ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காதில் அழுக்கை எடுப்பது எப்படி?

என் கணவர், தனது காதிலுள்ள அழுக்கை எடுக்கிறேன், அரிக்கிறது என்று கூறி அடிக்கடி விரல் நுனி, திரிபோல் சுருட்டிய துணியின் ஒரு மூலை, பேனா ரீபில், பென்சில் நுனி, தீக்குச்சி, தென்னம் ஈர்க்கு என்று எது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காதில் அழுக்கை எடுப்பது எப்படி?

என் கணவர், தனது காதிலுள்ள அழுக்கை எடுக்கிறேன், அரிக்கிறது என்று கூறி அடிக்கடி விரல் நுனி, திரிபோல் சுருட்டிய துணியின் ஒரு மூலை, பேனா ரீபில், பென்சில் நுனி, தீக்குச்சி, தென்னம் ஈர்க்கு என்று எது கிடைத்தாலும் குடைந்ததால், தற்போது குத்தல் வலி, இரத்தம் கசிதல், நீர்க்கசிவு, சீழ் என்றெல்லாம் ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறார். இதை எப்படி குணப்படுத்துவது?

-கல்யாணி,
மயிலாடுதுறை.

""குத்திக் கெடுத்த காது'' என்று ஒரு பழமொழியிருக்கிறது. காதில் எண்ணெயை விட்டுக் கொள்வதால் பல தீமைகள் விளையும் என்று இப்பழமொழிக்குச் சிலர் பொருள் கூறுவது சரியல்ல. நீங்கள் குறிப்பிடுவதுபோல, பல பொருட்களை காதினுள் விட்டுக் குடைவதையே இப்பழமொழி சுட்டிக் காட்டுகிறது.

நம் முன்னோர் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் தலையிலும் காதுகளிலும் பாதங்களின் அடிப்பாகங்களிலும் எண்ணெயை முக்கியமாகவும், தாராளமாகவும் பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டனர். அதனால் எண்ணெயைக் காதில் வெதுவெதுப்பாக இளஞ்சூட்டில் விட்டுக் கொள்வதால் காது கெட்டுவிடுமென்பது பொருந்தாது.

திரிபலா சூரணத்தில் சிறிது குக்குலு கலந்து, தனலிலிட்டு வரும் புகையை காதினுள் காண்பித்தால் சீழ், வலி, நீர் வடிதல் போன்றவை நன்கு குணமாகும்.

வேப்பெண்ணெய் இளஞ்சூடாக காதினுள் விட்டு, பஞ்சு வைத்து அடைத்துக் கொள்வதாலும் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையானது விலகும்.

அஸனவில்வாதி தைலம், துளஸ்யாதி தைலம் போன்றவையும் மேற்சொன்னவாறு உபயோகிக்கலாம். தலைக்குத் தடவிக் கொள்வதற்காகாவும் இவற்றைப் பயன்படுத்தினால் சீழ், தண்ணீர் வடிவது நின்றுவிடும்.

உங்கள் ஊரில் வில்வ மரமிருக்கும். அதன் வேர் ஒரு முழு நீளம் உள்ளதாய் எடுத்து அதன் ஒரு நுனியில் 2-3 அங்குலம் வரையில் ஒரு துணியைச் சுற்றி அதை வேப்ப எண்ணெயில் நனைத்துக் கொண்டு தீபம் போல் கொளுத்திக் கொள்ளவும். இதைச் சற்று சாய்த்துப் பிடித்துக் கொண்டால் எரியுந் தீயிலிருந்து சொட்டுச் சொட்டாகச் சொட்டும் எண்ணெயை ஒரு கோப்பையில் ஏந்தி, பிறகு ஒரு குப்பியிலாக்கி வைத்துக் கொள்ளவும்.

இதற்கு வில்வ சுடர்த் தைலம் என்று பெயர். இதில் ஒன்றிரண்டு துளிகள் இளஞ்சூடாக காதினுள் விட்டு வர, திடீரென்று வரும் காதுக் குத்தல்,  வலி இவை உடனே குறைந்துவிடும்.

தடைப்பட்டு நிற்கும் சீழும் வெளிப்பட்டு வலியும் வீக்கமும் நீங்கும். தொடர்ந்து உபயோகித்தால் வெகு நாட்களாக ஒழுகி வரும் சீழ் முதலியவை நின்றுவிடும்.

முருங்கை மரத்தின் பிசினைச் சிறிது எண்ணெய்யில் காய்ச்சி, இளஞ்சூடாக சில துளிகளைக் காதில் விட்டு பஞ்சினால் அடைத்தாலும் போதும்.

எதுவாக இருந்தாலும் உங்கள் கணவர் காதினுள் பொருட்களை விட்டுக் குடைவது நல்லதல்ல. அவர் இப் பழக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.

சிலருக்கு ஜலதோஷம் முதலியவற்றைத் தொடர்ந்து, காது மற்றும் காது குத்தல், நமைச்சல் எல்லாம் உண்டாகி நெடுநாள் நீடிக்கும். துர்நாற்றத்துடன் சீழும் ஒழுகும். இதற்கு பூண்டு, இஞ்சி, முருங்கைக் கொழுந்து இவற்றின் சாறை காதில் சில துளிகள் விடலாம். அதுபோலவே, முள்ளங்கியின் சாறையும் விடலாம்.

திரிபலாகுக்குலு, காஞ்சநார குக்குது, கைúஸார குக்குலு போன்ற மாத்திரைகள், குக்குலு திக்தகம் கிருதம், வில்வாதி குளிகை போன்ற மருந்துகள் இதுபோன்ற உபாதைகளில் நன்கு குணமளிக்கக் கூடியவை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com