ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிறர் போற்றும்படி வாழ...!

எனது வயது 60.  வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.  பல வருடங்கள் கழித்து என் கிராமத்துக்குச் சென்று மீதியுள்ள ஆயுளை நிம்மதியாக அங்கே  கழிக்க விரும்புகிறேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிறர் போற்றும்படி வாழ...!

எனது வயது 60. வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். பல வருடங்கள் கழித்து என் கிராமத்துக்குச் சென்று மீதியுள்ள ஆயுளை நிம்மதியாக அங்கே கழிக்க விரும்புகிறேன். இனி வாழும் காலத்தில் நல்ல பெயர் எடுத்தும், ஆரோக்கியத்துடனும் வாழ ஆசைப்படுகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்ன ஆயுர்வேத மருந்தை சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழலாம்?

பொன்ராஜ்,
சென்னை.

பெருவாயின் முள்ளியார் என்ற மகான் ஆசாரக்கோவை என்னும் அரிய நூலில் ஸதாசாரங்களை நூறு வெண்பாக்களில் தொகுத்தளித்துள்ளார். இந்நூலின் அறிவுரைகளை கடைப்பிடிப்பவர் இம்மையில் உடலில் நோயின்மை, மனதில் நிகரற்ற தூய்மை, மக்களிடையே பெருமை, மறுமையில் பேரின்பத்தையும் பெறுவார். நல்லொழுக்கத்திற்காக அவர் கூறும் எட்டு வழிகளை நீங்கள் கடைப்பிடித்து அருகில் வாழும் மக்களின் அன்பையும் பெறலாம்.

1.நன்றியறிதல்: தனக்குப் பிறர் செய்த எவ்வித உபகாரத்தையும் என்றும் மறவாமல் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதுவே தர்மமாகும். நன்றி மறதி என்னும் பாவத்திற்கு பிராயச்சித்தம் கிடையாது என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

2.பொறையுடமை: பொறுமை - பொறுத்தருளுதல். தனக்குத் தீங்கு செய்தவனுக்குப் பதிலாக தீமை செய்யத் தனக்கு பூரணமான சக்தி இருந்தாலும், பழி வாங்கும் எண்ணமே இல்லாமல், தீங்கை மன்னித்து மறக்க வேண்டும். பொறுமையினால் மனதில் தூய்மை மேலிடும்.

3.இன்சொல்: கேட்பவருக்கு இன்பம் உண்டாகும்படி பேசுதல். சத்தியமான பேச்சுத்தான் உண்மையான இன்பம் தரக் கூடியது. இன்சொல் கேட்பவரை வசப்படுத்தும். மொழிபவனுக்கு நிம்மதி தரும்.

4.இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை: அகிம்சை, பிராணிகளிடம் அன்பு, தாவரங்களை நேசித்தல், பிறரை உடலாலோ மனதாலோ துன்புறுத்தாமை அவசியம். எவ்வுயிர்க்கும் எவ்விதத் துன்பமும் செய்யாமல், தன்னுடல் போல் எறும்பு புழுக்களையும் எண்ணி, தனக்குக் கஷ்டம் தரும் எதையும் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும் என்று ஜீவஹிம்சையே கரும ரோகங்களுக்குக் காரணமாகக் காட்டி அதைத் தடுக்கின்றது ஆயுர்வேதம்.

5.கல்வி: மனதின் குற்றங்களை அகற்றி நல்ல அறிவு, பண்பாடு உண்டாக்கி உலக நலத்திற்கே உபயோகமான கல்வியைக் கசடறக் கற்க வேண்டும். பண்பாடின்றி பல எழுத்துப் பட்டங்கள் பெற்ற படிப்பிற்கு கல்வி என்று பெயர் கிடையாது.

6.ஒப்புரவுவாற்றலறிதல்: ஒழுக்கமான பெரியோர்களால் நியாயமானது என்று ஒப்புக் கொள்ளப்பட்ட உலக பழக்க வழக்கங்களை அறிந்து உலக நடைமுறைக்கேற்ப நடக்க வேண்டும்.

7.அறிவுடைமை: ஆசானிடமிருந்து கற்ற கல்விக் கருவிகளைக் கொண்டு திரட்சித் தன்னுடயதாக ஆக்கிக் கொண்ட ஐயமற்ற மெய்யறிவுச் செல்வம்தான் இம்மையில் புலன் விஷய சிற்றின்பங்கள் உள்ளத்தைக் கெடுக்காமல் காப்பாற்றுவதற்கும், மோட்ச சாம்ராஜ்யத்தைச் சம்பாதிக்கவும், உத்தம சாதனமாகும். அதனால் ஞான செல்வத்தைப் பெற வேண்டும்.

8.நல்லினத்தாரோடு நட்டல்: உயர்தரக் கல்வி, நல்லொழுக்கம், சாத்வீக சுபாவம் உள்ளவரோடு நட்பு கொண்டு நெருங்கிப் பழகிக் கொண்டிருக்க வேண்டும். ஸத்ஸங்கம மனதின் விருப்பம் வெறுப்புகளைப் பரிசுத்தமாக்கும்.

உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கும் சியவனப் பிராசம் எனும் லேகிய மருந்தைக் காலை, மாலை என இருவேளை சுமார் பத்து கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

மஹாமாஷ தைலம் எனும் மூலிகைத் தைலத்தைச் சூடாக்கி உடலில் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும். இரவில் படுக்கும் முன் சிறிது திரிபலை சூரணத்தில் தேன் மற்றும் உருக்கிய பசு நெய்யைவிட்டுக் குழப்பி சாப்பிடவும். உடல் ஆரோக்கியத்திற்கும் மன வலிமைக்கும் பயன்படும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com