'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 88

டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சொல்ல இருக்கும் அந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்னவாக இருக்கும் என்கிற ஆர்வத்துடன் எம்.பி.க்கள் அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள அவரது ஃபிளாட்டின் அழைப்பு மணியை அழுத்த
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 88

டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சொல்ல இருக்கும் அந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்னவாக இருக்கும் என்கிற ஆர்வத்துடன் எம்.பி.க்கள் அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள அவரது ஃபிளாட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன். உதவியாளர் ஒருவர் கதவைத் திறந்தார். பெயரைச் சொன்னதும் வந்து அமரச் சொன்னார்.

உள்ளே அறையில் மூன்று நான்கு பேர் தெலுங்கில் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் மட்டும் வெளியில் கேட்டது. யாரோ விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. அமைதியாக அடுத்த அரை மணிநேரம் காத்திருந்தேன். உதவியாளர் உள்ளேபோய் தகவல் தெரிவித்தாரா என்பதேகூட எனக்கு சந்தேகமாக இருந்தது.

வந்திருந்தவர்களில் ஒருவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தபோது, உள்ளே கட்டிலில் அமர்ந்திருந்த ராஜசேகர ரெட்டியின் பார்வையில் நான் தென்பட்டேன். அவசர அவசரமாக எழுந்துவந்து என் கையைப் பிடித்துக் குலுக்கினார். எதிர்பாராமல் சில விருந்தினர்கள் வந்துவிட்டதால், இன்னொரு நாள் சந்திக்கலாம் என்று அவர் சொன்னபோது எனக்குச் "சப்'பென்றாகிவிட்டது.

அந்த அதிர்ச்சி அளிக்கும் செய்திதான் என்ன என்று அவரிடம் எப்படிக் கேட்பது? ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டபடி, அவரிடமிருந்து விடை பெற்றேன். அதன் பிறகு பல முறை அவரை சந்திக்கத் தொலைபேசி வேண்டுகோள் விடுத்தேன். ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தாரே தவிர, சந்திக்க வரும்படி அழைக்கவில்லை.

விமானப் பயண சந்திப்பில் கிடைத்த தொடர்பு என்பதால், முக்கியமான அந்த விஷயத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ள அவர் விரும்பாமல்கூட இருந்திருக்கலாம். வெளியுலகுக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், பகிர்ந்து கொள்ள அவர் தயங்குகிறார் என்பது என்னை உலுக்கிக்கொண்டே இருந்தது. அவர் அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்று சொல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு அது குறித்துக் கவலைப்பட்டிருக்க மாட்டேன்.

எப்படி நாம் ராமாபுரம் தோட்டம், கோபாலபுரம், போயஸ்கார்டன் என்று சொல்கிறோமோ அதுபோல, முன்னாள் பிரதமர் சந்திர சேகர்ஜியை சந்திக்கப் போகிறோம் என்பதை செளத் அவென்யூ 3-ஆம் இலக்கத்துக்குப் போகிறோம் என்று தில்லியில் கூறுவார்கள். நான் போனபோது சந்திரசேகர்ஜி இருக்கவில்லை. அவரது தொகுதியான பலியாவுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். உதவியாளர் கெளதம் என்னைப் பார்த்ததும் உட்காரும்படி சைகை காட்டிவிட்டுத் தொலைபேசியைச் சுழற்றினார்.

மறுமுனையில் யார் பேசியது என்று தெரியவில்லை. சென்னையிலிருந்து நான் வந்திருப்பதைத் தெரிவித்த நேதாஜியின் (அப்படித்தான் அவர்கள் சந்திரசேகர்ஜியை அழைப்பது வழக்கம்) உத்தரவுப்படி, "யங் இந்தியன்' இதழ் அலுவலகத்தில் எனக்கு ஓர் அறை ஒதுக்கித் தரும்படி அவரிடம் தெரிவித்தார்.

எனக்கு வியப்பாக இருந்தது. சோ சார் வீட்டு விருந்தில் சந்தித்தபோது, பேச்சுவாக்கில் சந்திரசேகர்ஜி "யங் இந்தியன்' குறித்துக் குறிப்பிட்டார் என்றுதான் நினைத்தேன். அவர் தில்லிக்கு வந்து அது குறித்து உதவியாளரிடம் கட்டளைகள் பிறப்பித்திருந்ததை நான் எதிர்பார்க்கவில்லை. சந்திரசேகர்ஜியின் வீட்டிலிருந்து "யங் இந்தியன்' அலுவலகத்துக்கு அங்கிருந்த கார் ஒன்றில் நான் அனுப்பி வைக்கப்பட்டேன்.

இப்போது "தினமணி'  தில்லி அலுவலகம் இருக்கும் அதே ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள இந்திரப்பிரஸ்தா எஸ்டேட்டில் இருக்கிறது "நரேந்திர பவன்'. அங்கிருந்துதான் "யங் இந்தியன்' இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. சந்திரசேகர்ஜியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த அந்த இதழின் பொறுப்பாசிரியராக செயல்பட்டவர் ஓ.பி. ஸ்ரீவாத்ஸவா என்கிற சந்திரசேகர்ஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பர். 

"யங் இந்தியன்' இதழ் ஒரு வித்தியாசமான முயற்சி. நடப்பு நிகழ்வுகள் குறித்த அரசியல் விமர்சனங்கள், துறை வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என்று குறிப்பிடத்தக்க பல ஆளுமைகளின் கருத்துகளைத் தாங்கி வெளிவரும் இதழாக அது வெளிவந்தது. நிகில் சக்கரவர்த்தியின் "மெயின் ஸ்ட்ரீம்', "யங் இந்தியன்' இரண்டு இதழ்களும் கருத்துருவாக்க (ஒப்பீனியன் மேக்கிங்) இதழ்களாகவும், தகவல் சான்றாதாரமாகவும் (ரெஃபரென்ஸ்) கருதப்பட்டன. நாடாளுமன்ற, சட்டப்பேரவை நூலகங்களும், முக்கியமான ஆய்வு நூலகங்களும் அந்த இதழ்களை சேகரித்துப் பாதுகாத்தன. 

அப்படிப்பட்ட இதழில் எனக்கும் ஓர் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதில் பெருமிதம் எனக்கு ஏற்பட்டது. பிரபல எழுத்தாளர் இந்தர் மல்ஹோத்ரா, சோஷலிஸ்ட் தலைவர் சுரேந்திர மோகன், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெங்கடாசலய்யா, ஜே.எஸ். வர்மா, ட்ரிப்யூன் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் காளிநாத் ரே, முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் "யங் இந்தியன்' இதழில் எழுதி வந்தனர். பல பொருளாதார, வெளியுறவுத் துறை வல்லுநர்களின் கட்டுரைகளும் அதில் இடம் பெற்றன.

அந்த இதழில் "நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்தின் மூலம் நான் எழுதும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. 2007-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி "தினமணி' நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வரையில் "யங் இந்தியன்' இதழுடனான எனது தொடர்பு நீண்டு நின்றது.

தலையங்கங்களை எழுதிவிட்டு, சந்திரசேகர்ஜி எங்களின் பார்வைக்கு அனுப்புவார். அவரது கருத்துகளில் இருக்கும் தெளிவும், அதை ஆணித்தரமாக வெளிப்படுத்தும் விதமும் எனக்குத் தலையங்கம் எழுதும் சில உத்திகளைக் கற்றுத் தந்தன என்பதை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அதேபோல, பல வல்லுநர்களின் கட்டுரைகளை "யங் இந்தியன்' இதழுக்காக நான் படித்துப் பிழைளைத் திருத்திய (அப்போது கணினி வந்திராத அச்சுக் கோர்க்கும் காலத்தின் கடைசிக் கட்டம்) அனுபவமும் எனக்கு இப்போது மிகவும் உதவியாக இருக்கிறது.

சந்திரசேகர்ஜி நரேந்திர பவனத்துக்கு வருகிறார் என்றால், அந்த வளாகமே விழாக்கோலம் பூண்டுவிடும். அருகிலுள்ள பத்திரிகை அலுவலகங்களிலிருந்து பலரும் அவரை சந்திக்கக் கூடிவிடுவார்கள். முக்கியமான அரசியல் தலைவர்கள், எம்.பி.க்கள், கட்சித் தொண்டர்கள் என்று "ஜேஜே' என்று நரேந்திர பவனம் காட்சி அளிக்கும். 

சுரேந்திர மோகனும், முன்னாள் நிதியமைச்சர் மது தந்தவதேயும், இளம் துருக்கியர்களில் ஒருவரான மோகன் தாரியாவும் அவரை அடிக்கடி சந்திக்க வரும் ஆளுமைகள். ஒருநாள் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஒருவருடன் சந்திரசேகர்ஜியை சந்திக்க நரேந்திர பவனத்துக்கு வந்திருந்தார் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. எனது அலுவலக அறை ஜன்னல் வழியே அவர்கள் இருவரும் காரிலிருந்து இறங்கி, சந்திரசேகர்ஜியின் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தது தெரிந்தது. அதற்குப் பிறகும் எனக்கு நாற்காலியில் இருப்புக் கொள்ளவில்லை.

டாக்டர் ராஜசேகர ரெட்டியிடம், அந்த அதிர்ச்சி தரும் செய்தி என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. சந்திரசேகர்ஜியின் அறைக்கு வெளியே புல் தரையில் காத்திருந்தேன். அடுத்த சில நிமிடங்களில் ராஜசேகர ரெட்டியும் அவரது நண்பரும் வெளியே வந்து விட்டனர். என்னை அங்கே டாக்டர் ராஜசேகர ரெட்டி சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவரது பார்வையிலிருந்தும், சிரிப்பிலிருந்தும் தெரிந்தது. 

""இந்த இடத்தில் நீங்கள் எப்படி?'' என்று நட்புறவுடன் கேட்டார். "யங் இந்தியன்' பற்றிச் சொன்னேன். அவர்கள் கிளம்ப எத்தனித்தபோது, சற்று உரிமையுடன் டாக்டர் ரெட்டியிடம் மனதில் இருந்ததைக் கேட்டு விட்டேன். 

""அந்த அதிர்ச்சி தரும் செய்தியை நீங்கள் சொல்வதாகச் சொன்னீர்கள். இன்னும் சொல்லவில்லை...''

பக்கத்தில் இன்னொரு எம்.பி. இருந்தது அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதை நான் சட்டென்று புரிந்து கொண்டேன்.

""உங்களை சந்திக்க நான் எப்போது வரலாம்?''

""நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கிறது. இரண்டு, மூன்று நாள்கள் கழித்து மாலையில் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்'' என்றபடி விடைபெற்றார். அங்கிருந்த அலுவலகப் பணியாளர் ஒருவரை அனுப்பி இரண்டு "யங் இந்தியன்' இதழ்களைக் கொண்டுவரச் சொல்லி அவர்களுக்குக் கொடுத்தேன். அவர்களது கார் கிளம்பியது. 

எனது அறைக்குத் திரும்ப நினைத்த என்னை சந்திரசேகர்ஜியின் குரல் தடுத்து நிறுத்தியது. அவரது அறையில் இருந்து ஓ.பி. ஸ்ரீவாத்ஸவாவுடன் பேசியபடி வெளியே வந்து கொண்டிருந்தார். நான் அங்கேயே நின்றுவிட்டேன். வெளியே புல் தரையில் நாற்காலிகள் போடச் சொல்லி அவர் அமர்ந்தார். அவரைச் சுற்றி நாங்களும் அமர்ந்தோம். வேறு சிலரும் சேர்ந்து கொண்டார்கள். 

அப்போது ஆந்திராவில் விஜயபாஸ்கர ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. என்.டி. ராமாராவ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். நான் ராஜசேகர ரெட்டியுடன் பேசிக் கொண்டிருந்ததை சந்திரசேகர்ஜி கவனித்திருக்க வேண்டும்.

""என்ன சொல்கிறார் டாக்டர் ரெட்டி? டிசம்பரில் ஆந்திர சட்டப்பேரவைக்குத் தேர்தல் வரப்போகிறது. காங்கிரஸ் மீண்டும் ஜெயிக்குமா இல்லை என்.டி.ஆர். வெற்றி பெறுவாரா?''

""நான் அதைப்பற்றி கேட்கவில்லை. சென்னையிலிருந்து விமானத்தில் நாங்கள் ஒன்றாகத்தான் வந்தோம். அப்போது ஏதோ அதிர்ச்சியான செய்தி இருப்பதாகவும், வீட்டுக்கு வாருங்கள் சொல்கிறேன் என்றும் என்னிடம் கூறினார். ஆனால், நானும் அவரைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். சொல்லவில்லை. இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறார்.''

""எனக்கு ராஜசேகர ரெட்டியிடம் அதிக நெருக்கம் கிடையாது. நாடாளுமன்றத்திலும் சில கமிட்டிக் கூட்டங்களிலும் சந்தித்திருக்கிறேன். மிகவும் இனிமையாகப் பழகும் வெளித்தோற்றம் இருந்தாலும், அழுத்தமான அரசியல்வாதி. ஆந்திர அரசியலில் அல்லது தேசிய அரசியலில் இவர் வருங்காலத்தில் பெரிய அளவில் வலம்வரப் போகிறார், பார்த்துக் கொள்ளுங்கள்!''

சந்திரசேகர்ஜி என்னிடம் சொன்ன ஆண்டு 1994. அடுத்த ஐந்து ஆண்டுகளில் எம்.பி.யாக இருந்த டாக்டர் ராஜசேகர ரெட்டி, ஆந்திர மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரானார். 2004-இல் முதலமைச்சரானார். சந்திரசேகர்ஜியின் கணிப்புத் தவறவில்லை.

சற்று நேரம் வேறு ஏதேதோ பேசிக் கொண்டிருந்த சந்திரசேகர்ஜி, சட்டென்று என்னை நோக்கித் திரும்பினார்.

""அதிர்ச்சியான செய்தி இருக்கிறது என்று ராஜசேகர ரெட்டி சொன்னால், அதில் ஏதோ பின்னணி இருக்கக் கூடும். புதிதாகப் பழகிய உங்களிடம் அந்த ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள அவர் தயங்குகிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு உங்கள் மேல் நம்பிக்கை ஏற்பட்டால்தான் அவர் உங்களிடம் அந்த அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்து கொள்வார். எதற்கும் முயற்சி செய்து பாருங்கள்.''

""அப்படி என்ன அதிர்ச்சி தரும் தகவல் இருக்க முடியும்?''

""ராஜசேகர ரெட்டிக்குப் பிரதமர் அலுவலகத்துடனும், பிரதமருக்கு நெருக்கமானவர்களுடனும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதேபோல அவர் சோனியா காந்திக்கும் வேண்டப்பட்டவர். ராஜசேகர ரெட்டி சொல்லும் அதிர்ச்சித் தகவல் 7, ரேஸ் கோர்ஸ் சாலை (பிரதமரின் இல்லம்) அல்லது 10, ஜன்பத் (சோனியா காந்தியின் வீடு) தொடர்பானதாக இருக்கக்கூடும்.''

""தமிழக ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டியுடன் ராஜசேகர ரெட்டிக்கு நெருக்கம்தானே... அதனால் ஜெயலலிதா தொடர்பானதாக இருக்கக்கூடாதா?''
சந்திரசேகர்ஜி கலகலவென்று சிரித்தார். அந்த சிரிப்புக்கு எனக்கு அர்த்தம் விளங்கவில்லை!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com