ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குடலைச் சுத்தம் செய்யும் ஆமணக்கெண்ணெய்!

ஆமணக்கெண்ணெய் (விளக்கெண்ணெய்) நல்ல மருத்துவகுணம் கொண்டது என்று கேள்விப்படுகிறேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குடலைச் சுத்தம் செய்யும் ஆமணக்கெண்ணெய்!


ஆமணக்கெண்ணெய் (விளக்கெண்ணெய்) நல்ல மருத்துவகுணம் கொண்டது என்று கேள்விப்படுகிறேன். அதைப் பற்றிய விளக்கம் ஆயுர் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?


கிருஷ்ணமூர்த்தி, நங்கநல்லூர்,
சென்னை.

ஆமணக்கு விதை இரண்டுவிதமாகக் கிடைக்கிறது. அதற்கு சிற்றாமணக்கு என்றும் பேராமணக்கு என்றும் பெயர். விதையை வேக வைத்து அமுக்கிப் பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு ஊற்றின எண்ணெய் என்று பெயர். குழந்தைகளுக்கு விசேஷமாய் உள் உபயோகத்திற்கு ஊற்றின எண்ணெய் மிகவும் சிறந்தது. நல்ல ருசியும் மணமும் உள்ள இந்த எண்ணெய் வெருட்டும், ஒக்காளிக்கும் என்ற குறைகள் எதுவுமில்லாதது. வேக வைத்து எடுப்பதால், நோய்களை உருவாக்கும் அழுக்கு ஜீவாணுக்கள் அணுக வாய்ப்பேயில்லாததால், மிகவும் பரிசுத்தமானது. பழைய காலத்தில் நம்நாட்டில் வீடுகளில் ஊற்றின விளக்கெண்ணெய்யை உள் உபயோகத்திற்காகப் பயன்படுத்தினர். விதையைப் பச்சையாகவே அதாவது வேக வைக்காமலேயே இயந்திரத்தினால் அரைத்து அமுக்கிப் பிழிந்து எடுத்ததை விளக்கு எரிப்பதற்காகப் பயன்படுத்தியதால், ஆமணக்கெண்ணெய்க்கு விளக்கெண்ணெய் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கெண்ணெய் விளக்கு கண்களுக்கு எந்தக் கெடுதலையும் செய்யாது. குளிர்ச்சியைத் தரும் என்பது பிரசித்தமானது. இந்நாளில் விதையை வேக வைத்து எடுக்கும் வழக்கம் இல்லாமல் போய்விட்டது.

இந்த இரு எண்ணெய்களுக்கும் குணத்தில் விசேஷமான மாறுதல்கள் எதுவுமில்லை. ஊற்றிய எண்ணெய்யில் இனிப்புச் சுவை தெளிவாகவும், கசப்பு, துவர்ப்புச் சுவைகள் சிறிய அளவிலும் தெரியும். செரிமான இறுதியில் இனிப்பும் சாரமுமாய் மாறும். வழுவழுப்பு நிறைந்துள்ளதால் நெகிழும் தன்மையினால் குடலிலும், உட்புற உறுப்புகள் மற்றும் தாதுக்களில் விரைவாக ஊடுருவிச் சென்று மலங்களை வெளிப்படுத்தும். பெருங்குடல் மலத்தை வெளிப்படுத்தும் விசேஷகுணம் கொண்டது. செரிப்பதில் கடினமானாலும் அதன் சூடான வீர்யம் மற்றும் ஊடுருவும்தன்மையினால் பசித்தீயை நன்றாகத் தூண்டிவிடும். தாம்பத்திய சக்தி, பலம், நிறம், புத்திமேதை, ஆயுளை அதிகமாக்கும். வெளிப்பூச்சினால் தோல் வறட்சியையும், உள்ளங்கால் வெடிப்பையும் போக்குவதில் மிகவும் உபயோகமானது.

உள் உபயோகத்தினாலும் பஸ்தி எனும் ஆசன வாய் வழியாக உட்செலுத்தும் எனிமா சிகிச்சையாலும் ஆமணக்கெண்ணெய் ஒன்று மட்டுமே நாள்பட்ட மார்பு வலி, நெஞ்சு வலி, இடுப்பு வலி, குடல் வலி, மூட்டுவலி, விதைவீக்கம் போன்ற கடுமையான உபாதைகளைப் போக்கிவிடும்.

இரவு படுக்கும் முன் உள்ளங்காலில் ஆமணக்கெண்ணெய்யைத் தேய்த்து படுத்துக் கொண்டால் காலையில் எழுந்ததும் கண்கள் குளிர்ச்சியாக இருப்பதை நன்கு உணரலாம். கண்ணுக்குள் இருதுளிகள் விட்டுக் கொண்டாலும், கண் இமை மேல் தடவிக் கொண்டாலும், விழிகளின் அழுக்குகள் அகன்று தெளிவு ஏற்படும். புகை, தூசிகள், கரிகள் நிறைந்துள்ள தொழிற்சாலைகளில் இருப்பவர்கள் கண்ணுக்கு ஆமணக்கெண்ணெய் தடவிக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

பேதிக்கு மூலிகைகள் பல இருப்பினும் ஆமணக்கெண்ணெய்க்கு நிகராகாது. வியாதி தடுப்பிற்காக ஊசி குத்திக் கொள்வதைவிட, குடலை சுத்தம் செய்து கொள்ளல் எனும் ஒரு காரியத்தினால் எல்லா வியாதிகளையும் தடுத்துக் கொள்வது மிகவும் தரம். விளக்கெண்ணெய்யினால் ஏற்படும் மலக்கழிவு மிருதுவாகவும், குடல் வேதனையின்றியும் இருக்கும். பேதியான பிறகு குடலிலும் தாதுக்களிலும் குளுமை தோன்றும்.

மூளைக்கும் தெளிவு ஏற்படும். சுகபேதிக்கு ஒரு பங்கு விளக்கெண்ணெய், 2 பங்கு காய்ச்சிய பசுவின் பால், 2 பங்கு சுக்கு வெந்நீர் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

விளக்கெண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் கந்தர்வஹஸ்தாதி ஆமணக்கெண்ணெய் மல வாயுக்களை வெளியேற்றி, பசியைத் தூண்டி, நாக்கில் ருசி கோளங்களின் ருசி அறியும் உணர்வைச் சீராக்கிக் தரும். விளக்கெண்ணெய்யில் மூலிகைள் சேர்த்துக் காய்ச்சி பயன்படுத்தப்படும் பல மூலிகை மருந்துகள் தற்சமயம் விற்பனையில் உள்ளன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com