'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 113

அக்பர் ரோடு காங்கிரஸ்  அலுவலகத்தில் உள்ள சாகர் ரத்னா உணவகத்தில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 113

அக்பர் ரோடு காங்கிரஸ்  அலுவலகத்தில் உள்ள சாகர் ரத்னா உணவகத்தில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.  காங்கிரஸ் கட்சி அலுவலகம் சாதாரணமாகவே மதியத்துக்குப் பிறகுதான் சுறுசுறுப்படையும். குளிர்காலம் வேறு தொடங்கிவிட்டால் கேட்கவா வேண்டும்.

அங்கிருந்து பொடி நடையாக மெளலானா ஆசாத் சாலை, ஜன்பத் வழியாக அசோகா சாலையிலுள்ள பாஜக அலுவலகத்தை அடைந்தேன். பாஜகவின் தலைமை நிலைய பொறுப்பாளராக இருந்த கட்சியின் துணைத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி தனது அறையில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். 

காமராஜருக்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் தேசியக் கட்சியின் தலைவராக இருந்த இரண்டாவது தமிழர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி. மதுரையைச் சேர்ந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தி, பாஜகவின் தேசியத் தலைவராக இருந்தவர். அவரை தமிழகமும், தமிழக பாஜகவும் மறந்துவிட்டது வேதனை அளிக்கிறது.

சில நிமிடங்களில், என்னை உள்ளே வரச் சொல்லி அழைத்தார் ஜனா. கிருஷ்ணமூர்த்தி. அவருடன் பேசிக் கொண்டிருந்தவர் விடை பெற்றுக் கிளம்பினார். எனக்கு அவரிடம் அறிமுகம் கிடையாது. ஆனாலும், அவர் சம வயதினர் என்பதாலும், ஏதோ ஒருவித கவர்ச்சி இருந்ததாலும் கரம் கூப்பினேன். அவரும் சிநேக பாவத்துடன் வணக்கம் தெரிவித்தபடி நகர்ந்தார். ஜனா. கிருஷ்ணமூர்த்தியிடம் "அவர் யார்?' என்கிற கேள்வியுடன் எதிரில் அமர்ந்தேன்.

""உங்களுக்கு அவரைத் தெரியாதா? அவரை அறிமுகப்படுத்தி இருப்பேனே... அவர் பாஜக தேசியச் செயலாளர்களில் ஒருவராக சமீபத்தில் பதவி ஏற்றிருக்கிறார்.  அவர் பெயர் நரேந்திர மோடி. ரொம்பத் திறமைசாலி. நீங்கள் அவரைக் கட்டாயம் பார்க்க வேண்டும்.''

""கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது. 

சந்திக்க வாய்ப்புக் கிட்டவில்லை.''

""நீங்கள் நிச்சயம் சந்திக்க வேண்டிய ஒருவர். அத்வானிஜியின் ரத யாத்திரை, ஜோஷிஜியின் "ஏக்தா யாத்திரை' இரண்டையும் ஒருங்கிணைத்தவர் அவர்தான். ஆர்.எஸ்.எஸ்.லிருந்து கட்சிக்கு அனுப்பப்பட்டவர். ஹரியாணா, ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களின் பொறுப்பாளராக இருக்கிறார். அடுத்த தடவை நீங்கள் வரும்போது நானே அறிமுகப்படுத்துகிறேன்.''

இன்றைய பிரதமர் நரேந்திர மோடியுடனான எனது முதல் சந்திப்பு, அப்படித்தான் நிகழ்ந்தது. ஜனா. கிருஷ்ணமூர்த்தி அப்போது என்னிடம் நரேந்திர மோடி குறித்து, இன்னொரு கருத்தையும் தெரிவித்தார் - ""வருங்காலத்தில் பாஜகவை வழிநடத்தப் போகும் முக்கியமான தலைவர்களில் இவரும் ஒருவராக இருப்பார்!''

தமிழக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், நிகழ்வுகள் குறித்து நானும் ஜனா. கிருஷ்ணமூர்த்தியும் பேசிக் கொண்டிருந்தோம். சோ சார் வந்தது, பிரதமரைச் சந்தித்தது, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம், ஜெயலலிதா அரசின் செல்வாக்குச் சரிவு என்று பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். மதுரை குறித்தும், அவரது ஜனசங்க நாள்கள் குறித்தும் பல சுவையான செய்திகளை அவர் பகிர்ந்து கொண்டார். 

அப்போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் புயல் நுழைவதைப்போல உள்ளே நுழைந்தார் ஒரு பெண்மணி. அவர் வேறு யாருமல்ல, பின்னாளில் மத்திய பிரதேச முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த பாஜக தலைவர் உமா பாரதிதான்!

எனக்கு அவர் ஏற்கெனவே நன்றாக அறிமுகமானவர் என்பதால், அதற்குப் பிறகு உரையாடல் களைகட்டியது. உமா பாரதி பேசத் தொடங்கிவிட்டால், மற்றவர்களுக்கு அவர் வாய்ப்பளிப்பது குறைவு. அதற்காக யாரும் வருத்தப்படவும் மாட்டார்கள். ஏனென்றால், அவ்வளவு சுவாரஸ்யமாக அவர் பேசிக் கொண்டிருப்பார்.

உமா பாரதி மனிதாபிமானம் மிக்க பெண்மணி என்பது மட்டுமல்லாமல், தீவிர பெண்ணியவாதியும்கூட. அரசியலில் நகர்ப்புற, படித்த, மேல்தட்டு மகளிர் மட்டும்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்கிற விதியை மாற்றி அமைத்ததில் உமா பாரதிக்குப் பெரும்பங்கு உண்டு. கல்யாண் சிங்கும், உமா பாரதியும் பாரதிய ஜனதா கட்சியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் முகங்களாகப் பார்க்கப்பட்டனர். 

சிறு வயதிலேயே உமா பாரதிக்கு இதிகாச, புராணங்களில் நாட்டம் ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, ஆன்மிக உரைகள் நிகழ்த்தத் தொடங்கிவிட்டார். ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட உமா பாரதி "பகவத் கீதை' சொற்பொழிவுகள் நடத்துவதைப் பார்த்து அவரை "தெய்வக் குழந்தை' என்று மத்திய பிரதேசத்தில் கொண்டாடினார்கள். 

அவரது உரையைக் கேட்ட குவாலியர் மகாராணி ராஜமாதா விஜய ராஜே சிந்தியா, அவரை அரசியலுக்கு அழைத்து வந்தார். அதன் பிறகு உமா பாரதியின் வாழ்க்கையே திசை திரும்பி விட்டது. 

இந்திரா படுகொலையைத் தொடர்ந்து நடந்த 1984 தேர்தலில் கஜுராஹோ தொகுதியில் மக்களவைக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தது மட்டும்தான் அவரது ஒரே ஒரு தேர்தல் தோல்வி. 1989 முதல் 1999 வரை தொடர்ந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003-இல் மாநில அரசியலுக்குச் சென்று, மத்திய பிரதேச முதல்வராகவும் சிறிது காலம் இருந்தார் என்பது பிற்கால நிகழ்வு.

அன்றைய பாஜகவில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்த உமா பாரதி, என்னைப் பார்த்துக் கேட்டார்:

""காங்கிரஸ் கட்சி ரஜினிகாந்தை அரசியலுக்குக் கொண்டுவரப் போகிறதாமே. அவர் வருவாரா?''

""அவர் வருவாரா என்பதே இன்னும் முடிவாகவில்லை, பிறகுதானே அவர் காங்கிரஸில் சேர்வது?''

""தென்னிந்திய நடிகர்கள் தாங்களே கட்சி தொடங்கித் தலைவர்களாகத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் எந்தக் கட்சியிலும் சேர விரும்புவதில்லை என்று நான் நினைக்கிறேன். ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றவர்கள் யாராவது பாஜகவில் சேர்ந்தால்தான் நமது கட்சியை உங்க மாநிலத்தில் வளர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன்...''

உமா பாரதி பேசிக் கொண்டே போனார். கொஞ்சம் ஆங்கிலத்திலும், நிறைய ஹிந்தியிலுமாகப் அவர் பேசிக் கொண்டிருப்பதை நானும் ஜனா. கிருஷ்ணமூர்த்தியும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தோம். 

""நான் ராஜமாதாவைப் பார்க்கப் போகிறேன்'' என்றபடி எங்களிடம் விடைபெற்றுக் கொண்டார் உமா பாரதி. 

அவர் போன பிறகு ஜனா. கிருஷ்ணமூர்த்தி பேசத் தொடங்கினார்:

""உமா பாரதி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. திராவிட இயக்கங்கள் தங்களது பரப்புரைகளாலும், பேச்சாற்றலாலும் அரசியல் மட்டுமல்லாமல் சினிமா, கல்வி, பத்திரிகைகள் என்று எல்லா தளங்களிலும் ஊடுருவித் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பிரசாரங்களை முறியடிக்க காமராஜரின் காங்கிரஸôலேயே முடியவில்லை. ரஜினிகாந்த் மாதிரி மக்கள் செல்வாக்குள்ள ஒருவரால்தான் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.''

""அரசியல் ரீதியாக மாற்றம் ஏற்படாது என்று நினைக்கிறீர்களா?''

""ஊழல் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகத் தமிழகத்தில் மாறிவிட்டது. கல்வியின் மூலம் ஏற்படும் விழிப்புணர்வும், மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமையும் வந்தால் சாத்தியமாகலாம். காங்கிரஸை அகற்ற திமுகவுக்கு ஒரு அண்ணா தோன்றினாற்போல, திராவிடக் கட்சிகளை அகற்ற இன்னொரு அண்ணாதான் தோன்ற வேண்டும்.''

அவரிடம் விடைபெற்று சன்சத் பவனை (நாடாளுமன்றம்) நோக்கி நடையைக் கட்டினேன்.  குளிர் காலத்தில், தில்லி சாலைகளில் நடப்பது என்பது அலாதி சுகம். ஆங்காங்கே உள்ள நாற்சந்தி வளையங்களில் பூத்துக் குலுங்கும் செடிகளின் அழகைப் பார்த்தபடி நடக்கும்போது, புது உற்சாகமே பிறக்கும். வெயில் இருந்தாலும், லேசான குளிர் காற்றும் வீசும் அந்த இன்பத்தை அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்னைக் கடந்து சென்ற வாடகை வாகனம் நின்றது. உள்ளே இருந்தவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த செ. மாதவன். அப்போது அவர் அதிமுக உறுப்பினராக இருந்தாலும், கட்சித் தலைமையிடம் நெருக்கமாக இருக்கவில்லை.  சற்று ஒதுங்கியே இருந்தார். அவரது காரில் ஏறிக்கொண்டு நானும் அவருடன் நாடாளுமன்ற நூலகம் சென்று அமர்ந்தோம்.

சோ சார் வந்ததிலிருந்து, ஜனா. கிருஷ்ணமூர்த்தி அறையில் நடந்தது வரை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். நரசிம்ம ராவின் நிலைப்பாடு குறித்து அவரிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்று நான் நினைத்தது சரியாகவே இருந்தது. ரஜினிகாந்த் பற்றிய செய்திகள் குறித்து அரசியல் அனுபவசாலியான செ. மாதவன் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்.

""நரசிம்ம ராவ் ரஜினிகாந்தைக் காங்கிரஸில் சேர்த்துக் கொள்ள ஏன் தயங்குகிறார்?''

""அவர் எங்கே தயங்குகிறார், ரஜினிகாந்த் தான் தயங்குகிறார். காங்கிரஸில் சேர்ந்தால், தனது சினிமா வாழ்க்கையும் சேர்த்து போய்விடும் என்று அவர் பயப்படுகிறார். வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன், அதிமுக ஆட்சியைக் கலையுங்கள் என்று ரஜினிகாந்த் நிர்பந்தித்தால், அதைப் பிரதமர் எப்படி ஏற்றுக் கொள்வார்?''

""ரஜினிகாந்த் அப்படி நிர்பந்திக்கிறார் என்று உங்களிடம் யார் சொன்னது? அவர் இன்னும் பிரதமரை சந்திக்கவே இல்லை. தொலைபேசியில் பிரதமர் நலம் விசாரித்திருக்கிறார் அவ்வளவுதான். தில்லிக்கு வந்து சந்திக்கும்படி கூறியிருக்கிறார்.''

""அரசியலில் பேசுவது என்பதன் பின்னால், பேசாதது என்று ஒன்று உண்டு. ரஜினிகாந்தின் ஆதரவை நம்பி காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு அத்தனை தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து விட்டால் என்னவாகும் என்று பிரதமர் யோசிக்கத்தானே செய்வார்?''

""காங்கிரஸை நம்பி ஆதரவு கொடுத்து, அந்தக் கட்சி வெற்றி பெறாவிட்டால், தனது சினிமா வாழ்க்கை பாதிக்கும் என்று ரஜினியும் யோசிப்பாரே...''

""அதனால்தான், முடிவுக்கு வராமல் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சோ சாரிடம் நானும் பேசினேன். அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறார், சரி. அப்படி அகற்றினால் திமுகதான் ஆட்சிக்கு வருமே தவிர காங்கிரஸ் அல்ல என்பதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்.''

""நரசிம்ம ராவ் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?''

""அவர் என்ன செய்வார் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. அவருக்குச் சில பிரச்னைகள் இருக்கின்றன. முதலில், இப்போது இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையை - அதாவது மூப்பனார், வாழப்பாடி போன்றவர்களை - வைத்துக் கொண்டு தனித்துப் போட்டியிடுவது தற்கொலை முயற்சி என்று அவருக்குத் தெரியும். திமுகவுடன் கூட்டணி என்பது சாத்தியமே இல்லை. சோனியா காந்தியை பகைத்துக் கொள்ள முடியாது என்பது மட்டுமல்ல, திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அதிமுகவுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்துவிட்டு எந்த முகத்துடன் கூட்டணி வைத்துக் கொள்வார்?''

""அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக சீதாராம் கேசரி கூறியிருக்கிறார்...''

""அவர் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு வந்தார். முதல்வருடன் நெருக்கமானவர். அதனால் விரும்புகிறார். பிரதமர் நரசிம்ம ராவ் விரும்புவாரா? மூப்பனார் விரும்புவாரா?''

""என்ன தான் நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?''

""மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள ரஜினிகாந்த் இப்போது விரும்பமாட்டார். எம்ஜிஆரைப்போல அவரால் அரசியல் கட்சி எல்லாம் தொடங்க முடியாது. எந்தக் கட்சியிலும் சேரவும் மாட்டார். பிரதமர் நரசிம்ம ராவும் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவரை மற்றவர் ஏமாற்ற நினைக்கிறார்கள்.''

""நரசிம்ம ராவை ரஜினிகாந்த் சந்திப்பாரா?,  மாட்டாரா?, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

""சந்திக்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ரஜினிகாந்த் வருவார், சந்திப்பார், பேசுவார். ஏனென்றால், அவர் பிரதமர், இவர் நடிகர்!''

செ. மாதவன் சொன்னது போல நடந்தது. பெங்களூரிலிருந்து வரும் விமானத்தில் ரஜினிகாந்த் தில்லி வருகிறார் என்கிற செய்தி காட்டுத் தீ போலப் பரவியது. ஏனைய பல தேசியப் பத்திரிகையாளர்களுடன் நானும்  ரஜினிகாந்தின் வருகைக்காக விமான நிலையத்தில் காத்திருந்தேன்.

ரஜினிகாந்த் விமானநிலையத்திலிருந்து வெளியே வந்தார்.

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com