சதுரங்கம்

புதுக்கோட்டை என்றாலும், ராஜா மாமா என்றாலும் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது சதுரங்க ஆட்டம்தான். வெள்ளையும் கருப்புமாய்க் கலந்திருக்கும் காய்களை -அதைப் போலவே நிறத்தில் சதுரம், சதுரமாக அமைந்திருக்கும்
சதுரங்கம்


புதுக்கோட்டை என்றாலும், ராஜா மாமா என்றாலும் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது சதுரங்க ஆட்டம்தான். வெள்ளையும் கருப்புமாய்க் கலந்திருக்கும் காய்களை -அதைப் போலவே நிறத்தில் சதுரம், சதுரமாக அமைந்திருக்கும் மரப் பலகையில் - அடுக்கி, போருக்கு ஆயத்தம் செய்கிற மாதிரியான அந்த விளையாட்டுஎன்னைச் சின்ன வயதிலேயே ஈர்த்து விட்டதற்கு ராஜா மாமாவும் ஒரு காரணம்.
பாசத்தை ராஜா மாமாவிடமிருந்துதான் பெற முடியும். அவர் கோபப்பட்டோ, வருத்தப்பட்டோ நான் பார்த்ததே கிடையாது. பெயருக்குண்டான மாதிரியே கம்பீரமாக - ஒரு ராஜாவைப் போலவே - பெருங்குரலில் சிரிப்பார் அவர். நல்ல, வட்டமான உருண்டை முகம். நெற்றி நிறையச் சந்தனப் பொட்டு. அதில் மையமாய் ஒரு தீற்றலாய்க் குங்குமம். தாடைக்கும் கீழே இறங்கி ஒரு வரப்பைப் போலப் படர்ந்திருக்கும் இரண்டு பக்கக் கிருதாக்கள். இரண்டையும் இணைப்பதைப் போல மூக்குக்குக் கீழே உரம்போட்டு வளர்க்கிற மாதிரியான அடர்த்தியான மீசை.
ராஜா மாமா ஒரு ராணுவ வீரர். அதை முதலில் சொல்லியிருந்தால் இந்தத் தோரணைகளும் வருணனைகளும் பொருத்தமாகவே அமைந்திருக்கும். ஒரு பெரிய பட்டாளத்தின் தளபதியாக இருந்தவர். ராஜா மாமாவின் அப்பா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் முன்னணிப் படை
வீரராக இருந்து பர்மா எல்லைப் பகுதியில் வீரமரணம் அடைந்தவர். ராஜா மாமாவின் இரு பிள்ளைகளும் சீனப் போரில் உயிர்த் தியாகம் செய்தவர்கள். அதனால் புதுக்கோட்டையில் அரண்மனைக்குப் பக்கத்தில் அமைந்திருக்கிற அவருடைய அந்த வீடே ஒரு ராணுவ முகாமைப் போலத்தான் இருக்கும். சுவரெங்கும் சீருடையோடு ராஜா மாமா பலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் அவர் பெற்ற விருதுகளும், சாதனைப் பட்டயங்களும் வரிசையாகத் தொங்கும்.
தமிழ், ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் இருக்கும் அந்த எழுத்துகளை எண்ணி எண்ணிப் படிக்கிற காலத்திலிருந்தே ராஜா மாமாவின்மீது எனக்குத் தணியாத காதல் வந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல அவரைப் பிரிய முடியாத அளவுக்கு ஆளாக்கியது அந்தச் சதுரங்க ஆட்டம்தான்.
கண்ணைப் பறிக்கிற மாதிரியான அந்தக் காய்களின் நிறத்திலும் வடிவத்திலும் என்னை முதல் தடவையிலேயே பறிகொடுத்து விட்டேன். அந்த ஆட்டத்தை வேடிக்கை பார்க்கக் கூடத் தெரியாத வயதில் மிகவும் பொறுமையாக எனக்கு அதைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார் மாமா. எனக்கென்றில்லை யார் வந்தாலும் அவர்களுக்கும் முறையாகக் கற்றுக் கொடுப்பார்.
எந்தப் பேச்சை எடுத்தாலும் அதில் சதுரங்கத்தைப் பற்றிய ஒரு செய்தியைக் குறிப்பாகவோ தத்துவமாகவோ இணைத்து விடுவார். இதனால் அவருக்கு எல்லாமே கைவந்த கலையாக இருந்தது.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுத் திரும்பினாலும் எந்த வேலைக்கும் போக மாட்டேன் என்று மறுத்து விட்டார் - என்று ஜெகதா அத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார். அது வருத்தமா பெருமையா என்பது யாருக்கும் தெரியாது.
""ஏலே மாப்ள.. நான் வீரன்டா.. அதிலயும் போர்வீரன். நான் எப்பவும் போராடிக்கிட்டே இருக்கேன். எனக்கு ஏதுடா ஓய்வு? அப்படியே ஓய்வு வந்தாலும் இன்னொருத்தன்கிட்ட ஏன்டா நான் போயிக் கையக் கட்டிக்கிட்டு அடிமை மாதிரி வேல செய்யணும். நான் ராஜாடா.. நான் என்னோட ராஜ்யத்தை ஜாம் ஜாம்னு பரிபாலனம் பண்ணிக்கிட்டிருக்கேன்' என்று வெற்றிலைக் கரைசல் வாயில் புரளப் புரளத் தன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்.
" "மருமகரே ஒங்க மாமாவோட ராஜ்யத்துல நானு ராணி. நீ தளபதி. இந்தப் படை, பரிவாரங்கள்லாம் எங்கன்னு கேட்டுச் சொல்லுய்யா' என்று என்னை மையப்படுத்திக் கொண்டு அத்தை மாமாவிடம் வம்பிழுப்பாள்.
""படை பரிவாரம்னா கேட்ட? அதுதான் தோட்டமெல்லாம் நெறைஞ்சு கெடக்கே.. தென்னையும், மாவுமா. அதுமட்டுமா.. நம்ம ஆடு மாடுகள்லாம் என்னன்னு நெனைச்ச.. நான் பாத்துப் பாத்துப் பயிற்சி குடுக்கிற பரிவாரங்கள்தானே! இந்தா! கால்மாட்டுல கெடக்குதே என் வீரச்சிங்கம் சிப்பி இது வெறும் நாயா? என்னோட பி.ஏ. மாதிரி. இதுக்கு நான் குடுத்திருக்கிற ட்ரெயினுங்குதான் ஒனக்குத் தெரியுமே. நைட்டுப் பூராம் வாட்ச்மேன் டூட்டியப் பாக்கும். காலையில பேப்பர்க்காரன் வந்தவுடனேயே அவன்கிட்டயிருந்து அத வாயில கெளவிக் கொண்டாந்து என்கிட்டக் குடுக்கும். நான் தோட்டத்துக் கௌம்புனா சாவிய எடுத்துக்கிட்டுப் பாடிகார்டு மாதிரி முன்னாலே போகுமே! என்னோட செருப்ப எங்க விட்டாலும் தேடியெடுத்துக் கொண்டாந்து காலடியிலே போட்டுறுமே. எல்லாம் என்னோட ட்ரெயினுங்குதானே. அதெல்லாம் ஒரு கலைடா மாப்ள.. ஒங்க அத்தைக்கு ஒண்ணும் புரியாது. ஆனா அவகிட்டயும் ஒரு கைவந்த கலையிருக்கு. என்னா தெரியுமா? சமையகக்கட்டுல பூந்துட்டான்னா போதும் எல்லாத்தையும் போட்டு உருட்டித் தெரட்டி.. நம்ம வாயையும் வயித்தையும் ஒரே நேரத்துல செக் வச்சி நம்மளத் தோக்கடிச்சுப்புடுவா.. அப்பறம் நாம சரண்டர்தான். மிலிட்டிரியிலயிருந்து திரும்பி வந்த அன்னைக்குச் சரண்டர் ஆனவன்தான் நானு.. இன்னும் எழுந்திருக்க முடியல. நான் வேற வேலைக்குப் போகாததுக்கு ஒங்கத்தையோட கைப்பக்குவமும் காரணமா இருக்கும்டா'' என்று சொல்வார்.
ராஜா மாமா வேறு வேலைக்குப் போகவில்லையே தவிர, ஒரு கணமும் சோம்பலாயிருந்து யாரும் பார்த்தது கிடையாது. அந்தந்த நேரத்துக்கு அந்தந்த வேலை என்று அட்டவணை போட்டுக் கொண்டு திட்டமிட்டு வேலை செய்வார். அவர் கைபட்டுத்தான் புதுக்கோட்டையில் கட்டாந்தரையாகக் கிடந்த இரண்டு ஏக்கர் நிலம் இப்போது சோலையாகப் பொலிவு பெற்றிருக்கிறது. இயற்கை வேளாண்மையில் அவருக்கு நல்ல ஆர்வமும், அனுபவமும் உண்டு. எந்த யோசனை சொன்னாலும் சதுரங்கத்தை உதாரணம் காட்டாமல் இருக்க மாட்டார்.
என்ன வேலை கிடந்தாலும் சரி மாலைப் பொழுதில் வீட்டுக்கு வெளியே இருக்கிற பெரிய திண்ணையில் தன்னுடைய சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி சதுரங்கப் பலகையைத் திறந்து விடுவார். ஊரிலிருக்கிற அவருடைய நண்பர்கள் பலர் வந்து குழுமி விடுவார்கள். பெரும்பாலும் பத்துப் பேருக்குக் குறையாது. ஆள் மாற்றி மாற்றி விளையாடுவார்கள். காபி, பலகாரம் எல்லாம் வரிசையாக வரும். மிச்சமிருக்கிறவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள். தோற்கிறவர்கள் வெளியேறிப் போகக் காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். முதல் களத்தில் உள்நுழைகிற மாமா ஒருபோதும் தோற்று வெளியேறியதை நான் பார்த்ததேயில்லை. யாரும் வராத சமயங்களில் அத்தையோடு விளையாடுவார். அப்படியில்லையென்றாலும் தானே காய்களை அடுக்கிக் கொண்டு இரண்டு பக்கமுமாகக் காய்களை நகர்த்தித் தனியே விளையாடுவார். மாலைப்பொழுது அவருக்குச் சதுரங்கம் இல்லாமல் கழியாது.
""பட்டாளத்தைத் தெரட்டிட்டாருய்யா ஒங்க மாமா.. இனிமே ஒரே அதகளம்தான்..'' என்று அத்தை கேலி செய்வாள். உண்மைதான். ஆட்டம் தொடங்கி விட்டால் அவருக்கு வேறெங்கும் கவனம் செல்லாது. ஒவ்வொரு காயின் நகர்வுக்கும் சரியான நேரம் எடுத்துக் கொள்வார். எதிரியை மடக்குகிற நேரத்தில் அவர் முகத்தில் ஏற்படுகிற வெற்றிப் பெருமிதத்தை வருணிக்க வார்த்தைகளே கிடையாது. வெற்றி உறுதி என்றானபின்னர், இறுதியாக வைக்கிற செக்மேட்டின் போது சிரிப்பார் பாருங்கள் ஒரு வெற்றிச் சிரிப்பு. அந்தக் காலத்தில் போர்களில் வென்ற பேரரசர்களின் முழக்கத்தைப் போலவே அது இருக்கும். அதைப் பார்ப்பதற்குப் பரவசமாக இருக்கும்.
""நானு பட்டாளத்தில இருந்தபோது எத்தனையோ நாடுகளோடு விளையாட்டு ஆட்டங்களப் பாத்திருக்கேன் மாப்ள. ஆனா நம்ம சதுரங்கத்துக்கு இணையான ஓர் ஆட்டம் ஒலகத்துல எங்கயுமே கெடையாது. அது ஏதோ போர்க்களத்துல யானையும், குதிரையும், ராஜாவும், ராணியும் சண்டை போடுற வெளையாட்டு மாதிரித்தான் தெரியும். ஆனா வாழ்க்கைக்குத் தேவையான அர்த்தம் அதுக்குள்ள எத்தனை இருக்கு தெரியுமா? வெற்றி தோல்வியெல்லாம் ரெண்டாம்பட்சம்யா.. கவனமாத் திட்டமிட்டுத் திட்டமிட்டுக் காய் நகத்துறப்போ இருக்கிற சொகம் இருக்கே.. விதியோட கயித்த இழுத்து விளையாடுற மாதிரித்தான் இந்த வெளையாட்டு. மூளையில இருக்கிற நரம்பெல்லாம் பொடைச்சிக்கிட்டு நிக்கிறதப் பாத்தா - நீ பாத்துருக்க மாட்டய்யா - எதிரிகளோட களத்துல எந்த நேரத்துல சாவம்னு தெரியாதுங்குற நெலைமையில நிப்பமோ அதத்தான்யா நான் நெனைச்சிக்கிவேன். தெனந்தெனம் ஏன் நான் இந்த ஆட்டத்தை வெளையாடுறன்னு தெரியுதா? போராடிக்கிட்டே இருக்கணுங்கிற ஊக்கத்த இந்த ஆட்டந்தாய்யா எனக்குக் குடுக்குது' ‘என்று பெருமை பொங்கத் தனது சதுரங்க ஆட்ட மோகத்திற்கான விளக்கத்தைச் சொல்வார் ராஜா மாமா.
""இந்த ஆட்டத்துல ராணிக்குத்தான் ரொம்பப் பவரு - அப்படித்தான் எல்லாரும் நெனைச்சிக்கிட்டிருக்காங்க. இருக்கலாம். ஆனா அப்படியில்ல. ராஜாவுக்குத்தான் எல்லாக் கவனிப்பும்.. ராஜாவச் செக் மேட் வச்சப்புட்டா அவ்வளவுதான் ஆட்டமே குளோஸ். அதுவரைக்கும் ராணியும், மத்த காய்ங்களும் என்ன ஆட்டம் வேண்னாலும் போடலாம். ராஜாவைப் பாதுகாக்க வேண்டிய வேலைதான் மத்த காய்க்கெல்லாம் முக்கியமானது. இப்பச் சொல்லு இந்த ஆட்டத்துல ராஜாவுக்குத்தானே ரொம்பப் பவரு. அதனால நானும் எப்பவும் ராஜாதான்யா' என்பார். உண்மைதானே!''
ஆனால், அத்தைக்குக் கோபம் வந்து விடும். ""ஆமா ராஜாவுக்கு ஒரு கால்தான்கிற மாதிரி. அவருக்கு ஒரு கட்டம்தான் பவரு. இங்கயும் அங்கயும் ஓடி ஒளிஞ்சிக்கிற வேண்டியது. ராணியோ, குதிரையோ, யானையோ, சிப்பாய்களோ வந்து தொணைக்கு நின்னு காப்பாத்தணும். இல்லாட்டி ராஜா மாட்டிக்கிட்டு முழிப்பாரு'' என்று பதிலுக்குப் பேசுவாள்.
""ஆமா.. ராஜாவைக் கவனிக்கத்தானே நீங்கள்லாம் ஆட்டத்துல எறங்குறீங்க.. அவரு வேடிக்கை பாப்பார். எல்லாத்தையும் வேடிக்கை பாப்பார். எதுலயும் அவர் தலையிடவே மாட்டார். அவர்தான்யா மெய்யான ராஜா. பட்டாளத்துல கூட நல்ல தளபதின்னா அவரு எதுவுமே சொல்ல மாட்டாரு. ஆனா அவரு என்ன நெனைக்கிறாருங்கிறதப் புரிஞ்சிக்கிட்டு மத்தவங்கள்லாம் சரியா வேல செய்வாங்க. அதுதான்யா தலைமைக்கு அழகு' என்று விடாமல் விளக்கம் தருவார் ராஜா மாமா.
"ஆமா! அப்படியெல்லாம் படைங்க அமைஞ்சாத்தான் அழகு. இல்லாட்டி ராஜா வாழ்க்கை கூஜாவாப் போயிடும். ஒங்க பெருமையெல்லாம் இந்த ஜெகதா ஆட்டத்துலதான் இருக்கு. இல்லைன்னா வேற மாதிரிதான்'' என்று அங்கலாய்த்துக் கொள்வாள்.
""அதனாலதானே நீ ராணி. ஒனக்குத்தானே முழுப் பவரும் குடுத்துருக்கேன். மாப்ள! எப்படிக் கொக்கி போடுறா பத்தியா ஒங்க அத்த.. உண்மைதான்யா.. அவ ஆட்டத்துனாலதான் நானும் கம்பீரமா ராஜாவா இருக்கேன். அதெல்லாம் கொடுப்பினை. எல்லா ஆட்டமும் ஒரே மாதிரித்தான் தொடங்கும். ஆனா காய் நகர நகரத்தான் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசுங்கிறது புரியும். நம்மோட பலமும் பலவீனமும் காய்கள்ல இல்ல மாப்ள.. காய்கள நகர்த்துறதுலதான் இருக்கு. வாழ்க்கையிலயும் அப்படித்தான். என்னா செல்வம், பெருமை, படிப்பு இருந்தாலும் அத நாம எப்படிப் பயன்படுத்திக்கிறோம்கிறதப் பொறுத்துத்தானே வெற்றி! என்ன நான் சொல்றது'' என்று வகுப்பெடுத்து விடுவார்.
இது எனக்கான உபதேசம் மட்டுமல்ல; ஊரில் இருக்கிற எல்லாருக்கும் இதுவே தத்துவமாக மாமாவால் உபதேசிக்கப்
படும். யாருக்கு என்ன துக்கம் என்றாலும் பொதுவான ஓர் ஆறுதலைச் சொல்லிவிட்டுச் சதுரங்கத்தைப் பிடித்துக் கொள்வார் மாமா. எங்கு சுற்றினாலும் அவருடைய பேச்சும் வாழ்க்கையும் அந்தக் கட்டங்களுக்குள்ளேயே சுற்றி வருவதைப் போலத்தான் இருக்கும்.
""கருப்பும் வெள்ளையுமா அறுபத்தி நாலு கட்டம். இங்கயிருந்து எட்டு. அங்கயிருந்து எட்டு. எப்படியளந்தாலும் அதுக்குள்ளதான். இதுதான்யா வாழ்க்கை. அறுபத்தி நாலுங்கிறத வயசுன்னு எடுத்துக்கிட்டாலும் சரி - வேற என்னன்னு எடுத்துக்கிட்டாலும் சரி. அளவு அவ்வளவுதான். இந்தக் காய்கள் இருக்கே. கருப்பும் வெள்ளையுமா - இதெல்லாம் என்னாங்கிற. இன்பமும் துன்பமும்தான். ஒண்ணோட ஒண்ணு அடிச்சிக்கிருது. எத எது செயிக்கிறதுன்னு ஒரே போராட்டம். இது அத அடிக்கிறதும் அது இத அடிக்கிறதும் ஒவ்வொருத்தன் வாழ்க்கையிலும் இப்படி மாறி மாறித்தானே வந்துக்கிட்டிருக்கு. எது ஜெயிக்கிதுங்கிறத விட - எது ஜெயிச்சாலும் தோத்தாலும் வெளையாண்டே தீரணும். கடைசி வரைக்கும்.
கடைசி வரைக்கும். நகர்ந்துக்கிட்டேயிருக்கணும். எங்களுக்குப் பட்டாளத்துலயும் அதுதான்யா பாடம். எதிரியோட இலக்கை நோக்கி - வெற்றியோ தோல்வியோ அது அப்பாற்பட்டது - உசுரு இருக்கிற வரைக்கும் நகர்ந்துக்கிட்டேயிருக்கணும். நம்மகிட்ட படை, பட்டாளம், ஆயுதம் எது இருக்கோ இல்லையோ - ஒடம்புல கூடச் சக்தி இருக்கோ இல்லையோ! உசுரு இருக்கிற வரையிலும் ஒரு போர்வீரன் நகந்துக்கிட்டேதான் இருக்கணும். வாழ்க்கைக்கும் அதுதான்யா கணக்கு. கட்டங்களையும், காய்கள் அடிவாங்குறதையும் பாத்து மெரள்றவன் இந்த ஆட்டத்துல எறங்க முடியாது. தலைசுத்தி விழுந்துருவான். அவனுக்குத் தெகிரியம் பத்தல்லன்னு அர்த்தம். அதுமாதிரி சோகத்திலும் கஷ்டத்திலும் துவண்டு போயிறக் கூடாது. இது வாழ்க்கைக்கான பாடம்.
இந்தச் சதுரங்கக் கட்டத்துக்குள்ளதான்யா நான் வாழ்க்கைப்பாடமும் படிச்சேன். பட்டாளத்துப் பாடமும் படிச்சேன். வெளியில வாங்கின அடியெல்லாம் கொஞ்சமுய்யா. எதிரிங்ககிட்ட நானே நெறைய அடிபட்டிருக்கேன். ஆனா அதவிடப் பெரிய அடி ஒங்க அத்தானுங்க ரெண்டு பேரும் யுத்தத்துல செத்துப் போனங்கன்னு செய்தி வந்தப்போ - ஆட்டத்துல நமக்கு முக்கியமான காய்கள் வெட்டுப்பட்டுப் போனா எப்படியிருக்குமோ அப்படியிருந்துச்சுய்யா எனக்கு. பட்டாளத்துக்காரன் சொந்த
பந்தம்ங்கிற நெனைப்பெல்லாம் இல்லாதவன். நாட்டுக்கே தன்னை அர்ப்பணிச்சவன். பெத்த புள்ளையே ஆனாலும் அவங்களும் வீரர்கள்தான். அவங்க வீரமரணம் அடைஞ்சா ஒரு சொட்டுக் கண்ணீரு சிந்தக் கூடாது. பெருமையா நெனைச்சிக்கிட்டு நிமிந்து நிக்கணும். இதுதான் ராணுவ ஒழுங்கு. மத்தவங்களுக்கு எப்படியிக்குமோ தெரியாது. நானு அப்படிப் பெருமையா நின்னேன். அதுக்குக் காரணம் எங்க அப்பாரு. என்னோட சின்ன வயசுல அவரு பர்மாச் சண்டையில செத்துப் போயிட்டாருன்னு சேதி வந்தப்ப எங்கம்மா என்னைய அழவே விடலே. அவளும் அழல.. நாம ஏன்யா அழணும். வீரன்க அழக்கூடாது என்று என்னை ஊக்கப்படுத்தினாங்க.
எங்கம்மா எனக்கு என்ன கத்துக்குடுத்தாங்களோ, அதயேதான் நானும் எம்புள்ளைங்களுக்கும் கத்துக் குடுத்தேன். கல்யாணம் பண்ணிப் பாக்கல! கொழந்த குட்டிகளைப் பாக்கல. ஒண்ணும் இல்லன்னு பலபேரு எங்கிட்ட அவங்களப் பத்திக் கொற சொல்லுவாங்க... அதெல்லாம் மத்தவங்களுக்கு... நாங்க சதுரங்க ஆட்டத்துக் காய்ங்க மாதிரி. எந்த நேரமும் களத்துல நிக்கிறவங்க. மத்தவங்களுக்கு இது வெளையாட்டாத் தெரியலாம். வேடிக்கையாத் தோணலாம். என்னய மாதிரிப் பலபேருக்கு இதுதான்யா வாழ்க்கை. எனக்கும் அதுதான் நிரந்தரம்'' -என்று மாமா தன்னுடைய சொந்தக் கதையைச் சிலரிடம் மட்டும் சொல்லிக்
கேட்டிருக்கிறேன் நான்.
அத்தைக்கு அதைவிடவும் பெரிய வைராக்கியம். மாமாவைப் பற்றி வம்பு பேசுவாளே தவிர ஒருநாளும் குறைப்பட்டுக் கொண்டதில்லை. பெற்ற பிள்ளைகளைக் காவு கொடுத்து விட்டாரே என்று முறையிட்டு ஒருசொல்லும் சொல்லி யாருமே கேட்டதில்லை. ஆட்டத்தில் காய்கள் வெட்டப்படுவதைக் குறித்து யாராவது வருத்தப்பட்டால், ""எங்க போகப்போவுது அடுத்த ஆட்டத்துல எல்லாமே உள்ள வந்துரும்ல' என்று பிறவித் தத்துவத்தை மிகச் சாதாரணமாகச் சொல்லி வைப்பார் மாமா.
என்னைப் பட்டாளத்தில் சேர்த்து விடுவதற்கு மாமா ஆசைப்பட்டார் என்று அம்மா சொல்லியிருக்கிறாள். ஆனால் அவர் என்னிடம் நேரடியாக எப்போதும் சொன்னதில்லை. ""குடும்பத்துல ஒருத்தரு கட்டாயம் பட்டாளச் சேவையில இருக்கணும் வேற நாடுகள்லயயெல்லாம் பொறக்கிற தலைச்சன் புள்ளய, கருவுல இருக்குறப்பவே பட்டாளத்துக்குன்னு எழுதி வச்சிருவாங்க'' என்பார். ஆனால் தன் விருப்பத்தை நிறைவேற்றுமாறு யாரையும் அவர் வற்புறுத்தியதில்லை.
""அதெல்லாம் அவனவன் தலையெழுத்து. எல்லாருமா வீரராப் பொறக்குறானுங்க! அதுக்கெல்லாம் அமைப்பு வேணும்'' என்பார்.
எனக்கும் ஆசைதான் பட்டாளத்தில் சேர்வதற்கு ஆனால் அவர் சொன்ன மாதிரியான அந்த அமைப்பு எனக்கில்லை. ஆனால், அதற்குப் பதிலாக அவரிடமிருந்து சதுரங்க ஆட்டத்தை முழுமையாகக் கற்றுக் கொண்டேன். ஆட்டத்தின் நெளிவு சுழிவுகள், உத்தித் தந்திரங்கள், எதிராளியை மடக்குகிற நுட்பங்கள் என எல்லாவற்றையும் ஓர் ஆசிரியரைப் போல இருந்து போதித்தார். ஆனால் என்ன பாடுபட்டும் அவரை நான் ஜெயித்தது கெடையாது.
""உறுதி மனசுல இருந்தாப் போதும். அதுதான் இந்த ஆட்டத்தோட வெற்றியே. கொஞ்சங்கூட நடுங்காமக் கலங்காமக் காய்களை நகர்த்திக்கிட்டே நகர்ந்துக்கிட்டிருக்கணும். வெட்டுப்படுற காய்களைப் பத்திக் கவலைப்படவே கூடாது. எத்தனை காயி வெட்டுப்பட்டுச்சுன்னு பாக்குறது ஆட்டமில்லை. முடிவா யாரு ஜெயிச்சாங்கங்குறதுதான் முக்கியம். அப்படி ஜெயிக்கலன்னாலும் பரவாயில்லை. தோத்துப் போனாலும் அதக் கம்பீரமா ஏத்துக்கணும். வருத்தப்படவோ ஏமாத்தமடையவோ இந்த ஆட்டத்துல ஒண்ணுமில்லை. வெளையாடணும். வெளையாடணும் அதுதான். வாழ்க்கைக்கும் அதுதான் அடிப்படை'' என்று சதுரங்கத்தையும் வாழ்க்கையையும் கட்டத்திற்குள்ளேயே அடக்கி விடுவார்.
நானும் அவரோடு நேரம் கிடைக்கிற போதெல்லாம் விளையாண்டிருக்கிறேன். அத்தையும் கூட இருந்து காய்களை நகர்த்துவதற்கு யோசனை சொல்லுவாள்.
""என்ன ரெண்டு பேரு கூட்டுப் படைய வச்சித் தாக்குறீங்களா? அதுக்கெல்லாம் இந்த ராஜா அசர மாட்டான்'' என்று சர்வ சாதாரணமாக விளையாடுவார்.
என்னுடைய மனம் வருந்தக்கூடாது என்பதற்காகப் பலமுறை ராணியை வெட்டாமல் விட்டு விடுவார். எனக்கு அந்தச் சமயங்களில் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். களத்தில் விட்டுக்கொடுப்பதைப் பெறுவது கேவலமில்லையா? அப்படித்தானே அவர் சொல்லியிருக்கிறார். அதனால் மீண்டும் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்குவேன். சிரித்தபடியே எல்லா நகர்வுகளையும் சமாளிப்பார். மற்ற காய்கள் எல்லாவற்றையும் வெட்டுக் கொடுத்து விடுவார். சமயங்களில் ராணியையும் கூட எனக்காக விட்டுக் கொடுப்பார். ஆனால் கடைசியில் ஒரு சிப்பாயை வைத்துக் கொண்டு எனது ராஜாவைச் செக்மேட் செய்து ஆட்டத்தை முடித்து விட்டுச் சிரிப்பார்.
""ராஜாவுக்கு ராணி ரொம்ப முக்கியம். ஆனா எந்தக் காயையும் ராணிய மாதிரி மாத்திக்கிற ராஜா இருந்தாச் சுளுவா ஜெயிச்சிடலாம்'என்று நுட்பம் சொல்வார். அப்படித்தான் பலமுறை வென்றிருக்கிறார்.
""ஒருதடவயாவது புள்ளக்கித் திருப்திக்கித் தோத்தாத்தான் என்ன? கொறைஞ்சா போவீங்க'' என்று அத்தை நான் தோற்று முகம் வாடும் வேளையில் எனக்காகப் பரிந்து பேசுவாள்.
""அந்தக் கதையே வேண்டாம். ஆட்டம்னா ஆட்டம்தான்.. பெத்த புள்ளையே ஆனாலும் இங்க எதிராளிதான். விட்டுக்குடுக்கிறதுக்கு வெளையாடாமலே இருந்துறலாம். ஜெயிக்கணுங்கிற ஆர்வத்தை அது கெடுத்துப்புடும். அப்புறம் யாரோட வெளையாண்டாலும் நமக்கு விட்டுக் கொடுப்பாங்க மாட்டாங்களான்னு ஏங்குகிற மாதிரி ஒரு மனநிலை வந்துடும். நம்ம தெறமையெல்லாம் வளர்றதுக்குப் பதிலா வீணாப் போயிருமில்ல. இந்த ஆட்டம் இல்லாட்டி அடுத்தாட்டம் ஜெயிக்கணும்கிற உத்வேகம் வந்துக்கிட்டே இருக்கணும். திரும்பத்திரும்ப விடாம முயற்சி பண்ணுனா ஜெயிச்சுப்புடலாம். ஒருதடவக் கஷ்டப்பட்டு ஜெயிச்சிட்டா அதுல இருக்கிற சொகமே தனிதான்'' என்று மீண்டும் தத்துவார்த்தமாக விளக்கம் சொல்வார் மாமா.
அவரிடம் சதுரங்கம் கற்றுக் கொண்ட புண்ணியத்தில் நான் விளையாடுகிற யாருடனும் தோற்றதில்லை என்று பெயர் வாங்குகிற அளவுக்குத் தேர்ந்து விட்டேன். என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பல சோதனைகளுக்கும்
கூடச் சதுரங்க ஆட்டத்தின் விதிகளே பாடமாக இருந்து என்னை வழிநடத்தின.
காலம்தான் வெகுவேகமாக உருண்டோடுகிறதே. அமெரிக்காவில் பணிவாய்ப்புக் கிடைத்துப் போய் மூன்று ஆண்டுகள் கழித்து ஊருக்குத் திரும்பியபோதுதான் அம்மா சொன்னாள். " "ஜெகதா அத்தை இறந்து விட்டார்'' என்று. நெஞ்சு வலித்தது. மாமாவை உடனே பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
வழக்கம் போலத் திண்ணைக்கு அருகில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்திருந்தார் ராஜா மாமா. முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிகளும் இல்லை. அவருக்கு எதிரே திண்ணையில் சதுரங்கக் கட்டப் பலகை விரிக்கப்பட்டிருந்தது. இவர் பக்கம் இருந்த காய்கள் அனைத்தும் வெட்டுப்பட்டு வெளியே கிடந்தன. ராணியும் சேர்த்துத்தான். ராஜாவை மட்டும் நகர்த்தியபடியே தனியே ஆடிக்கொண்டிருந்தார் மாமா. என்னைப் பார்த்ததும் எப்போதும்போல உற்சாகமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
""என்னா மாப்புள அமெரிக்கப் பட்டாளமெல்லாம் எப்படியிருக்கு?' என்றார் மாமா. உள்ளுக்குள் இறுகிப் போயிருந்தாலும் என்னிடம் அதைக் காட்டிக் கொள்ளவில்லை என்பது தெரிந்தது. நான் தர்மசங்கட்டமாக உணர்ந்தேன்.
"என்னய்யா.. அத்த இல்லன்னு கவலைப்படுறியா.. அவ ஆட்டத்த முடிச்சிக்கிட்டா.. இப்ப நாந்தான் தனியா இருக்கேன். ராணி இல்லன்னாலும் ராஜா ஆட்டத்தத் தொடர்ந்துதானே ஆகணும்! அதுவரைக்கும் ஆட்டம் முடியாதே. கடைசி நகர்வு வரைக்கும் ராஜாவுக்குப் பொறுப்பிருக்கே'' என்றபடி ராஜா காயை நகர்த்திக் கொண்டே சொன்னார்.
""பாரு வந்த புள்ளைய என்ன சாப்பிடறன்னு கூடக் கேக்காம தத்துவம் பேசிக்கிட்டிருக்கேன். டீ போடட்டுமா'' என்று வெகு இயல்பாகக் கேட்டார். எனக்கு வருத்தமாக இருந்தது. அவருடைய தோள்களில் சாய்ந்து கொண்டு அழலாம் என்று கருதி வந்த எனக்கு எத்தனை பெரிய ஏமாற்றம். அவர் எனக்கு ஆறுதல் சொல்லுகிற மாதிரியான சூழ்நிலை உருவாகிப் போனது.
நான் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கவனித்து விட்டு, ""என்ன அத்தைய நெனைச்சிக்கிட்டியா!. எங்கய்யா போகப் போறா.. அடுத்த ஆட்டத்துல எங்கூட வந்துறப் போறவதானே? முடிஞ்சதப் பத்தி நெனைச்சிக்கிட்டே இருந்தா அடுத்த நகர்வுக்கு நாம போக முடியாது. ஆட்டமும் முடியாது. வாய்யா ஒரு ஆட்டம் போடலாம். இப்பவாவது ஜெயிச்சிருவியா' என்றார் ராஜா மாமா.
மாமா எப்பவுமே ராஜாதானே! அவரை ஜெயிக்க முடியுமா என்ன?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com