டிரைவிங்

சென்னையில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்யும் என் மகன் சத்தியன் ஒரு நாள் இரவு ஊருக்கு வந்த போது ஒரு ஃபியட் பேலியோ காரைக் கொண்டு வந்து போர்ட்டிகோவில் நிறுத்தினான்.
டிரைவிங்

சென்னையில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்யும் என் மகன் சத்தியன் ஒரு நாள் இரவு ஊருக்கு வந்த போது ஒரு ஃபியட் பேலியோ காரைக் கொண்டு வந்து போர்ட்டிகோவில் நிறுத்தினான். ஏற்கெனவே அவனிடம் மாருதி ஸ்விஃப்ட் வண்டி இருக்கேஇது என்ன? யாருடையதோ தெரியலையே?
""சத்தியா! இது யாருதுப்பா?''
""நம்மளுதுதாம்பா. உங்களுக்குத்தான் வாங்கினேன்''
எனக்குக் கோபமாய் வந்தது.
""டேய்! நான் கேட்டனா? ரிடையராகி வீட்டோடு இருக்கிற எனக்கு எதுக்கு? யாரு ஓட்டப் போறதாம்?.''
"" நீங்கதாம்பா.''என் கோபம் இன்னும்எகிறியது.
""அடத்தூ! விளையாடாதே. கொஞ்சமாவது அறிவிருக்கா? பணம் கொழுத்து கிடக்கா? எழுபது வயசாகுது. இதுக்கு மேல ஓட்டப் போறனா?''
""ஏன் முடியாதா என்ன?அப்பா! எழுபது வயசுக்கு மேல ஆரம்பிச்சி எத்தனையோ பேரு எவ்வளவோ சாதிச்சிருக்காங்க. மனசை இளமையா வெச்சிக்கணும்.உங்களால முடியும்பா. ஒரு நாளைக்கு சென்னைக்கு வந்து பாருங்க. எழுபது வயசு ஆளுங்கள்லாம் அந்த ஹெவி ட்ராஃபிக்ல என்ன அநாயாசமா கார் ஓட்டிக்கிட்டு போறாங்க?''
"" ஏன்டா இப்படி முட்டாள்தனமா வாதம் பண்றே. ஹும்! வத்தலும் தொத்தலுமா இருக்கிற மாட்டுக்கு கொம்பு சீவி விடாதடா. அவங்கள்லாம் சின்ன வயசில இருந்தே கார் ஓட்றவங்கடா. என்னை மாதிரி அந்திம காலத்துல இல்லை'' நான் என்னதான் வாதம் பண்ணிணாலும் நம்பிக்கையில்லை. நான் என்ன பேசினாலும் விடமாட்டான். கடைசியில அவன் வழிக்குத்தான் நாம போயாகணும். என்னுடைய ஆளுமை முடிஞ்சி எவ்வளவோ காலமாயிட்டுது. இப்ப அவன் நேரம்.
""சரி இன்னா விலை?''
"" ஒரு லட்சம் ரூபாய். செகண்ட் ஹேண்ட்தான், நாற்பதாயிரம் கிலோ மீட்டர்தான் ஓடியிருக்கு. ஒரு டாக்டருடையது. ஒருத்தர் கைப்பட புழங்கியது. அவர் அமெரிக்காவில குடியுரிமை வாங்கிட்டார். அதான் வந்த விலைக்கு தள்ளிட்டு போறார். நல்ல கண்டிஷன். அதெல்லாம் எனக்குத் தெரியாதுபா. உங்களுக்காக கார் வாங்கிட்டேன். நாளைக்கு உங்களை கார் டிரைவிங் ஸ்கூல்ல சேர்த்திடப் போறேன்.
கவலைப் படாதீங்க எல்லாத்தையும் அவங்க பார்த்துக்குவாங்க. ""
எனக்கு படபடப்பாய் வந்தது.
""இவ்வளவு முரடனா இருக்கியேடா. இந்த வயசுக்கு மேல கத்துக்கிட்டு எங்க ஓட்டப் போறேன்?''
""என்னப்பா வயசு வயசுன்னு சொல்லிக்கிட்டு. இந்த வயசில உங்களுக்கு பிரஷர் இருக்கா, ஷுகர் இருக்கா? சொல்லுங்க.ஏன் மூட்டு வலி கூட கிடையாது. ஹெல்த்தி மேன். ஏன் அம்மாவை கூட்டிக்கிட்டு கோயில் குளம்னு ஜாலியா சுத்துங்கப்பா. அடிக்கடி என் வீட்டுக்கு ரெண்டு பெரும் வாங்க. வேலூர்ல தங்கச்சி வீட்டுக்குப் போங்க. கார்ல போனா எவ்வளவு கெத்தா இருக்கும்''
""நீ என்ன சொன்னாலும் கண்டிஷனா சொல்றேன் என்னால முடியாதப்பா.''
என்ன பேசி என்ன? மறுநாள் சனிக்கிழமை 9:001030. ராகுகாலம் கழிச்சி பதினோரு மணிக்கு ஆனந்தா டிரைவிங் ஸ்கூல்ல என்னை சேர்த்து விட்டுட்டான். அங்க இருந்தவர்கள் இந்த கிழவனுக்கா? என்று என்னை ஒருமாதிரி பார்த்தார்கள். இந்த இடத்தில் என்னைப் பற்றியான பிரத்தியேக அம்சங்களை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். உடம்பில கிள்ளியெடுக்க பொட்டு சதை இல்லாதபடி பொக்கை வாயுடன் கூடிய ஒல்லியான உடலமைப்பு என்னுடையது.அவர்கள்என்னைப் பார்த்துவிட்டு சிரித்தார்கள். அப்ளிகேஷனை ஃபில் அப் பண்ணும்போது என் வயசை கேட்டார்கள்.
எழுபது என்றேன்.
""கிளட்ச், ப்ரேக்கை மிதிக்க கால்ல பலம் இருக்குமா?''
சொல்லிவிட்டு ரெண்டு பேர் சிரித்தார்கள்.
""ஏன் சார் என்னத்த இந்த வயசுக்கு மேல கத்துக்கிட்டு... சரி... சரி... நீங்கள்லாம் மூணு வருஷத்துக்கு ஒரு தபா லைசன்ஸ் ரினியுவல் பண்ணியாவணும். ஒவ்வொரு தடவையும் கண் டாக்டர் கிட்ட கண்ணை டெஸ்ட் பண்ணி பார்வை நல்லா இருக்குன்னு சர்டிஃபிகேட் தரணும். தெரியுதா?. இப்பவே கண் டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கி வந்தாத்தான் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க முடியும். உம் சின்ன வயசாய் இருந்தால் பதினஞ்சி நாள் கத்துக் குடுத்தா போதும். உங்களுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆவும். ஏன் ரெண்டு மாசம் கூட ஆகலாம்''
""டேய்! என்னென்ன தொல்லை வருது பார்த்தியா? ஊஹும் நான் மாட்டேன்டா. வேணாம்டா என்னை விட்ரு''
அவன் கண்டுக்கவே இல்லை. மறுநாள் காலையில் என்னை டிரைவிங் ஸ்கூல்ல விட்டுட்டு அவன் ஊருக்குக் கிளம்பி விட்டான். கிலியாக உணர்ந்தேன். கண்டபடி அவனைத் திட்டிக் கொண்டே இருந்தேன். ஒன்பது மணிக்கெல்லாம் எல்லா ஸ்டாஃப்களும் வந்து விட்டார்கள்.
""டேய் மோகனம்! இந்த பெரியவருக்கு ட்ரெயினிங் குடு. சுமோ வண்டிய எடுத்துக்கோ''
மோகனம் என்பவன் என்னை ஒரு புழுவைப் போல் பார்த்துவிட்டு, அடுத்தவன் மோகனத்திடம் "கிசு கிசு'வென்று பேசினான். அவன் பேசியது எனக்குக் கேட்டுவிட்டது.
"" மோகனம்! யார்றா இந்த ஓமகுச்சி நரசிம்மன். தலையைப் பார்த்தியா? கவுண்டமணி சொல்றாப்பல பிய்ஞ்ச தலை. அதுவும் அப்படியே டிட்டோ''- சிரித்தான்.
""என்னடா நம்ம பாஸூ இந்த கிழடை எந்தலையில கட்டிட்டாரு. ஒவ்வொன்னுத்தையும் பத்து தடவை சொல்லணும்டாஇதுகளுக்கு. மனசில நிக்காது. ஹும்! வாய்தா போன பாண்டை எல்லாம் நான் வெச்சிக்கிட்டு மாரடிக்கணுன்றது என் தலையெழுத்து''
டிரெய்னிங் ஆரம்பித்தது. மோகனம் என்ற என்னுடைய மாஸ்டர் இது கிளட்ச், இது ப்ரேக், இது ஆக்ஸலரேட், என்று ஒவ்வொன்றையும் பத்தி பொறுமையாக கிளாஸ் எடுத்து விட்டு என்னை டிரைவர் சிட்டில் உட்கார வைத்து விட்டான். ஆள் நடமாட்டமில்லாத ஒரு கிராமத்து ரோடில் வண்டி ஓட ஆரம்பித்தது. பயத்தில் மாலை மாலையாக வியர்த்து ஊற்றுகிறது. என்னா அநியாயம்யா? ஒவ்வொன்றின் பெயரை மட்டும் சொல்லிட்டு வண்டியை ஓட்றா என்றால் எப்படி ஓட்றது? இந்த வயசில் இவ்வளவு டென்ஷன் தேவையா? கீழே கிளட்ச்சைப் பார்த்தால் ஸ்டியரிங்கை விட்டுடுறேன். வண்டி தாறுமாறா ஓடுது. ரெண்டு மூணு தடவை பாய்ந்து ஸ்டியரிங்கை நேர்படுத்திய மாஸ்டர் நாலாவது தடவை " யோவ்!'ன்னு கோபமாய் கத்தினான். நான் என்ன பண்ணுவேன். ஒரே நேரத்தில மனுசன் எத்தனை வேலை பார்க்க முடியும். நாலு காலா இருக்குது எனக்கு? மூணாவது தடவையாக வண்டி திசை மாறி ஓடினப்போ மாஸ்டர் "டேய்!'ன்னு கோபமாய் கத்தினான். இன்றைக்கு காலை பத்து மணியிலிருந்து ஒருமணி நேரம் பிராக்டிஸ் முடிந்தது. முதல் நாளே "டேய்' என்கிற லெவலுக்கு இறங்கி விட்டான்.
ஒரு வார ப்ராக்டிஸில் ஆள் நடமாட்டம் இல்லா சாலைகளிலும், அமானியான மைதானத்திலும் என்னால் சுமாராக ஓட்ட முடிந்தது. மனசில் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. ஆனால் இப்பவும் எதிரில் வண்டி வந்தால் கிளட்ச், கியர், ப்ரேக், ஆக்ஸிலேட்டர், எது எது எங்கேயிருக்கு? எதுவும் நெனைப்புக்கு வராது. மறந்து போய்விடும். பொசுக்கென்று வண்டி இடித்துக் கொண்டு நிற்கும்.
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் டிரெய்னிங்கில் எனக்கு கொஞ்சம் மனசிலே தெம்பு வந்தது. காலுக்குக் கீழே இருக்கும் கிளட்ச், ப்ரேக், ஆக்ஸிலரேட்களைப் பார்க்காமலேயே என் கால்களுக்கு இனங்கள் பிடிபட ஆரம்பித்திருந்தன.ஒரு பதினைந்து நாள் டிரெய்னிங்கிற்கு அப்புறம் அன்றைக்கு காலையில் ட்ரெய்னிங்கில் கற்றுக் கொண்ட துளியூண்டு டிரைவிங் அறிவை வைத்துக் கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் ஃபியட் பாலியோவை ஓட்ட முயற்சி செய்து சுவரில் முட்டினேன். அழுத்தறேன் அழுத்தறேன் ப்ரேக் பிடிக்கவில்லை. என்ன பண்ணுவேன்? அப்புறந்தான் புரிந்தது ப்ரேக் என்று நினைத்து கிளட்ச்சை அழுத்திக் கொண்டிருக்கிறேன்.
மறுநாள் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு என்னை நகர்த்தினார்கள். சரியான டிராஃபிக் சாலையிலே வண்டியை ஓட்டணும். கசகசவென்று கார்களும், லாரி பஸ்களும், மக்கள் கூட்டமும் கலந்து பயணிக்கும் எங்கள் ஊர் கடைவீதிக்கு மாஸ்டர் மோகனம் வண்டியைக் கொண்டு வந்து விட்டான். டிரைவர் சீட்டில் உட்கார்ந்தேன். "வெலவெல'ன்னு வந்து விட்டது எதிரே கண்களுக்கெட்டிய தூரம் சாலையை முழுமையாக அடைத்தபடி ஜன சமுத்திரம். தீபாவளி பர்சேஸிங். இன்னும் மூணு நாட்களில் தீபாவளி பண்டிகை வருகிறது. இதிலே எப்படி வண்டியோட நீந்தி போய் கரை சேரப் போகிறேன்? இன்னிக்கு எத்தனை பிணம் விழப்போகுதோ? பகவானே...பயந்து கொண்டே வண்டியை ஸ்டார்ட் பண்ணும் போது எதிரில் சிம்பாலிக்காக கொழுத்த எமனின் வாகனம் முர்ரா கிராஸ் பண்ணி போனது.போனதோடு இல்லாமல் நடுவில் நின்று என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு போனது. எனக்கு உள்ளே ஜில்லிட்டது.
"" யோவ் பெரியவரே! ஒண்ணுத்துக்கும் பயப்படாத. ஃபர்ஸ்ட் கியர் போட்டு வண்டியை கிளப்புய்யா. கடைசி வரைக்கும் ஃபர்ஸ்ட் கியர், செகண்டு கியர்லியே வண்டி நகரட்டும் தெர்தா? ஹார்ன் குடுத்துக்கிட்டே போ... ஜனங்க தன்னால வழி வுட்ருவாங்க''
...க்கும்... ஹார்ன் அடிச்சா எவன் நகர்றான்? டென்ஷனில் ஃபர்ஸ்ட் கியர் போட்டு அப்படியே தேர்ட் கியருக்கு போயிட்டேன் போல. வண்டி "டக்கு டக்கு'ன்னு இடிச்சி குபீர்னு கிளம்பிடுச்சி. ஜனங்கள்லாம் சிதறி ஓட, வண்டி தாறுமாறாக ஓடியது. படார்னு என் முதுகுல அடி விழுந்தது. மாஸ்டர் திட்டிக் கொண்டே ஃபர்ஸ்ட் கியருக்கு மாற்றினான்.
""யோவ்! ஆக்ஸலரேட்ல இருந்து காலை எட்றா பாவி'' சடக்கென்று காலை எடுத்துக் கொண்டேன்.
ஓர் இடத்தில் முன்னால போற கார்மீது மோத இருந்ததை மாஸ்டர்தான் சமாளித்தான். அன்றைக்கு இரண்டு தடவை அந்த கோடி வரைக்கும் கடைவீதியில் வலம் வந்து முடித்தோம். ரெண்டொரு மனிதர்கள், ரெண்டு நாய்கள், மூன்று கார்கள், அத்தனையும் என் தாக்குதல்களில் இருந்து மயிரிழையில் தப்பியிருந்தன. ஒரு சைக்கிள்வாலா கீழே விழுந்து எழுந்து ஓடினான். அவன் ஆயுசு கெட்டி என்ற மாஸ்டர் எரிச்சலின் உச்சத்தில் களைத்துப் போயிருந்தார்.
""இத்தினி நாளாய் ஒரு கழுதைக்கு டிரெய்னிங் குடுத்திருந்தால் கூட நல்லா ஓட்டியிருக்கும்யா!'' என்று சலிப்படைந்தாள்.
எனக்கு அவமானமாக இருந்தது. டிரைவிங் கத்துக்கிறவன்லாம் இப்படியெல்லாமா திட்டு வாங்கறான்? என்னை இந்த நெருக்கடியில மாட்டிவிட்ட பிள்ளையை ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தேன். அடுத்து அந்த வாரம் முழுக்க கடைவீதியிலேயே எனக்கு டிரெய்னிங் கொடுத்து தாளித்தெடுத்தார்கள்.
இப்போதெல்லாம் உள்ளூரில் எங்கள் ஃபியட் பேலியோவில் தனியாகவோ மனைவியுடனோ சுற்றும் தைரியம் வந்து விட்டது. கீழே கிளட்ச், ப்ரேக், ஆக்ஸிலரேட்களில் என் கால்கள் நடனமாட கற்றுக் கொண்டுவிட்டன. மனசுக்கு தெம்பாக இருந்தது. பத்து பன்னிரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கோயில் குளங்களை காரில் போய் சுற்ற ஆரம்பித்தோம். தெருவே "கிழவனைப் பார்றா' என்று மூக்கில் விரல் வைத்தது. இந்த ஒரு மாசத்தில் கார் ஓட்டியதிலும், டெம்பரரி லைசென்ஸ் வைத்திருக்கிற தைரியத்திலும் சர்ப்ரைஸிங்காக இருக்கட்டும் என்று ஒருநாள் மனைவியுடன் சென்னை சத்தியன் வீட்டுக்கு கிளம்பி விட்டோம். அசட்டு தைரியம். பொண்டாட்டி உசுரையுந்தானே பணயம் வைக்கிறேன்?அய்யோ! ஸ்ரீபெரும்புதூர் தாண்டியதும்தான் சிக்கல் ஆரம்பித்தது. ட்ராஃபிக் ஜாம். கசகசவென்று கார், பஸ், லாரிகளின் நெருக்கடி. அப்படி இப்படி காரை திருப்பி ஒடிக்க முடியாது. என் காரின் எல்லா பக்கங்களிலும் ஓர் அடி இடைவெளியில் அடுத்த கார். இந்த டைட்ல நான் எப்பிடி கார் ஓட்றது? நிறுத்தவும் முடியாது. கொஞ்சம் ஸ்லோ பண்ணவும் முடியாது. பின்னால "பாம்..பாம்' னு ஹார்ன் அடிக்கிறான். ரொம்ப அவசரப்பட்டுட்டோமோ. அந்நேரத்துக்கு பின்னால எவனோ ஒருத்தன் எங்கள் கார்மீது "ணங்'கென்று இடித்தான். சரி எதாயிருந்தாலும் இப்ப எதுவும் பார்க்க முடியாது. ஓட்ட முடியாம நிறுத்திடல... கொஞ்சம் ஸ்லோ பண்ணேன். அவ்வளவுதான்.
ஒரு குட்டியானை வண்டிக்காரன் சைடு வாங்கி கிட்ட வந்து, ""டேய் கெய போல்டு! கயித, கஸ்மாலம்,
ஓட்டத்தெரியாதவன்லாம் வந்து ஏன்டா எங்க உசுரை வாங்கற? கயித''ன்னு கத்திட்டுப் போறான். அடுத்து ஒரு வேன்காரன்சைடு வாங்கி வந்து
""ஐயா...ஐயா...ஏன்யா பின்னால ஒரு வண்டி இடிச்சால் கூட ஏன்னு கேக்க மாட்டியா?'' சொல்லி சிரித்து விட்டு போகிறான்.கேட்டுவிட்டு என்னவோ டிரைவிங்கில் எக்ஸ்பர்ட் மாதிரி என் பொண்டாட்டி என்னைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டு சிரிக்கிறாள். "சுரு சுரு'ன்னு கோபம் வருகிறது. இப்ப எதை கவனிக்கவும் டைம் இல்லை. அடுத்து வரும் மோதல்களைச் சமாளிச்சாவணும்.
வீட்டிலிருந்து கிளம்பினதிலிருந்து எனக்கு கடவுள் கிட்ட ஒரு பிரார்த்தனை இருக்கிறது. கிண்டி பாலத்தை ஏறுகிறப்ப "சர்'ரென்று மேலே ஏறும்படி எனக்கு வாய்க்கணும். ஏற்றத்தில நின்று நின்று போகிற மாதிரி ட்ராஃபிக் ஜாம் வந்திடுச்சோ செத்தேன். எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன்... ஊஹும். கிளட்சை அழுத்தி கியர் போட்டு ஆக்ஸலரேட்டை அமுக்கிறதுக்குள்ள வண்டி ரிவர்ஸ்ல நகருது. இங்க சிட்டியிலியா பின்னால ஒரு அடி துரத்தில வண்டி நிக்கிது, அப்பாடா என் நல்ல நேரம்... பாலம் ஃப்ரீயாக இருந்தது. படு வேகத்தில பாலத்தைக் கடந்து விட்டேன்.
மகன் வசிக்கிற கிண்டி பிரியா அபார்ட்மெண்ட் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் போனதும் மகனும், மருமகளும் வரவேற்றார்கள். செல்ஃப் டிரைவிங்கில் நான் காரை எடுத்துக் கொண்டு வந்ததை அறிந்து அதிர்ச்சியாகிவிட்டார்கள். அவர்களால் நம்ப முடியவில்லை.பையன் ஓடி வந்து உணர்ச்சியுடன் என்னை கட்டிக் கொண்டான்.
அன்றைக்கெல்லாம் பேத்திகளுடன் சந்தோஷமாய் இருந்து விட்டு மறுநாள் மதியம் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். சாப்பிடும் போதிலிருந்தே என் பிரார்த்தனை ஆரம்பித்து விட்டது.
"முருகா!...பகவானே..! கிண்டி பாலத்தை கடக்கும் போது டிராஃபிக் ஜாம் இல்லாமல் இருக்கணும் சாமீ' வண்டியில் கால் வைப்பதற்குள் சக்தி வசியம் மந்திரத்தை நூத்தியெட்டு தடவை பாராயணம் பண்ணி முடித்திருந்தேன். பல சமயங்களில் இந்த பாராயணம் என்னை சங்கடங்களிலிருந்து காப்பாற்றியிருக்கிறது.
""ஏங்க எதனா வாய் திறந்து பேசுங்களேன். வண்டி ஓட்ட ஆரம்பிச்சா வாய் அடைச்சிப் போயிட்றது உங்களுக்கு. ஹும்!''
என் நெருக்கடி பத்தி அவளுக்கு என்ன தெரியும்.
பேசவோ, திட்டவோ கூட இப்ப முடியாது. கசகசவென்ற வண்டிகளின் அம்பாரத்துக்குள்ளே என் வண்டியை இடிபடாமல் ஓட்டியாகணும்.இப்பவே வியர்வையில் சட்டை நனைய ஆரம்பித்துவிட்டது. இன்னும் குறை தூரத்தை எப்படி ஓட்டப் போகிறேன்? கிண்டி பாலத்தை நெருங்க நெருங்க உள்ளே மார்ல "டப் டப்' என்று தாறுமாறாய் டிரம்ஸ் வாசிக்குது. அப்பாடா பரவாயில்லை... பாலம் ரொம்ப நெருக்கடியாக இல்லை. வளைஞ்சி நெளிஞ்சி மேல ஓடிப்புடலாம். பகவானுக்கு நன்றி சொல்லிட்டு செகண்ட் கியர் போட்டு வண்டியை கிளப்பினேன். நெட்டில் ஏறிக் கொண்டிருக்கும் போது பாதி ஏற்றத்தில், போச்சி டிராஃபிக் ஜாம். நகர வழியில்லை. வண்டியை நிறுத்தி விட்டேன்.எல்லா தெய்வங்களும் என்னைக் கை விட்டு விட்டன.படபடப்பாய் இருக்கிறது. இன்ச் இன்ச்சாய் பாதி தூர ஏற்றத்தை எப்படி கடக்கப் போகிறேன்? முன்னால வண்டி மூவ் ஆகுது. எப்படியோ தட்டுத் தடுமாறி கிளப்பிட்டேன். ச்சீ! அதற்குள் பின்னாலிருந்து எவனோ ஒரு மட்டி விடாமல் ஹார்ன் அடிக்கிறான். எனக்குடென்ஷன் எகிறுது.அடுத்த மூவ் எடுக்க பிரேக்கை விடுவிக்க, ஐயய்யோ... வண்டி பின்னால நகர ஆரம்பிச்சிடுச்சே. ஐயய்யோ!... பின்னால பார்த்தால் புத்தம் புதுசாய் பிஎம்டபுள்யூ கார் நிக்கிது. ரெண்டு நாளைக்கு முன்னாலதான் வண்டியை டெலிவரி எடுத்திருப்பான் போல. மெருகு குலையாத புத்தம் புதுசு.காலை உதைக்கிறேன் உதைக்கிறேன் கார் நிற்கவில்லை.ஐயோ... ஆஹா அதிர்ஷ்டம் என் பக்கம். ஒரு பொன்னான நொடியில் காரை நிறுத்தி விட்டேன். அதற்குள் பிஎம்டபுள்யூ காரன் சைடு வாங்கி ஓடியே போய்விட்டான். அப்புறம் சாவகாசமாக
வண்டியைக் கிளப்பினேன். வீட்டிற்கு வந்து சேர்ந்த போது மாலை ஐந்து மணி.பையனிடமிருந்து போன்.
"" அப்பா! கன்கிராஜுலேஷன், எழுபது வயசில வண்டியை எவ்வளவு விரைவாக கத்துக்கிட்டு சென்னை வரைக்கும் வந்து போயிட்டீங்களே. உங்களை நினைச்சா பெருமையா இருக்குப்பா''
எனக்கு கண்கள் பனித்தன. வேண்டாம்னு சொல்லி அவனை எவ்வளவு திட்டியிருப்பேன்? பிடிவாதமா என்னை சேர்த்துவிட்டானே. என்னாலேயும் முடியும்னு எனக்கு சொல்லி காட்டிட்டானே.
"" தேங்ஸ் டா கண்ணு''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com