திரைக் கதிர்

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கிய "மெரீனா' படத்தின் மூலம் நடிகர் ஆனார்.
திரைக் கதிர்


தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கிய "மெரீனா' படத்தின் மூலம் நடிகர் ஆனார். சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "சினிமாவில் பத்தாண்டுகள்... நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக வைத்து தொடங்கியது இந்தப்பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம், நான் நினைத்துக் கூட பார்த்திராத நிஜம்.

இத்தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும், உடன் நின்று பயணித்த இயக்குநர்களுக்கும், தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

---------------------------------------------------

வெற்றிமாறன் இயக்கத்தில் "வட சென்னை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் அமீர். இந்த படத்தில் அமீரின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வெற்றிமாறனுடன் அமீர் கைகோர்க்கிறார். இந்த படத்தில் அமீர் நடிக்கவில்லை. வெற்றிமாறன் தயாரிக்க, அமீர் இயக்குகிறார். ஹீரோவாக யார் நடிக்கிறார் என்பது முடிவாகவில்லை. இந்த படத்துக்கு தங்கம் என்பவருடன் சேர்ந்து கதை எழுதியுள்ளார் வெற்றிமாறன். இந்த கதைக்கு அமீர் திரைக்கதை எழுதிவிட்டார். சமீபத்தில் படம் தொடர்பான ஆலோசனை நடந்தது. அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வருகின்றன. இந்நிலையில் விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் "விடுதலை' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது.

---------------------------------------------------

மீடியாவின் அதி நவீன தொழில்நுட்ப வடிவம் கிராபிக்ஸ் நாவல், கார்ட்டூன், அனிமேஷன் படங்களைத் தொடர்ந்து இந்த பாணி இப்போது வளர்ந்து வருகிறது. அந்த வரிசையில் உருவாகும் ஒரு கிராபிக்ஸ் நாவல் "அதர்வா'. இதில் சிறப்பு என்னவென்றால், இதில் நடிப்பது முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி. அமேசான் தளத்தில் வெளியிடப்படும் இந்த நாவல் குறித்த டீசர் வீடியோவை தோனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரமாண்டமாகவும் பெரும் பொருட்செலவில் இந்த கிராபிக்ஸ் நாவல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கிராபிக்ஸ் நாவல் படிக்கும் குழந்தைகளுக்கும் தோனி ரசிகர்களுக்கும் இந்த கிராபிக்ஸ் நாவல் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்றும் தயாரிப்பு தரப்பில் கூறியுள்ளனர். தோனி விரைவில் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இது அதன்முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

---------------------------------------------------

1982 -ஆம் ஆண்டு வெளிவந்த படம் "மூன்றாம் பிறை'. பாலுமகேந்திரா இயக்கிய இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்திருந்தார்.இந்த படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் "பாலு மகேந்திரா நூலகம்' இயக்குநர் வெற்றிமாறன் தலைமையில் ஒரு சிறப்பு மலரை வெளியிடுகிறது. இந்த மலரில், படத்தில் இடம்பெற்ற நட்சத்திரங்கள் தொழில் நுட்ப, கலைஞர்களின் அனுபவப் பகிர்வுகளுடன் இடம்பெறுகிறது. அதோடு "மூன்றாம் பிறை' படத்தை தியேட்டரில் பார்த்த அனுபவத்தை ரசிகர்கள் கட்டுரையாக எழுதுகிறார்கள். அதற்கு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

---------------------------------------------------

சுசி கணேசன் அடுத்து இயக்கி வரும் படத்துக்கு "வஞ்சம் தீர்த்தாயடா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.எண்பதுகளில் மதுரை வட்டாரப் பகுதிகளில் நடக்கும் கதையாக இது உருவாக உள்ளது. படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகின்றது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படத்தை இயக்குநர் சுசி கணேசன் இணையத்தில் வெளி
யிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தில் நடிக்கும் இரண்டு கதாநாயகர்களையும் வித்தியாசமான முறையில் தேடி வருகிறார் இயக்குநர் சுசிகணேசன். நடிப்பில் ஆர்வமுள்ள 20 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். இது தொடர்பான இணையத்தில் போட்டியாளர்கள் தங்களது விடியோக்களை பதிவேற்றலாம். இதிலிருந்து 2 பேரைத் தேர்வு செய்து இந்தப் படத்தில் நடிக்க வைக்க உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com