ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்...

கடும் கோடையில் எனக்கு அடிக்கடி வாய் வறண்டு தண்ணீர் தாகம் எடுக்கிறது. எத்தனை முறை தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்குவதில்லை. கூடவே மயக்கமும் ஏற்படுகிறது. இதை எப்படி குணப்படுத்துவது?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்...

கடும் கோடையில் எனக்கு அடிக்கடி வாய் வறண்டு தண்ணீர் தாகம் எடுக்கிறது. எத்தனை முறை தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்குவதில்லை. கூடவே மயக்கமும் ஏற்படுகிறது. இதைஎப்படி குணப்படுத்துவது?

-சுதாகர்,
சென்னை.

வாயுவின் சீற்றத்தால் ஏற்படும் நீர் வேட்கையைப் போக்கத் தயிரில் சிறிதளவு வெல்லம் கலந்து சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுகிறவர்கள் குளிர்ந்த நிலையில் மாமிச சூப்புகளை குடிக்கலாம். கிராமப்புறங்களில் இன்றும் சீந்தில்கொடி சாறு குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஓரிலை, மூவிலை, சிறுவழுதுளை, வெண்வழுதுளை, நெரிஞ்சில் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ள "பிருகத்யாதி கஷாயம்' சுமார் 15 மி.லி. அளவில் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பருகுவதை வழக்கப்படுத்த வேண்டும். இதனால் கோடையில் ஏற்படும் தண்ணீர் தாகத்தைத் தணிக்கலாம்.

சிலருக்கு உடலில் பித்தத்தின் சீற்றத்தால் ஏற்படும் உடல்சூடு, கடும் தண்ணீர் வேட்கையை ஏற்படுத்தும். உடல் உள்புற பித்த ஊறலைத் தவிர்த்து, உடலுக்குக் குளிச்சியூட்டும் உலர் திராட்சை, வெட்டிவேர், விளாமிச்சைவேர், கரும்பு வேர், சந்தனசிராத்தூள், பதிமுகம் போன்றவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து, சுமார் ஒரு லிட்டர் மண் பானைத் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர், மறுநாள் காலை சிறிது, சிறிதாகச் சிறிய அளவில் குடித்து வரலாம். ""காஞ்சீ பான்'' என்ற பெயரில் இது கோடைக்காலத்தைச் சமாளிப்பதற்காகவே தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

நன்கு பழுத்த 4-5 அத்திப்பழங்களை இரவு நேரத்தில் வெந்நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் குளிர்ந்த நிலையில் காலை உணவுக்கு அரை மணி நேரம் முன் சாப்பிட வேண்டும். நீர் வேட்கையானது நன்கு குறையும். தலைச்சுற்றலும் மட்டுப்படும்.

மனம் சார்ந்த ரஜஸ் எனும் தோஷமானது பித்த-வாயுக்களுடன் சேர்ந்து தலைச்சுற்றலை உருவாக்குவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. உலர் திராட்சை, சந்தன சிராத்தூள், பேரீச்சம்பழம், வெட்டி வேர், அதிமதுரம் ஆகியவற்றை இரவு வெந்நீரில் ஊறவைக்க வேண்டும். இதை மறுநாள் காலை கசக்கிப் பிழிந்து, வடிகட்டிய நீரைக் குடிப்பதன் மூலம் தலைச்சுற்றலை வெகுவாகக் குறைக்கலாம்.

கோடை தாகத்தையும், தலைச்சுற்றலையும் தவிர்க்க குளிர்ந்த நீரில் (சுமார் 200 மி.லி.) கலந்த நெல் பொறித்தூள் 50 கிராம், 5 கிராம் வெல்லம், 3 கிராம் சர்க்கரை ஆகியவற்றைக்குடிக்கலாம்.

உடல் வறண்டு பலகீனமானால் பால் அல்லது ஆட்டுக்கால் சூப்பில் நெய் தாளித்து கொடுப்பதைச் செய்தால், வாய் வறட்சியானது நீங்கிவிடும்.

கோடையில் சிலருக்கு வாந்தியுடன் கூடிய தண்ணீர் தாகத்தை ஏற்படுத்தும். அதைக் குணப்படுத்த இளம் இலைத் தளிரான மாவிலை, நாவல் இலை கஷாயமாக்கி அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட மிகவும் நல்லது.

கடும் நீர் வேட்கையைச் சமாளிக்கத் தண்ணீரில் சுமார் 8 கிராம் அளவில் கலந்த உலர் திராட்சை, கரும்புச் சாறு, பால், அதிமதுரம், தேன் ஆகியவற்றைத் தனித்தனியாகத் தண்ணீரில் ஊறவைத்து வர கட்ட வேண்டும். இதை குடிக்க உடல்சூடு குறையும். இவற்றை மூக்கினுள் சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com