ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பார்கின்சன் மீள்வது எப்படி?

என் மனைவிக்கு வயது 70. பத்து ஆண்டு காலமாக பார்கின்சன் உபாதை மற்றும் சிறு வயது முதலே காது கேட்புத் திறன் சற்று குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பார்கின்சன் மீள்வது எப்படி?

என் மனைவிக்கு வயது 70. பத்து ஆண்டு காலமாக பார்கின்சன் உபாதை மற்றும் சிறு வயது முதலே காது கேட்புத் திறன் சற்று குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது ஓரிரு மாதமாக காதினுள் இரைச்சல், பாட்டு ஒலி கேட்பதாக உணர்ந்து துன்பப்படுகிறார். இதனை நீக்க வழி என்ன?

-மா.தமிழ்மணி,  
திருநெய்ப்பேர், திருவாரூர்.

பார்கின்சன் உபாதைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத சிகிச்சைகள் பலதும் நீங்கள் குறிப்பிடும் காது இரைச்சல், ஒலி கேட்பது போன்றவற்றையும் குறைத்து விடும் சிகிச்சை முறைகளாகும். மூளையைச் சார்ந்த பல உபாதைகளுக்கும், தலைமுடியை முழுவதுமாக நீக்கிவிட்டு, தலையில் வெதுவெதுப்பாக சுமார் முக்கால் மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வைக்கப்படும் மூலிகைத் தைலத்தால், அதன் வீரியமானது தோல் வழியாக உறிஞ்சப்பட்டு, மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் பரவி, நரம்புகளுக்கு ஊட்டத்தை ஏற்படுத்தி, சுரப்பிகளையும் சீராக வேலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறது.

தனித்தனியாக, புலன்களின் செயல்திறன் அதிகரிக்கும் வகையில் செய்யக் கூடிய "கர்ண பூரணம்' எனும் இளஞ்சூடான மூலிகைத் தைலத்தை, காதில் இட்டு நிரப்பும் சிகிச்சை, கண்களைச் சுற்றி உளுந்து மாவினால் வரம்பு கட்டி, மூலிகை நெய் மருந்தால் நிரப்பி வைக்கப்படும் (கண் உள்பகுதியில்)  "நேத்ர தர்ப்பணம்' எனும் சிகிச்சை, மூளையை நேரடியாக வலுப்படுத்தும் "நஸ்யம்' எனும் மூக்கினுள் மூலிகைத் தைலத்தை பிழிந்துவிடும் சிகிச்சை, "கபளம்' அல்லது "கண்டூஷம்' எனப்படும் வாயினுள் மூலிகை மருந்துகளால் தயாரிக்கப்பட்ட கஷாயத்தையோ அல்லது தைலத்தையோ விட்டு குலுக்கித் துப்புதல் அல்லது சிறிது நேரம் வாயினுள் பிடித்து வைத்திருப்பது போன்ற சிறப்பான சிகிச்சை முறைகளாலும் மனிதர்களுடைய மூளையிலுள்ள எண்ணற்ற நுண்ணிய நரம்புகளின் செயல்களை ஊக்கி விட்டு, அவற்றைத் திறம்பட வேலை செய்விக்க முடியும் என்ற ஆயுர்வேத சிகிச்சைகளால், தங்களது துணைவியாருக்கு நன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதுபோன்ற சிகிச்சை முறைகள் வேறு எந்த மருத்துவ முறையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது சந்தேகமே. இவை அனைத்தையும் உபாதைகளின் ஆரம்ப நிலையிலேயே செய்திருந்தால் பெரும் நன்மை அடைந்திருக்கலாம்.

வயோதிகம், உபாதைகளின் நீண்ட வருடத் தாக்கம் போன்றவை, சிகிச்சைக்கு பெரும் இடையூறாகும். ஆனாலும், மனித முயற்சி என்று ஒன்று இருப்பதால், அவரை நம்பிக்கையுடன் இந்தச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நீங்கள் முயற்சிக்கலாம்.

"அஸ்வகந்தா' எனும் மூலிகைப் பொடி மருந்தை சுமார் ஐந்து கிராம் எடுத்து, வெது வெதுப்பான இருநூறு மில்லி லிட்டர் பாலுடன் கலந்து, காலை, மாலை வெறும் வயிற்றில் அவர் சாப்பிடுவது நல்லது. 

மூளை மற்றும் செவி சார்ந்த நரம்புகள் இதன்மூலம் வலுப்பெறும். தலைக்கு, தேங்காய் எண்ணெய் தடவுவதை நிறுத்தி, இளஞ்சூடாக நல்லெண்ணெய் தடவி, அரை- முக்கால் மணி நேரம் ஊறிய பின்னர் வெதுவெதுப்பான நீரினால் தலைக்குக் குளிப்பது நலம்.

உணவு- செயல்பாடு - மருந்து போன்ற விவரங்களை, ஆயுர்வேத மருத்துவரிடம் நேரடியாக அறிந்துகொள்ளவும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com