'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 97

தலைநகர் தில்லியில் மிகப் பெரிய மாற்றத்துக்கான முனைப்பு நடந்து கொண்டிருந்தது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 97

தலைநகர் தில்லியில் மிகப் பெரிய மாற்றத்துக்கான முனைப்பு நடந்து கொண்டிருந்தது. 1994 பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் புகழை உச்சத்துக்கு இட்டுச் சென்றது என்றால், 1995 அதன் இறங்கு முகத்துக்கான ஆரம்பமாக அமைந்தது எனலாம். 

1994 டிசம்பர் மாதம் ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், நரசிம்ம ராவின் தலைமை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. 1989-இல் தோல்வியைத் தழுவி, பதவியிலிருந்து அகற்றப்பட்ட என்.டி. ராமா ராவ், தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் ஊர் ஊராகச் சுற்றுப்பயணம் செய்து, தனது செல்வாக்கை மீட்டெடுத்திருந்தார். 

1994 டிசம்பர் மாதம் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 294 உறுப்பினர்கள் கொண்ட ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் 226 இடங்களை வென்றது என்றால், காங்கிரஸால் ஐந்தாண்டு ஆட்சிக்குப் பிறகு வெறும் 26 இடங்களைத்தான் வெல்ல முடிந்தது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த தினேஷ் சிங்கின் உடல்நிலை மோசமாகி வருகிறது என்று தில்லியிலிருந்து சில பத்திரிகை நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவரைச் சந்திக்க சென்றவர்களிடம் என்னைப் பற்றி அவர் விசாரித்தார் என்றும் கேள்விப்பட்டேன். அதற்குப் பிறகும் அவரை சந்திக்காமல் இருக்க மனம் ஒப்பவில்லை. தில்லிக்கு கிளம்பிவிட்டேன்.

நான் தில்லிக்குச் சென்ற நேரம், ஆந்திர மாநிலத் தோல்வியையொட்டி இருந்ததால், பரபரப்புக்குக் குறைவில்லை. தியாகராஜா  மார்கிலிருந்த தினேஷ் சிங்கின் வீட்டுக்கு நான் சென்றபோது, அவர் ஓய்விலிருப்பதாகச் சொன்னார்கள். காலையில் பிரதமர் நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.

பிரதாப்கர் ராஜகுடும்பத்தின் செழிப்பை அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் உணர்த்தும். தினேஷ் சிங்கின் ஒரே மகள் ராஜ்குமாரி ரத்னா சிங், நேரில் வந்து சற்று நேரம் காத்திருக்கச் சொன்னபோது, அவரது பணிவும், பண்பும் நெகிழ வைத்தன. தினேஷ் சிங்கின் மறைவுக்குப் பிறகும்கூடத் தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் பிரதாப்கர் தொகுதி ராஜ்குமாரி ரத்னா சிங்கைத் தேர்ந்தெடுத்தது என்றால், அந்தக் குடும்பத்தின் செல்வாக்கு எத்தகையது என்பதை நாம் உணரலாம்.

தினேஷ் சிங் தளர்ந்து போயிருந்தார். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி -
""ஜெயலலிதாஜி எப்படி இருக்கிறார்? அவருக்கு நம்மையெல்லாம் இப்போது நினைவிருக்குமா?''

நான் சிரித்தேன். அவரும்தான். 1989 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி ஏற்படுவதற்கு தினேஷ் சிங் முக்கிய காரணம் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன்.

""உங்களை சந்திக்கப் பிரதமர் வந்திருந்தார் என்று சொன்னார்கள்... உடல்நிலை காரணமாக அமைச்சரவையிலிருந்து உங்களை விலகச் சொன்னாரா?''

""பதவியிலிருந்து விலக விரும்புவதாக நானே அவரிடம் தெரிவித்தேன்.''

""அவர் ஏற்றுக் கொண்டாரா?''

இல்லை என்று தலையாட்டினார். பிறகு அவரே தொடர்ந்தார்.

""வெளியுறவுத் துறைக்கு வேறொருவரை அமைச்சராக்கிக் கொள்வதாகவும், அதே நேரத்தில் நான் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனால், பி.வி.என். விடுவதாக இல்லை. "நான் பிரதமராக இருந்தால் அந்த அமைச்சரவையில் நீங்கள் இல்லாமல் இருக்கக் கூடாது' என்று அவர் சொன்னபோது எப்படி அதைத் தட்ட முடியும்?''

""உங்களுக்கு பதிலாக யாரை வெளியுறவுத் துறை அமைச்சராக்கப் போகிறார்? ஏதாவது சொன்னாரா?''

""சொன்னார். நானும் அவர் குறிப்பிட்ட பெயரை ஆமோதித்தேன்.''

""யார், நட்வர் சிங்கா?''

""இல்லை, பிரணாப் முகர்ஜி...''

நான் அதை எதிர்பார்க்கவில்லை.

""இந்தியாவின் இன்றைய சூழலில், இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவப் பெயரை அகற்றி, மாறியிருக்கும் சர்வதேச அரசியலில் நம்மை நிலைநிறுத்த பிரணாபால் மட்டும்தான் முடியும் என்று நான் சொன்னேன். பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.''

பிரதமராக இருந்தும்கூடத் தனது சொந்த மாநிலத்தில் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த நரசிம்ம ராவால் முடியவில்லை என்பது வடநாட்டு காங்கிரஸ்காரர்கள் மத்தியில் அவரது தலைமை மீது கடுமையான சந்தேகத்தை எழுப்பியிருந்தது. ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வி குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து கவனத்தை திசை திருப்ப, பிரதமர் கையாண்ட உத்திதான் அமைச்சரவை மாற்றம்.

ஏற்கெனவே அர்ஜுன் சிங்கை டிசம்பர் மாதமே, அமைச்சரவையிலிருந்து அகற்றி இருந்தார் பிரதமர். அதன் மூலம் தன் எதிராளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார் என்றே சொல்லலாம். பிரணாப் முகர்ஜியை வெளியுறவுத் துறை அமைச்சராக்கியது போலவே, உணவுத் துறை அமைச்சராக அஜீத் சிங் இணைந்திருந்தார்.  ப. சிதம்பரம், வர்த்தகத் துறை இணையமைச்சராக்கப்பட்டிருந்தார். அவருக்குத் தனிப் பொறுப்பு தரப்பட்டது என்றாலும், கேபினட் பதவி அளிக்கப்படவில்லை.

அமைச்சரவை மாற்றத்தின் மூலம் கட்சியிலும், எம்.பி.க்கள் மத்தியிலும் காணப்படும் அதிருப்தியைக் கட்டுப்படுத்திவிடலாம் என்பதுதான் பிரதமரின் நோக்கமாக இருந்தது. அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக, அவருக்கு எதிரானவர்கள் ஒருங்கிணையத் தொடங்கினார்கள்.  வலுவான எதிரணி உருவாகிறது என்பதை, டாக்டர் பிஷம்பர் தாஸ் மார்கிலுள்ள ரங்கராஜன் குமாரமங்கலத்தின் வீட்டுக்குச் சென்றபோது நான் உணர்ந்தேன். 

வெளியே புல் தரையில் நாற்காலிகள் போடப்பட்டு, ரங்கராஜனைச் சுற்றிப் பலர் அமர்ந்திருந்தனர். பிகாரைச் சேர்ந்த கே.கே. திவாரி, உத்தர பிரதேசத்தின் அக்பர் "டம்பி' படேல் என்று நரசிம்ம ராவ் தலைமையால் ஓரங்கட்டப்பட்டிருந்தவர்கள்தான் அவர்கள் அனைவரும். எல்லோரும் போன பிறகு என்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் ரங்கராஜன். இருவரும் உணவருந்த உட்கார்ந்தோம். எங்கள் பேச்சு அரசியல் மாற்றம் குறித்துத் திரும்பியது.

""மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு எல்லாம் இல்லாத முனைப்பு உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறது? நரசிம்ம ராவ் அரசு கவிழ்ந்தால் அதனால் காங்கிரஸூக்கு என்ன லாபம்? பாஜகதான் ஆட்சி அமைக்கும்.''

""நாங்கள் அப்படி நினைக்கவில்லை. நிலைமை இன்னும் கைமீறிப் போகவில்லை என்று நான் நம்புகிறேன். சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பாபர் மசூதி இடிப்பால் கொதிப்படைந்திருக்கிறார்கள். 

நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ்,  சிறுபான்மையினரால்  "அத்வானி காங்கிரஸ்' என்று அழைக்கப்படுகிறது.  சோஷலிசக் கொள்கைகள் கைவிடப்பட்டு நாம் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறிக் கொண்டிருக்கிறோம். இப்படியே இன்னும் சில மாதங்கள் போனால், காங்கிரஸ் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலுமாக இழந்து விடுவார்கள்.''

""அதை எல்லாம் தடுத்த நிறுத்திவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?''

""நிச்சயமாக. நரசிம்ம ராவைப் பிரதமர் பதவியில் இருந்து அகற்றி அர்ஜுன் சிங்கைப் பிரதமராக்கினால், முஸ்லிம்கள் சமாதானமாகி விடுவார்கள். பொருளாதார சீர்திருத்தத்தின் வேகத்தைக் குறைத்தால், காங்கிரஸ் அடித்தட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். பாஜகவைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். அதற்குப் பிரதமர் மாற்றம்தான் ஒரே வழி.''

நான் எதுவும் பேசவில்லை. நரசிம்ம ராவுக்கும் அர்ஜுன் சிங்குக்கும் மக்கள் செல்வாக்கில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றுதான் நான் கருதினேன். வேடிக்கை அதுவல்ல. "அத்வானி காங்கிரஸ்' என்று கேலி செய்த அதே ரங்கராஜன் குமாரமங்கலம் அடுத்த இரண்டே ஆண்டுகளில் பாஜகவில் இணைந்தார் என்பது மட்டுமல்ல, வாஜ்பாய் அமைச்சரவையில் எரிசக்தித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

விரைவிலேயே நாடு தழுவிய அளவில் உறுப்பினர் சேர்க்கை நடத்த இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து போட்டி ஏ.ஐ.சி.சி. மாநாடு நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து வாழப்பாடி ராமமூர்த்தி,  ஆர். பிரபு  உள்ளிட்டவர்கள் உறுதுணையாக இருப்பதாகச் சொன்னார்.  பிரணாப் முகர்ஜிக்கு நெருக்கமான ஆர். பிரபு, அர்ஜுன் சிங் அணியில் இணைந்திருந்தது எப்படி என்று எனக்குப் புதிராக இருந்தது.

வெளியுறவுத் துறை அமைச்சரான பிறகு பிரணாப் முகர்ஜியை சந்திக்க இயலவில்லை. இரண்டு தடவை சந்திப்பு அனுமதி (அப்பாயின்மெண்ட்) கேட்டும் கிடைக்கவில்லை. சோவியத் யூனியன் பிளவைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் சர்வதேச மாற்றங்களை எதிர்கொள்ளும் முனைப்பில் இருந்தார் அவர் என்று கேள்விப் பட்டேன். அதனால் மேலும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

கேரளாவில் கருணாகரன் அகற்றப்பட்டு ஏ.கே. அந்தோணி முதல்வராக்கப்பட்டிருந்தார். அதன் மூலம் அவர் அர்ஜுன் சிங் அணிக்கு ஆதரவளிப்பது தடுக்கப்பட்டிருந்தது. மத்திய பிரதேசத்தில் கட்சி அர்ஜுன் சிங் - மாதவராவ்  சிந்தியா - முதல்வர் திக்விஜய் சிங் என்று மூன்று அணிகளாகப் பிளவுபட்டிருந்ததைப் பிரதமர் சாதகமாக்கிக் கொண்டார். ஏனைய மாநிலங்களில் காணப்பட்ட கோஷ்டிப் பூசல்களால் அர்ஜுன் சிங் அணியினரால் பிரதமருக்கு எதிராக ஆதரவைத் திரட்ட முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அமைச்சராகியிருந்த அஜீத் சிங்கை சந்திக்க அவரது துக்ளக் சாலை வீட்டுக்குச் சென்றிருந்தேன். அர்ஜுன் சிங், என்.டி. திவாரி கோஷ்டியால் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடாது என்பது அவரது கருத்தாக இருந்தது.

""காங்கிரஸ்காரர்களைப் பொருத்தவரை, ஏன் எந்தக் கட்சியிலும், தங்களது தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பார் என்கிற நம்பிக்கை இருந்தால்தான் தொண்டர்களின் ஆதரவு இருக்கும். நரசிம்ம ராவால் பெற்றுத்தர முடியாத வெற்றியை, அர்ஜுன் சிங்காலும் பெற்றுத் தர முடியாது எனும்போது அவர்கள் ஏன் மாற்றத்தை ஆதரிக்க வேண்டும்? சோனியா காந்தி களமிறங்கினால், அவர் மாற்றம் ஏற்படுத்துவார் என்கிற நம்பிக்கையில் தொண்டர்கள் ஆதரிக்கக் கூடும். அவர் மெளனம் சாதிப்பது வரை, நரசிம்ம ராவை அசைக்க முடியாது'' - இதுதான் அஜீத் சிங்கின் கருத்தாக இருந்தது.

பிரதமர் நரசிம்ம ராவுக்கும் சோனியா காந்திக்கும் இடையேயான பனிப்போர் நாளும் பொழுதும் அதிகரித்து வருவது குறித்து, அக்பர் சாலை காங்கிரஸ் தலைமையகத்தில் பலதரப்பட்ட வதந்திகள் உலவின.

ஒரு நாள், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வி.என். காட்கிலுடன் நட்பு ரீதியில் பத்திரிகையாளர்கள் உரையாடிக் கொண்டிருந்தோம். சோனியா காந்தியின் தலைமை பற்றிப் பேச்சு வந்தது.

""பிரதமர் பதவி என்பது மரியாதைக்குரியது. அதன் மதிப்புக் குலைவதுபோல நடந்து கொள்ளக் கூடாது. வெளியிலிருந்து அதை இயக்கும் அதிகார மையமாக இருக்க நினைக்காமல், சோனியா காந்தி நேரடியாக அரசியலில் பங்கு பெறுவதாக இருந்தால், பிரதமர் அதற்குத் தடையாக இருக்கமாட்டார். மாறாக, வெளியிலிருந்து இப்படி இப்படி செயல்பட வேண்டும், இன்னின்னாரைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தால், அது பிரதமர் பதவியின் கெளரவத்துக்கு இழுக்கு'' என்பதுதான் வி.என். காட்கில் தெரிவித்த கருத்து.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வி.என். காட்கில் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து 70 எம்.பி.க்கள், சோனியா காந்தியைச் சந்திக்க அவரது 10, ஜன்பத் இல்லத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அதில் நரசிம்ம ராவ் ஆதரவாளர்களும் சிலர் இருந்தனர்.

அவர்களை வரவேற்க சோனியா காந்தியும் தயாராகவே இருந்தார்.

(தொடரும்)    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com