பேல்பூரி

பேல்பூரி

தேவையானவர்கள் வந்ததும்... தேவையாய் இருந்த நாம்,தேவையற்றவர்களாய் ஆகிவிடுகிறோம் ! 

கண்டது

(புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் தனியார் பேருந்தில் எழுதப்பட்டுள்ள வாசகம்)

கண்டக்டர் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுத்தால் கீழ்க்கண்ட இந்த நம்பருக்கு உடனடியாகப் புகாராக தெரிவித்தால்  நடவடிக்கை எடுக்கப்படும். 

(இதுவும் ஒரு கரோனா பாதுகாப்பு நடவடிக்கையே)

பா.பரத்,
கோவிலாம்பூண்டி.

(நாகூர்  பயணிகள் ஆட்டோ ஒன்றின் பின்புறம்)

வாழ்க்கை ஒரு பட்டம் மாதிரி... 
மேலே பறந்தால் ரசிப்பார்கள்! 
கீழே கிடந்தால் மிதிப்பார்கள்!  

-மருத.வடுகநாதன்,
வேதாரண்யம்.

(கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தேநீர்க் கடையின் பெயர்) 

 மச்சி ஒரு டீ சொல்லு  

தி. பச்சமுத்து,
கிருஷ்ணகிரி-1

கேட்டது

(தஞ்சாவூர் - திருவையாறு ரவுண்டானா அருகே)

"" ஏங்க... பெரம்பலூர் எப்படி போகணும்?''
"" கூகுள்ல ரூட்டை போட்டு போயிட்டே இருங்க சார்!''
""அப்போ...  உங்க போன்ல போட்டு கொடுங்க, என் பட்டன் போனை நீங்க வைச்சுக்குங்க''
"" ??...!!...??...!!''

பா.து.பிரகாஷ்,  
தஞ்சாவூர்-1

(கோவை - அவிநாசி சாலையில் கார் பயணியும்  பாதசாரியும்) 

""அண்ணே...வர்ற  டோல்கேட்  கண்ணுல சிக்காமல் போகணும்னா எப்படி போகணும்?''
""கண்ணை மூடிட்டு போகணும்''
""?...?....?''

மகேஷ் அப்பாசுவாமி, 
பனங்கொட்டான் விளை.

யோசிக்கிறாங்கப்பா!

உன் வலியை உணர்ந்தால்
 நீ உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம்;
பிறர் வலியை உணர்ந்தால் 
நீ மனிதனாய் இருக்கிறாய் என்று அர்த்தம்! 

எல்.மோகனசுந்தரி,
கிருஷ்ணகிரி-1


மைக்ரோ கதை


படுக்கையறையில் இருந்து சீனுவுக்கு போன் வந்தது. எடுத்துப் பார்த்தால் அப்பா. ஒரே வீட்டின் பக்கத்து அறையிலிருந்து எதற்கு போன் பண்ணுகிறார்? என்று எரிச்சலடைந்தான் சீனு. திரும்பவும் போன். போனை எடுக்காமல் கட் செய்தான். மனைவி கமலி, ""யார் போன் பண்றாங்க?'' என்று கேட்டாள். 

""அப்பாதான்...  அவருக்கு வேற வேலையே இல்லை... சுகர் மாத்திரை வாங்கிட்டு வரச் சொன்னார். மறந்துட்டேன். அதை கேட்கத்தான் போன் பண்றார்'' என்றான் எரிச்சலுடன். 

""ஒரு வேளை மாத்திரை போடாட்டி என்ன உங்க அப்பாவுக்கு? ராத்திரி 11 மணியாச்சு. தூங்குற நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருக்காரு'' என்றாள் கமலி.

திரும்பவும் அப்பாவிடமிருந்து போன்.  அதற்கு நேரடியாக வந்து கதவைத் தட்டியிருக்கலாம். 

"என்ன மனுஷனிவர்?' என்று கோபத்துடன் நினைத்துக் கொண்டு படுக்கையறையை விட்டு வெளியே வந்தான்.  அப்பா வீட்டிற்கு வெளியே வாசலில் நின்று கொண்டிருந்தார்.

""மாத்திரை வாங்க மறுந்துட்டேன்பா... நாளைக்கு வாங்கிட்டு வர்றேன்'' கடுப்புடன் சொல்லிவிட்டு  திரும்பியவனைப் பார்த்து, அப்பா சொன்னார்:

""நான் உன் கிட்டே மாத்திரை கேட்குறதுக்காக போன் பண்ணலை...  வெளியே வந்து பார்''

பார்த்தான்.  வெளியே அவனுடைய புது பைக் நின்று கொண்டு இருந்தது.  வீட்டுக்குள் எடுத்து வைக்க மறந்திருந்தான். 

""என்னால முடிஞ்சா நானே பைக்கை உள்ளே வச்சிருப்பேன். அதான் உனக்குப் போன் பண்ணினேன்'' என்ற அப்பா தொடர்ந்து சொன்னார்:

""வண்டியைப் பூட்டாம சாவியை அப்படியே வண்டியிலேயே விட்டுட்டு  வீட்டுக்குள்ள போயிட்டியேப்பா... வண்டியை யாராவது 

தள்ளிக்கிட்டுப் போனா என்ன செய்வே?'' 

 சு.மணிவண்ணன்,
சென்னை-117.

எஸ்எம்எஸ்

தேவையானவர்கள் வந்ததும்...
தேவையாய் இருந்த நாம்,
தேவையற்றவர்களாய் ஆகிவிடுகிறோம் ! 

 -நாதன்,
வேதாரண்யம். 


அப்படீங்களா!

மனிதர்களின் உடல் வலியைப் போக்கி, புத்துணர்வு பெறுவதற்கு உடலைப் பிடித்துவிடுவது, அதாவது மசாஜ் செய்ய உதவுகிறது.   

மனிதர்களைப் போலவே இரண்டு கைகளையுடைய இந்த மசாஜ் ரோபோ,  மேஜையில் படுத்திருப்பவரின் உடல் முழுவதையும் மசாஜ் செய்து விடுகிறது. 

அதுவும்  மசாஜ் மேஜையில் படுத்திருப்பவர் பேசுவதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது.

உடலின் எந்தப் பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டால்,  அந்த இடம், அதற்கான திசை,  மசாஜ் செய்யும் வேகம்,  எந்த அளவுக்கு உடலில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பன போன்ற எல்லாவற்றையும் இந்த மசாஜ் ரோபோ புரிந்து கொண்டு அதற்கேற்ப  மசாஜ் செய்கிறது. 

மசாஜ் ரோபோவிடம் பேசி கட்டளையிட விரும்பாதவர்கள், ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டு இருக்கும் முன் மாதிரிகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து மசாஜ் செய்து கொள்ளலாம். அப்படித் தேர்வு செய்வதற்கு உங்களுடைய செல்லிட பேசியைப் பயன்படுத்தலாம். 

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com