'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 96

குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவே நேரில் வந்து, என்.டி. ராமா ராவை வரவேற்றது என்னை ஆச்சரியப்படுத்தியது.  
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 96

குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவே நேரில் வந்து, என்.டி. ராமா ராவை வரவேற்றது என்னை ஆச்சரியப்படுத்தியது. குடியரசுத் தலைவர், ஆளுநர் போன்ற பதவிகளில் இருப்பவர்களைச் சந்திக்க சில மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அவர்கள் யாரையும் வந்து வரவேற்பதில்லை. நாம்தான் அவர்களிடம் அழைத்துச் செல்லப்படுவோம்.

அந்த மரபை மீறி, குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா தானே வெளியே வந்து என்.டி. ராமா ராவை வரவேற்றார் என்றால், அவர் மீது எந்த அளவுக்கு அன்பும், மரியாதையும் வைத்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இரண்டு பேருக்குமே நடையில் தள்ளாட்டம் உண்டு. அவர்கள் ஒருவருக்கு மற்றவர் ஆதரவாக நடந்து உள்ளே செல்வதை நான் வேடிக்கை பார்த்தபடி வெளியே நின்றுவிட்டேன். லெட்சுமி சிவபார்வதி அவர்களைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றார்.

சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு என்.டி. ராமா ராவும், லெட்சுமி சிவபார்வதியும் வெளியே வந்தார்கள். அங்கிருந்த நாற்காலியில் அவர் அமர்ந்து கொண்டார். என்னை என்.டி.ஆர். அருகில் அழைத்தார்.

""ஹைதராபாதுக்கு வந்து என்னைப் பார். உன்னிடம் நிறையப் பேச வேண்டும். இந்தியாவிலுள்ள எல்லா பத்திரிகைகளிலும் வெளிவரும் விதத்தில் எனது பேட்டியை நீ வெளியிட்டுத் தர வேண்டும். பத்திரிகை நிருபர்கள் எங்களை சந்திப்பதைக்கூட, பாபு தடுக்கிறார்...''

அவருக்கு நா தழுதழுத்தது. நான் பேச்சைத் திசை திருப்ப நினைத்தேன்.

""பழைய அபிட்ஸ் வீட்டில்தானே இருக்கிறீர்கள்?''

""அபிட்ஸா? அந்த பங்களாவில் எல்லாம் இல்லை. ஐந்து ஆண்டுகளாக பஞ்சாரா ஹில்ஸில் நான் கட்டியிருக்கும் புதிய வீட்டில் இருக்கிறேன். ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் என்.டி.ஆர். வீடு எங்கே என்று கேட்டால், யார் வேண்டுமானாலும் காட்டுவார்கள்.''

அவர் முதல்வராக இருந்தபோது, ஹைதராபாதின் மையப் பகுதியான அபிட்ஸில் இருக்கும் அவரது பங்களாவுக்கு (மாளிகைக்கு) அவரைப் பேட்டி எடுக்கச் சென்றிருக்கிறேன். அதிகாலை ஐந்து மணிக்கு நிருபர்களுக்குப் பேட்டி கொடுக்கும், அதிகாரிகளைச் சந்திக்கும் அரசியல்வாதி அவர் ஒருவரைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.

""1984-இல் பாஸ்கர ராவ் எனது ஆட்சியைக் கவிழ்த்தபோது, எனக்காக எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு தேடித் தந்தவர் சோ ராமசுவாமி. நீ சங்கர் தயாள் சர்மாவையே வேண்டுமானாலும் கேட்டுப் பார். நான் மீண்டும் முதல்வராவதற்கு சோதான் காரணம்.''

அவர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன் நான். அவர் உணர்ச்சி வயப்படாமல் இருக்க ஆதரவாக அவரது தோளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார் லெட்சுமி சிவபார்வதி. சற்று நேரம் மெளனமாக இருந்த ராமா ராவ், என்னை ஏறிட்டுப் பார்த்தார்.

""நீ சென்னையில் சோவை சந்திப்பாயா?''

""அடிக்கடி சந்திக்க மாட்டேன். ஆனால், அவ்வப்போது சந்திக்காமல் இருக்கவும் மாட்டேன்.''

""எனக்காக நீ சோவை சந்திக்க வேண்டும். அவரிடம் நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று சொல்ல வேண்டும். அவர் சொல்லும் பதில் என்ன என்று எனக்கு நீ ஹைதராபாத் வந்து தெரிவிக்க வேண்டும்...''

""சோ சாரிடம் நான் என்ன கேட்க வேண்டும்?''

""பாஸ்கர ராவ் என் முதுகில் குத்தியபோது, எனக்கு உற்ற நண்பனாக ஓடி வந்து உதவிய சோ, இப்போது எனது ரத்த சொந்தங்களே எனக்கு துரோகம் செய்து, எனது மக்கள் செல்வாக்கால் பெற்ற ஆட்சியைத் தட்டிப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பனாக சோ ஏன் எனக்கு ஆதரவாக வரவில்லை? அவருக்கு நான் அப்படி என்ன துரோகம் செய்து விட்டேன்?''

""நிச்சயமாக நான் அவரை சந்தித்துக் கேட்கிறேன். அவர் என்ன சொன்னார் என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்...''

""சோ மட்டுமா? இந்த ஜெயலலிதா என்னுடன் எத்தனை படங்களில் நடித்தார்... ஆதரவாக ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லையே. நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன்?''

அதற்கு மேல் அவரிடம் பேசி உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டாம் என்று சைகை காட்டினார் லெட்சுமி சிவபார்வதி. தனது கைத்தடியில் முகம் வைத்து அமர்ந்திருந்தார் என்.டி.ஆர். அவர்களது கார் போர்டிகோவுக்கு வந்தது. கைத்தாங்கலாக லெட்சுமி சிவபார்வதி அவரை அழைத்துச் சென்றார்.

""பிரதர்... ஹைதராபாதில் நான் உன்னை எதிர்பார்க்கிறேன்...''

அந்த அம்பாசிடர் கார் நகர்ந்தது. ஆனால் அவரது கனமான குரல் இன்னும்கூட எனது காதில் ரீங்காரம் செய்கிறது.

என்.டி. ராமா ராவ் போன பிறகு, நான் பத்மாவதி விருந்தினர் விடுதி வரவேற்பறையில் எனது அழைப்புக்காகக் காத்திருந்தேன். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் குடியரசுத் தலைவரின் உதவியாளர் என்னை உள்ளே அழைத்தார்.

குடியரசுத் தலைவராக இருந்தபோது, சங்கர் தயாள் சர்மா அடிக்கடி திருப்பதி வந்து விடுவார். அவருக்குப் பெருமாள் மீது அப்படியொரு பக்தி. ஆந்திர மாநில ஆளுநராக அவர் இருந்தபோது அவருக்குத் திருப்பதி வெங்கடாஜலபதி மீது இந்த அளவுக்கு பக்தி ஏற்படுவதற்கு முதல்வராக இருந்த என்.டி. ராமா ராவ் முக்கியமான காரணம் என்று அவரே என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

திருப்பதி வந்தால் பத்மாவதி விருந்தினர் விடுதியில்தான் அவர் தங்குவது வழக்கம். திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் உள்ள தத்துவப் பேராசிரியர்கள் மட்டுமல்ல, வேத விற்பன்னர்கள், ஆன்மிகவாதிகள் என்று பலரையும் வரவழைத்து அவர்களிடம் விவாதிப்பது அவரது வழக்கம். குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தத்துவ மேதை (ஃபிலாசபி) என்றால், டாக்டர் சங்கர்தயாள் சர்மா வேதாந்தக் கடல்.

அன்றைக்கும்கூட அப்படித்தான். நான் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காத்திருக்க வேண்டியதற்குக் காரணம், குடியரசுத் தலைவரை சந்திக்கத் திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை புரோகிதராக இருந்த ரமண தீட்சிதலு வந்திருந்தார் என்று சொன்னார்.

""என்.டி.ஆரை எப்படி சமாதானம் சொல்லி சமாளித்தீர்கள்?''

எனது கேள்வியைக் கேட்டதும் புன்னகைத்தார் சர்மாஜி.

""நல்ல மனிதர். அரசியல் சாணக்கியம் எதுவும் தெரியாது. சினிமா மாதிரியே அரசியலையும் நினைக்கிறார். அங்கேதான் பிரச்னை. அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் அவருக்கு எதிராக இருக்கிது. அதை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை. வயதாகிவிட்டது. தான் நினைத்ததுபோல எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி?''

""உங்களிடம் அவருக்கு அளவு கடந்த மரியாதை உண்டு என்பது எனக்குத் தெரியும்.''

""1984-இல் இந்திராஜியின் மரணத்தால்தான் அவர் முதல்வராகத் தொடர முடிந்தது. இந்திராஜி இருந்திருந்தால் இவரை அரசியலில் செல்லாக்காசாக்கி இருப்பார். சோவிடம் கேட்டுப் பார், அவரிடம் நான் என்ன சொன்னேன் என்று.''

""என்ன இது, என்.டி.ஆரும் என்னை சோ சாரைப் பார்க்கச் சொல்கிறார்; நீங்களும் "சோவைக் கேட்டுப் பார்' என்கிறீர்கள்...''

""சோவைப் பார்த்து என்ன கேட்கச் சொன்னார் என்.டி.ஆர்?''

""அவர் ஏன் உதவிக்கு வரவில்லை என்று கேட்டுச் சொல்லச் சொன்னார்...''

""சோவிடம் நான் அவரை ரொம்ப விசாரித்ததாகச் சொல். அவரைப் போல ஒரு துணிச்சலான பத்திரிகையாளரை நான் பார்த்ததே இல்லை. பணம், பதவியில் எல்லாம் அவருக்கு ஆசை இல்லாததால்தான் அப்படி இருக்கிறார். அவரால்தான் கொள்கை ரீதியாக இரு துருவங்களாக இருக்கும் சந்திரசேகர்ஜியிடமும், அத்வானிஜியிடமும் ஒரேபோல சிநேகமாக இருக்க முடியும்.''

தான் வகிக்கும் பதவிக்கான வரைமுறைகளை நன்றாக உணர்ந்து செயல்படுபவர் சங்கர் தயாள் சர்மா. ஆர். வெங்கட்ராமன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி ஆகியோரும் அதில் கவனமாகவே இருப்பார்கள். அநாவசியமாக ஒரு வார்த்தை வந்துவிடாது என்பது மட்டுமல்ல, அரசியல் வம்புகளைத் தவிர்த்து விடுவார்கள்.

சுமார் பதினைந்து நிமிடங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெற்றேன்.

நான் சென்னை திரும்பியதும், அடுத்த நாளே "துக்ளக்' அலுவலகம் சென்று சோ சாரை சந்தித்தேன். என்.டி.ஆரையும், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவையும் சந்தித்தது குறித்து அவரிடம் தெரிவித்தேன். என்.டி.ஆர். கேட்கச் சொன்ன கேள்வியையும் அவரிடம் கேட்டேன்.

வழக்கம்போல, "போங்க சார், அவருக்கு வேற வேலையில்லை...!' என்றபடி சிரித்தார் சோ.

""ஆட்சி கவிழ்ந்தா ஓடிப்போய் அவருக்கு ஹெல்ப் பண்றதுதானா சார் எனக்கு வேலை?'' என்று கேட்டு பதில் சொல்லாமல் தவிர்த்தார்.

""அவருக்காக இல்லாவிட்டாலும், இப்போது நான் எனக்காகக் கேட்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பு தில்லியிலும், பெங்களூரிலும் என்.டி.ஆரைத் திரும்பப் பதவியில் உட்கார வைக்க நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். இப்போது ஏன் அதில் தலையிடாமல் ஒதுங்கி விட்டீர்கள் என்பது எனக்கேகூடப் புதிராக இருக்கிறது...''

பதில் சொல்லவில்லை. பைப்பை சுத்தம் செய்து புகையிலையை நிரப்பிப் பற்ற வைத்தார். மூன்று நான்கு முறை புகையை இழுத்து வெளியே விட்டார். சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்தார். பிறகு பேசத் தொடங்கினார்.

""நான் ஏன் தலையிடவில்லை என்று உங்களுக்கு நிஜமாகவே புரியவில்லையா?''

""லெட்சுமி சிவபார்வதியால் ஏற்பட்டிருக்கும் குடும்பப் பிரச்னை என்பதாலா?''
""இல்லை'' என்று தலையாட்டினார் சோ சார்.

""1984-இல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார் முதல்வர் என்.டி.ஆர். கவர்னர் ராம் லால் மூலம் கட்சியில் பிளவை ஏற்படுத்தி, காங்கிரஸ் ஆதரவுடன் பாஸ்கர ராவை முதல்வராக்கினார் பிரதமர் இந்திரா காந்தி. பாஸ்கர ராவ் அரசு ஒரு மைனாரிட்டி கவர்ன்மென்ட். அது ஜனநாயக படுகொலை என்பதால் நான் என்.டி.ஆருக்கு ஆதரவு திரட்டினேன்.''

""எம்.ஜி.ஆர் சொல்லித்தான் நீங்கள் அப்போது என்.டி.ஆரை ஆதரித்தீர்களா?''
""அப்படியெல்லாம் இல்லை. எம்.ஜி.ஆர். என்னிடம் பேசினார். நேரடியாகத் தலையிட முடியாது என்று சொன்னார். என்.டி.ஆருக்கு நடந்தது தனக்கும் நடக்கலாம் என்று பயந்தார். ஐ வாஸ் கன்வின்ஸ்ட் தட் இட் வாஸ் எ ட்ராவெஸ்டி ஆஃப் டெமாக்ரசி.''

""இப்போது ஏன் ஒதுங்கி விட்டீர்கள்?''

""என்.டி.ஆரின் ஆட்சியை நரசிம்ம ராவோ, வெளியிலிருந்து யாரோ கவிழ்க்கவில்லை. அவரது கட்சி எம்எல்ஏ-க்களே அவருக்கு ஆதரவாக இல்லை. இதில்போய் நாம் எப்படி தலையிட முடியும்? அவரது மருமகனே அவருக்கு எதிராக இருக்கிறார். எல்லா எம்எல்ஏக்களும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதனால்தான் நான் தலையிடவில்லை...''

சோ சாரின் நிலைப்பாட்டில் இருந்த நியாயம் எனக்குப் புரிந்தது.

""சார், என்.டி.ஆரிடம் போய் சோ இப்படி சொன்னார் என்று சொல்லி அவரைப் புண்படுத்தாதீங்க. என்.டி.ஆர் மாதிரி எம்.ஜி.ஆர் படித்தவரல்ல. அவருக்கு இங்கிலீஷெல்லாம் தெரியாது. ஆனால் அரசியல் தெரியும். பாவம் ராமா ராவ், நல்ல மனுஷன். அரசியல் தெரியலை. பேசாமல் விட்டுடுங்கோ...''

அதற்குப் பிறகு நான் எங்கெல்லாமோ பயணித்தேன், ஆனால் ஹைதராபாத் போகவில்லை. என்.டி.ஆரைப் பார்க்கவில்லை. "சோவிடம் கேட்டு எனக்குச் சொல்' என்று அவர் கேட்டார். சோ ஏன் தனக்கு உதவ வரவில்லை என்று தெரியாமலே அடுத்த சில மாதங்களில் என்.டி. ராமா ராவ் மறைந்துவிட்டார்.

என்.டி.ஆர் குறித்து நினைக்கும்போதெல்லாம் மனதில் ஒருவித குற்ற உணர்வு எழுகிறது. இனி அதற்காக என்ன செய்ய முடியும்?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com