'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 70

ரயில் நிலைய ஓய்வறைக்கு வந்த எனக்கு, தில்லிக்குத் திரும்புவதா இல்லை சென்னைக்கே போய்விடுவதா என்கிற குழப்பம் சற்று நேரம் நீடித்தது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 70

ரயில் நிலைய ஓய்வறைக்கு வந்த எனக்கு,தில்லிக்குத் திரும்புவதா இல்லை சென்னைக்கே போய்விடுவதா என்கிற குழப்பம் சற்று நேரம் நீடித்தது. சிராய்ப்புக் காயங்களுடன் சென்னைக்குத் திரும்பினால், வீட்டில் உள்ளவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதால் தில்லிக்கே திரும்பிப் போய்விடுவது என்று தீர்மானித்தேன். கொல்கத்தாவிலிருந்து புறப்படும் எல்லா ரயில்களிலும் முன்பதிவுகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டிருந்ததால், டிக்கெட் கிடைப்பதில் எந்தவித சிரமமும் இருக்கவில்லை.

அடுத்த மூன்றாவது நாள், நரசிம்ம ராவ் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத்தீர்மானம் மக்களவையில் வாக்கெடுப்புக்கு வர இருந்தது. மத்திய சமூகநலத்துறை இணையமைச்சரான கே.வி. தங்கபாலுவின் கட்டுப்பாட்டில் இருந்த மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுச் சங்கத்தின் விருந்தினர் விடுதியில்அவரது பரிந்துரையுடன் ஒரு வாரம் வரை தங்கிக் கொள்ளும் வசதி கிடைத்தது.

தற்போது இந்திரஜித் குப்தா மார்க் என்று அழைக்கப்படும் கோட்லா மார்க்கில் அமைந்திருந்தது அந்த தங்கும் விடுதி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான அஜாய் பவனும், சிஐடியு தொழிற்சங்கத்தின் தலைமையகமான பிடிஆர் பவனும் கூப்பிடும் தூரத்தில்தான் அமைந்திருந்தன. பத்திரிகை அலுவலகங்கள் இயங்கும் பகதூர்ஷா சஃபர் மார்க் நடந்து செல்லும் தூரத்தில்தான் இருந்தது. அதனால், அங்கே தங்கியிருப்பது எனக்குப் பலவிதத்திலும் பயனுள்ளதாக அமைந்தது.

பிரதமர் நரசிம்ம ராவுக்கு நெருக்கமானவர்கள் அனைவருமே பரபரப்பாக இருந்தனர்.

அவர்களை நெருங்கவே முடியவில்லை. கேரளா ஹவுஸில் கேரள முதல்வர் கருணாகரன் வந்து தங்கியிருந்தார். பார்த்து வணக்கம் சொல்ல முடிந்தது. அதிகம் பேச முடியவில்லை. அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்திலும் சரி, எல்லோருடைய முகத்திலும் இறுக்கம் தெரிந்தது.

பூட்டா சிங்கும், ஆர்.கே. தவானும்தான் எதிர்க்கட்சி அணிகளைச் சேர்ந்தவர்களிடமும், உதிரிக் கட்சி எம்.பி.க்களிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். இருவருடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததால், அவர்கள் குறித்த செய்திகளை உதவியாளர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் முயற்சியில் மும்முரமாகக் களமிறங்கி இருந்தவர்கள் பூட்டா சிங், ஆர்.கே. தவான், வி.சி. சுக்லா, கேப்டன் சத்தீஷ் சர்மா ஆகிய நால்வரும்தான். கேரள முதல்வர் கருணாகரன் மட்டுமல்லாமல், கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி, ஒடிஸா முதல்வர் ஜே.பி. பட்நாயக், ஹரியாணா முதல்வர் பஜன்லால் உள்ளிட்ட பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரியவர்கள் அனைவரும் தில்லியில் முகாமிட்டிருந்தனர். அங்கே இல்லாமல் இருந்தது பிரணாப் முகர்ஜி மட்டும்தான்.

காங்கிரஸ் தரப்பு எப்படி சமாளிக்கப்போகிறது என்பது குறித்த விவரம் கிடைக்காததால், எதிர்க்கட்சி முகாம்களின் மூலம் தெரிந்து கொள்ள விழைந்தேன். ஆளுங்கட்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சிகளின் அலுவலகங்களில் சுவாரஸ்ய விவாதங்கள் தில்லியில் நடக்கும். பத்திரிகை நிருபர்கள் அடிக்கடி கூடும் அஜாய் பவன் தகவல் சுரங்கமாகவே இருக்கும்.

அஜாய் பவனில் டி. ராஜாவும், பி.டி.ஆர். பவனில் டபிள்யூ.ஆர். வரதராஜனும் இருந்ததால், நான் அடிக்கடி செல்லும் இடங்கள் அவை. ஆந்திராவிலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும் சாராய ஆலை அதிபர்கள் தில்லியில் முகாமிட்டிருப்பதாகவும், அவர்கள் மூலம் எம்.பி.க்கள் விலைபேசப் படுகிறார்கள் என்றும் முதன்முதலில் எனக்குத் தகவல் தந்தவர் டபிள்யூ.ஆர். வரதராஜன்தான்.

அடுத்த நாள் காலையில் மகாராணி பாகிலுள்ள ஐ.கே. குஜ்ராலின் வீட்டிற்குச் சென்றேன். கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தார். மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்படுவது போல, எம்.பி.க்கள் விலை பேசப்படுகிறார்கள் என்று வருத்தப்பட்டார். ""பதவிக்காகக் காங்கிரஸ்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்'' என்று அவர் சொன்னபோது எனக்குச் சிரிப்பு வந்தது. அடிப்படையில் அவரும் ஒரு காலத்தில் காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். அவசரநிலைக் காலத்தில் இந்திரா காந்தி அமைச்சரவையில் இருந்தவரும் கூட. முன்னாள் பிரதமர் சந்திரசேகரை சந்திக்க அவரது 3, செளத் அவென்யூ வீட்டுக்குச் சென்றபோது, வேறு பல புதிய தகவல்கள் கிடைத்தன.

சுப்பிரமணியம் சுவாமியைப் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அழைத்துப் பேசியிருக்கிறார் என்றும், அவரது உதவியுடன் ஜனதா தளத்தைப் பிளக்கும் முயற்சிகளை ஆளுங்கட்சி மேற்கொள்கிறது என்றும் அங்கே பேசிக் கொண்டார்கள். ஜனதாதளத்தைப் பிளப்பது என்றால், அஜீத் சிங்கை சந்தித்தால் தகவல் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். நேராக துக்ளக் சாலையில் உள்ள அவரது வீட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.

அப்போதெல்லாம் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இடங்களுக்குச் செல்ல யாரும் ஆட்டோ, கால் டாக்ஸியைத் தேடும் வழக்கம் இருக்கவில்லை. காலார நடப்பது கேவலமாகக் கருதப்படவில்லை.

என்னிடம் மனம்விட்டுப் பேசும், மிகவும் நெருக்கமான தலைவர்களில் அஜீத்சிங்கும் ஒருவர். ஏற்கெனவே, ஜனதாதளத்திலிருந்து அவரது தலைமையில் ஒரு பிரிவினர் தனியாகப் பிரிந்திருந்தனர். அவர்கள் ஜனதாதளம் அஜீத் சிங் என்கிற பெயரில் இயங்கி வந்தனர்.

""நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? சுப்பிரமணியம் சுவாமி மூலம் உங்களை விலைபேசவதாகப் பேசிக் கொள்கிறார்களே...''

""விலை பேசுகிறார்கள் என்பது பொய். சுப்பிரமணியம் சுவாமி நல்ல நண்பர். என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். ஆதரவு அளிக்கத் கோரினார். நான் மறுத்துவிட்டேன். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்துத்தான் எனது கட்சியினர் வாக்களிக்கப் போகிறார்கள்.''

""எம்.பி.க்களை விலை பேசுவது தவறில்லையா? இப்படியே போனால் இந்திய ஜனநாயகம் என்னவாகும்?''

""மாநிலங்களில் பேரங்கள் நடக்கின்றன. இப்போது தேசிய அளவிலும் அது பரவத் தொடங்கியிருக்கிறது. கூட்டணி ஆட்சி என்கிற பெயரில் சிலருக்கு அமைச்சர் பதவி கொடுத்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்க அனுமதிக்கலாம் என்றால், எம்.பி.க்களை விலைபேசுவது எனக்குத் தவறாகப் படவில்லை. இது "ஒன் டைம் பேமெண்ட்'. அது, "நிரந்தரக் கொள்ளைக்கான அனுமதி'. அதுதான் வித்தியாசம்.''

""நீங்கள் எம்.பி.க்கள் விலை பேசப்படுவதை ஆதரிக்கிறீர்கள் போலிருக்கிறதே...''

""அப்படி இல்லை. நான் விலை போகவில்லை. விலை போகத் தயாராகவும் இல்லை. அதே நேரத்தில், ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது வரலாறு. மொரார்ஜி தேசாய், செளத்ரி சரண் சிங் போல சில விதிவிலக்குகள் இருப்பார்களே தவிர, எல்லாரும் அப்படி இருக்கமாட்டார்கள்.''

""என்ன சொல்ல வருகிறீர்கள்? நரசிம்ம ராவ் அரசு பிழைக்குமா, பிழைக்காதா?''
""பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு அவரது ஆட்சி கவிழ்க்கப்படாமல் இருந்ததற்கு நாம் முன்வைத்த அத்தனை காரணங்களும் இப்போதும் அப்படியே இருக்கின்றன.

ஆதாரமில்லாத ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆட்சி கவிழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில், நான் அணி மாறி தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதாக இல்லை.''

அதற்கு மேலும் அவரிடம் தர்மசங்கடமான கேள்விகளை நான் கேட்க விரும்பவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அஜீத் சிங் அதற்கு ஆதரவாகத்தான் வாக்களித்தார். ஆனால் அவரது கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அது அஜீத் சிங்கின் ஒப்புதலோடு நடந்ததா, இல்லை அவருக்குத் தெரியாமலா என்று நான் அஜீத் சிங்கைக் கடைசி வரை கேட்கவில்லை.

மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் அஜாய் மகோபாத்யாய், பிரதமர் நரசிம்ம ராவ் அரசுக்கு எதிராக 1993 ஜூலை 26-ஆம் தேதி மக்களவையில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என்கிற வதந்தி பரவலாகவே இருந்தது. அஜீத் சிங் கட்சியைச் சேர்ந்த சிலர் மட்டுமல்லாமல், சில உதிரிக் கட்சிகளும், சுயேட்சைகளும் நரசிம்ம ராவுக்கு ஆதரவாகத் தீர்மானத்தை எதிர்க்கிறார்கள் என்கிற பேச்சு அடிபட்டது.

ஹோட்டல் அதிபரும், மாநிலங்களவை உறுப்பினருமான லலித் சூரி, சாராய ஆலை அதிபர்கள் ஆதிகேசவலு, திம்மே கெளடா உள்ளிட்ட பலர் நரசிம்ம ராவ் அரசு கவிழ்ந்துவிடாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது. ஆனால், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சுப்பிரமணியம் சுவாமியின் பங்கு என்ன என்பது குறித்து எந்தத் தெளிவான தகவலும் இல்லை.

சுப்பிரமணியம் சுவாமி ஜனதாதளத்தைச் சேர்ந்த எம்.பி.க்களைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் முன்வைத்த கோரிக்கை -பணம். ""அவர்களுக்குப் பணம் கொடுத்து, அவர்கள் என்னை கை காட்டினால் நான் சிறை செல்ல நேரும். அதனால்தான் அந்த முயற்சியில் இறங்காமல் ஒதுங்கிவிட்டேன்'' என்று ஒரு பேட்டியில் சுப்பிரமணியம் சுவாமி மனம் திறந்திருக்கிறார்.

""530 பேர் கொண்ட அவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்குமாக 255 உறுப்பினர்கள்தான் இருக்கின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 261. கிழவர் நரசிம்ம ராவ் கடுமையான சோதனையை எதிர்கொள்கிறார். அவரது ஆட்சி பிழைப்பது கடினம்'' என்று நியூயார்க் டைம்ஸில் அதன் நிருபர் குறிப்பிட்டிருந்தார்.

ஜூலை 28-ஆம் தேதி அதிகாலையில் இருந்தே பரபரப்பு தொடங்கிவிட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களை விட பத்திரிகையாளர்கள் மத்தியில்தான் பரபரப்பு அதிகமாகத் தெரிந்தது என்று நான் நினைக்கிறேன். மக்களவையில் பத்திரிகையாளர் கேலரியும், பார்வையாளர்களின் கேலரியும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.

ஹர்ஷத் மேத்தாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்து, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து அரசுக்கு ஆதரவாகப் பேசும் பொறுப்பு அர்ஜுன் சிங்குக்குத் தரப்பட்டிருந்தது. அதன் மூலம் ஆளும் கட்சியில் பிளவோ, வாக்குச் சிதறலோ ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டார் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ். அர்ஜுன் சிங்கைத் தொடர்ந்து பிரதமரும் தனது அரசின் செயல்பாடுகளை விளக்கி எந்தவிதப் படபடப்போ, தடுமாற்றமோ இல்லாமல் தன்னம்பிக்கையுடன் தன்னிலை விளக்கம் அளித்தார்.

பிரதமர் பேசி முடித்ததும் ஆளுங்கட்சித் தரப்பில் பலத்த கரகோஷம். பி.வி. நரசிம்ம ராவ் அவையிலிருந்து வெளியேறிவிட்டார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து இடதுசாரிகள், பாஜக, ஜனதா தள உறுப்பினர்கள் பலர் பேசும்போது அவர் அவையில் இல்லை.

பிரதமர் எங்கே போயிருப்பார்? தீர்மானம் வெற்றி அடைந்துவிடும் என்று தெரிந்து, ராஜிநாமா கடிதம் கொடுக்க குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் போகத் தயாராகிறாரோ? அந்த சந்தேகத்துடன் பார்வையாளர் பகுதியிலிருந்து வெளியேறி சென்ட்ரல் ஹாலுக்கு வந்தேன். அங்கே, ஆர்.கே. தவானும், பூட்டா சிங்கும், புவனேஷ் சதுர்வேதியும் ஒருபுறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சற்று தள்ளி காத்திருந்தேன்.

தவானும், பூட்டா சிங்கும் அகன்றதும் புவனேஷ் சதுர்வேதியை நெருங்கினேன். சிரித்தபடியே கைகுலுக்கினார் அவர்.

""பிரதமர் ஏன் வெளியேறிவிட்டார்? அவர் எங்கே சென்றிருக்கிறார்? விவாதம் நடக்கும்போது அவர் வெளியேறியது.....''

என்னை இடைமறித்து, கையை பலமாகக் குலுக்கியபடி அவர் சொன்ன தகவலைக் கேட்டு நான் அதிர்ந்தேன். அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இப்படியும் கூடவா ஒருவரால் இருக்க முடியும் என்பதை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் கூட என்னால் நம்ப முடியவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com