பேல்பூரி

சொல்றாப்ல ஒண்ணுமில்லை...சாப்பிட்டுப் போங்க
பேல்பூரி

கண்டது

(மேல்மங்கலத்தில் ஒரு காதணி விழா சுவரொட்டியில்)

சொல்றாப்ல ஒண்ணுமில்லை...
சாப்பிட்டுப் போங்க

சி.செல்லமுத்து,
மேல்மங்கலம்.

(திருச்சி, பெரிய கடை வீதி பகுதியில் உள்ள ஒரு தெருவின் பெயர்)

வெள்ளை வெற்றிலைத் தெரு

ஆர். பூஜா,
சென்னை - 1.

(நாகப்பட்டினம் டூரிஸ்ட் வேன் ஒன்றில் நான் கண்ட வாசகம்)

அன்பைத் தகர்க்க
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும்
ஆயுதம்தான் கோபம்!

- வ.வெற்றிச்செல்வி,
வேதாரண்யம்

கேட்டது

(நாகர்கோவிலில் உள்ள ஓர் உணவகம் ஒன்றில்)

""விலைப்பட்டியல்ல வெ.தோசைன்னு போட்டிருக்கீங்க. வெங்காய தோசையா? வெள்ளைப் பூண்டு தோசையா?''
""ஊகூம்... வெறும் தோசை. சட்னி, சாம்பார் எதுவும் கிடையாது''

கே.ஆர்.ஜெயக்கண்ணன்,
கவற்குளம் தேரிவிளை.

(அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியில் ஒரு வீட்டில் தாயும் மகளும்)

""அம்மா இங்கே வச்சிருந்தஎன்னோட மொபைல் எங்கேம்மா?''
""உன்னைப் பெண் பார்க்கஇன்னைக்கு மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வர்றாங்க... நான்தான் அதை எடுத்து வச்சிருக்கேன். மாப்பிள்ளை வீடு போனதும், உங்கிட்டே தர்றேன். அந்தகருமத்தை மறந்துட்டு நடக்கிற வேலையைப் பாரு. புரியுதா?''

வி.முத்துராமு,
பொன்னமராவதி.

யோசிக்கிறாங்கப்பா!

இயற்கையைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்!
மீறினால் இயற்கை
உங்களைப் பகைத்துக் "கொல்லும்'!

சுந்தரி காந்தி,
சென்னை - 56.

மைக்ரோ கதை


சுந்தரேசன் அவருடைய மனைவியுடன் நண்பர் கட்டியிருந்த புதுவீட்டு கிரஹ பிரவேசத்திற்கு சென்றிருந்தார். வீடு நேர்த்தியாக நல்ல அம்சமாக இருந்தது. மனைவியும், அவரும் வீட்டை ஒவ்வோர் அறையாக சுற்றிப் பார்த்தனர்.

காப்பி சாப்பிடும்போது நண்பர் கேட்டார்: "" என்னங்க வீடு எப்படிஇருக்குது?''

"" வீடு நல்லாதான் இருக்குது. ரூம்ல்லாம் கூட நல்லாதான் இருக்குது. வாஸ்த்துன்னு பார்த்தாதான்..'' இழுத்தார் அவர்.

"வாஸ்து தான்சரியா அமையலை' சுந்தரேசன் சொல்வது போலவும் இருந்தது, முணுமுணுப்பது போலவும்இருந்தது.
பாவம்... நண்பரின் முகம் மாறிவிட்டது.
திரும்பிவரும்போது மனைவி கேட்டாள்:
""அந்த வீட்டுல என்னங்க வாஸ்து குறை?''
""யாருக்குத் தெரியும். புது வீட்டுக்கு போனா ரெண்டு வார்த்தை குறை சொல்லணும். நானும் சொன்னேன்'' என்றார் சுந்தரேசன்.
மனைவி முகத்தில் அதிர்ச்சி. லேசான கோபமும் கூட.
""அப்ப வாஸ்து உங்களுக்குத் தெரியாதா?'' என்றாள் எரிச்சலுடன்.
""வாஸ்துன்னா என்ன?'' திருப்பிக் கேட்டார் சுந்தரேசன்.

சந்தானம்,
சென்னை.

எஸ்.எம்.எஸ்.


வலிகளில் மிகப் பெரிய வலி,
எந்த வலியும் இல்லாதது போல்
வெளியில் நடிப்பது தான்!

மருத.வடுகநாதன்,
வேதாரண்யம்.

அப்படீங்களா!


நேரத்தைத் தெரிந்து கொள்ள முதலில் எல்லாம் நமக்கு இருந்த ஒரே வாய்ப்பு கடிகாரம். கைக்கடிகாரமும் அந்தப் பணியைத்தான் நமக்குச் செய்து வந்தது. செல்லிடபேசிகள் புழக்கத்துக்கு வந்த பின், நேரத்தை செல்லிட பேசியில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டதால், கைக்கடிகாரம் உலகைவிட்டு மறையத் தொடங்கும் நிலை
தோன்றியது. ஆனால், கைக்கடிகாரம் தன்னை உருமாற்றிக் கொண்டு ஸ்மார்ட் வாட்ச்சாகத் தோன்றியது. நேரம் காட்டும் வேலையுடன் கூட பிற வேலைகளையும்
செய்யத் தொடங்கியது.
அப்படி ஒரு வித்தியாசமான ஸ்மார்ட்வாட்ச், இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. "நாய்ஸ் கலர்ஃபிட் காலிபெர் ஸ்மார்ட்வாட்ச்' என்ற நீளமான பெயரைக் கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் செய்யும் பணியோ மிகவும் வித்தியாசமானது.
இதை அணிந்து கொண்ட ஒருவரின் உடல் வெப்பத்தை இந்த ஸ்மார்ட் வாட்ச் கண்டறிந்து தெரியப்படுத்தும். அதுமட்டுமல்ல, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு, இதயத்துடிப்பின் அளவு, மன அழுத்தத்தின் அளவு, தூக்கத்தின் அளவு என எல்லாவற்றையும் இந்த ஸ்மார்ட் வாட்ச் கண்டுபிடித்து, தெரியப்படுத்தும்.
கரோனா தொற்று பல்வேறு வடிவங்களில் மனிதர்களை விரட்டிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், உடல் வெப்ப
நிலை உள்பட உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அந்தத் தேவையை நிறைவு செய்யும்விதத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் செயல்படுகிறது.
இது பேட்டரியால் இயங்கக் கூடியது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 நாள்களுக்கு சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com