறாரா?''

""அது குறித்துப் பிரதமர் கவலைப்படவில்லை என்று நினைக்கிறார். அதனால் பிரதமர் மீதும் ஆத்திரம் அடைந்திருக்கிறார்.''

""அது உங்களுக்கு எப்படித் தெரியும்? யார் சொன்னது?''

அஜித் சிங் சொன்ன பெயரைக் கேட்டதும் நான் நிஜமாகவே மயங்கி விழாத குறை. அப்படியொரு அதிர்ச்சி...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com