மூன்று முறை முயற்சி செய்தேன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்,    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள "பொன்னியின் செல்வன்'  திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
மூன்று முறை முயற்சி செய்தேன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள "பொன்னியின் செல்வன்'  திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியீடு சென்னையில் அண்மையில் நடைபெற்றது. 

விழா மேடையில் வணக்கத்தோடு தொடங்கிய மணிரத்னம்,  ""என்னுடைய முதல் நன்றி கல்கிக்கு!  நான் கல்லூரி படிக்கும் போது இந்தப் பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தேன். கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகின்றன. இன்னமும் இது என் மனதைவிட்டு போகவில்லை. இது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.  நடித்திருக்க வேண்டிய படம்.  

"நாடோடி மன்னன்' படத்துக்குப் பிறகு அவர் உருவாக்க வேண்டியது. ஆனால் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போடப்பட்டது. இந்தப் படத்தை எங்களுக்காகத்தான் விட்டுவைத்தார் என்று புரிந்தது. இது பலரின் கனவு, பலர் இதைப் படமாக்க முயற்சி செய்துள்ளனர். 

நானே 1980, 2000, 2010  என மூன்று முறை முயற்சி செய்துள்ளேன். எனவே எவ்வளவு பொறுப்புகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். இப்போது இதை செய்து முடித்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன். இதைச் செய்து முடிக்க ஏ.ஆர்.ரஹ்மான், ரவிவர்மன் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் என எல்லோரும் சேர்ந்து உதவி செய்திருக்கிறார்கள். 

கரோனா காலத்திலும் பாதுகாப்பு உடைகளுடன் வந்து நடித்துக் கொடுத்தார்கள். இப்படிப் பல்வேறு சிரமங்களுடன் இப்படத்தில் என்னுடன் வேலைசெய்த அனைவருக்கும் நன்றி''  என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார்.

நடிகர் கார்த்தி : ""நான் எனது அம்மாவிடம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் என்று கூறிய போது, எனது கல்லூரியில் உள்ள பெண்கள் எல்லாம் வந்தியத் தேவனை போன்ற ஒருவனைத் தான் திருமணம் செய்ய ஆசைப்படுவார்கள் என்று கூறினார். அம்மாடியோவ்... அவர் என்ன அவ்வளவு பெரிய லவ்வர் பாயா பொன்னியின் செல்வன்? என்று கேட்டேன். 

அதன் பிறகு வரலாறு படிக்கும் நண்பனிடம் கேட்டேன், வந்தியத் தேவனை எப்படி புரிந்து கொள்வது என்று கேட்ட போது , ஐஏஎஸ் அதிகாரி தான் என்று கூறினார். ஐஏஎஸ் அதிகாரிக்கு எல்லாம் தெரியும். அது போல குதிரையேற்றம், போர் போன்ற எல்லாக் கலைகளையும் அறிந்திருக்க வேண்டும் . அதுபோலவே நடந்தது'' என்றார்.

நடிகர் சரத்குமார்: ""பழுவேட்டையராக நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். வசனங்களை எப்படி பேசவேண்டும் என்று மணி சாரிடம் கேட்டால், நீங்கள் படித்து மட்டும் வாருங்கள். எப்படி நடிக்க வேண்டும் என்று நான் சொல்லித் தருகிறேன்'' என்றார்.

நடிகர் ஜெயம் ரவி:  "" நீ தான் பொன்னியின் செல்வனாக நடிக்க போகிறாய் என்று கூறினார். இந்த மேடையைவிட அவர் கூறிய அந்த தருணம் தான் புல்லரிக்கும் தருணமாக இருந்தது. பல பேரின் கனவு நனவாகி இருக்கிறது. எங்களுடைய கனவும் நனவாகியிருக்கிறது'' என்றார். 

ஏ. ஆர். ரகுமான் :  ""30 வருடங்களாக எனக்கு பாஸ் மணிரத்னம் சார் தான். ஒருவருக்குள் இருக்கும் திறமையை எப்படி வெளியே எடுப்பது என்பதை நான் மணி சாரிடம் தான் கற்றுக் கொண்டேன். பொறுமை, மனிதநேயம், அன்பு, ஊக்குவித்தல் என்பவர் தான் மணி சார்.  இப்படத்துக்கு இசையமைக்க பல இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்தோம். அப்போது பாலி என்ற இடத்திற்கு சென்று 2 வாரம் தங்கி அங்குள்ள இசைக்கருவிகளை பற்றி ஆராய்ச்சி செய்தோம். அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அந்த காலத்திலும் அனைவரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியிருக்கிறார்கள். ஆகவே, இது நம் எல்லோருடைய படம் என்று கூறவேண்டும்''  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com