'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 119

பிரதமர்  நரசிம்ம ராவ் பேரன் திருமணத்துக்கு சென்னையிலிருந்து விமானத்தில் அவருடன் சென்றவர் ஜி.கே. மூப்பனார்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 119

பிரதமர்  நரசிம்ம ராவ் பேரன் திருமணத்துக்கு சென்னையிலிருந்து விமானத்தில் அவருடன் சென்றவர் ஜி.கே. மூப்பனார். அந்தப் பயணத்தின்போதே, இருவரும் அதிமுக கூட்டணி குறித்துப் பேசி இருக்க வேண்டும். உடனடியாக எந்த அறிவிப்பும் வெளிவராததால், மூப்பனாரின் ஆலோசனையை ஏற்று பிரதமர் நரசிம்ம ராவ் கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்கிறார் என்றுதான் மூப்பனாரின் ஆதரவாளர்கள் நினைத்தனர்.

மக்களவையில், பாஜக கொண்டுவர இருந்த கண்டனத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க அதிமுக முடிவெடுத்தபோது, காங்கிரஸ் பிளவுபடுவதற்கான வாய்ப்பு அதிகரித்தது. காங்கிரஸ் பிளவைத் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள திமுக தலைவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார் என்பதுதான் இன்னொரு திருப்பம். 

அதுவரையில் திமுக அணியில் இணையும் என்று எதிர்பார்த்த வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழ்நாடு இந்திரா காங்கிரûஸயும், பாட்டாளி மக்கள் கட்சியையும் அகற்றி நிறுத்த வியூகம் வகுக்கத் தொடங்கி விட்டார் திமுக தலைவர் கருணாநிதி.

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. எதிர்பார்த்தது போலவே நிருபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன்.

''இப்போது திமுக தலைமையிலான அணியில் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய தேசிய லீக்,  அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள்தான் உள்ளன'' என்று தெரிவித்தார் திமுக தலைவர்.

''அப்படியானால் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கட்சி, உங்கள் கூட்டணியில் இடம் பெறாதா?''

''நிச்சயமாக இடம் பெறாது. வாழப்பாடியை திமுக அணியில் சேர்த்துக் கொள்வது என்ற பிரச்னையே இல்லை.''

''அப்படியானால் பாமக இடம் பெறுமா?''

''திமுக அணியில் பாமக இருக்குமா, இல்லையா என்பதை பாமகதான் தெரிவிக்க வேண்டும்.''

அறிவாலயத்தில் பேட்டி முடிந்த பிறகு, சென்னை ஹாடோஸ் ரோட்டிலுள்ள அவர்களது நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்த வாழப்பாடி ராமமூர்த்தியையும், ரங்கராஜன் குமாரமங்கலத்தையும் சென்று சந்தித்தேன். 

''எங்களை இப்போதே ஏதாவது காரணம் சொல்லி அகற்றி நிறுத்த விரும்புகிறார் கருணாநிதி. அப்போதுதான் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு மூப்பனார் வந்தால் அவரது அணிக்கு இடம் ஒதுக்க முடியும் என்று திட்டமிடுகிறார். அவரது வலையில் மூப்பனார் விழுவார், பார்த்துக் கொண்டிருங்கள்'' என்று ரங்கராஜன் சொன்னபோது, வாழப்பாடியும் ஆமோதித்தார்.

அடுத்த நாள் பாமக 40 சட்டப்பேரவை, ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கினால்தான் கூட்டணி என்று அறிவித்தது. அதுவும் திமுக எதிர்பார்த்ததுதான்.

''தொகுதி உடன்பாடு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள நிபந்தனைகளை திமுக ஏற்காது. நண்பர்களாக சேர்ந்த நாங்கள், நண்பர்களாக பிரிகிறோம்'' என்று மதுரையில் திமுக தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டார். அப்போது வேறொரு அரசியல் திருப்பம் ஏற்பட்டது என்பதுதான் சுவாரஸ்யம்.
நரசிம்ம ராவும் ஜெயலலிதாவும் ஹைதராபாதில் ஒருவிதப் புரிதலுக்கு வந்துவிட்டனர், 
காங்கிரஸ் - அதிமுக கூட்டணி உறுதியாகி
விட்டது என்று எதிர்பார்த்தவர்களுக்கு, திருச்சியில் திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் தெரிவித்த கருத்து அதிர்ச்சி அளித்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த திமுக தலைவர் கருணாநிதி, 1990-இல் தனது ஆட்சியைக் கலைத்த கட்சியுடன் கூட்டணிக்குத் தயாராவார் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்?
மதுரையிலிருந்து திருச்சி வந்த கருணாநிதி அங்கே நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும், வழக்கம்போல நிருபர்களை சந்தித்தார். திமுக தலைவர்களேகூட எதிர்பார்த்திருப்பார்களா என்று சந்தேகம்தான், தடாலடியாக காங்கிரஸ் கூட்டணிக்கு வாசலைத் திறந்து வைத்தார் கருணாநிதி.
அநேகமாக அது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், திமுக சார்புநிலை பத்திரிகையின் நிருபர் கேள்வி இருந்தது என்பதும், கருணாநிதி பதில் சொல்வதற்கு வசதியாக அந்தக் கேள்வி எழுப்பப்பட்டது என்பதும் அப்படியொரு சந்தேகத்தை எழுப்புகிறது. நிருபர் எழுப்பிய கேள்வி என்ன தெரியுமா?
''காங்கிரஸ் கட்சி வலிய வந்து கூட்டணி பற்றிப் பேசினால், சம்மதிப்பீர்களா?''
''பேசினால் பேசுவோம்.''
''மத்திய அரசையும், மாநில அரசையும் ஆட்சியிலிருந்து இறக்கிவிட வேண்டும் என்று நீங்கள் மாநாட்டில் கூறினீர்களே...''
''நான் கூறியது இன்னும் அப்படியே இருக்கிறது. பாமக, இந்திரா காங்கிரஸ் விலகலைத் தொடர்ந்து, மாறியிருக்கும் அரசியல் சூழ்நிலையில் திமுகவின் அணுகுமுறை குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.''
திமுக தலைவர் அத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. அவர் அதிரடியாக வெளியிட்ட இன்னொரு கருத்து, காங்கிரஸூக்கும் திமுகவுக்கும் இடையே ரகசியமாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை வெளிப்படுத்தியது. ஒருவேளை அப்படியொரு கூட்டணி அமையுமானால், அதற்கான சூழலை திருச்சி நிருபர்கள் கூட்டத்தின் மூலம் ஏற்படுத்த முற்பட்டார் கருணாநிதி என்றுதான் சொல்ல வேண்டும்.
''வரும் பொதுத்தேர்தலில் மத்தியில் யாருக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?''
''எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. 'ஹங் பார்லிமெண்ட்' அமையும்.''

''அப்படியானால் நிலையான ஆட்சி அமையாதே! நிலையான ஆட்சியை யாரால் தர முடியும் என்று நினைக்கிறீர்கள்?''

''ஸ்டெபிலிட்டியை உருவாக்குவதில் நரசிம்ம ராவுக்கு இணை நரசிம்ம ராவ்தான். மைனாரிட்டி அரசாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளையும்கூடத் தமக்கு சாதகமாக பயன்படுத்த அவரால் முடியும் என்பது கடந்த நான்கு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் கண்ட நிகழ்ச்சி!''

திருச்சியில் காங்கிரஸூடன் கூட்டணிக்கு திமுக வாசல் திறந்து வைத்தது என்றால், தில்லியில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், மத்திய இணையமைச்சர்கள் ப. சிதம்பரம்,  எம். அருணாச்சலம் மூவரும் பிரதமருடன் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் தமிழக நிலைமைகுறித்து விவாதித்தனர்.

பிரதமருக்கு நெருக்கமானவர்களிடம் நான் விசாரித்துத் தெரிந்து கொண்ட விவரம் இது. இதன் உண்மைத்தன்மை குறித்து என்னால் உறுதியாக எதுவும் கூற முடியாது. ரஜினிகாந்த் தான் தெளிவுபடுத்த முடியும். 

திமுக தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அதற்கு ஆதரவு தருவதாக வெளிநாடு செல்வதற்கு முன்னர் தங்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாகப் பிரதமர் நரசிம்ம ராவிடம் அந்த மூவரும் தெரிவித்தனர் என்பதுதான் அந்தத் தகவல். ஜெயலலிதாவை வீழ்த்துவதற்காக ரஜினிகாந்த் எந்த உதவியும் செய்வார் என்றும் அவர்கள் தெரிவித்தனர் என்று கூறப்படுகிறது.

''அதிமுகவுடன் கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்யவில்லை என்பது மட்டுமல்ல, கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை'' என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வி.என். காட்கிலின் அறிக்கை அன்று மாலை வெளிவந்தது. அது மட்டுமல்ல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் குமரி அனந்தன், சட்டப்பேரவை கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் இருவரையும் ஆலோசனைக்காக தில்லியிலேயே தங்கி இருக்கும்படியும் பிரதமர் கேட்டுக் கொண்டார் என்பதிலிருந்து, கூட்டணி முடிவாகவில்லை என்று தெரிகிறது.

திருச்சியில் 'காங்கிரஸ் பேசினால் பேசுவோம்' என்கிற திமுக தலைவரின் அறிவிப்பு, அவரது கட்சியிலேயே கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியது. திமுகவில் மட்டுமல்ல காங்கிரஸிலும் கடுமையான எதிர்ப்பு தேசிய அளவில் எழுந்தது. திமுக கூட்டணி எற்படுவதை சோனியா காந்தி விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் பிரதமருக்குத் தெரிவித்தனர்.

''ராஜீவ் கொலையில் முக்கியத் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் விடுதலைப் புலிகள் விஷயத்தில் திமுக இன்னும் மென்மையான நிலையைக் கடைப்பிடித்து வருகிறது. அப்படி இருக்கும்போது திமுகவுடன் கூட்டணி என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? தமிழகத்தில் வேண்டுமானால் அது உதவலாம். தேசிய அளவில் காங்கிரஸ் மீது மக்கள் கடுமையாகக் கோபமடைவார்கள்'' என்று மூத்த அமைச்சர்கள் பிரதமரை எச்சரித்தனர்.
இதற்கிடையில் மார்ச் 20-ஆம் தேதி பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் வெளியிட்டார். ஏப்ரல் 27-இல் தமிழகத்தில் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது. அதனால் உடனடியாகக் கூட்டணி அமைத்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு அத்தனை கட்சிகளும் தள்ளப்பட்டன.

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. அதற்குப் பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார். ஒருபுறம், திமுகவுடன் கூட்டணி குறித்துப் பேச தில்லியில் இருந்து தலைவர் ஒருவர் வர இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், திமுகவின் தலைகீழ் மாற்றம் வியப்பை ஏற்படுத்தியது.
''காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது?''
''கூட்டணி பற்றி இதுவரையில் காங்கிரஸின் எந்தத் தலைவரும் எங்களுடன் பேசவில்லை. எந்த முடிவாக இருந்தாலும், எங்களுடனான தோழமைக் கட்சிகளைக் கலந்து கொண்டுதான் முடிவெடுப்போம்.''
''காங்கிரஸூக்கு திருச்சியில் நீங்கள் அழைப்பு விடுத்தீர்களே...?''
''அழைப்பு என்பதற்கும், 'பேச வந்தால் பேசுவோம்' என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 'பேச வந்தால் பேசுவோம்' என்பது தமிழ்நாட்டில், தமிழர்களின் பண்பாடு. 'பேச வந்தால் பேசுவோம்' என்பது இப்போது தமிழ்நாட்டில் பட்டிமன்றப் பொருளாக ஆகியுள்ளது.''

''அப்படியானால், நீங்கள் காங்கிரஸூடனான கூட்டணிக்குத் தயாராக இல்லையா?''

''கூட்டுக்குத் தயார் என நான் எங்கே கூறினேன்? பத்திரிகைகளில் வரும் தலைப்புகள் எல்லாம் நான் சொன்னதாக ஆகாது. தலைப்புக்குக் கீழே உள்ள செய்திகளைப் படித்துப் பாருங்கள்.''

''அப்படியானால் நிலையான ஆட்சி அளித்ததாக நீங்கள் பிரதமர் நரசிம்ம ராவைப் பாராட்டியது?''

''அது விமர்சிக்கும் பாங்குடன் கூறிய வஞ்சப் புகழ்ச்சி. சர்காஸ்டிக் கமெண்ட். நரசிம்ம ராவைப் புதிதாகப் புகழ்ந்து கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. திமுகவுக்கும் காங்கிரஸூக்கும் இடையே கூட்டு ஏற்படுமா என்கிற யூகத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.''

''திமுக - காங்கிரஸ் கூட்டு ஏற்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிருக்கிறாரே...''

''அவருக்கு, ஆரம்பத்தில் இருந்தே உள்ள கவலை எல்லாம், எங்கே காங்கிரஸூடன் சேர்ந்து திமுக ஜெயித்துவிடப் போகிறதே என்பதுதான்.''

''காங்கிரஸ் கூட்டணிக்காகத்தான் நீங்கள் பாமகவைக் கூட்டணியிலிருந்து விலக்கி விட்டதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே...''

''ராமதாஸ் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொன்று சொல்வார். அதற்கெல்லாம் நான் பதிலுக்கு பதில் லாவணி பாட விரும்பவில்லை. அணிகள் வேறாக இருந்தாலும், அரசியலில் நாகரிகமும் நட்பும் நிலைக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.''

அடுத்த நான்கு நாள்களும் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைவது குறித்துத்தான் பரபரப்பான பேச்சு. காங்கிரஸ் சார்பில் கூட்டணி குறித்துப் பேச பிரதமர் ராவின் தூதர் சென்னை வரப்போகிறார் என்று செய்தி வந்தது. அவரை எதிர்பார்த்து திமுக தயாராக இருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களும் அவருக்குத்தான் காத்திருந்தனர்...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com