'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! 69

 பள்ளிக்கூட ஆசிரியர்களின் பிரம்படி என்பது வேறு, போலீஸ்காரர்களின் "லாத்தி'யாலான தடியடி என்பது வேறு என்பதை அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! 69

பள்ளிக்கூட ஆசிரியர்களின் பிரம்படி என்பது வேறு, போலீஸ்காரர்களின் "லாத்தி'யாலான தடியடி என்பது வேறு என்பதை அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன். எலும்பே நொறுங்கிவிடும்போல விழுந்த தடியடியும், பூட்ஸ் காலால் எட்டி ஓர் உதையும் என்னை நிலைகுலைய வைத்தன. சுருண்டு விழுந்ததில் முகத்திலும் கைகளிலும் சிராய்ப்பு வேறு.

உருண்டுபோய் ஓர் ஓரமாகக் கிடந்தேன். அசையாமல் கிடந்ததாலோ என்னவோ என்னை அந்தப் போலீஸ்காரர் விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். செய்வதறியாத திகைப்பிலும், அதிர்ச்சியிலும், நடக்க முடியாததாலும் அப்படியே அந்த சாலையோரத்தில் ஒரு கேட்டுக்கு அருகில் கிடந்தேன். எத்தனை நேரம் அப்படி இருந்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது. மயங்கி விட்டேன் என்றுகூட நினைக்கிறேன்.

நான் கண் விழித்து, சற்று அசைந்து, தலையை உயர்த்திப் பார்த்தபோது அங்கே மயான அமைதி நிலவியது. சாலையில் யாருமே இல்லை. அந்த அகலமான சாலையில் செருப்புகள், மூக்குக் கண்ணாடிகள், கைப்பைகள் என்று சிதறிக் கிடந்தன. ஆங்காங்கே என்னைப்போல ஏழெட்டு பேர் விழுந்து கிடப்பது தெரிந்தது.

நல்லவேளையாக எனது கைப்பை கைக்கெட்டும் தூரத்தில் விழுந்து கிடந்தது. சற்று சுதாரித்துக் கொண்டு மெல்ல எழுந்திருக்க முயன்றேன். சிராய்ப்புக் காயத்தால் எரிச்சலும், தடியடியால் தாள முடியாத வலியும் மரண வேதனையை ஏற்படுத்தின.

உடலிலுள்ள சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு எழுந்து நின்றேன். கால்கள் தள்ளாடின. சமாளித்துக் கொண்டு எனது கைப்பையை எடுத்துக் கொண்டேன். செருப்புகளையும் தேடிப் பிடித்து அணிந்து கொண்டேன். சாலையில் யாருமே இல்லை. எனக்கு வழியும் தெரியாது. ஏதோ கால்போன போக்கில் தள்ளாடித் தள்ளாடி நடக்கத் தொடங்கினேன்.பத்து நிமிடம்தான் நடந்திருப்பேன்.

எனக்குப் பின்னாலிருந்து விரைந்து வந்த வாகனம் ஒன்று பிரேக் போட்டு என்னருகில் வந்து நின்றது. அதிலிருந்து வங்காளியில் யாரோ உரக்க அழைத்தது கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அது ஒரு போலீஸ் ஜீப். அதில் டிரைவருக்குப் பக்கத்தில் சர்தார்ஜி அதிகாரி அமர்ந்திருந்தார். பின்னால் துப்பாக்கி ஏந்திய காவலர்களும் திறந்த ஜீப்பில் நின்று கொண்டிருந்தார்கள்.

வங்காளியில் அவர் கேட்டது புரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்த என்னை, வாகனத்தில் இருந்தபடியே சட்டையைப் பிடித்தார் அந்த சீக்கிய காவல்துறை அதிகாரி. நான் வங்காளியல்ல என்று புரிந்திருக்க வேண்டும்.

தமிழன் என்று நெற்றியில் எழுதி ஒட்டியிருந்ததோ என்னவோ, யார் கண்டது? அவர் ஆங்கிலத்தில் அதிகார தோரணையுடன் வினவினார்.

"யார் நீ? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?''

"நான் ஒரு ஜர்னலிஸ்ட். பேரணியைப் பார்க்க ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். தடியடியில் சிக்கிக் கொண்டேன்'' என்று தட்டுத் தடுமாறி என் நிலைமையை விளக்கினேன்.

"நல்ல வேளை, நீ தடியடியுடன் தப்பித்தாய். துப்பாக்கிச் சூட்டில் மாட்டிக் கொண்டிருந்தால் நீ யாரென்று கூட அடையாளம் தெரியாமல் போயிருக்கும். பத்திரிகையாளர் என்கிறாயே, அதற்கான அத்தாட்சி ஏதாவது வைத்திருக்கிறாயா?''

சட்டென்று நினைவுக்கு வந்து, எனது கைப்பையைத் திறந்து பார்த்தேன். தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் அடையாள அட்டை இருந்தது. எடுத்து நீட்டினேன். அதைப் பார்த்த பிறகுதான் அந்த போலீஸ் அதிகாரியின் முகத்தில் இருந்த கடுமையும், சந்தேகமும் சற்று குறைந்தது.

"தமிழ்நாட்டுப் பத்திரிகையாளரான உனக்கு இங்கே நடந்த இளைஞர் காங்கிரஸ் பேரணியில் என்ன அக்கறை? இதற்காகவா நீ கொல்கத்தா வந்தாய்?''

"இல்லை, நான் வேறு விஷயமாக வந்தேன். வந்த இடத்தில் பேரணி நடப்பது தெரிந்ததால், அதைப் பார்க்க நினைத்தேன்.''

"வங்காள மொழியும் தெரியாது. கொல்கத்தா நகரைப் பற்றியும் தெரியாது. ஏனிந்த தேவையில்லாத வேலை... சரி, சரி ஜீப்பில் ஏறிக் கொள்.''

சற்று சிரமப்பட்டு பின்னால் ஏறிக் கொண்டேன். லால் பஜாரிலுள்ள கொல்கத்தா காவல் துறைத் தலைமையகத்தில் சென்று நின்றது அந்த ஜீப். அவரும் இறங்கினார். என்னையும் இறங்கி அவர் பின்னால் வரச் சொன்னார். அவரைப் பின் தொடர்ந்து உள்ளே போனேன். முதல் மாடியில் இருந்தது அவரது அறை.

நடந்து போகும்போது எதிரில் தென்பட்ட போலீஸ்காரர்கள் அவருக்கு சல்யூட் அடித்த விதத்திலிருந்து அவர் காவல்துறையின் உயர் அதிகாரிகளில் ஒருவர் என்பது தெரிந்தது. ஒருபுறம் வலி, இன்னொரு புறம் அதிர்ச்சி. சிராய்ப்புகளால் ஏற்பட்ட எரிச்சல் வேறு. இத்தனைக்கும் இடையில், தெய்வமே வந்து உதவியதுபோல இருந்தது அந்த அதிகாரி என்மீது காட்டிய பரிவும், அக்கறையும்.

அவர் தனது அறையில் நாற்காலியில்போய் அமர்ந்து, மணியடித்து யாரையோ அழைத்து வரச்சொன்னார்.

"எங்கே தங்கியிருக்கிறாய்?''

"பிதான் பவனில்...''

என்னைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தார்.

"நீங்கள் நம்புவீர்களோ, இல்லையோ, நான் பிரணாப் முகர்ஜியைப் பார்ப்பதற்காக தில்லியில் இருந்து கொல்கத்தா வந்திருக்கிறேன். அவரை இன்னும் சந்திக்க முடியவில்லை. தாஸ் முன்ஷியை பிதான் பவனில் சந்தித்தபோது, அவர்தான் அங்கேயே தங்க ஏற்பாடு செய்தார். ரயில்வே நிலையத்திலிருந்த அறையைக் காலி செய்துவிட்டு நான் நேற்றுதான் பிதான் பவனுக்கு வந்தேன்.''

"காங்கிரஸ் கட்சிக்கும் உங்களுக்கும் தொடர்பு ஏதாவது இருக்கிறதா?''
"இல்லை. முக்கியமான காங்கிரஸ் தலைவர்களுக்கெல்லாம் என்னைத் தெரியும். காங்கிரஸ் மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சியின் சமர் முகர்ஜி, பார்வர்டு பிளாக் தலைவர் சித்தா பாசு போன்றோருக்கும் என்னை நன்றாகத் தெரியும். வேண்டுமானால் விசாரித்துக் கொள்ளுங்கள்.''
"பொதுவாக மதராஸிகள் பொய் சொல்ல மாட்டார்கள். வம்பு வழக்குகளுக்கும் போக மாட்டார்கள். அதனால் உன்னை நம்புகிறேன். நீ பிதான் பவனில் தங்குவது ஆபத்து. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.''
பிறகு எங்கே போய்த் தங்குவது என்கிற குழப்பத்தில் நான் ஆழ்ந்தேன். அப்போது அவர் அழைத்திருந்த போலீஸ்காரர் வந்தார். அவரிடம் என்னைப் பற்றி ஏதோ சொன்னார். பிறகு என்னிடம் பேசத் தொடங்கினார்.
"இவருடன் போய் பிதான் பவனிலிருந்து உங்கள் பெட்டியோ பையோ இருந்தால் எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்துக்குப் போய்விடுங்கள். அங்கே நீங்கள் தங்குவதற்கு அறை ஒதுக்கித்தரச் சொல்லி இருக்கிறேன். இவர் உதவுவார். அங்கே தங்கியிருந்தால் பாதுகாப்பாகவும் இருக்கும். சாப்பாட்டுக்கும் பிரச்னை இருக்காது. கையில் பணம் இருக்கிறதா?''
"தேவைக்கான பணம் இருக்கிறது. உங்கள் உதவிக்கு நன்றி.''
"நன்றியெல்லாம் இருக்கட்டும். பத்திரமாக மெட்ராஸ்போய்ச் சேருங்கள். பெஸ்ட் ஆஃப் லக்!''
என்னுடம் வந்த இன்ஸ்பெக்டருக்கு வங்காளி தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. ஆங்கிலத்தில் "எஸ்', "ஓகே', "குட்', "தேங்க்ஸ்', "ஸார்' என்கிற ஐந்து வார்த்தைகள்தான் தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால், உயரதிகாரியின் கட்டளையை வார்த்தை பிசகாமல் நிறைவேற்றி, என்னைப் பத்திரமாக ரயில்நிலைய ஓய்வறையில் அறைக்கு ஏற்பாடு செய்து கொண்டுபோய் விட்டுவிட்டுச் சென்றார்.
அன்று கொல்கத்தாவில் நடந்த மம்தா பானர்ஜி கூட்டிய ஜூலை 21-ஆம் தேதி பேரணி வரலாற்று முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
அதற்கு முன்னால் பிரிகேட் பாரேட் மைதானத்தில் அவர் கூட்டிய பேரணியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள் என்றால், நிச்சயமாக ஜூலை 21 பேரணியிலும் அதேபோன்று பல லட்சம் தொண்டர்கள் நிச்சயமாகக் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
பராபோன் சாலையை ஒட்டிய "டீ போர்ட்'
(இந்திய தேயிலை வாரியம்) அலுவலகப் பகுதியிலும், மேயோ சாலையிலும், கேனிங் சாலையிலும் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியபோது, காவல்துறையால் அவர்களைத் தடுக்க முடியவில்லை. கூட்டம் கலைந்து போக மறுத்தது. மேற்குவங்கத் தலைமைச் செயலகமான ரைட்டர்ஸ் கட்டடத்தையும்,
ஆளுநர் மாளிகையையும் முற்றுகை இடுவது என்று பிடிவாதமாக இருந்த மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்களைக் காவல்துறையினரால் எதிர்கொள்ள முடியவில்லை.
என்ன நடந்தது என்பது குறித்து இன்றுவரை சரியான விவரம் இல்லை. "டீ போர்ட்' சந்திப்பில் (நான் நின்று கொண்டிருந்த பராபோன் சாலையின் அருகில்தான் இருந்தது அந்த சந்திப்பு), மம்தா பானர்ஜியைத் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டிருந்தும் கூட, அவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டார். அந்த செய்தி பரவியதும் தொண்டர்கள் மேலும் ஆத்திரமடைந்தனர் என்று கூறப்படுகிறது.
போலீஸ் தாக்குதலுக்குப் பயந்து கர்சன் பூங்காவில் தஞ்சமடைந்த தொண்டர்கள், ஜாலியன்வாலாபாக் போல காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு சுடப்பட்டனர் என்பதும், அதனால் 13 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் பத்திரிகை செய்திகள். நான் உள்பட நூற்றுக்கணக்கானோர் போலீஸ் தடியடியில் காயமடைந்தோம். அந்தச் செய்திகளை எல்லாம் ரயில்நிலைய ஓய்வறையில் அமர்ந்தபடி, ஆங்கில தினசரிகளைப் படித்துத் தெரிந்து கொண்டேன்.
ரயில்நிலைய டெலிபோன் பூத்திலிருந்து பிரணாப் முகர்ஜியின் வீட்டைத் தொடர்பு கொண்டேன். அவரே தொலைபேசியை எடுத்தார். எனது அழைப்பு அவருக்குத் திகைப்பை ஏற்படுத்தியது. நான் கொல்கத்தா வந்திருக்கிறேன் என்பது அதை விட அதிர்ச்சி.
"இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உன்னை யார் இந்த நேரத்தில் கொல்கத்தா வரச் சொன்னது?''
"உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன். ரயில்நிலைய ஓய்வறையில் தங்கி இருக்கிறேன். எல்லா விவரங்களையும் நேரில் வந்து சொல்கிறேன். எப்படி வருவது என்றுதான் தெரியவில்லை.''
"நானே உன்னை அழைத்துவர ஏற்பாடு செய்கிறேன். அங்கேயே காத்திரு...''
தடியடி, பூட்ஸ்காலால் மிதிபட்டது, சிராய்ப்புக் காயம், உடம்பு வலி எல்லாம் பறந்துவிட்டது. பிரணாப் முகர்ஜியிடம் பேசிவிட்டோம். அவரைப் பார்க்கப் போகிறோம் எனும்போது, கொல்கத்தா வந்தது வீண்போகவில்லை என்கிற மகிழ்ச்சியை அளித்தது.
அடுத்த நான் காலையில் சுமார் பத்து மணியளவில் பிரணாப் முகர்ஜியின் வீட்டிலிருந்து ஒருவர் வந்து என்னை அழைத்துச் சென்றார். நடந்த சம்பவங்களை எல்லாம் பிரணாப்தாவிடம் கொட்டித் தீர்த்தேன்.
"தில்லியிலிருந்து கிளம்புவதற்கு முன்னால் என்னைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டல்லவா நீ வந்திருக்க வேண்டும். ஏனிப்படி திட்டமிடாமல் நடந்து கொள்கிறாய்?'' என்று என்னைக் கடிந்து கொண்டார்.
எனக்கு உதவிய சீக்கிய காவல்துறை அதிகாரி யார் என்று அவரே விசாரித்து, அவருக்கு பிரணாப்தா நன்றி கூறியபோது, என் விழிகள் நனைந்தன.
நான் வந்த விவரத்தைப் பிரணாப்தாவிடம் தெரிவித்தேன். அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.

தடியடியால் காயம்பட்ட மம்தா பானர்ஜி

"எல்லா கணக்குகளையும் மம்தாவின் பேரணி தகர்த்துவிட்டது. சைஃபுதீன் கூறியதுபோல இனிமேல் எதுவும் செய்ய முடியாது. நான் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதில் ஜோதிபாசுவுக்கும், இடது முன்னணிக்கும் எதிர்ப்பு இருக்கவில்லை. இந்தப் பேரணிக்குப் பிறகு, எனது தோல்வியை அவர்கள் காங்கிரஸ் தோல்வியாகப் பார்ப்பார்கள். என்னை எப்படியாவது தோற்கடிப்பது என்பதில் குறியாக இருப்பார்கள். அவர்களிடம் நான் பேசினால் அது தவறாக சித்திரிக்கப்படும். காங்கிரஸ்காரர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரும். என்னை துரோகியாகப் பார்ப்பார்கள். தேர்தல் வெற்றியை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ பத்திரமாக ஊருக்குக் கிளம்பு!'' என்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார் பிரணாப் முகர்ஜி.
மம்தா பானர்ஜியின் பேரணியும், அவரது வளர்ச்சியும் இப்போதும் கூட என்னை பிரமிக்க வைக்கிறது.
அதில் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் உண்டு. தேர்தல் தில்லு முல்லு செய்வது, கள்ள வாக்குகள் போடுவது, வன்முறையைத் தூண்டிவிடுவது, குண்டர்களை வைத்து மாற்றுக் கட்சியினரை அச்சுறுத்துவது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மீதும், ஜோதிபாசு மீதும் மம்தா பானர்ஜி என்னவெல்லாம் குற்றச்சாட்டுக்களை அப்போது முன்வைத்தாரோ, அவை அனைத்துமே இப்போது எதிர்க்கட்சியினரால் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு எதிராகக் கூறப்படுகின்றன என்பதுதான் வேடிக்கை!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com