பேல்பூரி

""முதியோர் இல்லத்துக்கு பொன், பொருள் எது வேண்டுமானாலும் கொடு; ஆனால் உன் பெற்றோரை மட்டும் கொடுத்து விடாதே!''
பேல்பூரி

கண்டது

மதுரை- எஸ்.ஆலங்குளம் ஆட்டோ ஒன்றின் பின்புறம்)
""ஓடுவது தங்கம் ஓட்டுவது சிங்கம்' 

- கே.சுப்பராயன்

(ஒரு லாரியின் பின்புறம் கண்ட வாசகம்)

""முதியோர் இல்லத்துக்கு பொன், பொருள் எது வேண்டுமானாலும் கொடு; 
ஆனால் உன் பெற்றோரை மட்டும் கொடுத்து விடாதே!''

-வெ.லட்சுமி நாராயணன்,
வடலூர்.

(தேனி நகர போக்குவரத்துக் காவல் துறையின் விழிப்புணர்வுப் பதாகையில்..)

தூக்கம் வந்தால் வண்டியை ஓரம்கட்டு!
விபத்து நடந்தால் 108!!

- அரசமதி, தேனி.

கேட்டது

(மேலகிருஷ்ணன் புதூர் கூட்டுறவு பண்டகச் சாலையில் விற்பனையாளரும், ஒரு பெண்ணும்..)

""அய்யா.. இந்த மாதமாவது பார்த்து நல்ல அரிசியா கொடுங்க..!  போன மாதம் நீங்க கொடுத்த அரிசியை எந்தக் கோழியும், எந்த நாயும், எந்தப் பேயும் திங்கல்லே..!''
பேய் இப்போ இருக்கிறதா..! அம்மா!
""இருக்கு அய்யா.. எங்க வீட்ல ஒண்ணு; எந்த வேலை வெட்டிக்கும் போகாம..!''

- கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

(திருச்சி- சத்திரம் பேருந்து நிலையத்தில் ஒரு கணவன்- மனைவி)

""சதா.. எங்கம்மாவோட சண்டை போடுறீயே? உனக்கு வாயே வலிக்காதா?''
""இதையே, நான் திருப்பி உங்கள.. கேட்கட்டுமா?
""சும்மா.. ஒரு பேச்சுக்கு கேட்டால், "சீரியஸாக' எடுத்துக்கீறீயே..?''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(அறந்தாங்கி பேன்சி ஸ்டோர் ஒன்றில் உரிமையாளரும், அவரது நண்பரும்..)

""கடைசியில நீ நினைச்சது நடந்து போச்சி..!!''
""நான் என்ன நினைச்சேன்..''
""விற்காம தூசு புடிச்சிபோயிருந்த மாஸ்க். என்ன பண்றதுன்னு இருந்த.. இப்போ மறுபடி ஆர்டர் போட்டுட்டாங்க... உன் காட்டுல மழைதான்!!''

- ப.காளிதாசன்,
நீர்விளங்குளம்.


யோசிக்கிறாங்கப்பா!

இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை. 
துன்பங்கள் தனியே வருவதில்லை..!!

-மு.பெரியசாமி, 
விட்டுக்கட்டி.

மைக்ரோ கதை


வெளியே சென்றிருந்த கணவனும், மனைவியும் இரவு வீடு திரும்பினர். அப்போது கேட்டில் பூட்டியிருந்த பூட்டு மக்கர் செய்தது.
உடனே மனைவி சென்னாள்:
""நீங்க டார்ச் அடிங்க.. நான் திறக்கிறேன்''
நேரமாகியது. மனைவி பலமுறை முயன்றும் திறக்கவில்லை. உடனே அவள், "" நான் டார்ச் பிடிக்கிறேன்.  நீங்க திறங்க'' என்றாள்.
இருவரும் சாவியையும், டார்ச் லைட்டையும் பரிமாறிக் கொண்டனர்.
கணவர் சாவியை போட்டதும், கிளிக்கென்று பூட்டு திறந்துவிட்டது.
இதைப் பார்த்த மனைவி தனது கணவனை கோபமாகக் கத்தினாள்.
""இப்ப தெரிஞ்சுதா.. டார்ச்  எப்படி பிடிக்கணும்னு'' என்றாள்.

-பத்மா சாரதி ,
தஞ்சாவூர். 

எஸ்எம்எஸ்

கிழிந்த எண்ணங்களை 
நல்ல நூல்களால் தைக்கலாம்.

- ந.சண்முகம், 
திருவண்ணாமலை.

அப்படீங்களா!


மெய்நிகர் (விர்சுவல் ரியாலிடி -விஆர்) தொழில்நுட்பம் உருவாகியதில் இருந்து நம் கண்முன் எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து நிறுத்திவிடலாம். இதற்கு விஆர் ஹெட்செட்டுகளை அணிந்து கொண்டால்போதும். 

கரோனா பொது முடக்க காலத்தில், உலகில் எந்த மூலையில் இருந்தவர்களையும் விடியோவில் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது விடியோ அழைப்பு வசதி. இதை அடுத்தக் கட்டத்துக்கு ஃபேஸ்புக் நிறுவனமான மெட்டாவர்ஸ் கொண்டு செல்ல உள்ளது.

அதாவது, விடியோ காலில் வரும் மனிதர்களை மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் நேரில் கொண்டு நிறுத்தும் சேவையை செயல்படுத்த மெட்டாவர்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. 

இதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நடவடிக்கையாக விஆர் ஹெட்செட்டுகளில் தொடு உணர்வை பகிரும் புதிய தொழில்நுட்பத்தை மெட்டாவர்ஸ் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.

கண்கட்டி வித்தைப்போல் செயல்படும் இந்த விஆர் ஹெட்செட்டுகளின் கீழ் அல்ட்ராசோனிக் டிரான்ஸ்டக்டர்களை இணைத்து உதடு, பல், நாக்கு ஆகிய உறுப்புகளில் உணர்வுகளை ஏற்படுத்தப்படுகிறது. 

இதனால் விஆர் ஹெட்செட்கள் மூலம் மெய்நிகர் தொழிóல்நுட்பத்தை மட்டும் அனுபவித்து வந்தவர்களுக்கு முத்தமிடுதல், தண்ணீர் குடித்தல், பல் துலக்குவது, புகைப்பிடித்தல் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தலாம்.

புகைப்பிடித்தல் பழக்கத்தை விட முடியாதவர்கள், இந்த மெய்நிகர் உணர்வு தொழில்நுட்பம் மூலம் உடல்நலம் பாதிப்பில்லாமல் பயன்படுத்தலாம்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் வரும் நாள்களில் நம்மை கனவு உலகத்துக்கு அழைத்து செல்லும் என்றே கூறலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com