திரைக்கதிர்

சூர்யாவின் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் "24'. சமந்தா உள்ளிட்டோர் நடித்தனர்.
திரைக்கதிர்

சூர்யாவின் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் "24'. சமந்தா உள்ளிட்டோர் நடித்தனர். படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தமிழ் சினிமாவில் இது அசாத்திய முயற்சி என்றே சொல்லலாம். அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்ற "24' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் சூர்யா தீவிர முயற்சியில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சூர்யா இப்பொழுது பாண்டிராஜ் இயக்கத்தில் "எதற்கும் துணிந்தவன்' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் "வாடிவாசல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து "24'பாகம் 2இல் நடிக்க உள்ளார் .

மேலும் இந்தப் படம் முதல் பாகத்தை விடவும் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

---------------------------------------

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் "அயலான்',  விக்ரம் நடித்து வரும் "கோப்ரா', மணிரத்னம் இயக்கியுள்ள "பொன்னியின் செல்வன்' மற்றும் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் "இரவின் நிழல்' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடலொன்றை கம்போஸ் செய்த விடியோவை வெளியிட்டுள்ளார். இந்த விடியோவில் உள்ள பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், இந்த பாடல் எந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிவிற்கு பெரும்பாலானோர் பார்த்திபனின் "இரவின் நிழல்' படத்திற்கான பாடல் என்று பதிலளித்துள்ளனர்.

---------------------------------------

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் படம் "முசாசி'. ஆக்ஷன் படப் பாணியில் தயாராகும் இந்தப் படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபுதேவாவிற்கு இந்தப் படத்தில் ஜோடியில்லை. ஏற்கெனவே அவர் "பொன் மாணிக்கவேல்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் "மாஸ்டர்' மகேந்திரன்,  தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

---------------------------------------

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் படம் "ராக்கெட்ரி'. மாதவன் தயாரித்து நடிக்கிறார். மாதவனின் மனைவியாக சிம்ரன் நடிக்கிறார். இவர்களுடன் ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் 
உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் முழுமையாகத் தயாராகி விட்டது. வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரும் ஜூலை 1- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

---------------------------------------

சர்வதேச ஹிட் தொடரான "மாடர்ன் லவ்'-இன் இந்தியத் தழுவல் தொடர் குறித்த அறிவிப்பை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளிவரவுள்ள இத் தொடருக்கு "மாடர்ன் லவ்: மும்பை', "மாடர்ன் லவ்: சென்னை' மற்றும் "மாடர்ன் லவ்: ஹைதராபாத்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல பத்திரிகையில் வந்த கட்டுரைகளைத் தழுவி உருவாகியுள்ள இத் தொடரின் ஒவ்வோர் அத்தியாயமும் காதல், ஈர்ப்பு, சுய பக்தி, குடும்ப பாசம், நண்பர்கள் மீதான அன்பு என பல மனித உணர்வுகளைக் கதைகள் மூலம் வெளிப்படுத்தும் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் 240  நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியிடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com