'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 87

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என்று ஒதுக்கிவிட முடியாத ஆளுமை "முக்தா' சீனிவாசன். அடிப்படையில் இடதுசாரி சிந்தனையாளர்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 87

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என்று ஒதுக்கிவிட முடியாத ஆளுமை "முக்தா' சீனிவாசன். அடிப்படையில் இடதுசாரி சிந்தனையாளர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் உதவியாளராக இருந்து திரையுலகில் அடியெடுத்து வைத்தவர். அவர் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்தபோது, எம்ஜிஆர், கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்களிடம் நெருங்கிப் பழகியவர்.

ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த, அவரது "சூரியகாந்தி', "அருணோதயம்' திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றி கண்டன. தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா மிகுந்த மரியாதை வைத்திருந்தவர்களில் "முக்தா' சீனிவாசனும் ஒருவர். பல அரசியல் பிரச்னைகளின்போது ஜெயலலிதாவுக்கும், தனது தலைவரான ஜி.கே. மூப்பனாருக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றத்துக்கு அவர் முழுமையாக உதவி இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.

"முக்தா' சீனிவாசன் "பெரியார்' ஈ.வே.ரா.வின் அன்புக்குப் பாத்திரமானவராக இருந்தார் என்பதுதான் ஆச்சரியம். ஜெயலலிதா நடித்த "முக்தா' பிலிம்ஸின் "சூரியகாந்தி' திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் பெரியார் ஈ.வே.ரா. கலந்துகொண்டபோது, திரைப்பட விழாவில் பெரியாராவது என்று கேட்டவர்கள் வாயடைத்துப் போயினர்.

""இலக்கு தினகரனல்ல'' என்று "முக்தா' சீனிவாசன் தெரிவித்தபோது, அவரை வியப்புடன் பார்த்தோம் நானும், சென்னை முன்னாள் மேயர் சா. கணேசனும். அவர் குறித்தும் சிலபதிவுகளை நான் வருங்கால சந்ததியினருக்காகப் பதிவு செய்தாக வேண்டும்.

அண்ணாவால் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டவர்களில் ஒருவர் சா. கணேசன். கூவம்தான் அவரது சொந்த கிராமம். அவரது சகோதரர்கள் அனைவருமே ஆசிரியர்கள். கடைசிவரை தனது தோளில் போட்டுக் கொண்டிருந்த சிவப்பு சால்வையை அடையாளமாகக் கொண்டிருந்தவர் சா. கணேசன்.

தன் மீது ஊழலின் நிழல்கூடப் படியாத வண்ணம் வாழ்ந்து மறைந்த விரல் விட்டு எண்ணக்கூடிய திராவிட இயக்க அரசியல்வாதிகளில் சா. கணேசனும் ஒருவர். சென்னை முன்னாள் மேயராகவும், திமுக ஆட்சியில் இருந்தபோது சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தும்கூட, அப்பழுக்கில்லாத பொது வாழ்க்கை வாழ அவரால் முடிந்தது.

தனது கடைசிக் காலங்களில் கட்சியில் பல அவமானங்களை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. அண்ணா காலத்து அரசியல்வாதியான அவர் புறக்கணிக்கப்பட்டார் என்றுகூடச் சொல்லலாம். ஆனால், "கட்சிக் கட்டுப்பாடு' என்கிற கோட்பாட்டில் உறுதியாக இருந்த சா. கணேசன், தனது சொல்லிலும் செயலிலும் இம்மிகூடக் கட்சித் தலைமை மீதான தனது அதிருப்தியை வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை.

நடேசன் பூங்கா நடைப்பயிற்சியின்போது எங்கள் நெருக்கம் வலுப்பெற்றது. நான்"தினமணி' நாளிதழின் ஆசிரியரானபோது, தனது மகன் அந்தப் பொறுப்புக்கு வந்ததுபோல அவர் மகிழ்ச்சி அடைந்தார். அவரது குடும்ப நிகழ்ச்சி என்றால் என்னை எதிர்பார்ப்பார். காங்கிரஸ்காரராக இருந்தால் "தியாகி' என்று சொல்வார்கள். அவரோ திராவிட அரசியல்வாதி; என்னவென்று அழைப்பது என்றுஎனக்குத் தெரியவில்லை.

"முக்தா' சீனிவாசன், சா. கணேசனைப் பார்த்துப் புன்னகைத்தபடி தொடர்ந்தார்.

""சரித்திரம் திரும்புகிறது. 1971-இல் மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது உங்கள் தலைவர் கலைஞர் செய்த அதே தவறை, இப்போது ஜெயலலிதாவும் செய்கிறார். சுப்பிரமணியன் சுவாமி, டி.என். சேஷன், சென்னா ரெட்டி என்று விரோதத்தை வளர்த்துக் கொண்டதுபோல, தில்லியில் நண்பர்களை உருவாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் அவருக்கு இல்லை, என்ன செய்ய?''

""நீங்கள் அவருக்கு எடுத்துச் சொல்வதுதானே?'' என்று நான் கேட்டேன். சா. கணேசன் கிண்டலாகச் சிரித்தார்.

""நானும் சோவும் இதுபற்றி இரண்டு மூன்று தடவை பேசிவிட்டோம். வலியப் போய் யாருக்கும் ஆலோசனை கூறக் கூடாது என்று சோ சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன். கேட்காமல் ஆலோசனைகள் வழங்கி நாங்கள் அவமானப்படத் தயாராக இல்லை.''

அதுவரையில் பேசாமல் இருந்த சா. கணேசன் பேசத் தொடங்கினார் -
""ஜெயலலிதா ஆட்சி மீதும், அவரது நடவடிக்கைகள் மீதும் அரசியல் ரீதியாக எனக்கு உடன்பாடு கிடையாது. எங்கள் கட்சியின் நிலைப்பாடும் அதுதான். அதே நேரத்தில், மத்திய ஆட்சியின் ஏஜெண்டாக இருக்கும் கவர்னர் அவரை மிரட்டுவதையும், பிளாக் மெயில் செய்ய நினைப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நாங்களும் வேடிக்கை பார்க்கிறோம்.''

இதேபோலப் பல தடவைகள் நாங்கள் மூவரும் ஜெயலலிதா - சென்னா ரெட்டி மோதல் குறித்துப் பேசி இருக்கிறோம்.

ஒருநாள் "முக்தா' சீனிவாசன் வந்திருக்கவில்லை. நான் நடைப்பயிற்சி முடித்து நடேசன் பூங்காவிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தேன். வெளியில் சில கட்சித் தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் சா. கணேசன். அவருக்கு "வணக்கம்' தெரிவித்துவிட்டு நகர எத்தனித்தபோது என்னை அருகில் அழைத்தார்.

""நாம் பேசிக் கொண்டிருந்தது குறித்து நேற்று அறிவாலயத்தில் பேராசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். உங்களை அவர் சந்திக்க விரும்புகிறார். அவரைத் தொடர்பு கொள்ளுங்கள்'' என்றார் சா. கணேசன். "சரி' என்று தலையாட்டிவிட்டு நகர்ந்தேன்.

இரண்டு நாள்கள் கழித்து அண்ணா நகரிலுள்ள க. அன்பழகனின் வீட்டில் ஒருநாள் மாலையில் சந்திக்கச் சென்றேன். என்னிடம் என்ன கேட்கப் போகிறாரோ என்கிற எதிர்பார்ப்புடன் சென்ற என்னை அமரச் சொன்னார். அதன் பிறகு அவர் சொன்னதுதான், நெகிழ வைக்கும் அறிவுரை.

""எங்களைப் போன்ற அரசியல்வாதிகள் எல்லா விஷயங்களிலும் ஜாக்கிரதையாக இருப்போம். அப்படியே இல்லாவிட்டாலும் எங்களுக்கு அரசியல் பாதுகாப்பு உண்டு. நீங்கள் அப்படியல்ல. நீங்கள் வளர வேண்டிய பத்திரிகையாளர். வருங்காலத்தில் மிகப் பெரிய நிலைக்கு வருவீர்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். பொது இடங்களில் "முக்தா' சீனிவாசன், சா. கணேசன் போன்றவர்களுடன் நீங்கள் அரசியல் பேசிக் கொண்டிருப்பது உங்களுக்கு நல்லதல்ல. தனிப்பட்ட முறையில் அவர்களை அவர்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ சந்தித்துப் பேசுங்கள். பொது இடங்களில் பேசக் கூடாது. காற்றுக்குக்கூடக் கண் இருக்கும். காது கேட்கும். இதைச் சொல்லத்தான் உங்களை நான் நேரில் வரச் சொன்னேன்.''

பேராசிரியர் க. அன்பழகன் என்மீது வைத்திருந்த அக்கறையின் வெளிப்பாடு அது. அவரது இறுதிக்காலம் வரை அவருக்கு என்மீது இருந்த அன்பும், எனக்கு அவர் மீதிருந்த மரியாதையும் தொடர்ந்தன. அவர் தந்த அந்த அறிவுரையை, முழுமையாக இல்லாவிட்டாலும் முடிந்தவரை நான் பின்பற்றினேன், பின்பற்றுகிறேன்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் சென்னை வருகிறார் என்றும் அவர் "துக்ளக்' ஆசிரியர் சோ சாரை சந்திக்கப் போகிறார் என்றும் எனக்கு தில்லியிலிருந்து தகவல் வந்தது. சோ சாரை சந்திக்கப் போனபோது அவர் அதை உறுதிப்படுத்தியதுடன், அவரது வீட்டுக்குச் சந்திரசேகர்ஜி இரவு உணவுக்கு வரும்போது என்னையும் வரும்படி அழைத்தார். தேசியத் தலைவர்கள் பலருடன் எனக்கு நெருக்கம் ஏற்படுவதற்கு, சோ சார் மிக முக்கியமான காரணம் என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன்.

சோ சாரின் வீட்டில் சந்திரசேகர்ஜியை சந்தித்தபோது, அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே இதுதான் - ""இப்போதெல்லாம் நீங்கள் அடிக்கடி தில்லிக்கு வருவதில்லையா அல்லது தில்லிக்கு வரும்போது என்னை சந்திப்பதில்லையா?''
நான் அவரை சந்திக்கவில்லை என்பது உண்மைதான் என்றாலும், தில்லிக்கு வருவதைக் குறைத்துக் கொண்டதாகச் சொன்னேன். "யங் இந்தியன்' என்கிற மாத இதழை சந்திரசேகர்ஜி நடத்திக் கொண்டிருந்தார். அதில் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். "நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனக் கட்டுரைகளும் அதில் வெளிவந்து கொண்டிருந்தன.

""நீங்கள் இனிமேல் மாதத்தில் ஒரு வாரமாவது தில்லிக்கு வந்து, "யங் இந்தியன்' இதழ் வேலையில் எனக்கு உதவியாக இருந்தால் நன்றாக இருக்கும். அச்சுக்குப் போவதற்கு முன்னர் ஒரு தடவை படித்துக் கொடுத்தால்கூடப் போதும். உதவ முடியுமா?'' என்று அவர் கேட்டபோது மறுக்கவா முடியும்?

சந்திரசேகர்ஜியைப் போல மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்து செயல்படும் அரசியல் தலைவர்கள் மிகவும் குறைவு. அதற்குப் பிறகு, மாதந்தோறும் சென்னை - தில்லி சென்று திரும்ப "யங் இந்தியன்' இதழின் சார்பில் விமான டிக்கெட் முன்கூட்டியே வழங்க ஏற்பாடு செய்து விட்டார் அவர். எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யும் "ஓபன் டிக்கெட்' வசதி அப்போது இருந்தது.

சந்திரசேகர்ஜி - சோ சார் சந்திப்பில் ஜெயலலிதா - சென்னா ரெட்டி பிரச்னை நிச்சயமாக விவாதிக்கப் பட்டிருக்க வேண்டும். அவர்கள் இன்னொரு தனி அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் அது குறித்த விவரங்கள் எனக்குத் தெரியாது. இரவு உணவு முடித்து, சந்திரசேகர்ஜி கிளம்ப இருந்தபோது சோ சார் என்னைக் காட்டி ஏதோ சொன்னார். என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள அருகில் சென்றேன். அவர்கள் ம. நடராஜன் குறித்தும், தினகரன் கைது குறித்தும் பேசுகிறார்கள் என்றும், அவர்கள் இருவரும் எனக்குத்தான் அறிமுகம் என்று சோ சார் தெரிவிக்கிறார் என்றும் புரிந்து கொண்டேன்.

அடுத்த நாள் காலையில் சந்திரசேகர்ஜி தில்லி கிளம்பிவிட்டார். அதற்கு அடுத்த வாரம் நானும் தில்லிக்குப் பயணமானேன்.

தில்லிக்குச் செல்லும் அன்றைய அதிகாலை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், விவிஐபி-க்களால் நிரம்பி வழிந்தது. அவர்களில் பெரும்பாலானோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள். தொழிலதிபர்களும் அரசியல் தலைவர்களும் நிறையவே இருந்தனர். முதல் வகுப்பில் இடம் கிடைக்காமல் பல பிரமுகர்கள் சாதாரண வகுப்பில் பயணித்தனர்.

சாதாரண வகுப்பில் முதல் வரிசையிலேயே எனக்கு இடம் தரப்பட்டிருந்தது. எனது அடுத்த சீட்டில் வந்து அமர்ந்தார் அப்போது ஆந்திராவின் கடப்பா மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, பின்னாளில் அவர் ஆந்திர முதல்வரானதும், அகால மரணமடைந்ததும், இப்போது அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக இருப்பதும் வரலாறு.

அதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் நான் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியைப் பார்த்திருக்கிறேனே தவிர, அவருடன் எனக்கு அறிமுகம் இருக்கவில்லை. அந்த விமானப் பயணம், எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இணக்கமான நட்புக்குப் பாலமிட்டது.

மருத்துவராக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பது மட்டுமல்லாமல், ராஜ சேகர ரெட்டிக்கும், டாக்டர் மாரி சென்னா ரெட்டிக்கும் வேறு பல ஒற்றுமைகளும் உண்டு. இருவருமே காங்கிரஸ்காரர்கள் என்பதுடன், ஆந்திர அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக வலம் வந்தவர்கள். சென்னா ரெட்டிக்கும் ஜெயலலிதாவுக்கும் எட்டாம் பொருத்தம் என்றால், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் ராஜசேகர ரெட்டிக்கு மரியாதையும், ஆதரவு மனநிலையும் இருந்தன.

சந்திரசேகர்ஜியின் "யங் இந்தியன்' குறித்தும் அதில் நான் பங்களிப்புச் செய்வது குறித்தும் தெரிவித்தேன். "நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனம் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

""இன்று மாலையில் எம்.பி.க்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் எனது ஃபிளாட்டுக்கு வாருங்கள். நாம் நிறையப் பேச வேண்டும்'' என்று நட்புறவுடன் சொன்னார் அவர். ""நீங்கள் வரும்போது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றைத் தெரிவிக்கிறேன்'' என்கிற பீடிகையுடன் அவர் சிரித்தார்.

அடக்க முடியாத ஆர்வத்துடன் மாலையில் அவரது ஃபிளாட்டுக்குச் சென்றேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com