திரைக்கதிர் 

"அம்பாசமுத்திரம் அம்பானி', "திருநாள்' ஆகிய படங்களைத் தொடர்ந்து  ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகி வரும்  படம் "ஆதார்'.
திரைக்கதிர் 

"அம்பாசமுத்திரம் அம்பானி', "திருநாள்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகி வரும் படம் "ஆதார்'. இதில் கருணாஸ், அருண்பாண்டியன், திலீபன், பிரபாகர், ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். பாடல்களை கவிஞர் யுரேகா எழுத, ராமர் படத் தொகுப்பு செய்கிறார். வெண்ணிலா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் குறித்து இயக்குநர் பேசுகையில், ""எளிய மனிதர்களின் வலியை பேசும் எதார்த்த சினிமாவாக "ஆதார்' உருவாகியிருக்கிறது'' என்றார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் முன்னர், உலக அளவில் எதார்த்த சினிமா படைப்பாளியாக போற்றப்படும் இந்திய திரை சிற்பி சத்யஜித்ரேயின் உருவப்படத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கின்றனர். நடிகர் பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

------------------------------------------------------------

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த 2017- ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்ற படத்தில் நடித்தார். இதில் துல்கர் சல்மான் கதாநாயகன். நெல்சன் வெங்கடேசன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வரும் அவர், மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார். படத்தின் பெயர்: "புலிமட'. மம்முட்டி, நயன்தாரா நடித்த "புதிய நியமம்' படத்தின் இயக்குநர் ஏ.கே.சாஜன் இயக்குகிறார். மலையாளத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், வசனங்களை தெலுங்கு மற்றும் தமிழில் எழுதி மனப்பாடம் செய்கிறார். பிறகு ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் புரிந்து மலையாளத்தில் பேசி நடிக்கிறார்.

------------------------------------------------------------

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள "அன்பறிவு' படத்தில், அம்மா வேடத்தில் நடித்திருந்தார் ஆஷா சரத். மலையாள நடிகையான இவர், தமிழில் "பாபநாசம்', "பாக்மதி' உள்ளிட்ட படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். தமிழில் மீண்டும் நடிக்க வந்தது குறித்து ஆஷா சரத் கூறியிருப்பது...

""தமிழ்த் திரைத்துறையில் எனது நடிப்புக்கு கிடைத்து வரும் அங்கீகாரம் காண மகிழ்ச்சி அளிக்கிறது. "த்ரிஷ்யம்' படத்தொடர் எனது பயணத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இயக்குநர் ஜீத்து ஜோசப் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை வழங்கினார். அதன் தமிழ் ரீமேக் மூலம் கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகருடன் திரையுலகில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

எனது நடிப்பை விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் பாராட்டிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போது, "அன்பறிவு' படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்து வருவது என்னை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியுள்ளது'' என்றார்.

------------------------------------------------------------

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் படம் "நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்து வரும் இந்தப் படத்தின் தொடக்க விழா, அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள் தொடங்கின. வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்தப் படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்துக் கொள்ள படக்குழுவினர் விரும்பினர். இதனை ஏற்றுக் கொண்ட லைகா நிறுவனம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்
குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினர்.

------------------------------------------------------------

கலாசாரங்களையும், பாரம்பரியங்களையும் பிரதிபலிக்கும் பல்வேறு வகையான கதைகளை சினிமா சித்திரித்து வருகிறது. இதற்கு அண்மை உதாரணமாக அமேசான் பிரைம் விடியோவின் தொடர், தமிழ் தொகுப்பாக வெளியாகும் "புத்தம் புது காலை விடியாதா' தொடர்.

இந்தத் தொடரில் காதல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கம் குறித்த பல்வேறு கதைகளை பார்வையாளர்கள் கண்டு ரசிக்க இயலும். இந்தத் தொகுப்பில் ஐந்து அத்தியாயங்கள் உள்ளன. அவற்றில் "மெளனமே பார்வையாய்' என்ற அத்தியாயமும் இடம் பெற்றிருக்கிறது. இதனை மதுமிதா இயக்கியிருக்கிறார். நதியா மற்றும் நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளனர்.

இது தொடர்பாக நதியாபேசுகையில், ""நடிகர்களை விட இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு டிஜிட்டல் தளங்கள் முன்னுரிமை கொடுக்கின்றன. இதனால் அவர்கள் தங்களது கதைகளை நேர்த்தியாகச் சொல்ல இயலும். மேலும் ஓ டி டி உலக அளவிலான பார்வையாளர்களை வழங்குகிறது. நீங்கள் எந்த மொழியில் பார்க்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. நிச்சயமாக நீங்கள் உங்களது தாய்மொழியில் படைப்புகளைப் பார்த்துக் கொண்டிருப்பது பெரியதொரு சவுகரியத்தை தருகிறது. இவை அனைத்தும் வித்தியாசமாக சிந்திக்க உதவுகிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com