மனதில் உறுதி வணிகத்தில் வெற்றி..!

""மனதில் உறுதி வேண்டும்- பாரதியார் பாடல் மற்றவர்களுக்கு எப்படியோ; இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறது.
மனதில் உறுதி வணிகத்தில் வெற்றி..!

""மனதில் உறுதி வேண்டும்- பாரதியார் பாடல் மற்றவர்களுக்கு எப்படியோ; இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறது.

செவிலியராகப் பணிபுரியும் நந்தினி (சுஹாசினி), தனது குடும்பப் பாரத்தைச் சுமந்து, தன்னை அர்ப்பணிக்கும் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பும் அசத்தலானது.
இந்தப் படம் திரைத்துறையினருக்குத் திருப்புமுனையை அளித்தது என்றாலும், ரசிகர்கள் பலரின் வாழ்க்கையிலும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியொருவர்தான் பெங்களூரில் "நந்தனா பேலஸ்' என்ற பெயரில் ஆந்திர உணவகத்தையும், தங்கும் விடுதிக்குழுமத்தையும் நடத்திவரும் ஆர்.ரவிச்சந்தர்.
""சுஹாசினி நடித்த "நந்தினி' எனும் கதாபாத்திரம், மனதில் உறுதியை விதைத்தது மட்டுமல்ல; தொடர் தோல்விகள், அடர்த்தியான வேதனைகள், சுமக்க முடியாத குடும்பச் சுமைகளில் இருந்து விடுதலை பெற்றுத் தந்தது'' என்கிறார் ரவிச்சந்தர். தனது ஆரம்ப கால வாழ்க்கை முள்ளில் தோய்ந்ததாக இருந்ததாகவும், முளைத்த ரோஜாவாக மணம் வீசும் வாழ்க்கையைக் கட்டமைக்க அந்தத் திரைப்படமே அமைந்தது என்கிறார் அவர். தனது மனைவி சரளா, மகள்கள் ஸ்வேதா, ரம்யா, ரவீணா ஆகியோருடன் "திருப்புமுனை' நிறைந்த வாழ்க்கையை சொல்கிறார் ரவிச்சந்தர்:
""தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகேயுள்ள போடப்பாறை கிராமம் சொந்த ஊர். ஏழ்மையான விவசாயக் குடும்பம். இரண்டு அக்காக்கள், ஒரு தங்கை. உடல்நிலை சரியில்லாத தந்தை. விவசாயத்தில் போதுமான வருவாய் கிடைக்கவில்லை.
விவசாயிகளிடம் கோழி முட்டை, நெய் வாங்கிக் கொண்டு நடந்தே சோளிங்கர் சென்று கடைகளில் விற்பனை செய்வேன். இது குடும்பத்தைப் பராமரிக்கவும், என் படிப்புச் செலவுக்கும் பேருதவியாக இருந்தது.
பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, பெங்களூரில் உள்ள மூத்த அக்கா வீட்டில் தங்கி பியூசி படித்தேன். படிக்கும்போது மாலை நேரங்களில் மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தில் பகுதி பணிபுரிந்தேன். பின்னர், பி.காம் படித்துக்கொண்டே வங்கியில் பகுதி நேரப் பணியில் இருந்தேன். அதன்பிறகு வங்கியில் முழுநேர வேலை கிடைத்தது. ஆனால், எனக்குள் ஓயாமல் கனன்று கொண்டிருந்தது வணிகம்தான். இதை கண்டுபிடித்துவிட்ட எனது தாய் மாமா, பெங்களூரில் ஒரு உணவகத்தில் கணக்காளராக வேலைக்கு சேர்த்துவிட்டார். உணவகத் தொழில் எனக்குப் பிடித்துவிட்டது.
எதிர்காலத்தில் உணவகம் நடத்த வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. மூன்று நண்பர்களுடன் இணைந்து ஓர் உணவகத்தை தொடங்கினோம். ஓராண்டில் உணவகத்தை மூட நேர்ந்தது. கைவசம் எந்தச் சேமிப்பும் இல்லை.
மனம் உடைந்திருந்த நிலையில், குடும்பத்திலும் ஏகப்பட்ட பிரச்னைகள். இரண்டாவது அக்காவின் திருமண வாழ்க்கையில் பிரச்னை. திருமணத்துக்காகத் தங்கை காத்திருந்தார். மருத்துவச் செலவினங்களுக்காக பெற்றோர் என்னை சார்ந்திருந்தனர்.
வாழ்க்கையில் நம்பிக்கை அற்று, செய்வறியாது குழம்பியிருந்தேன். "பல்லவி' திரையரங்கில் "மனதில் உறுதி வேண்டும்' படம் ஓடிக் கொண்டிருந்தது. படத்தின் தலைப்பு என்னைப் பார்க்கத் தூண்டியது. மனதை அமைதியாக்கிக் கொள்ள படம் பார்க்கச் சென்றேன். படத்தை பார்த்த எனக்கு அதிர்ச்சி.
என்னுடைய நிலையில் "நந்தினி' கதாபாத்திரம் போராடிக் கொண்டிருந்தது.
அந்தப் பெண்ணை போல வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கை, உறுதி மனதில் விதையூன்ற ஆரம்பித்தது. புதிய வெளிச்சம் தெரிந்தது. அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து மனதில் துணிவு, நம்பிக்கையை நிரப்பிக் கொண்டேன். புதிய சிலிர்ப்புடன் வாழ்க்கையை அணுக தொடங்கினேன்.
1987-ஆம் ஆண்டு என்னைத் தேடி நண்பர் ஒருவர் வந்தார். தன்னிடம் தொழில் முதலீட்டுக்குத் தேவையான பணம் இருப்பதாகவும், உணவகம் தொடங்க விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்த வாய்ப்பை "மன உறுதி'யோடு ஏற்றேன். உணவகத்துக்கு "நந்தினி' என்ற பெயரை சூட்ட வேண்டும் என்ற நிபந்தனை விதித்தேன்.
பெங்களூருவில் ஆந்திர சுவை உணவகத்தை "நந்தினி' என்று தொடங்கினோம். தரமான, சுவையான உணவு வகைகளால், வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து 10 கிளைகளைத் தொடங்கினோம். அக்காவின் பிரச்னையைத் தீர்த்தேன். தங்கையின் திருமணத்தை முடித்தேன். எனக்கும் திருமணம் நடைபெற்றது.

உணவகத் தொழிலில் மேலும் உயரத்தை எட்ட முழு மூச்சோடு உழைத்தபோது,
2004-இல் அதிர்ச்சி காத்திருந்தது. தொழிலில் பிரிவினை ஏற்பட்டது. இதை தைரியமாக எதிர்கொண்டேன். 10 உணவகங்களில் எனக்கு 3, பங்குதாரருக்கு 7 என்று பிரித்துக்கொண்டோம். பொருளாதாரரீதியான பெரும் சுமை என்னை சூழ்ந்தது.
அதன்பிறகு "நந்தினி' என்ற பெயரில் மேலும் பல உணவகக் கிளைகளைத் தொடங்கினேன்.
சில ஆண்டுகள் கழித்து வேறொரு பிரச்னை வந்தது. எனது பங்குதாரர் நடத்திவந்த "நந்தினி' உணவகங்களில் தரம் குறைந்துவிட்டதாக வாடிக்கையாளர்கள் புகார். இது எனது உணவகக்கிளைகளையும் பாதித்தது.
எனது மூத்த மகள் ஸ்வேதா, உணவகத்தின் பெயரை மாற்ற யோசனை தந்தார். "நந்தனா பேலஸ்" என்று பெயரையும் கூறினார்.
"நந்தனா' என்றால் மகள்கள் என்று அர்த்தம் என்றும் விளக்கினார். மகளின் பேச்சை கேட்டு துணிந்து எடுத்த முடிவு, இன்றைக்கு வெற்றியைத் தந்துள்ளது. பெங்களூருவில் ஆந்திரசுவை உணவிற்கு நம்பகமான உணவகமாக "நந்தனா பேலஸ்' வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்றுள்ளது.
கரோனா தொற்று ஊரடங்கால், கடந்த 2 ஆண்டுகளில் உணவகத் தொழிலில் இருந்த பலர், இந்தத் தொழிலைவிட்டே சென்றுவிட்டனர். புதுமையான திட்டங்கள், தளராத நம்பிக்கை, கடினமான உழைப்பால் கரோனா காலத்தைக் கடந்தேன்.
தற்போது எனது நிறுவனத்தில் 1, 200 பேர் பணிபுரிகின்றனர். 2 ஆண்டு கரோனா காலத்தில் ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆனாலும் ஒருவரையும் வேலையில் இருந்து நீக்கவில்லை. தரத்தில் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஒரு கிளையையும் மூடவில்லை. தொழிலாளர்களுக்கு காப்பீடு எடுத்துத் தந்தேன். 3 பேருக்கு கரோனா தாக்கியது. இதில் ஒருவர் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் தந்தேன். நான் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் என்று கருதுவதில்லை. மாறாக, மேலாண் தொழிலாளியாக பணியாற்றி வந்திருக்கிறேன்.
கரோனா காலத்தில் பார்சலோடு, 1.5 லட்சம் மூலிகை ரசப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்திருக்கிறோம். கரோனா நோயாளிகளுக்கு மலிவு விலையில் மதிய உணவு, இரவு உணவை வழங்கினோம். காவல்துறையினர், ஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவுப் பொட்டலங்களைத் தந்தோம். இப்படி பல தடைகளைக் கடந்து நம்பிக்கையோடு பயணிக்கிறோம்.
ஒருநாள் எனது உணவகத்துக்கு "நந்தினி' சுஹாசினி வந்திருந்தார். அவரை அணுகி, வெற்றிக்கான பொறி கிடைத்த "மனதில் உறுதி வேண்டும்' பட நிகழ்வை விவரித்தேன். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத சுஹாசினி, உங்கள் கதையை கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி கேட்டால் மகிழ்வார் என்றார். இதை மனதில் வைத்திருந்த நான், சென்னையில் உள்ள எங்கள் கிளையை நடிகை சுஹாசினியை கொண்டு திறந்தேன். "நந்தினி' எனது வாழ்க்கையில் பிரிக்கமுடியாத கதாபாத்திரம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com