ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்:  குடலிறக்கம் குணமாக... 

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்:  குடலிறக்கம் குணமாக... 

என் வயது 67. சில வருடங்களாக உடல் இளைத்து வருகிறது. சர்க்கரை உபாதை, இரத்த அழுத்த நோய் இல்லை. குடலிறக்கம் ஏற்பட்டு விரை வீக்கமுள்ளது. இவை இரண்டும் குணமாக மருந்துள்ளதா?

என் வயது 67. சில வருடங்களாக உடல் இளைத்து வருகிறது. சர்க்கரை உபாதை, இரத்த அழுத்த நோய் இல்லை. குடலிறக்கம் ஏற்பட்டு விரை வீக்கமுள்ளது. இவை இரண்டும் குணமாக மருந்துள்ளதா?

-என்.செல்வமணி,
சென்னை-70.

நன்றாகப் பசி எடுத்துச் சாப்பிடுவராக நீங்கள் இருந்தால், இனிப்பும் நெய்ப்பும் நிறைந்த உணவுப் பொருட்களாலும், பானகங்களாலும், மருந்துகளாலும் உடல் இளைப்பை நீக்கி பருமனான உடல் அமைப்பைப் பெறலாம். 

கவலையற்ற, சிந்தனைகள் ஏதுமில்லாமல், மனக் களிப்பை அடையும் விதம் வாழ்வதும், புஷ்டி தரும் உணவுகளாலும், நீண்ட நேரம் நிறைவான தூக்கத்தினாலும் இளைத்த உடல் பருத்துவிடும் என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

புஷ்டி தரும் உணவுகளில், பிற உயிரினங்களை வேட்டையாடி உண்ணும் மிருகங்களின் மாமிசத்தை உண்ணுவதால், மனித உடல் வெகுவிரைவில் உடல் பருமனை அடையும் என்று மேலும் கூறுகிறது.

தங்களுடைய கடிதத்தில், சில வருடங்களாக யோகப் பயிற்சிகள், பிராணாயாமம், சூரிய நமஸ்காரம் போன்றவை செய்து சுறுசுறுப்பாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இளைத்த உடலை பருக்கச் செய்யுமா? என்றால் செய்யாது.

இவை மூலம் நீங்கள் பெறும் பசித்தீயின் வலுவை, ஊட்டம் நிறைந்த உணவின் வாயிலாகச் செரிமானம் செய்து, ஏழு தாதுக்களாகிய அன்னரஸம், ரக்தம், மாம்ஸம், மேதஸ், எலும்புகள், மஜ்ஜை மற்றும் சுக்லம் எனும் விந்தணுக்கள் ஆகியவற்றின் போஷனையைப் பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நிலப் பனைக் கிழங்கு என்று ஒரு மூலிகை மருந்து உங்களுக்கு நன்மை தரும். அது குடலிலுள்ள வாத- பித்த- தோஷங்களை அடக்கி புஷ்டியை ஏற்படுத்தித் தரும். சிறுநீரை நன்றாக வெளியேற்றும். இனிப்பான சுவை, குளிர்ச்சியான வீரியம், உயிரை நிலைநிறுத்தும் தன்மை, வனப்பூட்டும் திறன், தொண்டைக்கு இதம், செரிப்பதில் கனம் , ஆணின் விந்தணுப் பெருக்கம் மற்றும் சிறந்த தாது புஷ்டி ஆகிய தன்மைகளை உடையது என்பதால், நீங்கள் இந்தக் கிழங்கை, நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி, சுத்தப்படுத்தி, சிறு துண்டங்களாக நறுக்கிப் பொடித்து, சுமார் ஐந்து- பத்து கிராம் கணக்கில் எடுத்து, இரு நூறு மில்லி லிட்டர் வெதுவெதுப்பான பசும்பாலுடன் கலந்து, காலை மாலை வெறும் வயிற்றில் மூன்று- ஆறு மாதங்கள் சாப்பிட்டு வரலாம்.

இந்தக் கிழங்கிற்கு "விதாரீ' என்று ஆயுர்வேதத்தில் பெயரிடப்பட்டுள்ளது. விதார்யாதி கஷாயம், விதார்யாதி லேஹியம், விதார்யாதி க்ருதம், விதார்யாத்யாஸவம் என்றெல்லாம் இந்தக் கிழங்கைக் கொண்டு, பல ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனையிலுள்ளன. மருத்துவரின் ஆலோசனையின்படி, அவற்றை நீங்கள் பயன்படுத்திக் குணம் பெறலாம்.

குடலிறக்கம் ஏற்பட்டு, விரைநீக்கம் என்ற உபாதையை அறுவைச் சிகிச்சை மூலம் மறுபடியும் வயிற்றுள் வைத்து, வலையினால் ஓட்டையை அடைத்து செய்யப்பட்டு  சிகிச்சையே நல்லது. இரவில் படுத்துறங்கி, காலையில் எழுந்ததும் விரைவீக்கம் மட்டுப்பட்ட நிலையிலிருந்தாலும் சுகுமார கிருதம் எனும் மருந்தை உள்ளுக்கு சாப்பிடுவதையும், ஹிங்குத் திரிகுண தைலத்தை வெளிப்புறம் இளஞ்சூடாக அடிவயிற்றுப் பகுதியில் பூசுவதையும் மருத்துவரின் 
பரிந்துரையின்படி செய்வதை நீங்கள் சில மாதங்கள் முயற்சிக்கலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com