'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 99

சோனியா காந்தியால் 10, ஜன்பத்திலிருந்து பத்திரிகைகளுக்கு அறிக்கை ஒளிநகல் (ஃபேக்ஸ்)  செய்யப்பட்டிருந்ததால், அவர் நேரடியாகவே களத்தில் இறங்கத் தயாராகிவிட்டார் என்கிற தோற்றம் ஏற்பட்டது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 99

சோனியா காந்தியால் 10, ஜன்பத்திலிருந்து பத்திரிகைகளுக்கு அறிக்கை ஒளிநகல் (ஃபேக்ஸ்)  செய்யப்பட்டிருந்ததால், அவர் நேரடியாகவே களத்தில் இறங்கத் தயாராகிவிட்டார் என்கிற தோற்றம் ஏற்பட்டது. அந்த அறிக்கையில் சோனியா காந்தி அப்படி என்னதான் தெரிவித்திருந்தார்? 

""கட்சிக்குள் அதிருப்தியாளர்கள் அதிகரித்து வருகிறார்கள்.  அவர்களுக்கும், பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான கட்சித் தலைமைக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த சோனியா காந்தி முன்னெடுக்கும் முயற்சிகளுக்குப் பிரதமர் தரப்பிலிருந்து உற்சாகம் காட்டப்படவில்லை. இந்த நிலைமை தொடர்வது கட்சியின் வருங்காலத்துக்கு நல்லதல்ல'' என்பதுதான் அந்த அறிக்கை தெரிவித்த கருத்து.

தனது அறிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் தன்னை நேரில் வந்து சந்திப்பார் என்று சோனியா காந்தி எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. சோனியா காந்தியின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்று அர்ஜுன் சிங்கும், என்.டி.திவாரியும் தெரிந்து கொண்டார்கள்.  ஆனால், சோனியா காந்தியின் அறிக்கையைத் தொடர்ந்து அவர்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தலைவர்களின் ஆதரவு அதிகரித்ததா என்றால் அதுவும் இல்லை. 

காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படும் என்று அர்ஜுன் சிங் மட்டுமல்ல, அத்வானி உள்ளிட்ட பாஜகவினர் உறுதியாக நம்பினார்கள். ஆனால், பிரதமர் நரசிம்ம ராவ் மிகவும் சாதுரியமாகத் தனது அரசியல் காய்களை நகர்த்தத் தொடங்கினார்.

அவரது முதல் நடவடிக்கை, சரத் பவாரின் ஆதரவாளர்கள் அர்ஜுன் சிங் அணியுடன் இணையும் வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்ததுதான். சரத் பவாரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஏ.கே. அந்தோணி ஏற்கெனவே கேரள முதல்வராகி இருந்ததால், சரத் பவார் அணி வலிமை இழந்திருந்தது. 

இந்திரா காந்திக்கு மிகவும் நெருக்கமானவரான கே. கருணாகரன் மத்திய அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஜூன் மாதம் நடந்த "மினி' அமைச்சரவை மாற்றம், பிரதமரை அரசியல் ரீதியாக வலுப்படுத்திக் கொள்ள உதவியது.

தேர்தல் வர இருக்கும் நேரத்தில் கட்சியில் பிளவு ஏற்படுவதைப் பெரும்பாலான எம்.பி.க்கள் விரும்பாதது, நரசிம்ம ராவுக்கு இயற்கையாகவே வலு சேர்த்தது. 

நரசிம்ம ராவால் தேர்தல் வெற்றியை தேடித்தர முடியும் என்று கட்சியில் பலரும் நம்பவில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. அதே நேரத்தில், அர்ஜுன் சிங், என்.டி. திவாரி இருவரும் நம்பிக்கை அளிப்பவர்களாகவும் அவர்கள் கருதவில்லை.

சோனியா காந்தி நேரடியாகக் களமிறங்கி இருந்தால் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதற்கு அவர் தயாராக இல்லாமல் இருக்கும் நிலையில், நரசிம்ம ராவே தொடர்வதுதான் நல்லது என்று பெரும்பாலானோர் கருதினர்.

லலித்கலா அகாதெமியில் நடந்த ஓர் ஓவியக் கண்காட்சிக்குச் சென்றுவிட்டு, ஹரீஷ் சந்திர மாத்தூர் லேனில் நல்வாழ்வுத் துறை இணையமைச்சராக இருந்த கே.வீ. தங்கபாலுவை சந்திக்க ஃபெரோஸ்ஷா ரோடு வழியாக நடந்துசென்று கொண்டிருந்தேன். என்னைக் கடந்து சென்ற அம்பாஸிடர் காரில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சித் (ஆர்.எஸ்.பி.) தலைவர் திரிதீப் செளத்ரி சென்று கொண்டிருந்தார். அவரது இல்லமும் அலுவலகமும் அந்த சாலையில்தான் இருந்தது.

சுதந்திர இந்தியா சந்தித்த தலைசிறந்த அரசியல் தலைவர்களில் திரிதீப் செளத்ரியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட திரிதீப் செளத்ரி, தேசத்துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை பெற்றவர். புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர் என்பது மட்டுமல்ல, மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையில் இடது முன்னணி அரசு அமைவதற்குக் காரணமாக இருந்தவரும் அவர்தான்.

மேற்கு வங்கத்தில் அபரிமிதமான மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்தவர் திரிதீப் செளத்ரி. இல்லையென்றால் 1952 முதல் 1984 வரையிலான எட்டு மக்களவைத் தேர்தல்களில், மேற்கு வங்கத்தின் பெஹ்ராம்பூர் தொகுதியில் அவரால் எப்படி தொடர்ந்து வெற்றி பெற்றிருக்க முடியும்? இந்திரஜித் குப்தா, பிரணாப் முகர்ஜி இருவரும், திரிதீப் செளத்ரி நுழைந்தால் எழுந்து நிற்பதை நான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஆளுமை. அவரின் வயோதிகம் காரணமாக 1987-இல் மாநிலங்களவை உறுப்பினராகி 1997-இல் மறையும்வரை தொடர்ந்தார்.

அவருடைய இறுதிக் காலத்தில், அதாவது 1991-க்குப் பிறகுதான், அவரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியவர் ஃபார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் சித்த பாசு. அதனால் நான் தமிழக ஃபார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்தவன் என்கிற தவறான அபிப்பிராயம் அவருக்கு என்னிடம் அடிக்கடி ஏற்படும். 80 வயது கடந்திருந்த நிலையில் கையில் கைத்தடி வைத்து நடந்து கொண்டிருந்தார்.

திரிதீப் செளத்ரியிடம் பேசிக் கொண்டிருந்தால், ஜவாஹர்லால் நேருவில் தொடங்கி, கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் இயக்கங்கள் பற்றியும், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் பற்றியும் நிறைய செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியும். தோழர் பி. ராமமூர்த்தி குறித்தும், "பசும்பொன்' முத்துராமலிங்கத் தேவர் குறித்தும், ஏன் ராஜாஜி குறித்தும் அவரிடம் நான் கேட்டுத் தெரிந்துகொண்ட தகவல்கள் ஏராளம்.

நான் அவரது வீட்டுக்குள் நுழைந்தபோது, அப்போதுதான் வெளியில் இருந்து வந்திருந்த பெரியவர் திரிதீப் செளத்ரி வரவேற்பறையில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். முன் அனுமதி பெறாமல் வந்திருந்த என்னை சற்று அசிரத்தையாகத்தான் அவர் பார்த்தார். தொலைதூர சென்னையிலிருந்து வந்திருக்கும் ஒருவர் என்பதால், சகித்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். அமரச் சொன்னார். "என்ன?' என்பதுபோல புருவம் உயர்த்தினார்.

""சோனியா காந்தியின் அறிக்கையைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு ஆட்சி கவிழும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளத்தான் வந்தேன். உங்கள் கார் கடந்து போனதைப் பார்த்தேன். கேட்க வேண்டும் போலிருந்தது...'' என்றேன்.

""காங்கிரஸ்காரர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். பதவியை ஒருநாளும் இழக்க மாட்டார்கள். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி லஞ்ச ஊழலில் திளைத்த கட்சி. இப்போது நரசிம்ம ராவ் எல்லா எம்.பி.க்களுக்கும் லஞ்சம் கொடுத்துக் கெடுத்து வைத்திருக்கிறார். அவரது ஆட்சி கவிழ்வதைக் காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, பாஜக எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும்கூட விரும்பமாட்டார்கள்.''

அவர் சொன்னது என்னைத் திடுக்கிட வைத்தது. எல்லா எம்.பி.க்களையும் லஞ்சம் கொடுத்துக் கெடுத்து வைத்திருக்கிறார் என்கிறாரே என்று நான் அவரை ஆச்சரியமாகப் பார்த்தேன். அவரே தொடர்ந்தார்:

""இடதுசாரிகளைத் தவிர, ஏனைய எல்லா கட்சிகளும் நரசிம்ம ராவின் வலையில் விழுந்திருக்கிறார்கள். ஒவ்வொரு எம்.பி.க்கும் தொகுதி வளர்ச்சி நிதி என்று அவரது அரசு வழங்கும் வருடத்துக்கு ரூ.25 லட்சம் என்பது மறைமுக லஞ்சம் அல்லாமல் வேறென்ன?  காண்டிராக்டர்களிடமிருந்து ஒவ்வொரு எம்.பி.க்கும் லஞ்சமாக வருடந்தோறும் ரூ.5 லட்சம் கிடைக்கும். அதை இழக்க அவர்கள் தயாராக மாட்டார்கள். அதனால், ஆட்சி கவிழாது...''

எம்.பி.க்கள் தொகுதி வளர்ச்சி நிதிக்கு இப்படியும் ஒரு பரிமாணம் இருக்கிறது என்பதை நான் அப்போதுதான் புரிந்து கொண்டேன் (பிரதமர் வாஜ்பாயால் அது  ரூ.2  கோடியாகவும், பிரதமர் மன்மோகன் சிங்கால் ரூ.5 கோடியாகவும் நரசிம்ம ராவ் தொடங்கிய ரூ.25 லட்சம் அதிகரிக்கப்பட்டது).

திரிதீப் செளத்ரியால் அதிக நேரம் பேச முடியவில்லை. அரசியல் போக்கு குறித்து அவர் கடுமையாக அதிருப்தி அடைந்திருந்தார் என்பதை அவரது முகத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் கட்டுரை எழுதும் எண்ணம் மேலெழுந்ததால், அமைச்சர் தங்கபாலுவை சந்திக்கப் போகாமல், கன்னாட் பிளேசிலுள்ள எனது அலுவலகத்துக்கு ஆட்டோ ரிக்ஷாவில் விரைந்தேன். 

திரிதீப் செளத்ரி சொன்னது போலவே சோனியாவின் அறிக்கை எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சோனியா காந்தியும் அதற்குப் பிறகு எதிர்பார்த்ததுபோல இயங்கவில்லை.

அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான மாதவ்சிங் சோலங்கியின் அறையில் வி.என். காட்கில் இருப்பதாகச் சொன்னார்கள். நான் அங்கே போனபோது அவர் இருக்கவில்லை. 

ஆர்.கே. தவாண்தான் இருந்தார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.கே.எல். பகத்தும், தில்லி (புறநகர்) எம்.பி. சஜ்ஜன் குமாரும் அந்த அறையில் இருந்தனர். காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது.

அறைக்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் என்னைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. மாதவ்சிங் சோலங்கியின் உதவியாளர் வேறு யாரையோ பார்க்கச் சென்றிருந்தார். அட்டெண்டர் மட்டும்தான் இருந்தார். இந்திரா படுகொலைக்குப் பிறகு நடந்த கலவரம் குறித்தும், சீக்கியர்கள் படுகொலை குறித்தும் அவர்கள் பேசுகிறார்களோ என்கிற ஆர்வத்தில் நான் கூர்ந்து கேட்டேன். அவர்கள் அதைப்பற்றிப் பேசவில்லை.

அவர்களது பேச்சு சோனியா காந்தி குறித்ததா என்றால் அதுவும் கிடையாது. பிறகு அவர்கள் வேறு என்னதான் பேசினார்கள்? சற்றும் எதிர்பாராத ஒரு பிரச்னை அவர்களால் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் நிதியில் பெரும் மோசடி நடந்திருக்கிறது என்பதுதான் அவர்கள் மாதவ்சிங் சோலங்கியிடம் முன்வைத்த குற்றச்சாட்டு. அப்போது கட்சியின் பொருளாளராக இருந்தவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சீதாராம் கேசரி.

அதற்கு மேலும் நான் அங்கிருப்பது உசிதமல்ல என்று நினைத்து அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நான் ஒட்டுக் கேட்கிறேன் என்கிற சந்தேகம் மாதவ்சிங் சோலங்கிக்கோ, ஆர்.கே. தவாணுக்கோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் அதற்குக் காரணம். அன்று மாலையில் சுநேரிபாக் சாலையில் இருந்த தொழில் துறை அமைச்சர் கே. கருணாகரன் வீட்டுக்குப்போன போது, அவரை சந்திக்க வந்திருந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என். ஜனார்த்தன ரெட்டியும், கட்சி நிதியில் முறைகேடு நடந்திருப்பது குறித்துப் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

அடுத்த பூகம்பம் வெடிக்கக் காத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். என். ஜனார்த்தன ரெட்டி போன பிறகு கருணாகரனை சந்தித்தேன். அவர் ஏதாவது சொல்வார் என்று நினைத்தேன். எதுவும் சொல்லவில்லை.

அடுத்த நாள் காலையில் கோல்ஃப் லிங்சிலுள்ள ஆர்.கே. தவாணின் வீட்டுக்குச் சென்றேன். அங்கே அவரை சந்திக்கக் காத்திருந்தவர்களில் இருவர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, அவர்கள் தெரிவித்த தகவல் என்னை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

1989, 1991 தேர்தல் பிரசாரத்துக்காகச் செய்த விளம்பரங்களுக்கான பணம் கட்சியால் தரப்படவில்லை என்றும், பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆர்.கே. தவாணிடம் அது குறித்துத் தெரிவித்துத் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெறுவதற்காகத்தான் பெங்களூருக்கும் தில்லிக்குமாக அலைந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் விளம்பரப் பணம்கூடத் தர முடியாத நிலையில் இருக்கிறது என்றால் அதை எப்படி நம்புவது? பிரதமரும் கட்சித் தலைவருமான நரசிம்ம ராவுக்கு இது தெரியாமல் இருக்கிறதா? இல்லை, தெரிந்தும் அவர் சீதாராம் கேசரியைத் தட்டிக் கேட்கத் தயங்குகிறாரா? என்கிற கேள்விக்கு ஆர்.கே. தவாணிடம் விடைதேடக் காத்திருந்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com