திரைக்கதிர்

தொடர் தோல்விகள், போதை மருந்து கடத்தல் வழக்கில் மகன் சிக்கியது போன்ற பல பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் ஷாருக்கான்.
திரைக்கதிர்

தொடர் தோல்விகள், போதை மருந்து கடத்தல் வழக்கில் மகன் சிக்கியது போன்ற பல பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் ஷாருக்கான்.

அவரது கடைசி படமான "ஜீரோ' கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானது. இத்தனை பிரச்னைகளுக்கும் இடையில் அவர் நடித்து வந்த "பதான்' படம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் மற்ற பணிகள் தொடங்கி இருக்கின்றன. இந்தப் படத்தை யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும்இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஜான் ஆபிரஹாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர அட்லி இயக்கும் படத்திலும், ராஜ்குமார் இரானி படத்திலும் நடித்து வருகிறார் ஷாருக்கான்.

----------------------------------

சமந்தா சினிமாவில் அறிமுகமானது "மாஸ்கோவின் காவிரி' என்ற படத்தில், இரண்டாவது படம் "பானா காத்தாடி', 3 ஆவது படமாக "விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். ஆனால் இந்தப் படம்தான் அவர் நடித்த முதல் படமாக வெளிவந்தது. பின்னர் இதன் தெலுங்கு பதிப்பில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

"விண்ணைத்தாண்டி வருவாயா' படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இதைத் தொடர்ந்து சமந்தா தனது சுட்டுரையில்..."நான் திரைத்துறைக்கு வந்து 12 வருடங்கள் நிறைவடைகின்றன. "லைட்ஸ்... கேமரா... ஆக்ஷன்' என்ற வார்த்தைகளைச் சுற்றியும், ஒப்பற்ற தருணங்களைச் சுற்றியுமே இந்த 12 வருட நினைவுகள் அமைந்துள்ளன. ஆசிர்வதிக்கப்பட்ட இந்தப் பயணத்தில் இருப்பதிலும், உலகில் மிகச் சிறந்த, விசுவாசமான ரசிகர்களைப் பெற்றதாலும் நன்றியுணர்வு நிறைந்து நிற்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

----------------------------------

மறைந்த நகைச்சுவை நடிகர் பஸ்டர் கீட்டனின் வாழ்க்கையை ஹாலிவுட்டில் படமாகஉருவாக்க உள்ளனர். இந்தப் படத்தை ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்குகிறார்.

இவர், 2019- ஆம் ஆண்டு வெளியான ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி என்ற படத்தை இயக்கியவர். ஃபோர்ட் நிறுவனத்துக்கும் ஃபெராரி நிறுவனத்துக்கும் இடையே நடந்த மோதலை பற்றிய படம் இது. இந்தப் படம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

இப்போது "இண்டியானா ஜோன்ஸ் 5' படத்தை இயக்கி வரும் ஜேம்ஸ் மேங்கோல்ட், அடுத்ததாக காமெடி நடிகர் பஸ்டர் கீட்டனின் வாழ்க்கையைத் தழுவி படம் இயக்க உள்ளார். சார்லி சாப்ளினுக்கு அடுத்தபடியாக மிகவும் புகழ் பெற்றவர் பஸ்டர் கீட்டன். 1930, 40- களில் காமெடி நடிகராகவும் இயக்குநராகவும் புகழ்பெற்று பிரபலமாக இருந்தார். மெளன படங்களில் கூட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அசத்தியவர்.இவரது வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட "பஸ்டர் கீட்டன் கட் டு தி சேஸ்' புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராக இருக்கிறது.

----------------------------------

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த விற்பனை உத்திகளைக் கையாளும் விவசாயிகள், வெற்றிகரமாக இயங்கும் பெண் விவசாயிகள், விவசாயத்தை பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் மாற்றுப்பள்ளி, படித்துக்கொண்டே விவசாயத்திலும் தீவிரம் காட்டும் மாணவர் என வேளாண்மையை நேசிக்கும் மக்களை கண்டறிந்து ஊக்கத் தொகை அளித்து வருகிறது நடிகர் கார்த்தியின் "உழவர் பவுண்டேசன்'.

அந்த வகையில் விவசாயத்திற்காக பல்வேறு வகையில் மாபெரும் பங்களித்து வருபவர்களை கௌரவப்படுத்தியுள்ளார். ""நுகர்வோரை விவசாயம் நோக்கி கொண்டு சேர்ப்பது தான். ஒரு உடை எங்கிருந்து வருகிறது என்பது தெரிவது போல், உணவு பொருளுக்கும் அது தெரிய வேண்டும். இங்கு பல கருவிகள் தேவைப்படுகின்றன. தமிழகத்தில் பல பொறியாளர்கள் உள்ளனர். அவர்கள் விவசாயத்திற்கு உபயோகமான கருவிகளை உருவாக்க வேண்டும். அதை நோக்கி நகர்வதே உழவன் அமைப்பின் நோக்கம்'' என பேசினார் கார்த்தி.

  ----------------------------------

ரெட் ஜெயண்ட் மூவீஸ் தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தைத் தயாரித்து வருகிறது.

"மாமன்னன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் 15-ஆவது படமாகும்.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கலை - குமார் கங்கப்பன். படத்தொகுப்பு - செல்வா.

சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன். பாடல் - யுகபாரதி. நடனம் - சாண்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com