கதை வங்கி..!: தமிழ் திரையுலகில் புது முயற்சி

திரைப்பட உலகம் ஒரு காந்தம். நடிகர், நடிகை, இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர்... ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளவர்களை திரைப்படவுலகம் அன்றிலிருந்து இன்றுவரை
கதை வங்கி..!: தமிழ் திரையுலகில் புது முயற்சி

திரைப்பட உலகம் ஒரு காந்தம். நடிகர், நடிகை, இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர்... ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளவர்களை திரைப்படவுலகம் அன்றிலிருந்து இன்றுவரை ஈர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழ்த் திரைப் பட உலகத்துக்குள் நுழைய முயற்சி செய்யும் அனைவரும் நினைப்பதுபோல் ஆகிவிடுவதில்லை. அப்படியே ஆனாலும் ஒன்றிண்டு படங்களுக்குப் பின்னர், காணாமல் போய்விடுகிறார்கள். ஆண்டுதோறும் நூறு படங்கள் தயாரிக்கப்பட்டால், அதில் ஐம்பது வெளிவராமல் நின்றுவிடுகின்றன. அதுதான் திரைப்பட உலகின் யதார்த்தம்.

திரைப்படத் தயாரிப்பு எப்படி?, என்னென்ன அம்சங்கள்தேவை, சுவாரஸ்யத்தை எப்படிக் கூட்டுவது என்பதை புதுமுகங்களுக்கு வழிகாட்டுகிறது சென்னை வடபழனி குமரன் காலனி சாலையில் செயல்படும் "தமிழ் சினிமா கம்பெனி'.

ரத்த வங்கி, விதை வங்கி, உணவு வங்கி, பொம்மை வங்கி , உடை வங்கி, என்ற பட்டியலில் புதிதாக இடம் பிடிக்க "கதை வங்கி' யை ஏற்படுத்தியிருக்கும், "தமிழ் சினிமா கம்பெனி'யின் தலைவரான கஸாலி , தனது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்குகிறார்:

"எனது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. ஒரு தொகுப்பும் வெளியிட்டிருக்கிறேன். சினிமாவுக்கு கதை எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கும் வந்தது. அதை அடக்கிக்கொண்டு "அக்ரி' படித்த நான் துபை சென்று வேலை பார்த்தேன். அங்கே தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டாலும், தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடும் படங்களை மட்டுமே பார்ப்பேன். ஏன் அந்தப் படம் வெற்றியடைந்தது. கதையா, நடிப்பா, இயக்கமா.. இவற்றில் எது காரணம் என்று எனக்குள் ஆய்வு செய்வேன்.

பிறகு வேலையை விட்டுவிட்டு அதே வேலையை சென்னையில் சில ஆண்டுகள் செய்தேன். என்றாலும், சினிமா தயாரிக்க வேண்டும் என்ற ஆசை என்னை அழைத்துக் கொண்டே இருந்தது.

சினிமா அனுபவம் இல்லாத நான், "மனுசனா நீ' என்ற படத்தைத் தயாரித்து இயக்கினேன். படம் தோல்வியடைந்தது. எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம். தோல்விக்குக் காரணம் அனுபவம் இல்லாமை மட்டுமல்ல! என்னுடன் இணைந்த குழு சம்பளம் வாங்குவதில் மட்டுமே நோக்கமாக இருந்தது. அதனால் படத்தில் சுவாரஸ்யத்தை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைக்க முடியவில்லை. இப்படி அனுபவம் இல்லாமல் படம் தயாரிக்க வந்து ஏழையானவர்கள் அதிகம்.

படத்தைத் தயாரித்தாலும் அதை வியாபாரம் செய்ய தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குள், தமிழ்நாட்டுக்கு வெளியே, அயல்நாடுகள், சேட்டிலைட் உரிமை, "ஓடிடி' உரிமை என்று பல சந்தைகள் இருக்கின்றன. இவற்றை நான் முறையாகச் செய்யாததால் படம் தயாரித்து, நஷ்டம் அடைந்தேன்.

எல்லா தொழிலுக்கும் ஆலோசனை சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் திரைப்படஉலகில் அப்படி யாரும் இல்லை. எனது தோல்வி, புதிதாக திரைப்படவுலகில் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு வரக் கூடாது என்று முடிவில், திரைப்படத் துறையில் அனுபவம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக்குழுவை அமைத்து "விருப்பு வெறுப்பு' இன்றி படத் தயாரிப்பின் அனைத்துத் துறைக்கும் வழிகாட்டுகிறோம்.

இத்தகைய அமைப்பு இந்தியாவில் முதலாவதாக தமிழ்நாட்டில் தமிழ் சினிமா கம்பெனி என்ற பெயரில் 2019 ஆகஸ்ட்டிலிருந்து இயங்கிவருகிறது.

"திரைப்படத் தயாரிப்பு, படப்பிடிப்பு, மூலதன, கதை தொடர்பான தகவல்கள், நுணுக்கங்கள் இணை, துணை, உதவி இயக்குநர்களுக்குத் தெரியும். அதனால் தொடக்கத்தில் தமிழ் திரைப்படஉலகின் இணை, துணை, உதவி இயக்குநர்கள் நூற்றுக்கணக்கானவர்களை அழைத்து பலமுறை கலந்துரையாடி கடந்த பத்து ஆண்டுகளில், வெற்றி, சுமார் வெற்றி , தோல்வி படங்களைப் பற்றி அலசி காரணங்களை அலசினோம். சென்டிமென்ட்ஸ் , ஹாஸ்யம் உள்ள படங்கள் வெற்றி, சுமார் வெற்றி அடைந்துள்ளது என்பதை அறிந்தோம். இந்தக் கண்டுபிடிப்புதான் எங்களுக்கும் வழிகாட்டுதலாக அமைந்தது.

சினிமாவின் வெற்றி , திரைக் கதையை உரிய முறையில் ரசிகனுக்குச் சொல்கிறோமா என்பதை அடிப்படையாகக் கொண்டது. கதை வங்கியை உருவாக்க, திரைப்படத்துக்குப் பொருத்தமான கதைகளை வரவேற்றோம். பல நூறு கதைகள் வந்து சேர்ந்தன. அதில் 12 கதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அதில் மூன்று கதைகள் திரைப்படம் ஆகின்றன. எங்களிடத்தில் தரப்படும் கதை திருடு போகாது. கதைக் கரு அருமையாக இருந்தால் முழுக் கதையையும் கேட்டோம். எங்காவது சுவாரஸ்யம் குறைந்தால் கதாசிரியரிடம் அங்கே சரி செய்யச் சொல்வோம். கதை தேவைப்படும் தயாரிப்பாளருக்கு தகவல் கொடுத்து கதையைச் சொல்லி கதாசிரியரையும், தயாரிப்பாளரையும் சந்தித்து பேசி முடிவு எடுக்கச் சொல்வோம்.

கதாசிரியருக்கு சினிமாவுக்குத் தகுந்த சுவாரஸ்யம் கூட்ட, காட்சிகளை அமைக்கத் தெரியவில்லை என்றால் அவர் கதையை மூலக்கதை என்று வைத்துக் கொண்டு திரைக்கதை எழுத வேறு ஒருவரிடம் பொறுப்பைக் கொடுப்போம். அந்தத் திரைக்கதையை எங்கள் குழு, அலசி தயாரிப்பாளரிடம் திரைக்கதையை கதை வங்கியிலிருந்து கொடுப்போம். தயாரிப்பாளர் விரும்பினால் படத்தைத் தயாரித்து முதல் பிரதியைத் தயார் செய்து, அதை வியாபாரமும் செய்து தயாரிப்பாளரிடம் ஒப்படைப்போம். சில சமயங்களில் மூலக் கதை எழுதியவர் "நானே திரைக்கதை.. வசனம் எழுதுவேன்' என்பார். அவர் சொல்லும் நிபந்தனைகளுக்கு ஒத்துப் போகும் தயாரிப்பாளர் இருந்தால் இருவரையும் இணைத்து வைப்போம்.

கதாசிரியர் தனது கதை திருடு போகாமல் இருக்க நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடக்கத்திலேயே சொல்லிக் கொடுத்துவிடுவோம். அதனால் கதாசிரியர்கள் எங்களை நம்பலாம். அதுபோல, நாங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் படத்தில் இயக்குநர், பட இயக்கத்தில் அனுபவம் உள்ள இணை, துணை இயக்குநராக இருப்பார். நடிகர்கள் படங்களில் நடித்த ஆனால் பிரபலமாகாத அனுபவம் உள்ளவர்களை மட்டுமே பரிந்துரைப்போம். ஏனென்றால், அவர்களுக்கு கேமரா கூச்சம் இருக்காது. நடிப்பும் வரும். சினிமா என்றால் என்ன என்பது அவர்களுக்குப் புரியும். அதனால் தயாரிப்பு நேரம், செலவு மிச்சமாகும்.

எங்களை நம்பி படம் தயாரிக்க முதலீடு போடுபவர்களுக்கு குறைந்தது பத்து சதவீதமாவது லாபம் உண்டாக்கி கொடுப்பது நாங்கள் அளிக்கும் உறுதி. அதற்காக சட்டரீதியிலான ஒப்பந்தம் எங்கள் அமைப்புக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் போடப்படும். அதைவிட லாபம் அதிகமாக வந்தால் அது தயாரிப்பாளருக்கே சொந்தம். படத் தயாரிப்பில் ரூ.10 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை சிறு முதலீடு செய்பவர்களும் உண்டு. அது பலர் சேர்ந்து படம் தயாரிக்கும் கூட்டு முயற்சியாக இருக்கும். அவர்களுக்குத் தகுந்த கதை, இயக்குநரை அமைத்துக் கொடுப்பது எங்கள் வேலை.

கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவர் பிரபல இயக்குநரும், வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான், தயாரிப்பாளர் ஏ.கே.சுடர், படத் தயாரிப்பையும், நிர்வாகப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார். விளம்பரப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர் பாடலாசிரியரும் இயக்குநருமான முருகன் மந்திரம். சந்தைப்படுத்துதல், பட விநியோகப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பவர் தயாரிப்பாளர் ஜின்னா, ஊடகங்களை ஒருங்கிணைத்தல் பணியை நிகில் முருகன் செய்கிறார். அனைவரும் சேர்ந்து ஆலோசித்து பொறுப்புடன் முடிவுகளை எடுப்போம்.

திரைக்கதை, பாடல், வசனம், இயக்கத்தில் திறமை உள்ளவர்களை எங்கள் அமைப்புடன் இணைத்துக் கொண்டு அவர்களுக்கும் வாய்ப்பு பெற்றுத் தருவோம்.. எங்கள் முயற்சியில் வெளிப்படத்தன்மை உண்டு. இது இந்தியப் படவுலகில் எடுக்கப்படும் புதிய முயற்சி..." என்கிறார் கஸாலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com