பீதிக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

""என்னங்க.. காது செவிடாயிடுச்சா.. வெடி சத்தம் கேட்குதில்ல.. இங்கே ஓடி வாங்களேன்..''- மனைவியின் இடி முழக்க குரல் கேட்டு, அந்தத் திசை நோக்கி, என்னையும் அறியாமலேயே மின்னல் வேகத்தில் பயணித்து
பீதிக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

""என்னங்க.. காது செவிடாயிடுச்சா.. வெடி சத்தம் கேட்குதில்ல.. இங்கே ஓடி வாங்களேன்..''- மனைவியின் இடி முழக்க குரல் கேட்டு, அந்தத் திசை நோக்கி, என்னையும் அறியாமலேயே மின்னல் வேகத்தில் பயணித்து, அவள் முன் பிரசன்னமானேன்.
அடுப்பு எரிந்ததால், அது சமையலறை என்பது புரிந்தது. அங்கு, இடுப்பில் ஒரு கையும், அடுப்பில் ஒரு கையுமாக, பயந்த (?) கோலத்தில் காட்சி அளித்தாள் மனைவி.
""என்ன.. ? கேஸ் வெடிச்சுடுச்சா? உங்க வீட்டில் கேஸ் அடுப்பில் சமைச்சு பழக்கமில்லையா..?''- ஏதோ ஒரு ஃப்ளோவில், வார்த்தைகள் ஜ்வாலையாக வெளிப்பட்டன. அது, நெய் உறிஞ்சிய தீப்பந்தமாக, கொஞ்சம் கொஞ்சமாகப் பற்றி எரிய ஆரம்பித்தது.
இப்படி, சின்ன விஷயத்தை பெரிசாக்கி, அசட்டு பிசட்டுன்னு பேசி, பீதி கிளப்பாதீங்க..?''
பீதியை அவள் கிளப்பிவிட்டு, வழக்கம்போல, என் மீது பழியைத் தூக்கிப் போட்டாள். திருமணம் ஆனதிலிருந்து, குறைந்த காலத்தில், என் மீது போடப்பட்ட பழிகளை எடைபோட்டால், அது அவள் எடையை விஞ்சி
விடும். அவற்றில் எவ்வளவு மிதமானவை, எவ்வளவு கனமானவை என்ற புள்ளி விவரக் கணக்கு, என்னிடம் அசுர வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறது.
ஆனால், இப்பொழுது, சமையலறையில் என் கண்களுக்கு, ஆங்காங்கே தெறித்து சிதறிக்கிடந்த சில
கரும்புள்ளிகள்தான் தெரிந்தன. ஆனால், ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் என் மர மண்டைக்கு எட்டியது.
""என்ன ஆச்சு..சீக்கிரம் சொல்லேன்..தீயணைப்புக்கு போன் செய்யணும்''- சட்டை பையில் ஒளித்து வைத்திருந்த பலூனை எடுத்து, வாயால் ஊத ஆரம்பித்தேன். குழப்ப நேரத்தில், பலூன் ஊதும் பழக்கம், கல்யாணத்துக்குப் பிறகும் என்னை விட்டுப் போகவில்லை.
""பெரிசாக்காதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்ல. சின்ன குழந்தை மாதிரி அடுப்படியில் பலூனை ஊதிக்கிட்டு நிக்கறீங்களே..எங்கேயாவது வெடிச்சு வைக்கப் போவுது. பலூன் வெடிச்சா எனக்கு பயம். அது எங்க பரம்பரைக்கே ஆகாத ஒண்ணு. அதுக்குப் பின்னால ஒரு கதையே இருக்கு..?''
இப்படித்தான் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு கதை இருப்பதாக கதை விட்டுக் கொண்டிருப்பவள், இதுவரை என்னிடம் ஒரு கதையைக் கூட சொல்லாமல், என்னை சஸ்பென்ஸிலேயே வைத்து அழகு (?) பார்த்தாள்.
அம்மா பாட்டி, அப்பா பாட்டி, சின்ன பாட்டி, பெரிய பாட்டி, ஒண்ணு விட்ட பாட்டி, ஓரம் கட்டப்பட்ட பாட்டி, பக்கத்து வீட்டு பாட்டி என ஏகப்பட்ட பாட்டிகள் புடை சூழ சிறு வயதைக் கடந்ததால், அவர்கள் மூலம் கேட்ட கதைக்கு பஞ்சமில்லை. தொட்டில் போட்டபோதுகூட, பாட்டுப்பாடாமல், கதை சொல்லிய பிறகுதான், அழுகையை நிறுத்தியதாக, ஓர் அமானுஷ்ய குடும்பத் தகவல் உண்டு. அதற்குப் பிறகு, சுற்றி வளர்ந்த சித்திகளின் பட்டறைகளிலிருந்து, விதவிதமான கதைகள் சொல்லப்பட்டு, என்னை ஒரு கதாரசிகனாக மாற்றியது. காலை தூக்கத்திலிருந்து எழுவதற்கு, சாப்பிடுவதற்கு, இரவுத் தூக்கத்துக்கு என, விதவிதமான கதைக் களத்தில் வளர்ந்தவன். வளர்ந்த பிறகும் அதுவே பழக்கமாகி, தினமும் யாரிடமாவது ஒரு கதையாவது கேட்கவில்லையானால், எனக்குத் தூக்கம் வராது.
பெண் பார்க்கப் போகும்போது, பெண்ணைப் பாட்டுப் பாடச் சொல்லுவாங்க.. டான்ஸ் ஆடச் சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், நான் கேட்டது, ""பெண்ணுக்கு கதை சொல்லத் தெரியுமா என்றுதான்' என்பதை நம்பினால் நம்புங்கள். இல்லையென்றால், இவன் ஏதோ கதை விடுகிறான்'' என்று நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. ஏனென்றால், அதுதான் நிஜம்.
அந்தச் சமயத்தில், ""வண்டி, வண்டியாக குடும்பக் கதை மண்டி கிடக்கிறது. தினமும் ஒரு கதை சொன்னால் கூட, அடுத்த ஜன்மம் வரை ஸ்டாக் இருக்கிறது'' என்று வருங்கால மனைவி கதை விட்டாளே தவிர, என்னிடம் அவள் ஒரு கதை கூட இதுவரை சொன்னதில்லை. அதனால், அவளிடம் உண்மையாகவே கதை ஸ்டாக் இருக்கிறதா என்ற என் சந்தேகம் வலுக்க ஆரம்பித்த சமயத்தில்தான், கடுகு வெடிப்பு அரங்கேறி இருக்கிறது. இதற்கு பின்னாலும், ஒரு கதை இருக்குன்னு சொன்னால், உண்ணாவிரதம் இருந்தாவது அந்தக் கதையை முழுவதும் கேட்டு விட முடிவு செய்துவிட்டேன். ஆனால், சாப்பிட்டுக் கொண்டே, உண்ணாவிரதம் இருப்பது எப்படி என்பதுதான் புரியவில்லை!
""காதுதான் டப்ஸா ஆயிடுச்சு. வெடிச்சு, கீழே சிதறிக் கிடக்கறது கூடவா கண் தெரியலை. இல்லை தீய்ஞ்சு கருகின வாசனை கூடவா மூக்குக்கு எட்டலை. அதுக்குத்தான், சின்ன வயசில், எறும்பு சாப்பிடணும்னு சொல்வாங்க. உங்க வீட்டில், நல்லது சொல்லிக் கொடுத்து, உங்களை வளர்க்கலை போலத் தெரியுது!'' காது, கண்கள், மூக்கு என்று என்னுடைய ஒவ்வொரு முக்கிய அவயத்தையும், இயங்காத லிஸ்ட்டுக்கு அனுப்பிக்கொண்டிருந்தாள்.
""எல்லாவற்றையும் இப்படி மாற்றி மாற்றி சொல்லி குழப்பறே.. சின்ன சைஸ்ல இருக்கிற எறும்புகளை தேடிக் கண்டு பிடித்து, உணவு போட்டா, நம்ம கண்களுக்கு அது நல்ல பயிற்சின்னுதான் சொல்லியிருக்காங்க. மிருக வதை செய்தால், ப்ளூ கிராûஸ கூப்பிட வேண்டியிருக்கும்.''
""கிராஸிங்க்ன்னா கூட எனக்கு பயம்தான்!''
""அந்த விஷயத்தை அப்புறம் கிராஸ் பண்ணுவோம்..இப்ப கிச்சன்ல என்ன ஆச்சு?''
""கண்ணுதான் தெரியலைன்னா, காது கூட செவிடா..வெடி சத்தம் கேக்கலையா..?''- புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்து என்னை தாக்கினாள்.
தன்மானம் ஸ்டியரிங் வீல் போட்டு, என் தலையை வேகமாக ஒரு சுற்று சுற்றியது. அந்தச் சுற்றலில், சுற்றுமுற்றும் பார்க்க முடிந்தது.
வெள்ளை தரையில், சின்னச் சின்ன கருவிழிகள் படர்ந்தது போல், கருப்புத் துகள்கள் பரவிக் கிடந்ததைப் பார்த்த போது, எனக்கே சற்று பயமாகத்தான் இருந்தது.
""திடீர்னு.. தரைக்கு என்ன ஆச்சு..'' கண்கள் முளைச்சுடுச்சா? இப்படி முழுச்சு, முழுச்சு பார்க்குது..ஏதாவது சாமி குத்தமா இருக்குமோ..?''
""அநாவசியமா சாமியை வம்புக்கு இழுத்து, என்னை ஏன் பயமுறுத்தறீங்க..?''
என்னுடைய அனைத்து பலவீனங்களும் குறுகிய காலத்தில் அவளுக்கு அத்துப்படியானது போல், அவளுடைய ஒரு சில பலவீனங்கள் ஓரளவு எனக்குப் புரிய ஆரம்பித்தது. அவற்றுள், சாமி குத்தம் முக்கியமான ஒன்று!
பேச்சுவார்த்தைக்கு நான் தயாராகிக் கொண்டிருக்கும்போதே, அதற்கு சிறிதும் இடம் கொடுக்காமல், ரஷிய ஏவுகணை போல், என் மீது பாய்ந்தாள்.
""கடுகளவாவது மூளை இருந்தால், இந்தக் கேள்வியை கேட்க மாட்டீங்க..!''
""ஓ..கடுகா..? இப்ப புரிஞ்சிடுச்சு. கடுகை சாம்பாரில்தான் தாளிச்சு கொட்டுவாங்க..நீ தரையில் தாளிச்சு கொட்டியிருக்கே. இன்னைக்கு, டைனிங் டேபிளுக்கு பதிலா, தரையில்தான் சாப்பாடா..ஏதாவது நேந்துதலா?
""ஐயோ..இது சாமி குத்தமில்ல..மா..மி... குத்தம்'' ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
""இந்த மாத மளிகை லிஸ்ட்டில் கடுகை கேன்சல் செய்ய சொன்னால், அதை மறந்து தொலைச்சு, மெனக்கட்டு அந்த ஆட்டம்பாம்பை சுமந்துக்கிட்டு வந்திருக்கீங்க?''
என் பழி மூட்டையில், இன்னொரு பழிச் சொல் நுழைந்து, மூட்டையின் கனம் அதிகரித்தது.
கடுகை ஆட்டம்பாம் என்று வர்ணித்த முதல் இல்லத்தரசி, நிச்சயம் இவளாகத்தான் இருக்கும்.
""மாமி என்ற புதிய ஒரு கேரக்டர் உள்ளே நுழையுதே! இது எப்படி உருமாறி உயிரை வாங்கப் போகுதோ ..?''- நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, சப்பணக் கால் போட்டு, கீழே உட்கார்ந்து, கண்களை மூடி, தியானத்தில் ஆழ்ந்தாள்.
இதுபோன்ற தியானக் காட்சியை சில முறை நான் கண்டு களித்த(?) அனுபவம் உண்டு என்பதால், அதன் விளைவுகள் எனக்கு ஓரளவு தெரியும். அதாவது, அவள் பின்னோக்கி போய், ஏதோ ஃப்ளாஷ் பேக்கை திருவாய் மலர்ந்தருளப் போகிறாள் என்பதற்கான முன்னோட்டம் அது.
மெல்ல கண்களை திறந்தவள், சாமியார் போல், ஜாடை மொழி பேசி, என்னையும் கீழே உட்கார சொன்னாள். டெண்ட் கொட்டகையில், தரை டிக்கெட்டில் நிறைய சாமியார் படங்கள் பார்த்திருப்பாள் போல. ஆகவே, கதை சொல்லும் போது, என்னையும் தரை டிக்கெட்டுக்கு டெளன் கிரேட் செய்து மகிழ்ந்தாள்(?).
""என்னுடைய அப்பாவோட மச்சானுடைய மனைவி எனக்கு என்ன உறவு முறை..?'' - ஒரு முறை மூச்சை உள்ளிக்கு இழுத்து, கேள்வியை நிறைவு செய்தாள்.
உறவுமுறைகள் கண்டுபிடிப்பதில் நான்ரொம்ப வீக்.
எனக்கு பதில் தெரியாத கேள்வி கேட்டு, என்னை குழப்பி மட்டம் தட்டுவதில், அவள் ஸ்ட்ராங்.
என் அம்மாவுக்கு, நான்கு அக்கா, ஒரு தங்கை உண்டு. ஆனால், அனைவரையும் சித்தி என்றுதான் அழைப்போம். அதுவே பழக்கமாகி, எல்லா பெண் உறவினர்களும் எனக்கு சித்தியானார்கள். முதல் பாகத்தில் பாட்டி, அடுத்து சித்தியைத் தவிர, எனக்கு வேறு உறவு முறை தெரியாது. எங்கள் வீட்டில் நிறைய சித்திகள் உலா வருவதை பார்த்தவர்களுக்கு பொறாமை ஜாஸ்தி. நான் சிறுவனாக இருக்கும்போது, வீட்டிற்கு விஜயம் செய்த குடும்ப சாமியாரிடம், அங்கிருந்த ஆன்மிகவாதி ஒருவர், ""சாமி..எனக்கு எப்ப "சித்தி' கிடைக்கும்'' என்று கேள்வி கேட்டதும், சித்திகள் நிறைந்த எங்கள் குடும்பம், அந்தச் சாமியாருக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
""உன் சித்தப்பாவை கல்யாணம் செய்து கொள்ளச் சொல்''- என்று அவர் ஜாலியாக பதில் சொன்னது என் நினைவுத் திரையில் ஓடியது. மனைவி, சாமியார் போல ஆக்ட் கொடுத்ததும், இந்த சாமியார் ஜோக் நினைவுக்கு வர காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அதற்கான காரணத்தை தேடுவது என் வீக்னஸில் ஒன்று.
""சித்தி..''- பாட்டியை டெலீட் செய்துவிட்டு,எனக்கு தெரிந்த ஒரே பதிலை, உரக்க சொன்னேன்.
""சித்தி..சித்தி..சித்தி..சித்திமார்களையே சுத்தி வந்த புத்தி இன்னும் உங்கள விட்டு போகலை. மாமிங்கறதுதான் கரெக்ட் ஆன்சர்..''- சமையலறையை, நீங்களும் கோடீஸ்வரன் ஆகலாம் நிகழ்ச்சி கூடமாக மாற்ற முயன்று கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.
""இனிமேல் கேள்வி கேட்கும்போது, நாலு விடை கொடுத்துட்டு, பதில் கேளு.. சொல்றேன்..''
""ஆமா..கிழிச்சீங்க..பொண்ணு கொடுத்த மாமியாரையே சித்தின்னு கூப்பிட்ட ஆளா ஆச்சே''
""உன்னுடைய அம்மா பெயர் ராதிகாங்கறதும், அந்த உறவு முறை, மனதில் பதிந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்!''
""ஆமா..எல்லாவற்றுக்கும் ஒரு காரணத்தை தேடுங்க. அப்ப நானும், என் மாமியாரை சித்தின்னு கூப்பிடறேன்''
""இப்ப, கடுகை இப்படி கலை உணர்வுடன் நாலாபுறமும் தெளிச்சதுக்கு காரணத்தை முதலில் சொல்லு!''- என் வஞ்சப் புகழ்ச்சி புலமையைக் கண்டு நானே மகிழ்ந்து போனேன்.
கலை உணர்வு என்றதும் சிலிர்த்து எழுந்தாள்.
""அந்தக் கலை உணர்வுதான் எங்க குடும்பத்துக்கே கொலை உணர்வு ஆயிடுச்சு.''
நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கதை ரிலீஸ் ஆகும் தருணம் வந்துவிட்டதை நினைத்து, தரையையே பால்கனி சீட்டாக நினைத்து,
சுவரில் சற்று சாய்ந்து உட்கார்ந்து, ஒரு நெடுங்கதை கேட்புக்கு
தயாரானேன்.
கதையை சொல்ல ஆரம்பி.. அ..ஆ..இ..ஈ..ஓ என்று வாயை பிளந்து, ஒரு கொட்டாவி விட்டு, வாய்க்கு எதிரில் விரலால் சொடுக்கினேன்.
""கதைன்னு சொல்லாதீங்க. கொட்டாவி விடாதீங்க..
அதெல்லாம் சாமி குத்தம் ஆயிடும்!'
அவள் விறுட்டென்று எழுந்து போனதும், ஒரு விறுவிறுப்பான கதையை மிஸ் பண்ணிய ஏமாற்றத்தில் திகைத்தேன்.
போன வேகத்தில் திரும்பியவள், டீ கப்பை கையில் திணித்தாள்.
""கிறுக்கு கேள்வி எதுவும் கேட்காமல், நான் சொல்றதை மட்டும் கவனமா கேளுங்க. ஒவ்வொரு கேள்விக்கும், தண்டனை உண்டு''
""உங்கிட்டே மாட்டிக்கிட்டதே ஒரு தண்டனைதான்..அதுக்கும் மேல தண்டனையா?''
""இது முதல் கிறுக்கு கேள்வி. அதுக்கு தண்டனையா, ஒரு பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்கணும். தவறினால், தெய்வ குத்தம் ஆயிடும்..!''
கதை சொல்லி முடிப்பதற்குள், என் அப்பாவின் பெயரில் இருக்கிற வீட்டையே எழுதி வாங்கிவிடும் அபாயம் காத்திருப்பதை உணர முடிந்தது. ஆனால், கதை கேட்கும் ஆசை யாரை விட்டது? அதனால், ஊம் கொட்டினேன்.
""என்னுடைய கொள்ளு தாத்தா வீட்டில் ஏழு சமையல்காரங்க இருந்தாங்க?''
யூமீன் சப்த குக்ஸ்..?
இந்தக் கேள்விக்கான தண்டனை, காது கம்மல்.
சந்தேகத்துக்கும், கேள்விக்கும் வித்தியாசம் தெரியாமல் திகைத்தேன்..
""அதுல யாரும் மீன் சமைக்க மாட்டாங்க..சுத்த சைவம்தான்..!'' இந்த மொக்கை ஜோக்கை, அவள் தெரிந்து உதிர்த்தாளா, இல்லை தெரியாமல் உளறினாளா என்ற விவரம் இதுவரை எனக்கு தெரியவில்லை.
மொக்கை ஜோக் வாங்கும் அளவுக்கு, ஏன் இந்த கேள்வி கேட்டேன் என்று, சலூன்காரரின் அறிவுரையை மறந்து, என் தலையில் நானே குட்டிக் கொண்டேன்.
சலூன்காரரா..அது ஒரு பெரிய கதை..
கரோனாவுக்குப் பிறகு, சமீபத்தில், சலூன்காரரிடம் தலையை கொடுத்தபோது, நீண்ட நேரம், முடியையும், கத்தரியையும் மீட் செய்ய, அவர் விடவே இல்லை.
""நேரமாச்சு..என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?'' தலையில் தேங்கியிருந்த பாரம் குறையாததால், நான் தமிழில் பதட்டப்பட்டேன்.
"" சமயம் சரிக லேது சாமி! உங்களுக்கு நேரம் சரில்ல போல தெரியுது?''- அவர் தெலுங்கிலும், தமிழிலும் கலந்து பதற்றப்பட்டார்.
""என்னய்யா சொல்ற..?''
""இதி சாமி கட்டிபொட்டு..இதி சாமி குத்தம் மாதிரி தெரியுது!''
தெலுங்கில் மட்டும் மாட்லாடாமல், சலூன்காரர் தமிழிலும் மாட்லாடியது எனக்கு கொஞ்சம் செளகரியமாக இருந்தது. ஆனால், ஏதோ ஒரு அசெளகரியத்துக்கு உள்ளாகி கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது.
ஒரு கையில் கால்குலேட்டருடன், அவர் எதையோ எண்ணிக் கொண்டிருப்பது, முன்னால் இருந்தகண்ணாடி வழியாகத் தெரிந்தது.
""ஒக்கடி, ரெண்டு, மூடு, படி, இரவை..''
""வாயை மூடுய்யா..என்னை வச்சுக்கிட்டு என்னத்தை எண்ணிக்கிட்டு இருக்கே..?''
""தல நிந்த கனிடுலு..தலை முழுக்க கட்டி..இது நிச்சயம் சாமி குத்தம்தான். உடனே, மொட்டை போட்டாகணும். மொட்டைன்னா, தரையிலே உட்காரணும். அதுக்கு ஸ்பெஷல் ரேட் ஆயிரம்..'' என்றவர், மூலையிலிருந்த ஒரு மேடையை காட்டி, என்னை பொருளாதார மொட்டை அடிக்க பார்த்தார். அத்துடன், அவரும் என்னை தரை டிக்கெட்டுக்கு தள்ள முயற்சிப்பது
புரிந்தது.
எனக்கு கட்டி வாரி..சாரி தூக்கி வாரி போட்டது. தலை முழுவதும் எப்படி கட்டி வந்திருக்கும் என்று யோசித்தேன்.
""ஆங். அதேதான்..!'' கேள்வி கேட்டு, மனைவி என்னை குழப்பிய போதெல்லாம். என்னையும் அறியாமலேயே தலையில் குட்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது.
உனக்கு என்னைப் போல, ஒரு குழப்படி மனைவி இருந்தால் தெரியும்..என்று நொந்து கொண்டேன்.
""அது கட்டி இல்லை..வெறும் காயம்தான். !அடுத்த முறை வரும்போது, இந்த வீர தழும்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்..'' என்று சலூன்காரருக்கு வாக்குறுதி அளித்தது, தற்போது, அரசியல் வாக்குறுதியாக மாறி, காற்றில் கரைந்தது. தமிழ் பாடத்தில் படித்த சீத்தலை சாத்தனார் என் நினைவில் வந்து போனார்.
கேள்வி கேட்பதை தவிர்க்க, வாயை இரு கைகளாலும் அழுத்தி மூடிக் கொண்டேன்.
சமைக்கும்போது, ஏழு பேரும், ஒரே சமயத்தில் இல்லாமல், இடைவெளி விட்டு, சமையலுக்கு கடுகு தாளிச்சு கொட்டணும். அப்படி கொட்டும்போது, அந்த தாளிப்பு ஒலி, இசையாக உருவெடுத்து, ஏழு ஸ்வரங்கள் வெளிப்படணும்ங்கறது, ஜலதாரங்கம் குடும்பத்தின் பரம்பரை வழக்கம். அவ்வளவு கலை உணர்வு கொண்ட குடும்பம். அந்த இசை கச்சேரியை காதால் கேட்டு ரசித்த பிறகுதான், தாத்தா சாப்பிடுவார். அதற்கு பிறகுதான், மத்தவங்க சாப்பிடணும்!
கடுகுக்கும், சங்கீதத்துக்கும் கடுகளவு கூட சம்பந்தம் இல்லாதபோது, பான் கார்டையும், ஆதார் எண்ணையும் இணைப்பது போல், அவை இரண்டையும் இணைக்கும் கட்டாய முயற்சி அந்தக் காலத்திலேயே, "லொள்ளுதாத்தாவால்' அரங்கேற்றப்பட்டிருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.
""ஜலதாரங்கங்கறது யாரு?''
வலிமை படம் பார்த்துட்டு, படத்தில் ஹீரோ யாருன்னு கேக்கறீங்களே.. "ஜலதா'ங்கறது கொள்ளு பாட்டி..ரங்கம் கொள்ளு தாத்தா. இந்த அசட்டு கேள்வியை கேட்டதுக்கு தண்டனையாக ஒரு பவுனில் ரெண்டு வளையல்கள்.
இப்படியெல்லாம பேர் வச்சுப்பாங்களான்னுஉள்ளுக்குள் சிரிப்பு சிரிப்பா வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு, கதை கேட்கும் ஆசையில், அவள் எது கேட்டாலும் சம்மதித்து தலையை ஆட்டினேன்.
சிறிது நேரம் மெளனம் நிலவியது. கேவல்களுக்கிடையே மனைவியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தவுடன், ஏதோ சோக சீன் வரப்போகிறது என்று இந்த மர மண்டைக்கு கூட புரிந்தது.
திடீர்னு ஒரு நாள், தாத்தா சாப்பிடாமல் கொலை பட்டினி கிடந்தார்.
""ஏன்..உண்ணாவிரதமா..?''
""இந்தக் கேள்வியை கேட்டதுக்காக, இன்னைக்கு உங்களுக்கு சாப்பாடு கட்''
இது, தாங்கிக் கொள்ள முடியாத பெரிய தண்டனையாக எனக்குத் தோன்றியது. என்னையும் அறியாமலேயே, இரு கன்னத்திலும், தப்பு..தப்பு என்று போட்டுக்
கொண்டேன்.
கடுகு என்ற இசைக் கருவியின் மூலம், கலை உணர்வை வெளிப்படுத்த தவறிய ஏழு வித்வான்களும், தாத்தாவின் முன் மண்டியிட்டு, இசைக்கு வசப்படாத கடுகு துகள்களை கிண்ணத்தில் திரட்டி, உங்களை மாதிரி கன்னத்தில் போட்டுக் கொண்டு, மன்னிக்க வேண்டினர்.
""மன்னித்தாரா..இல்லையா..?''- என்ற கேள்வியை கேட்க மனம் கட்டளையிட்டாலும், வாய் கேட்கமறுத்தது.
ஜலதா ரங்கா குடும்பத்தில், ராங்கா நடந்தது என்ன என்பதை விசாரிக்க, ஒரு விசாரணை கமிஷன் போடப்பட்டது. கமிஷன் அறிக்கை வெளியாகும் வரை.
அந்த இடத்தில், தொடரும் போட்டு, எழுந்தவள், என்னை அதே இடத்தில் உட்கார சொல்லி சைகை காட்டினாள்.
கமிஷன் அறிக்கை வெளியாகும்வரை, தாத்தா சாப்பிட்டாரா..இல்லையா.. என்ற சஸ்பென்ஸ் வெடிக்காமல், என் மண்டை சுக்கு நூறாக வெடித்துவிடும் போல இறுகியது.
அதற்குள், அவள் ஏழு பேரிடம், எனக்கு கேட்காதவாறு மெல்லிய குரலில் செல்லில் பேசினாள். ஓவ்வொரு முறையும், கட் செய்து ஆன் செய்தபோது, ""ஹலோ சித்தி'' என்று அழைப்பது மட்டும் என் காதுகளில் துல்லியமாக விழுந்தது. ஆக, அவளுக்கு ஏழு சித்திமார்கள் இருப்பதை ஓரளவு யூகிக்க முடிந்தது. அது அவள் என்னிடம் சொல்லத் தவறிய கதை. ஒவ்வொரு சித்தியிடமும்,
"தாத்தா.. தண்டனை' என்று கிசு கிசுத்தது மட்டும்
என் காதில் விழுந்தது.
கிசு கிசுப்புகளுக்குப் பிறகு, தா..த்..தா..தா..த்..தா.. அவள் கண்களிலிருந்து கண்ணீர் விழுந்தது.
தாத்தாவுக்கு என்ன ஆச்சு? நாவை எவ்வளவு கட்டுப்
படுத்தியும் என்னால் அந்த கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.
""அது சஸ்பென்ஸ் அதுக்கு முன்னால, நீங்க கேட்ட இந்த கிறுக்கு கேள்விக்கு தண்டனையா, என்னுடைய மாமனார் பெயரில் இருக்கும் வீட்டில் உங்களுக்கு எந்த பாத்யதையுமில்லைன்னு, கைப்பட எழுதி கையெழுத்து போட்டுக் கொடுங்க''
மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல, வளைந்து நெளிந்து, பேனாவை உயர்த்தி, அவள் நீட்டிய பேப்பரில் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். அந்தப் பேப்பரை, அவள் பத்திரமாக பீரோவில் பூட்டிவிட்டு வரும்வரை, கதையின் கடைசி அத்தியாயத்துக்காக ஆவலுடன்
காத்திருந்தேன்.
திரும்பி வந்தவள், என் தலையில் நறுக்கென்று ஒரு செல்லக் குட்டு குட்டினாள். இந்தக் காயத்துக்கு, வரும் காலத்தில், சலூன்காரரிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை நினைத்த போது, சற்று வருத்தமாக இருந்தது.
""இப்ப கேளுங்க.. இதெல்லாம் தண்டனை இல்லாத கேள்விகள்..!'' ஒன்றுமே நடவாதது போல், சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
""இந்த மாத மளிகை லிஸ்ட்டிலிருந்து கடுகு என்ற இசை சாஃப்ட்வேரை ஏன் டெலீட் செய்யசொன்னாய்?''
""இன்னைக்கு தாத்தாவுக்கு திதி நாள். அந்த நாளில் நம்ம வீட்டில், முகத்தில் கூட கடுகு வெடிக்கக் கூடாது?''
""விசாரணை கமிஷன் அறிக்கை எப்ப வந்தது! தாத்தா எப்ப சாப்பிட்டார்..?''
""அதைத்தான் சித்திமார்களிடம் போனில் விசாரிச்சுக்கிட்டு இருந்தேன். அதற்கு ஒரு விசாரணை கமிஷன் போட்டு, விவரம் சொல்வதாக சொல்லியிருக்காங்க..?''
"" அப்ப அந்த மாமிங்கறது யாரு?''
""சாமிக்கு ரைமிங் மாமிதானே..மாமிங்கறது யாருன்னு எனக்கே தெரியாது!''
உடைந்தும் உடையாத சஸ்பென்ஸ் கதையை கேட்டு, அடுத்த சேனலில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே, தூக்கம் என் கண்களை அரவணைத்தது.
மற்ற விஷயங்களில் புத்திசாலியான அவர், கதை கேட்கும் விஷயத்தில் இவ்வளவு வீக்கா இருப்பார்னு நான் எதிர் பார்க்கலை. அதுவும், சொல்றகதையை விறுவிறுப்பா, டிரமாடைஸ்பண்ணி, சொல்லணும்னுஎதிர்பார்க்கிறார். நடக்காத ஒரு சம்பவத்தைக் கோவையான கதையாக சொல்வதற்கு நான் படாதபாடுபட வேண்டியிருக்கு. இந்தக் கதை சரக்கை வச்சு, சினிமாபடமேஎடுத்துடலாம்போலிருக்கு அவரை பார்த்தால், எனக்கே பாவமாக இருக்கு சித்தி. கதை சொல்லி, கேள்விகளுக்கு தண்டனையாக பொருள்களை வாங்குவதில், எனக்கு குற்ற உணர்ச்சி வேறு?''
""என்ன செய்யறது. சித்திமார்களிடமிருந்து ஓவரா கதை கேட்டு வளர்ந்த பையன். தொட்டில் பழக்கம் இன்னும் போகலை. இன்னொன்னு.. கல்யாணம் ஆனதிலிருந்து, அவன் உனக்கு ஒண்ணும் வாங்கிக் கொடுக்கலைன்னு வருத்தப்பட்டே. அதில், அப்பா குணத்தை கொண்டிருக்கிறான். எவ்வளவு காசிருந்தாலும், அவர் எனக்கு ஒண்ணும் வாங்கிக் கொடுக்க மாட்டார்.
அதனால்தான். அவனுடைய வீக்னûஸ பயன்படுத்தி, கதை சொல்லி, கேள்வி கேட்க வைத்து, தண்டனையாக,
நீ ஆசைப்பட்டதை வாங்கிக்கோன்னு சொல்லிக்
கொடுத்ததே நான்தானே. இதில் நீ வருத்தப்பட என்ன இருக்கு. கதை சொல்வறங்களிடம் சொத்தையே எழுதி கொடுத்துவிடுவான் என்ற பயத்தில்தான், அந்த
பேப்பரில் கையெழுத்து வாங்க சொன்னேன்..!''
""அவருடைய வீக்னûஸ தவறா பயன்படுத்துவதற்கு பதிலா, அந்த வீக்னûஸ சரிபடுத்துவதுதான் முறை.
என் தோழி நல்ல சைக்காட்ரிஸ்ட். அவளிடம் உடனடியாக கூட்டிப் போகிறேன் சித்தி!''
""நானும் பார்க்கிறேன். போனில் பேசும்போது, என்னை சித்தி.. சித்தின்னே கூப்பிடறே. நான் உனக்கு சித்தி இல்லை..மாமியார்..''- மறுமுனையிலிருந்து உறவு முறைக்கு ஆட்சேபணை பதிவானது. கூடவே,
ஆல்தி பெஸ்ட்டும்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.