ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் உபாதை குணமடைவது எப்படி?

மஞ்சள் காமாலை உபாதையினால் பல நாட்கள் பாதிக்கப்பட்ட நான், கடும் பத்தியம் மற்றும் மருந்துகள் சாப்பிட்டு தற்சமயம் சுமாராகத் தேறியுள்ளேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் உபாதை குணமடைவது எப்படி?


மஞ்சள் காமாலை உபாதையினால் பல நாட்கள் பாதிக்கப்பட்ட நான், கடும் பத்தியம் மற்றும் மருந்துகள் சாப்பிட்டு தற்சமயம் சுமாராகத் தேறியுள்ளேன். ஆனால் அதன் பக்கவிளைவோ அல்லது கடும் பத்தியம் இருந்ததாலோ தெரியவில்லை, எனக்கு இப்போது அடிக்கடி மார்பில் கோழை கட்டிக் கொள்கிறது. மேலும், கண் பார்வை மங்கல், முடி நரை, உதிர்தல், மலச்சிக்கல் போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன். இதை எப்படி குணப்படுத்தலாம்?

-ராமகிருஷ்ணன்,
சென்னை.

கரிசாலையை மட்டுமே நீங்கள் மஞ்சள் காமாலை பாதித்திருந்தபோது, சுமார் ஏழு நாட்கள் வரை சாப்பிட்டிருந்தால், நீங்கள் குறிப்படும் உபாதைகள் ஏதும் ஏற்படாமல் பாதுகாப்பைப் பெற்றிருக்கலாம்.

வெண்மையான மலர்கள் கொண்ட கரிசாலையின் பசுமையான இலைகளைச் சுத்தம் செய்து பசையாக அரைத்து, கொட்டை பாக்களவு, ஒரு டம்பளர் (சுமார் 300 மி.லி.) மோரில் கலந்து, உள்ளுக்குக் காலை, மாலை வேளைகளில், ஏழு நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இந்த நாட்களில், உணவில் உப்பு, புளி நீக்கி பத்தியத்தைக் கடைபிடிக்க, மஞ்சள் காமாலை உபாதை சரியாகிவிடும்.

தேவையான அளவு பசுமையான கரிசாலை இலைகளைச் சேகரித்து, நன்றாகக் கழுவி, பசையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் இரண்டு பங்குத் தண்ணீர் சேகரித்துக் குழைத்து, இரண்டு பங்கு நல்லெண்ணெயில் கலந்து, அடுப்பில் வைத்து நீர் வற்றுமளவுக்குக் காய்ச்சி, காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்த வேண்டும். 

சுமார் பத்து மி.லி. வரை எடுத்து, நூறு மி.லி. காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர வேண்டும். தினமும் இரு வேளைகள் சாப்பிட வேண்டும். மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்படும்.

கரிசாலை இலைச்சாற்றுடன் சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்ட வைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தைலத்தால் தலை முழுகி வர வேண்டும். தலைவலி, உடல்வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும்.

நரைமுடி மாற, கரிசாலை இலைகளை நிழலில் உலர்த்தி, தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் ஐந்து கிராம் அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். இரண்டு மாதங்கள் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

தலைமுடி அடர்த்தியாக வளர, கரிசாலை இலைகளைப் பசை போல அரைத்து, அடையாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை நல்லெண்ணெயில் ஊறவைத்து தலையில் தொடர்ந்து தடவி வர முடி கருமையாகச் செழித்து வளரும். முடி உதிர்தலும் கட்டுப்படும்.

மலச்சிக்கல் தீர தினமும் காலையில் ஐந்து பசுமையான கரிசாலை இலைகளை மென்று சாப்பிட்டு வர வேண்டும். 

இராமலிங்க வள்ளலார் கரிசாலையை கற்ப மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். கரிசாலைச் சாற்றால் வாய் கொப்பளித்து வர பற்களும், ஈறுகளும் நாக்கும் சுத்தமாகும். மேலும், தொண்டை நோய்கள் குணமாவதுடன் நுரையீரலும் சுத்தமடையும் என்கிறார்.

பிருங்கராஜாஸவம் என்ற ஆயுர்வேத மருந்து விற்பனையிலுள்ளது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் உபாதைகளுக்கு மிகவும் சிறந்தது. பிருங்கராஜம் என்ற பெயர் கரிசாலையைக் குறிக்கிறது. கரிசாலை இலைகளை கீரையாகத் தொடர்ந்து உபயோகித்து வர, கண்பார்வை தெளிவடையும். இதற்கு இரத்தத்திலுள்ள அமிலத் தன்மையைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. இதனால், இரத்த சோகை, தோல் நோய்கள் போன்றவையும் கட்டுப்படும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com