அப்பாவின் தனிமை!

அப்பா.. இப்போதெல்லாம் அதிகம் பேசுவதில்லை.  ஓரிரு வார்த்தைகளைச் சத்தமில்லாமல்தான் உச்சரிக்கிறார்.
அப்பாவின் தனிமை!

அப்பா.. இப்போதெல்லாம் அதிகம் பேசுவதில்லை. ஓரிரு வார்த்தைகளைச் சத்தமில்லாமல்தான் உச்சரிக்கிறார். இல்லையென்றால் சைகை. என்ன சொன்னீங்க...? என்று திரும்பவும் கேட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தனிமை வேணும். அமைதி வேணும். . மனுஷாளே ஆகாது...அதானே அதுக்கு அர்த்தம்?-கேட்பது புரிகிறதுதான். ஆனால் மனம் நாடுகிறதே...என்ன செய்ய?

சுவரைப் பார்த்தே அமர்ந்திருப்பார். பின்னால் ஹால், அடுப்படியில் எங்கள் புழக்கம். வெஸ்ட்டன் டாய்லெட் அப்பா அறையில்தான் இணைப்பாக இருக்கிறது. அம்மா மட்டும் அங்கே போய் வருவாள். அதற்கு மட்டும் அப்பாவின் வாய் திறக்கும். சற்றுக் கடுமையாக!

""போனா.. சரியாத் தண்ணி ஊத்தணும். கதவைத் திறந்து மூடுறபோதெல்லாம் என்னா வாடை? மனுஷன் இங்க உட்கார்றதா வேணாமா? ஒரு நாளைக்கு எத்தனைவாட்டிதான் போவே?'' என எழுதி வைத்ததுபோல் வரிசையாகச் சொல்வார்.

""எல்லாம் சரியா ஊத்தித் தான் வர்றது. என்னவோ தான் மட்டும்தான் சுத்தமா இருக்காப்ல..!'' என்று சொல்லிக் கொண்டே அம்மா வெளியேறி விடுவாள்.

நான், நளினி, குழந்தை மூவரும் எங்கள் அறையில் உள்ள இந்தியன் டாய்லெட்டையே பயன்படுத்திக் கொள்வோம்.

அப்பா பேசுகிறாரோ என்றே தோன்றும். சத்தமாகப் பேசினால் ஜன்னலுக்கு வெளியே மரக்கிளைகளில் அமர்ந்து கிறீச்சிட்டுக் கொண்டிருக்கும் பறவைகள் பறந்து சென்று விடுமோ? என்று நினைக்கிறார் போலும்! அப்பாவின் முகம் அங்கு பார்த்தபடிதான் எந்த நேரமும். எங்கள் பக்கம்தான் திரும்புவதேயில்லையே...! பல சமயங்களில் காலையில் மாடிக்குச் சென்று அங்குள்ள தொட்டிச் செடிகளில் புதிதாய்த் தளிர் விட்டிருக்கும் இலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார். பளபளவென்று காலை வெயிலில் ஒளிரும் அதன் மென்மையை ரசித்துக் கொண்டிருப்பார். சிறு சிறு காய்கறிச் செடிகளை, அதன் வளர்ச்சியைத் தினமும் கண்ணுறுவார்''.

வெண்டைக்காய்ப் பிஞ்சைப் பார்த்து ஒரு முறை சொன்னார்:

"" சின்னக் குழந்தை பெல்லி மாதிரி இருக்கு பார் என்று. அவரது ரசனையே தனி. அவரை அம்மாதிரி வெளி விஷயங்கள்தான் அன்றாடம் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தன. வீட்டுக்குள் அவரது சந்தோஷம் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களோடு இருப்பதையே அவர் ஏதோ சங்கடமாக அனுபவித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. பார்த்த முகத்தையே பார்த்து, பேசினதையே பேசி....என்றெல்லாம் நினைப்பாரோ?''

ஊரில் ஒரு வீடு இருந்தது. அது பூட்டித்தான் கிடந்தது. இரு மாதங்களுக்கு ஒரு முறை அப்பா போய் வந்தார். கரோனா காலத்தில்தான் அவரால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. அங்கு போக, வர என்று இருந்தாரானால் இந்தக் கோப, தாபங்கள் இல்லாமல் இருப்பாரோ என்று தோன்றும் எங்களுக்கு!

"" அது எனக்கு ஆஸ்ரமம் மாதிரி என்பார். நான் மட்டும் போய் இருந்துட்டு வர்றேன். நீ வேண்டாம்'' என்பார் அம்மாவிடம்! இவ்வளவு தனிமையை விரும்பும் மனம் கொண்ட இவர் எப்படி ஆபீஸில் முப்பது பேர் வரை கட்டி மேய்த்தார் என்று தோன்றும்.

சிறு தானியங்களான கேப்பை, கம்பு என்று அவ்வப்போது கொஞ்சம் வாங்கி வந்து வைத்துக் கொள்வார் அப்பா. காலையில் மாடித் தரையில் இரைத்து அதற்காகப் பறந்து வரும் புறாக்களை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார். பக்...பக்...பக்...என்று சத்தமிட்டுக் கொண்டே அவை அவற்றைக் கொத்தும் அழகே தனி. அதைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அப்பாவுக்கு!

மும்பையில் இந்தியா கேட் அருகே புறாக்கள் நெருக்கியடித்துக் கொண்டிருக்க, அதற்கு தானியம் விலைக்கு விற்கும் ஆள்கள் அங்கே நிற்பதைப் பார்க்கலாம். சுற்றுலாப் பயணிகள் அவைகளுக்கு உணவளிப்பதும், நூற்றுக்கணக்கான புறாக்களுக்கிடையே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும் கண்கொள்ளாக் காட்சி!

திடீரென்று ஓடி அவைகளினருகே நிற்கையில் மொத்தமும் விருட்டென்று மேலெழும்பி ஆறடி உயரத்துக்குள்பட்டுப் பறக்கும் காட்சியைத்தான் யாரால் மறக்க முடியும்? அப்படிப் பறக்கும் நிலையில் அவைகளின் நடுவே அப்பா நிற்கும் காட்சியில் ஒரு ஃபோட்டோ உண்டு. ஜிப்பாவும், வேட்டியும், காற்றில் உப்பிப் பறக்க, முழுதும் நரைத்த தலை கலைந்த நிலையில் இரு கைகளையும் வானுயரத் தூக்கி அவர் ரசித்து நோக்கும் காட்சி ஏதோ ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சியை நமக்கு நினைவுப்படுத்தும்.

அதற்கு சற்றும் குறையாமல் இங்கு மாடியிலும் புறாக் கூட்டம் இருந்ததும், அப்பா தனியே தள்ளி அமர்ந்து, இடைஞ்சல் இல்லாமல் அவைகளை ரசிப்பதும். அவரின் மன, உடல் ஆரோக்கியத்துக்கு எதுவுண்டோ அதை அவர் செய்து விட்டுப் போகட்டும் என்று நாங்களும் விட்டு விட்டோம். பூஜை அறையில் ஏற்றி வைத்திருக்கும் நறுமணமிக்க பத்தி மென்மையாக, வளைய வளையமாக மேல் நோக்கி எழுகையில், நெளிந்து அமைதியாய்ச் சலனமின்றி ஓடும் ஆற்று நீர் போல் வீடு முழுவதும் சமாய்ப் பரவுவதாய்த் தோன்றும். அதுபோல, அப்பா தன் மனதை எந்தச் சங்கடமும், சிக்கல்களும் இன்றி நிற்சிந்தையாய், அமைதியாய், சுதந்திரமாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முனைகிறார் என்று தோன்றியது.

ஒரு மண் சட்டியில் தீர, தீரத் தண்ணீர் ஊற்றி வைப்பார். காக்கை, குருவி, புறாக்கள், இரட்டை வால் குருவி, மரங்கொத்தி, தூக்கணாங் குருவி என்று பலவகைப் பறவைகள் அந்தத் தண்ணீரைக் குடிக்க வருவதை நாங்கள் மட்டுமல்ல; எங்கள் அடுக்ககத்தில் உள்ள பலரும் அதை ரசிப்பதைப் பார்த்திருக்கிறோம். தண்ணீர் தீர்ந்து விட்டால் அவர்களே கொண்டு வந்து நிரப்பி விட்டும் செல்வார்கள். ஆனால் அந்தச் சட்டியை வாரம் ஒரு முறை எடுத்து அழுக்குப் போக அப்பா கழுவி வைப்பதுதான் அதில் புதுமை.

கீழ்த்தளத்தில் கடப்பா ஸ்லாப்புகளை நிறுத்தி ஆங்காங்கே உட்கார இருக்கைகள் தயார் செய்திருந்தார் அப்பா. மாடியில் நடக்க வருபவர்கள், கீழே கார் பார்க்கிங் பகுதியில் நடப்பவர்கள், வயதானவர்கள் அவ்வப்போது உட்கார்ந்து கொள்ள, காற்று வாங்க, அது வசதியாய் இருந்தது.

"" ச்சே...! எவ்வளவு நன்னாப் பண்ணியிருக்கான் பில்டர்...நமக்கில்லையே இப்படி..?'' என்று வீதியில் வருபவர்கள் பார்த்து ஏங்கிப் போனார்கள்.

அதுபோல் மொட்டை மாடியில் ஒரு டாய்லெட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

அடுக்ககம் கட்டுகையில், அவரே கட்டுவதாய் நினைத்து வாரம் ஒரு முறை வந்து பார்த்துக் கொண்டேயிருப்பார். ""அதச் செய், இதச் செய்...'' என்று எடுத்து செய்ய வைத்து விடுவார். பில்டரும் எல்லாத்துக்கும் மசிந்தார் என்பதுதான் ஆச்சர்யம். அதுக்குத் தகுந்தாற்போல் ரேட்டை உயர்த்தியிருப்பார் என்பது வேறு விஷயம்.

வீட்டில் பால்கனிக்கு கிரில் போட வைத்தவர் அப்பாதான். அது வழியே நின்று வெளியுலகை அப்பா பார்க்கையில் கீழே சாலையில் நின்று அப்பாவை ஒரு புகைப்படம் எடுத்தால் அசல் சத்யஜித்ரேதான்!

அப்பா ஓய்வு பெற்றுப் பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது. இப்பொழுதுதான் அவர் இப்படி ஆகியிருக்கிறார். ஆபீஸில் பேசாமலே கழுத்தறுத்திருப்பாரோ என்னவோ? எல்லோரும் பயந்து கிடந்திருக்கலாம். நிர்வாகத்தில் அதுவும் ஒரு வகைமாதிரி தானே? பேசாமல் கிர்ர்ர்றென்று இருந்து பணியாளர்களைப் பயப்பட வைத்து வேலை வாங்குவது!

""யாரும் யாரையும் எதுவும் சொல்லித் திருத்திவிட முடியாது. அவரவர் அனுபவத்தில்தான் கண்டறியணும். அதுதான் ஒருத்தனை செழுமைப்படுத்தும். பட்டுப் பட்டுத்தான் புரியணும். நிறைய நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கும். போகட்டும்னு விட வேண்டியதுதான்! அனுபவப் படிப்புதான் நிற்கும். சொல் புத்தி நிற்காது. சொன்னா, குத்தமாகத்தான் படும். நச்சரிப்புன்னு தோணும். இந்தக் கிழவன் போய்ச் சேர மாட்டானான்னு கூட இருக்கும். எதுக்குப் பொல்லாப்பு? இந்த உலகத்துக்கு எல்லாருமே தனித் தனியாய்த்தான் வந்தோம். தனித் தனியாத்தான் போகப் போறோம். பிறந்த வரிசைலயா இறக்கப் போறோம்? அவரவர் வாழ்க்கைப் பயணம் யாரால் அறிய முடியும்? வாழ்ந்தாகணும். நாம யாரு குறுக்கே நிற்கிறதுக்கு? வழிகாட்டியாச் சொல்லி எடுத்துண்ட தலைமுறையெல்லாம் இப்ப இல்லை! இது நிற்க நேரமில்லாம, பரபரக்கிற காலம். பெரியவங்க பேச்சை அவ்வளவு மதிக்காத காலம்! ஓரளவுக்குத்தான் சொல்லலாம். ரொம்பச் சொல்லி, நம்ப மதிப்பைக் கெடுத்துக்கக் கூடாது. ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்தான் கூகுள் தேடலில் புகுந்து விடுகிறார்களே? அதுவே அவர்களுக்கு நிறைவளிக்கிறது. ஆகையால் அட்வைஸ் யாரும் எதிர்பார்ப்பதில்லை.''

இதெல்லாம் முன்பு அப்பா பேசியதுதான். வீட்டில் நடக்கும் நிறைய விஷயங்கள் அவருக்குப் பிடிப்பதில்லை என்றுதான் இந்த அமைதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரோ என்று தோன்றியது.

திடீரென்று அப்பா என்று அழைக்க...! என்ன...? என்றவாரே திரும்ப, ஒரு மெல்லிய புன்னகை மலருமே அவர் உதட்டோரம்! அதுவே சாட்சி... அப்பா கோபமானவர் அல்ல என்பதற்கு. அந்த முகத்தின் முதிர்ச்சி....அதுவே அப்பாவுக்கு ஒரு தனி தேஜஸ்...!

வயசான மனுஷன். எதுவோ சொல்லிட்டுப் போகட்டும்.. அதைப் போய்த் தடுக்கணுமா? அதால யாருக்கும் எந்த பாதகமும் வந்துடாது...பேசாம விட்ருங்கோ...- வீட்டுக்கு வந்து போகும் யாரேனும் ரகசியமாய் இதைச் சொல்வதுண்டு. நாங்களும் அப்படித்தான் இருந்தோம். ஆனால் அதுவாய் நின்று போன பேச்சுக்கு நாங்கள் என்னதான் செய்வதாம்? அவர் அமைதியாய் இருக்கிறார் என்று பெயர்தான். ஆனால் எங்கோ, யாருடனோ, எதுவோடயோ அவர் பேச்சு மானசீகமாய்த் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது மட்டும் எங்களுக்குத் தெரிகிறது. முகபாவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றனவே என்பதே அதன் அடையாளம்."!

அப்பா சொன்னவை அத்தனையும் நல்லவைதான். வாழ்க்கைக்குத் தேவையானவைதான். ஆனால் பெரிய சுமைகளாய்த் தோன்றுகின்றன அவைகள். மனிதச் சுதந்திரத்தைக் கட்டி இழுத்துத் தடுத்து நிறுத்துவது போல் ஆக்கி விடுகின்றன. இவற்றை வீட்டில் இப்போது கற்றுக் கொண்டீர்கள் என்றால் பின்னால் இந்த உலகுக்குள் நீங்கள் காலடி வைக்கும்போது பின்நின்று வழிகாட்டி அவை உதவும் உங்களுக்கு என்று சொல்வார்.

""இதற்கும் ஒரு அலுவலகத்திலோ, நிறுவனத்திலோ போய் வேலை பார்ப்பதற்கும் என்ன சம்பந்தம்?'' மிகப் பெரிய தத்துவங்களை ஒரு சில வார்த்தைகளில் அப்பா சுருங்க உரைப்பது நம்மை ஒருவகையில் பயமுறுத்தும்தான்.

அதற்காக அப்பாவின் எண்ணங்களிலிருந்து வீட்டிலுள்ள நாங்கள் விலகி விடுவதில்லை. கூடியவரை பின்பற்றத்தான் செய்தோம். அதனையும் மீறி சில நடந்து போகும்போது அப்பாவுக்கு அது பிடிக்காமல் போவதும், மேற்கொண்டு பேசப் பிடிக்காமல் போய் தனியே அமர்ந்து கொள்வதும், சமயங்களில் பொறுக்க முடியாமல் அறைக் கதவைப் படாரென்று சாத்தி மூடிக் கொள்வதும் அதனை நாங்கள் கண்டு கொள்ளாமல் அமைதி காப்பதும்...தொடர்ந்து இப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது.

அப்பா சொல்லும் சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் நீங்கள் கேட்டீர்களென்றால் உங்களுக்கே அலுப்பு தோன்றத்தான் செய்யும். இதெல்லாம் எல்லா வீட்டிலும் சகஜம் என்று கூடச் சொல்வீர்கள். ஆனால் சகஜம்...சகஜம் என்று சொல்லிக் கொண்டு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒழுங்கீனமாக இருக்கப் போகிறீர்கள் என்பார் அப்பா. சகஜம்ங்கிற வார்த்தையே தப்பு என்பார். அப்படி ஒவ்வொரு விஷயத்தையும் இலகுவாக்கினால், ஒரு ஒழுங்கே படியாமப் போயிடும் என்று விளக்குவார். ஆரம்பத்துல பின்பற்றுதல் கஷ்டமாத்தான் இருக்கும். போகப் போக அதுவே படியும்போது நடைமுறை ஆயிடும். அப்புறம் அதுலர்ந்து நாம வழுவவே மாட்டோம்...என்று சுத்தத் தமிழில் பகர்வார்.

""ஆளில்லாத இடத்துல ஏன் ஃபேன் வெட்டியாச் சுத்திட்டிருக்கு...'' என்று ஓடி வந்து அணைப்பார். ""பாத்ரூம் போனேம்ப்பா...'' என்று பதிலளித்தால், "அந்த ரெண்டு நிமிஷத்துக்கு ஏன் வேஸ்டா ஓடணும்!'' என்று கண்டிப்பார். "" ஒரு நிமிஷத்துல வந்துடப் போறேன்! அதுக்குள்ள அதை ஒரு தரம் அணைச்சுப் போடணுமா? உங்களுக்கு வேறே வேலையில்ல...?'' என்று பதிலுக்கு அம்மா அலுத்துக் கொள்வாள். அது அவளுக்கான சுதந்திரம்.

அடிக்கடி எல்லாக் குழாயும் சரியாக மூடியிருக்கிறதா என்று பார்ப்பார். வாசல் கதவு வெறுமே மூடியிருக்காமல், பூட்டப்பட்டிருக்கிறதா என்பதை நோக்குவார்.
அறையிலும், உறாலிலும் துணி மணிகள் கண்டமேனிக்கு இரைந்து கிடப்பது அப்பாவுக்கு சுத்தமாய்ப் பிடிக்காது. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வச்சுப் பழகணும் என்றும், நம் வீட்டுக்கு யாரேனும் வந்தால் வீட்டை வைத்திருக்கும் முறைமையைப் பார்த்து நம்மைக் கணக்கிட வேண்டும் என்றும் நம் ஒழுங்குக்கு நம் வீடே சாட்சி என்றும் அழுத்தமாய்ச் சொல்வார்.

டி.வி.யை அலற விட்டால் கத்துவார். அது போல் சாதம், குழம்பு, காய்கறி என்று மிச்சமானதை வீணாக்குவதும் அப்பாவுக்கு அறவே பிடிக்காது.

இப்படியாகத் தொட்டுத் தொட்டுச் சொல்லி, அப்பாவுக்கே அலுத்து விட்டதோ என்னவோ? அல்லது திருந்தாத ஜென்மங்கள் என்று நினைத்து விட்டிருக்கலாம். என்ன வழி என்று யோசித்து, தனிமையை வரித்துக் கொண்டு, எதுவும் தன் கண்ணில் படாமல், காதில் விழாமல் ஒதுங்கி, மறைந்து இருக்கிறார் இப்போது. தன் வார்த்தைகளுக்கு மதிப்பில்லாமல் போயிற்று என்று மனதுக்குள் குமுறுகிறாரோ என்று தோன்றும்.

கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர் அப்பா. அங்கு படிந்த ஒழுக்கமும், கட்டுப்பாடும் அவரைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு விடமாட்டேனென்கிறது.
அப்பா தனது அறைக்குள் நிறையப் புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறார். அவற்றை அடுக்கிவைக்க இரும்பு அலமாரியும் வாங்கினார். அதனையும் அறையின் எந்தப் பகுதியில் வைத்தால் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இருக்கும் என்று யோசித்து உயரம், அகலத்துக்கு நூல் பிடித்து அறுத்து எடுத்துக் கொண்டு போனார்.

மற்றவர் செய்தால் அதில் தப்பு வரும் என்கிற எண்ணம் உண்டு அப்பாவுக்கு. ஆபீஸ் வேலைகளை அப்படி அள்ளிப் போட்டுச் செய்தவர் அப்பா. விட்டது தொல்லை என்று மற்றவர்கள் அவரிடம் ஒப்படைத்து விட்டு விலகிக் கொள்வதையும் சொல்லிச் சொல்லி மறுகுவார். யாருக்கும் வேலையை நன்னா கத்துக்கணும்ங்கிற அக்கறையே!

""கையை விட்டுப் போனாச் சரின்னில்ல இருக்கா?'' என்று புலம்புவார். அவங்களைச் செய்ய வைக்கணும்...அதுதானேப்பா நிர்வாகம்...என்று ஒரு முறை சொன்னேன். வந்ததே கோபம்...! நீ எனக்குச் சொல்லித் தர்றியா? களத்துக்குள்ள இருந்து ஆடணும்..அப்பத்தான் தெரியும்...! என்றார்.

சட்டுச் சட்டென்று ஒருவெளி உதாரணத்தை எடுத்து வீசுவார். அது அப்பாவின் படிப்பின் வாசனை. சரளமாய் அதுவாய் வந்தால்தானே சோபிக்கும். கோபத்தில்தான் பலரும் நல்லது சொல்வார்கள். அப்பா அந்த ரகம்...!

மொத்தம் ஆறு அடுக்குகள் கொண்டதாக அந்தப் புத்தக அலமாரியை அமைத்தார். இவ்வளவு பெரிசு எதுக்கு? என்றுதான் தோன்றியது. ஆனால் அப்பா இப்பொழுது வைத்திருக்கும் புத்தகங்களைப் பார்த்தால் போதவில்லை என்று அவரே முழிப்பதாகத் தோன்றியது. ஒரே ஒரு வரிசையாக, நெட்டுக் குத்தலாய் சாய்த்து அடுக்க ஆரம்பித்து வேணும் புத்தகத்தை அதன் தலைப்பை, பக்கவாட்டில் பார்த்து, டக்கு...டக்கு என்று உருவிப் படிக்க ஏதுவாயிருந்தது.

ஆறு அடுக்குகளிலும் ஒரு வரிசைப் புத்தகங்கள் நிறைந்து போய் இரண்டாவது வரிசையாக அடுக்க ஆரம்பித்திருந்தார். அதுவும் இப்போது நிறைந்து வழிந்தது. பழைய புத்தகக் கடையில அடுக்கின கதையால்ல ஆயிப் போச்சு... என்று அவரே சொல்லிக் கொண்டார்.

இரண்டாவது வரிசைப் புத்தகங்களை அடுக்கடுக்காய்த் தூக்கித் தரையில் வைத்து, உள் வரிசைப் புத்தகங்களைத் தேட ஆரம்பித்து எடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு மேல் வீட்டில் வேறு இடமும் இல்லை. மேற்கொண்டு புத்தகங்கள் வாங்க வேண்டாம் என்றால் நிறுத்தவா போகிறார்? தினமும் அழுக்குத் துணியைக் கொண்டு அதனைத் தட்டித் தட்டி தூசியை விரட்டுவார். ஓடோனில், அந்துருண்டை என்று விடாமல் போட்டு வைப்பார். அது பனிக்கட்டியாய் அப்படியே இருக்கும். முதல் ரெண்டு நாளைக்கு மணம் காண்பிக்கும். பிறகு வெறும் படிகாரக் கல் போல் கரையாமல் கிடக்கும். புஸ்தகங்களுக்குன்னு ஒரு பூச்சி வருது....தனி ரகமா இருக்கு....எப்டித்தான் இதைப் போக்குறதோ...! என்று வருத்தப்படுவார். அவை பழசாகிக் கருக்கும்முன் படித்து முடித்து விட வேண்டும் என்கிற பதட்டம் தென்படும் அவரிடத்தில். மேற்கொண்டு மேற்கொண்டு வாங்கிண்டேயிருந்தால் எங்கேயிருந்து படிச்சு முடிக்கிறதாம்...என்பாள் அம்மா.

""பென்ஷன்ல ஆயிரம் ரெண்டாயிரம் செலவு பண்ணி புஸ்தகம் வாங்கிக்க எனக்கு உரிமையில்லையா? வேறே என்ன செலவு எனக்கு? இருக்கிற காசையும் சேமிப்பையும் அப்டியே உங்ககிட்டேதானே கொடுக்கப் போறேன்? அதனால யாரும் வாயைத் திறக்கப்படாது'' என்று அப்பா சொல்லிவிட்டார்.

சின்ன வயசிலிருந்தே அப்பாவிடம் ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. அதாவது பணம் சேரச் சேரக் கணக்கிட்டு, அதை சேமிப்புக்குத் தள்ளி விடுவார். அந்தந்த நிதியாண்டுக்கு வரி விலக்குப் பெறும் வகையில் தபால் அலுவலகச் சேமிப்பைத்தான் அப்பா தேர்ந்தெடுப்பார். வட்டி குறைந்தாலும் அதுதான் பாதுகாப்பு என்பார்.

எந்த ஆண்டும் அவருக்கு வரி வந்ததேயில்லை. ஆனாலும் வருடா வருடம் தவறாமல் வருமான வரிக் கணக்கு அட்டவணையை அனுப்ப ஏற்பாடு செய்து விடுவார் அப்பா. அதற்கு என்று ஆடிட்டரைப் பிடித்து வைத்திருந்தார். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து, துறை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக ஒப்புதல் வருகிறதா என்று பார்த்துக் கொண்டேயிருப்பார். அது வரும்வரை அப்பாவுக்குக் கொஞ்சம் டென்ஷன்தான்!

ஒரு முறை வீட்டு முகவரிக்கு ஒரு நோட்டீஸ் வந்து விட்டது. அது வெறும் தபால்தான். நானூறு ரூபாய் சேர்க்க விட்டுப் போயிருந்தது. பதறிப்போனார் அப்பா. ஆடிட்டர் ஆபீஸ் போய் அங்குள்ள பணியாளர்களை எகிறியிருக்கிறார். நேரே இன்கம்டாக்ஸ் ஆபீஸ் போய் நின்று விட்டார். குறிப்பிட்ட பிரிவுக்குச் சென்று அதற்கு என்ன செய்யணும் என்று கேட்டு, அவர்கள் கொடுத்த செலானைப் பூர்த்தி செய்து, அந்த ஃபைனைச் செலுத்தி விட்டு வந்துதான் ஓய்ந்தார். அறியாமல் நடந்துபோன அந்தத் தவறுக்காக அப்பா கூனிக் குறுகிப் பட்ட பாடு சொல்லி மாளாது.

"" நேர்மையும், நியாயமும் இருக்க வேண்டியதுதான்! அதுக்காக இப்படியா? அதுக்குள்ள காசை விட்டெறிஞ்சா ஆச்சு...!'' என்று அந்த விஷயத்தை எளிமைப்படுத்தினாள் அம்மா. ""அப்டியெல்லாம் மரியாதையில்லாமப் பேசாதடீ...!'' என்றார் அப்பா.

""எழுபது வயசுக்கு மேலே உள்ளவாளுக்கு வருமான வரி ரிடர்ன் சமர்ப்பிக்க வேண்டியதில்லைன்னு ஒரு சலுகை கொண்டு வரப்பிடாதா? வயசான காலத்துல இப்படி அலைய வைக்கிறதே அரசாங்கம்? ஒவ்வொரு இடமும் எம்புட்டு தூர தூரமா இருக்கு? இருக்கிற டிராஃபிக்ல எங்கேனும் தப்பித் தவறி அடிபட்டுச் செத்துடுவம் போலிருக்கு..!'' என்று அப்பா நொந்து கொள்வார்.

"யாருக்கும் சிரமம் வைக்காமப் போய்ச் சேரணும்! காலடி பட்டுது, கை ஒடிஞ்சிதுன்னு எதுவும் ஆயிடக் கூடாது. படுக்கைல விழுந்தோம்னா நமக்கும் சிரமம்...! நம்மால மத்தவாளுக்கும் சிரமம். கட்டின பொண்டாட்டியேயானாலும், என்னைக்காவது மனம் சலிச்சு ஒரு வார்த்தை வரத்தானே செய்யும்! அதுக்கு எடம் வைக்கக் கூடாது. படுத்தமா, போனமான்னு இருக்கணும். அந்தக் கொடுப்பினை எல்லாருக்கும் அத்தனை சுலபமாக் கிடைச்சிடுமா? சர்வீஸ்ல இருக்கிறபோது எத்தனை பேர் வயித்தெரிச்சலைக் கொட்டியிருக்கேன்? நான் வாங்கப்படாதுங்கிற என்னோட கொள்கையை நிலைநிறுத்துறதுக்காக ஆபீúஸ சுத்தமா இருக்கணும்னு என்னவெல்லாம் பண்ணியிருக்கேன்? இந்த சண்டாளப் பய...நமக்கு வர்ற காசையுமில்ல கெடுக்கிறான்னு என் காது படவே பேசியிருக்காங்களே? அவங்களோட வாய்ல விழுந்ததெல்லாம் வீணாப் போகுமா? போதும்டா சாமி...ஆள விடுங்கன்னு வெளில வர்றதுக்குள்ள என்னா பாடு பட வேண்டியதாப் போச்சு? நரகம்...நரகம்... "வாங்க மாட்டாரா....? வாங்க மாட்டாரா? அப்டியா...?' என்று கேட்டு அறிந்த அந்த கலெக்டர் பி.ஏ., கடைசியில் தனக்கு பென்ஷன் ப்ரபோசல் போடக் கூட ஆளில்லாமல் தவித்துப் போய், தன்னிடம் வந்து நின்ற பரிதாபமெல்லாம் நிகழ்ந்ததே..! "நீங்கதான் நல்லவரு! நீங்கதான் எனக்கு செய்யணும்! வேறு யாரும் செய்து தர மாட்டாங்க..!' என்று வருந்திக் கண்ணீர் வடித்தபோது மனம் இரங்கிப் போனதே...! அவருக்குத்தான் முதலில் பென்ஷன் சாங்ஷன் ஆனது என்றும் தனக்கு அதற்குப் பிறகுதான் வந்தது'' என்றும் சொல்லிச் சிரிப்பார் அப்பா.

காலம் கலிகாலம். எல்லாமும் அப்படித்தான் நடக்கும். யாரையும் நொந்து புண்ணியமில்லை. இப்படி எங்கள் சார்பாகவும் நினைத்துத்தான் அப்பா தன்னைத் தேற்றிக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது எங்களுக்கு.

அப்பாவின் பார்வை எதிர்ச் சுவரில். அவரின் முதுகு மட்டுமே தெரிகிறது. முகம் என்ன பேசுகிறது என்று எங்களால் கணிக்க முடிவதில்லை. அது காலத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் உணர முடிகிறது. அப்படி அமர்ந்தமேனிக்கே அப்பா ஒரு நாள் தண்ணீர் கேட்கக் கூடும். கொண்டு போய்க் கொடுக்கும்போதோ அல்லது குடித்த பின்போ அப்படியே தலை சாய்ந்து விடக் கூடும். அந்த விடுதலை யோகம் தனக்கு நிச்சயமாகக் கிடைத்து விடும் என்றுதான் அப்பா நம்பிக்கையோடிருக்கிறார்.

உண்மையான இறைபக்திக்கு சாமி படத்துக்கு முன்னால நிக்கணும்ங்கிறதில்லை! கண்மூடி மனசை ஒருமைப் படுத்தினாப் போதும்! அது ப்ராக்டீஸ்ல வரும். கைகூடும். அந்த நிலையில அகன்ற வானத்தைப் பார்க்கும்போது கையெடுத்துக் கும்பிடத் தோணும். வானத்துல பறவைகள் கூடிப் பறக்கும்போது கூப்பி வணங்கத் தோணும். புலர் காலைல மண்ணுக்குள்ளேயிருந்து வெளிவந்து இந்த உலகத்துக்குத் தன் முகத்தைக் காட்டும் ஒரு சிறு தளிர் கூட கடவுளை ஞாபகப்படுத்தும்....! அந்த ஆத்மானுபவம்ங்கிறதே தனி...!

போதும்....! என்று எப்போதாவது அப்பா சொல்லும் அந்த ஒரு வார்த்தை ஒரு லட்சம் பெறும். அதில்தான் எத்தனை எத்தனை உள்ளார்ந்த அர்த்தங்கள்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com