திரைக்கதிர்

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
திரைக்கதிர்


தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. " சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்' இந்தப் படத்தை தயாரிக்கிறது. தமிழில் "வாத்தி' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படம், தெலுங்கில் "சார்' என்ற பெயரில் உருவாகவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் கடந்த வாரம் இதன் தொடக்க விழா நடைபெற்றது.

படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குநர் திரிவிக்ரம், தயாரிப்பாளர்கள் நாராயணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி மற்றும் , நர்ரா ஸ்ரீனிவாஸ் என பலர் நடிக்கிறார்கள். "சூது கவ்வும்', " சேதுபதி', போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறர். வெங்கி அட்லூரி இப்படத்தின் கதைக் கருவை எழுதி இயக்குகிறார். கடந்த 5-ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

--------------------------------------------

தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இது குறித்த இணைய வழிக் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தக் கையெழுத்து இயக்கத்தில் நடிகர் கார்த்தி கையெழுத்திட்டுள்ளார்.

மேலும் இதற்கு அனைவரது ஆதரவும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள செய்தி "" மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி மரபணு மாற்றப்பட்ட உணவுகள் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புக் குறைபாடு, மற்றும் புற்றுநோய் தொடர்பான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடியை ஏற்பதில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருந்தபோதிலும் இப்படியான உணவுப் பயிர்கள் சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானவை அல்ல என்பதால் இந்தியாவிலும் அவற்றைப் பயிரிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது விதிமுறைகளைத் தளர்த்துவதன் மூலம் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை நம் நாட்டுக்குள் அனுமதிப்பது ஏன் என்று புரியவில்லை.

இப்படியான உணவுகள் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை அறிய எந்த மாதிரியான சோதனைகள் பின்பற்றப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. யார், எப்படி இதுகுறித்து முடிவெடுப்பார்கள் என்பது குறித்தும் எந்தக் குறிப்பும் இல்லை. எனவே மக்கள் நலனைக் காக்க, இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாதவர்களுக்காக, நாம் ஒன்றிணைவோம். இந்த மனுவில் கையெழுத்திடுவோம்'' என்று தெரிவித்துள்ளார் கார்த்தி.

தனக்கான மார்க்கெட் இருந்தாலும், வித்தியாசமான முயற்சிகளில் கவனம் செலுத்துவது ஆண்ட்ரியாவின் வாடிக்கை. இப்போது மாற்று முயற்சியாக கடல்கன்னி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிக்கும் இவர், இந்தியாவின் முதல் கடல் கன்னியாக நடிப்பவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

போக்கஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள். இப்படத்தை, மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே "துப்பாக்கி முனை' என்ற படத்தை இயக்கி உள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை தி.நகரில் 50 லட்சம் மதிப்பில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர்
மணப்பாடு என்கிற இடத்தில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும். 2022 கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது. படப்பிடிப்புகளுக்கு இடையே கடல்கன்னிக்கான அனிமேஷன் வேலை ஆரம்பமாகிறது. படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அனிமேஷன் பணிகளை லார்வென் என்கிற நிறுவனம் மேற்கொள்கிறது. கலை இயக்குநராக கிராஃபோர்ட் பணியாற்றுகிறார்.

--------------------------------

திருமணம், விவகாரத்து என சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும், சமந்தாவுக்கு பட வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. அதோடு ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழ், தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட சமந்தா இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.

அண்மையில் ஹாலிவுட் பட அறிவிப்பையும் சமந்தா அறிவிக்க ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். எப்போதும் இன்ஸ்டாவில் பரபரப்பாக இருக்கும் அவர், தற்போது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதிகமான பளுவைத் தூக்கி அவர் செய்யும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், சமந்தாவைப் புகழ்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகை சமந்தா, நாக சைத்தன்யாவுடனான விவாகரத்துக்கு பிறகு அதிக போட்டோ ஷுட் செய்வது, சுற்றுலா செல்வது என்று படங்கள் அதிகம் ஒப்பந்தம் செய்வது என்று முன்பை விட பரபரப்பாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன் அவர் கோவா சென்ற புகைப்படத்தை வெளியிட ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் வைரலானது.

--------------------------------

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் வெளியாகியுள்ள படம் "புஷ்பா'. இந்தப் படம் இந்திய அளவில் 300 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வரும் இந்த படம், ஓடிடி தளத்தில் சில மாதங்களுக்குப் பிறகே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக கடந்த 7-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் அமேசான் ப்ரைமில் வெளிவருகிறது.

இது குறித்து அல்லு அர்ஜூன், ""கதையைப் படித்து முடித்த அந்த கணமே, அது எனக்கு மிகவும் பொருத்தமானதாக உணர்ந்தேன். சமூகத்தில் கீழ் நிலையில் இருந்து உயர்ந்து மேல் நிலையை அடையும் ஒருவனின் கதை, பழைய சலித்துப் போன ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் இந்தப் படத்தில் அவனது பயணம் விவரிக்கப்பட்டிருக்கும் விதம், மற்றும் அவன் பாத்திரத்துக்கு மெருகூட்டும் குணநலனின் பல அடுக்குகள் மற்றும் நுட்பமான உணர்வுகள் மிகவும் தனித்துவமானவை. என் தொழில் வாழ்க்கையில் இதற்கு முன் நான் எப்போதும் செய்திராதவை. இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்குவதில் நான் பெருமைப்படுகிறேன். பிரைம் வீடியோ மூலம் உலகிலுள்ள அனைத்து மக்களையும் இந்த படம் சென்றடையப் போகிறது என்பதை அறிந்து முற்றிலும் உற்சாகமடைந்திருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com