'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 72

மனித உருவத்தில் இறைவன் வருவான் என்பதைப் பல நிகழ்வுகளில் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 72


மனித உருவத்தில் இறைவன் வருவான் என்பதைப் பல நிகழ்வுகளில் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். குல்பர்கா ரயில் நிலைய மேடையில் நள்ளிரவில் குழம்பிப் போய் நின்று கொண்டிருந்த என்னை தூரத்தில் இருந்து அழைத்தார் ஒருவர். அருகில் சென்றபோது அவர் ஸ்டேஷன் மாஸ்டர் என்று தெரிந்து கொண்டேன்.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த அவருக்குக் கொஞ்சம் தமிழ் தெரிந்திருந்தது. எனது நிலைமையை விளக்கிச் சொன்னபோது, அங்கிருந்த கடைநிலை ஊழியரை அழைத்து, தங்கும் விடுதியில் ஓர் அறையைத் திறந்து சுத்தம் செய்யச் சொன்னார். என்னையும் அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றார். அங்கிருந்த பதிவேட்டில் எனது பெயர், டிக்கெட் எண் போன்றவற்றைப் பதிவு செய்து அறையை ஒதுக்கித் தந்தார்.

அடுத்த நாள் காலையில் குல்பர்காநகருக்குச் சென்று, தபால் நிலையத்திலிருந்து சில நண்பர்களைத் தொடர்பு கொள்ள முயன்றேன். செல்லிடப்பேசி வராத காலம் மட்டுமல்ல, பரவலாக எஸ்.டி.டி. பூத்துகள் கூட வந்திராத காலம் அது. நிலநடுக்கம் ஏற்பட்ட லாதூரிலிருந்து மகாராஷ்டிர - கர்நாடக எல்லையையொட்டி குல்பர்கா மாவட்டம் வெகு தொலைவில் இல்லை என்பதால், மக்கள் மத்தியில் சற்று பீதியும் கலவரமும் காணப்பட்டதை உணர முடிந்தது.

கோலாப்பூரிலிருந்து வெளிவரும் "புதாரி' நாளிதழ் "நியூஸ்கிரைப்' சேவையைப் பெற்று வந்தது. அதனால் அந்த நாளிதழைத் தொடர்பு கொண்டபோது, அவர்களது நிருபர்கள், புகைப்படக் கலைஞர்களைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அவர்களுக்கு நான் லாதூர் வருவது குறித்துத் தகவல் தருவதாகவும் கூறினர்.

லாதூர் செல்ல வேண்டுமே, எப்படி? வெளியார் வாகனங்கள் எதுவும் உஸ்மானாபாத் மாவட்டத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படவில்லை. அங்கே போவதே கூட ஆபத்து என்று அரசு எச்சரித்திருந்தது. அப்படியொரு கொடூரமான சேதம் அங்கே அரங்கேறியிருந்தது.

செப்டம்பர் 30, 1993 அதிகாலையில் நடந்த நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டடங்கள் என்று அனைத்தும் இடிந்து வீழ்ந்திருந்தன. தொலைபேசிக் கம்பிகள் அறுந்து விழுந்ததாலும், மின்சாரம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டதாலும் அந்தப் பகுதியுடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. சாலைகள் சிதைந்து, பாலங்கள் தகர்ந்து எந்தப் பகுதிக்கும் பயணிக்கக் கூட முடியாத சூழ்நிலை உஸ்மானாபாத் மாவட்டத்தில் காணப்பட்டது.

10,000 பேருக்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்திருந்தனர். 30,000-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு அடியிலிருந்தும், மண்ணுக்குள்ளிருந்தும் மீட்டெடுக்கப்பட்டு அருகிலுள்ள மாவட்டங்களுக்கு சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அந்தச் சூழ்நிலையில் நான் லாதூர் போக வேண்டும் என்று சொன்னாலே, என்னைப் பைத்தியக்காரனைப் போலப் பார்த்து முறைத்தனர். "நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்திலிருந்து செய்திகள் பெற்றுக் கொண்டிருந்த "சம்யுக்த கர்நாடகா' கன்னட தினசரியின் குல்பர்கா பதிப்பு அலுவலகத்திற்கு சென்று அவர்களுடன் தொடர்பு கொண்டேன்.

""இன்னும் ஒரு வாரத்துக்கு அங்கே போக முடியாது; போகக் கூடாது. இதுபோன்ற இயற்கைப் பேரழிவுகளைத் தொடர்ந்து நோய்த்தொற்றுகள் பரவும். மனித உடல்கள் மட்டுமல்லாமல், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகளும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இறந்திருக்கும். அவை அழுகி நாற்றமடித்துக் கொண்டிருக்கும். நீங்கள் இப்போது போக வேண்டாம்'' என்று எச்சரித்தார் அந்தப் பதிப்பின் பொறுப்பாசிரியர்.

ஹூப்ளியில் (இப்போது ஹூப்பாளி) உள்ள அவர்களது ஆசிரியரைத் தொடர்பு
கொள்ள எனக்கு உதவினார். குல்பர்கா அலுவலகத்தில் உள்ள விருந்தினர் அறையில் நான் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தார். எனது "நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்துடன் தொடர்புள்ள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த "நாக்பூர் டைம்ஸ்', "லோக்மாத்', "கவகாரி', "மகாராஷ்டிர ஹெரால்ட்', "ஃப்ரி ப்ரஸ் ஜர்னல்' உள்ளிட்ட நாளிதழ்களுடனும் அங்கிருந்தபடி தொடர்பில் இருந்தேன்.

லாதூரில் நிலநடுக்கம் குறித்து எழுத வந்திருந்த நான், அடுத்த இரண்டு நாள்கள் குல்பர்காவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வரலாற்றில் படித்திருந்த ராஷ்ட்ரகூடர்கள், சாளுக்கியர்கள், ஹொய்சாளர்கள், காகதீயர்கள் ஆகிய வம்சத்தினர் அரசாண்ட முக்கியத்துவம் பெற்ற பகுதி குல்பர்கா. குல்பர்கா என்றால், உருது மொழியில் மலர்களும், பூங்காக்களும் நிறைந்த நகரம் என்று பொருளாம். அங்கே உள்ள குல்கும்பாஸ் மசூதி மிகவும் பிரசித்தம்.

தில்லி சுல்தான்களால் கைப்பற்றப்பட்டு, அதன் பிறகு பாமினி சுல்தான்களின் ஆட்சியில் குல்பர்கா கொடிகட்டிப் பறந்தது. அவர்களது வம்சம் பலவீனமடைந்ததைத் தொடர்ந்து பீஜப்பூர், பிதர், அகமதுநகர் என்று அந்த சாம்ராஜ்யம் உடைந்து பிரிந்து கடைசியில் மொகலாயர்களின் வசம் சென்றுவிட்டது.

ஒரு நிகழ்ச்சிக்காக ஜனதா தளத் தலைவர் ஜீவராஜ் ஆல்வா குல்பர்கா வருகிறார் என்பது "சம்யுக்த கர்நாடகா' தினசரியில் வெளிவந்த விளம்பரத்தில் இருந்து தெரிந்தது. அங்கிருந்த நிருபர்களிடம் அதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குச் சென்றேன். நீண்டநாள் நண்பரான ஜீவராஜ் ஆல்வாவின் உதவியுடன் லாதூர் செல்ல முடியும் என்கிற நம்பிக்கை என்னில் துளிர்த்தது.

என்னை அங்கே அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கூட்டம் முடிந்ததும் தனியே அழைத்து விசாரித்தார். அவரது காரில் ஏற்றிக் கொண்டு அவர் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். "சம்யுக்த கர்நாடகா' தினசரியின் நிருபரும்
என்னுடன் இருந்தார். விவரம் சொன்னபோது, ஜீவராஜ் ஆல்வா என்னைக் கோபமாகப் பார்த்தார்.

""இந்த நேரத்தில் அங்கே போய் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? மீட்புப் பணியில் ஈடுபடப் போகிறீர்களா? உஸ்மானாபாத் பக்கமே நீங்கள் போகக் கூடாது. வாருங்கள், என்னுடன் காரில் பெங்களூர் போவோம்'' என்றார் அவர்.

""இவ்வளவு அருகில் வந்துவிட்டு லாதூர் போகாமல் நான் திரும்புவதாக இல்லை. ஒரு வாரம், பத்து நாள் தங்கியிருந்தாலும் பரவாயில்லை. எனக்கு ஒரு காருக்கு மட்டும் நீங்கள் ஏற்பாடு செய்து தாருங்கள்.''

என்னிடம் வந்திருந்த நிருபரும், ஜீவராஜ் ஆல்வாவும் கன்னடத்தில் ஏதேதோ பேசினார்கள். நான் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஒருவரிடம் சொல்லி நான் சென்னைக்குத் திரும்பிப் போகும்வரை எனது உபயோகத்திற்காக ஒரு காரும் டிரைவரும் ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லிவிட்டு பெங்களூர் கிளம்பினார் ஆல்வா.

ஆல்வாவின் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்பது எனக்குப் பிறகுதான் தெரியவந்தது. ""இவர் போவதாக இருந்தாலும் இவரது காரை மகாராஷ்டிர அரசு உஸ்மானாபாத் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப் போவதில்லை'' என்று அவரிடம் சொன்னதாக, நான் ஊருக்குக் கிளம்பும்போது அந்த நிருபர் சிரித்துக் கொண்டே சொன்னார். ""நீங்கள் லாதூர் போகமாட்டீர்கள் என்று நினைத்தேன். என்னை ஏமாற்றி விட்டீர்கள்'' என்றார் அவர்.

ஒரு வாரத்துக்குப் பிறகுதான் உஸ்மானாபாத் மாவட்டத்தில் தடைகள் சற்று தளர்த்தப்பட்டன. அப்போதும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்திய ராணுவம், மத்திய பாதுகாப்புப் படையினர், ரெட் கிராஸ் அமைப்பினர், மருத்துவக் குழுவினர் ஆகியோர்தான் நுழைய அனுமதிக்கப்பட்டார்கள்.

நிலநடுக்கம் நடந்த எட்டாவது நாள் ரயிலில் சோலாப்பூர் போய், அங்கிருந்து "புதாரி' பத்திரிகையின் நிருபருடன் காரில் உஸ்மானாபாத் போய்ச் சேர்ந்தேன். அப்போது மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருந்தவர் நமது தமிழகத்தைச் சேர்ந்த ரகுநாதன் என்பவர். வெளிமாநிலப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு அவர் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தார்.

லாதூர் நிலநடுக்கம் குறித்துச் சொல்லும்போது இரண்டு செய்திகளை மறக்காமல் பதிவு செய்தாக வேண்டும். "ஹாம்' ரேடியோவைப் பொழுதுபோக்காகக் கொண்டவர்கள் செய்த பேருதவியை மறக்கவே முடியாது. அனைத்துத் தகவல் தொலைத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், மும்பையைச் சேர்ந்த பல ஹாம் ரேடியோ குழுவினர் லாதூருக்கு அருகே உள்ள ஒம்ரேகா என்கிற சிறு நகரத்திற்குப் போய் அங்கிருந்து நிவாரண உதவிகள் செய்யப்படுவதை ஒழுங்குபடுத்தியதை உலகம் இப்போது மறந்திருக்கலாம். ஆனால், வரலாறு மறக்காது.

மனிதர்கள் ஜாதி, மத அரசியலால் பிளவுபட்டுக் கிடந்தாலும் பேரிடர் வரும்போது எல்லா மனமாச்சரியங்களையும் மறந்து இணைந்து செயல்படுவர் என்பதற்கு லாதூர் நிலநடுக்கமும் ஓர் எடுத்துக்காட்டு. கிறிஸ்துவர்களின் "சால்வேஷன் ஆர்மி', ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், பல்வேறு இஸ்லாமிய சேவை அமைப்புகள் உள்ளிட்டவை ஒருங்கிணைந்து செயல்பட்ட அதிசயத்தை அங்கே நான் பார்க்க முடிந்தது. அவர்கள் பரஸ்பரம் உதவிக் கொண்டதும், தகவல்களைப் பரிமாறிக் கொண்டதும் மனிதநேயத்தின் அடித்தளம் பலமாகவே இருக்கிறது என்பதன் அடையாளங்கள்.

இப்போது கொள்ளை நோய்த்தொற்றுக்கு நாம் கடைப்பிடிப்பதைப்போல "சானிடைசர்', "ஹாண்ட் வாஷ்' எல்லாம் அப்போது இருக்கவில்லை. முகக் கவசம் அணிவதும், கைகளில் கையுறை அணிவதும் மட்டும்தான் வலியுறுத்தப்பட்டன. நிருபர்கள் பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் வண்டிகளில், காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு சுற்றிக் காட்டப்பட்டனர். அவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன்.

முதல் நாள் போய் வந்த பிறகு, இரண்டு நாள் சாப்பிடவில்லை, தூங்கவும் முடியவில்லை. எது சாப்பிட்டாலும் வெளியே வந்தது. அப்படியொரு குமட்டல். கண்ணை மூடினால், பிணக்குவியல்களும், அழுகுரல் ஓலங்களும், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருக்கும் குழந்தைகளின் உடலுறுப்புகளும்.... இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது.

லாதூரை அடுத்த கில்லாரிக்கும் அழைத்துச் சென்றார்கள். கில்லாரியில்தான் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அங்கே ஏற்பட்ட அந்தப் பெரிய பள்ளம் இப்போதும் அப்படியே இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மாடமாளிகையில் வசித்தவர்கள், இரவோடு இரவாக எல்லாம் இழந்து, அதிர்ஷ்டவசத்தால் உயிர் பிழைத்துப் பிச்சைக்காரர்களைப்போலத் தெருவில் நிற்கும் பரிதாபத்தையும், சிலர் உற்றார் உறவினரையும் குழந்தை குட்டிகளையும் இழந்து நிற்கும் அவலத்தையும், சிறுவர்களும், சிறுமிகளும் பெற்றோரை, சகோதரர்களை இழந்து நிற்கும் கொடுமைகளையும் நேரில் பார்த்த அந்த அனுபவம்போல இன்னொரு சோகத்தை நான் இந்த வாழ்நாளில் சந்திக்கவில்லை, சந்திக்கப் போவதுமில்லை.

பிரதமர் நரசிம்ம ராவ் உள்ளிட்ட தேசிய, மாநில தலைவர்கள் வரத் தொடங்கினார்கள். மகாராஷ்டிர முதல்வராக இருந்த சரத் பவார், அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சுஷில்குமார் ஷிண்டே, மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவாண் என்று பல தலைவர்கள் வந்தார்கள்; பார்த்தார்கள்; போனார்கள்.

அப்போது எந்தவித அமைச்சர் பொறுப்பிலும் இல்லாமல் இருந்தவர் மாதவ்ராவ் சிந்தியா. குவாலியர் ராஜகுடும்பத்தின் வாரிசு என்பதை நிரூபிக்கும் விதத்தில், அவர் இரண்டு நாள்கள் சோலாப்பூரிலும், உஸ்மானாபாதிலும் தங்கி இருந்து, தனிப்பட்ட முறையில் நிவாரணப் பணிகளுக்கு பெரிய அளவில் நன்கொடைகளையும், உதவிகளையும் வழங்கியதைப் பார்த்த எனது பிரமிப்பு இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அடங்கவில்லை.

அது குறித்து அவரிடம் பேட்டி எடுக்க முனைந்தபோது, அவர் முகத்தில் அறைந்தாற்போல எனக்குத் தந்த பதில் - ""இது விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான நேரமல்ல. உதவுவதற்கான நேரம். நேரத்தை வீணாக்காதீர்கள்!''

சோ சார் சொன்னதுபோல, லாதூர் நிலநடுக்கம் குறித்த எனது கட்டுரைகள் தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. "நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்துக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தன. அதன் வளர்ச்சிக்குத் திருப்புமுனையாக அமைந்தது எனது லாதூர் பயணம். எனது வாழ்க்கையில் மறக்கவே முடியாத அனுபவமும் கூட...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com