ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வெயிலால் தலைவலி!

எனக்கு வயது 22.   காலையிலிருந்து வெயில் ஏற ஏற தலைவலியும் ஏற, நடு உச்சி நேரத்தில் அதிகமாகி,  தலையைச் சம்மட்டியால் பிளக்கிற மாதிரி வலி எடுக்கிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வெயிலால் தலைவலி!


எனக்கு வயது 22. காலையிலிருந்து வெயில் ஏற ஏற தலைவலியும் ஏற, நடு உச்சி நேரத்தில் அதிகமாகி, தலையைச் சம்மட்டியால் பிளக்கிற மாதிரி வலி எடுக்கிறது. வெயில் தாழத் தாழ தலைவலி குறைந்து, மாலையில் தலைவலி விட்டுவிடுகிறது. இது அடிக்கடி நேர்கிறது. இது என்ன வகையான தலைவலி? எப்படிக் குணப்படுத்துவது?

ராஜேஷ்,
திண்டுக்கல்.

சுமார் 30 -35 ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் நடந்த சம்பவம் ஒன்றை விளக்கினால் இதன் விவரம் உங்களுக்குப் புரியும்.

கோடை விடுமுறைக்காக கிராமத்துக்குச் செல்வதற்காக ரயிலை விட்டு இறங்கி, வீட்டுக்குச் செல்ல வெளியே வந்த அவனுக்குத் தட்டுத்தடுமாறி தள்ளாடிக் கொண்டேதான் நடக்க முடிந்தது. அத்தனை தலைவலி. கண்ணைத் திறக்க முடியவில்லை. மூன்று நாளாக "பட்...பட்' என்று போடுகிறது. வலி தாங்காது மயக்கம் வரும்போல் இருந்தது. மணி வேறு காலை 11.00. வெயிலில் நான்கு மைல் நடந்தால் வீட்டை அடையலாம். நல்லவேளையாக வீட்டிலிருந்து வண்டி கொண்டு வந்திருந்தார் வேலையாள் வையாபுரி.

அவன் தடுமாறி நடப்பதைக் கண்டு பதறிய வையாபுரி விவரம் கேட்டறிந்து, "" சூடாக காபி வாங்கித் தரவா?'' என்று கேட்க, ""இது காபி தலைவலி அல்ல. எவ்வளவோ காபி குடித்துப் பார்த்துவிட்டேன். போகவில்லை'' என்று இவன் கூற, ""வெயில் அலைச்சலால் ஏற்பட்டிருக்கும். வீட்டுக்குப் போனதும் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் போய்விடும்'' என்றார் வையாபுரி. ஆனால் இவனோ தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாகக் கூற, வையாபுரி ""பட்டணத்தில் தூசி, தும்பு, புழுக்கம், நெருக்கம், பீடி, சுருட்டு புகை இதெல்லாம் தலைக்கு ஏறியதாலிருக்கும்'' என்றார்.

""அதெல்லாம் ஒன்றுமில்லை. திடுதிப்பென்றுதான் வந்தது. தினமும் காலையில் தொடங்கி, மாலையில்தான் விடுகிறது' என்றான்.

வையாபுரிக்கு நோயின் விவரம் நன்கு தெளிவாகிவிட்டது. ""பாக்கு கடிக்கிறநேரத்தில இந்த தலை நோவ நிறுத்திப்புடலாம். இதோ வர்றேன்'' என்று சொல்லிக் கொண்டே விரைந்து சென்றார்.

சில நிமிடங்களுக்குள் இரண்டு, மூன்று எருக்கன் இலைகளைப் பறித்து வந்தார். ஓர் இலையை தொன்னையாக்கி மற்ற இரண்டு இலைகளைக் கசக்கி சிலதுளிகள் சாறை அந்த தொன்னையில் பிழிந்து, ""எந்தப் பக்கம் தலைவலிக்குது?'' என்று கேட்டார்.

""வலது பக்கம்' என்று இவன் கூறியதும், வலது பக்கம் சரிந்து படுக்கச் சொல்லி, இடது காதினுள் இரண்டு துளி அந்த எருக்க இலைச்சாறை விட்டார். இரண்டு நிமிடந்தான்.

""இந்தப் பக்கம் சரிந்து படு'' என்று சொல்லி காதினுள் ஊற்றிய சாறை வெளிப்படுத்தி, காதைச் சுற்றித் துடைத்து சுத்தமாக்கி, ""படுத்துத் தூங்கு, உன்னைப் பிடிச்ச சனிவிட்டது' என்று சொல்லி, பதிலுக்குக் காத்திராமல் வண்டியை ஓட்டத் தொடங்கினார்.

வீடு வரும் வரை நன்றாகத் தூங்கிவிட்டவனை எழுப்பி வீட்டுக்குள் அழைத்துப் போக, தலைவலியைக் காணோம். ஆனால் தலைவலி வந்த வலது பக்கக் கண் சிவந்தும் இடுங்கியுமிருந்ததைத் பார்த்த அம்மா, வையாபுரியிடம் விவரம்
கேட்டறிந்தாள்.

வையாபுரி செய்த சிகிச்சை சரியானதே என்று கூறி கீழாநெல்லிச்செடியின் நான்கு வேரை இரவு நீரில் ஊறப்போட்டாள்.

மறுநாள் காலை ஓர் இரும்புச்சட்டியில் அறுபது மில்லிலிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி, வேரை நசுக்கி எண்ணெய்யில் இட்டாள். எண்ணெய் பொங்கியது. தீயைக் குறைத்து, நுரை அடங்கியதும் மறுபடியும் தீயை ஏற்றுவாள். நுரை அடங்கிய எண்ணெய்யை கை பொறுக்கும் சூட்டில், தலை உச்சியிலிட்டு அழுத்தித் தேய்த்துவிட்டு அரைமணி நேரம் ஊறியதும் வெந்நீரில் குளிக்க வைத்து, தலைக்கு சாம்பிராணி புகையிட்டு உலர்த்திவிட்டாள். சுடச்சுட, புளியில்லாத ரசம் சாதம் கலகலவென்று அரை வயிறு சாப்பிட வைத்தாள் அம்மா. மறுநாளும் இதே சிகிச்சை. நாற்பது ஆண்டுகளாகிவிட்டன. இன்று வரையில் "ஸூர்யாவர்த்தம்', "அர்த்தாவபேதம்' என்ற இந்தத் தலைவலி வரவேயில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com