'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 114

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 114

இந்தியாவின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் விமான நிலையத்துக்கு வெளியே நடிகர் ரஜினிகாந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.


இந்தியாவின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் விமான நிலையத்துக்கு வெளியே நடிகர் ரஜினிகாந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். தனது வழக்கமான சுறுசுறு விறுவிறு நடையில் ரஜினிகாந்த் விமானநிலையத்திலிருந்து வெளியே வந்தார்.

பத்திரிகையாளர்களை சந்திக்காமல் அங்கிருந்து சென்றுவிடுவது என்பதுதான் ரஜினியின் திட்டம். வேறு வழியில்லாமல்தான், அவர்களை அங்கே எதிர்கொண்டார் என்பதை அவரது உடல்மொழி காட்டியது. சுற்றி வளைக்காமல், நிருபர்களின் கேள்விகளுக்குக் காத்திருக்காமல் அவரே வழக்கமான பாணியில் பேசத் தொடங்கினார்.

""நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை. எனக்குப் பதவி தேவையில்லை. தமிழகத்தில் ஊழலாட்சி நடைபெறுகிறது. ஜெயலலிதா தலைமையிலான இப்போதைய ஆட்சி அகற்றப்பட வேண்டும். அது மட்டும்தான் எனது நோக்கம்.''
ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தின் சாராம்சம் இதுதான்.

""எதற்காக நீங்கள் இப்போது தில்லி வந்திருக்கிறீர்கள்? காங்கிரஸில் சேரப் போகிறீர்களா, இல்லை தனிக்கட்சி தொடங்கப் போகிறீர்களா?'' - ஒரு நிருபர் கேட்டார்.

""நான் பிரதமரை சந்திக்க வந்திருக்கிறேன். தமிழகத்தின் நிலைமையை அவரிடம் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். தன்னை வந்து சந்திக்கும்படி பிரதமரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை மறுக்க முடியாது. அதற்காக வந்திருக்கிறேன்.''

அதற்கு மேல் அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பாமலும், காத்திருக்காமலும் கிளம்பிவிட்டார். நிருபர்களுக்குப் பெருத்த ஏமாற்றம். ரஜினிகாந்த் தனிக்கட்சி குறித்து ஏதாவது சொல்வார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். அடுத்தாற்போல அவரை எங்கே முற்றுகையிட்டு கேள்வி கேட்கலாம் என்று ஒருசிலர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது "டெல்லி மிட் டே' என்றொரு ஆங்கில மதிய "டேப்லாய்ட்' தினசரி வெளிவந்து கொண்டிருந்தது. அந்தப் பத்திரிகையின் நிருபர் சைலேஷ் ஜோஷியும் இன்னும் சில நண்பர்களும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்.

""ரஜினிகாந்த் எந்த ஹோட்டலில் தங்குகிறார் என்று உனக்குத் தெரியுமா?''

""அசோகா ஹோட்டலில் தங்குகிறார் என்று தெரியும். அங்கே அவரை சந்திக்க முடியுமா என்பது எனக்குத் தெரியாது. உங்களைப் போலத்தான் நானும் அவரை சந்திக்க முயற்சிக்கிறேன்.''

""யாரைப் பிடித்தால் ரஜினிகாந்தின் "எக்ஸ்க்ளுசிவ்' (தனிப்பட்ட பேட்டி) கிடைக்கும்?''

இந்தக் கேள்விக்கும், இதுபோன்ற வேறு சில கேள்விகளுக்கும் நான் என்ன பதில் தந்துவிட முடியும்? அவர்களிடமிருந்து தப்பித்துக் கிளம்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு 1988-லும், 1989 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் ஜெயலலிதா அங்கே வந்து தங்கியதுபோல, அசோகா ஹோட்டல் இப்போதும் உச்சகட்டப் பரபரப்பில் இருந்தது. வரவேற்புப் பகுதி முழுவதும் காங்கிரஸ் தலைவர்களும், எம்.பி.க்களும், பத்திரிகையாளர்களும் குழுமியிருந்தனர். அசோகா ஹோட்டலில் காங்கிரஸ் தரப்பு மட்டுமல்ல, அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களும், வெளியேற்றப்பட்டவர்களும்கூட இருந்தனர்.

ரஜினிகாந்த் அறைக்கு வந்தது முதல் அவரை சந்திக்கத் தலைவர்கள் வந்து, சென்ற வண்ணம் இருந்தனர். ரஜினிகாந்த்தை சந்திக்கச் சில வடநாட்டு அரசியல் தலைவர்களும், கர்நாடக, ஆந்திர மாநில எம்.பி.க்களும்கூட வந்தனர்.

ரஜினிகாந்துடன் இருந்தவர்களில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே. மூப்பனார், மத்திய இணையமைச்சர் எம். அருணாச்சலம், காங்கிரஸ் எம்.பி. எல். அடைக்கலராஜ் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களுடன், எம்.ஜி.ஆர். அதிமுக பொதுச் செயலாளர் எஸ். திருநாவுக்கரசு கூடவே இருந்தார். அவர்களுடன் ரஜினிகாந்த் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர்.

திருநாவுக்கரசும், அண்ணா காலத்திலிருந்தே அரசியலில் இருக்கும் செ. மாதவன் போன்றவர்களும்கூட, ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்துக்கான திட்டமிடலில் பங்கு பெற்றிருந்தனர். அவர்களுடனும் ரஜினிகாந்த் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று எனக்குத் தெரியவந்தது.

மதுரா ரோடிலிருந்த செ. மாதவனின் வீட்டுக்கு நான் விரைந்தேன். அவர் வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார்.

""ரஜினிகாந்தை சந்திக்கவா கிளம்புகிறீர்கள்?''

சிரித்தபடியே ""இல்லை'' என்று தெரிவித்த மாதவன், என்னை அழைத்துக் கொண்டு மீண்டும் தனது வீட்டுக்குள் நுழைந்தார்.

""அங்கே அசோகா ஹோட்டலில் என்னநடக்கிறது?''

நான் ரஜினியையோ, மற்ற தலைவர்களையோ சந்திக்கவில்லை என்பதைத் தெரிவித்துவிட்டு, எனக்குக் கிடைத்த யார், யார் ரஜினியுடன் இருக்கிறார்கள், ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள் உள்ளிட்ட தகவல்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

""ரஜினிகாந்த் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. அவர் அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கை எனக்குக் கிடையாது. ஆனால், அவர் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள், அனுபவசாலிகள், தொண்டர்கள், ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்கள் எல்லோரையும் ஒன்றுதிரட்டி அணி அமைக்க விரும்புகிறார். அதற்கான முயற்சியில் அவருக்கு உதவத் தயார் என்று நானும் தெரிவித்திருக்கிறேன்.''

""அசோகா ஹோட்டலில் அவருடன் திருநாவுக்கரசு இருக்கிறார். உங்களை அழைக்கவில்லையா?''

""என்னை யாரும் அழைக்கவில்லை. எங்கள் சார்பில் திருநாவுக்கரசு இருக்கிறாரே, பிறகு நாங்கள் எதற்கு?''

அவருடன் வாடகைக் காரில் நானும் ஏறிக்கொண்டு தமிழ்நாடு இல்லத்தில் இறங்கிக் கொண்டேன். அங்கிருந்து நடக்கும் தூரத்தில்தான் அசோகா ஹோட்டல்...

அதற்குப் பின்பு நான் அசோகா ஹோட்டல் வரவேற்பறையில்தான் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தி, அடைக்கலராஜ், அருணாச்சலம் ஆகியோரிடம் பேசி என்ன நடக்கிறது, ரஜினி என்ன நினைக்கிறார் என்பவை குறித்துத் தெரிந்து கொள்ள முயன்றேன். புதிதாக எதுவும் கிடைக்கவில்லை.

மாலை கடந்து, சுமார் ஆறரை மணி அளவில் அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் குமரி அனந்தன் அசோகா ஹோட்டலுக்கு வந்தார். அவர் சொல்லித்தான் பிரதமருடனான ரஜினிகாந்தின் சந்திப்பு அன்று இரவே நடைபெறுகிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். மற்றவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்ளப்பட்டதால், தெரியாததுபோல அங்கே காத்திருந்தேன்.

ஜி.கே. மூப்பனார், குமரி அனந்தன், எம். அருணாச்சலம் ஆகியோருடன் ரஜினிகாந்த் பிரதமரை சந்திக்கக் கிளம்பினார். அப்போதும் நிருபர்களை சந்திப்பதையோ, பேசுவதையோ அவர் தவிர்த்துவிட்டார். அவர்கள் அவசர, அவசரமாகக் கிளம்பிச் சென்றதிலிருந்து பிரதமர் - ரஜினி சந்திப்பு நடக்க இருக்கிறது என்பதை அங்கே குழுமியிருந்த பத்திரிகையாளர்கள் ஊகித்து விட்டனர்.

ரஜினியும் மற்றவர்களும் சென்ற காரைத் தொடர்ந்து, அவர்களும் விரைந்தனர். அசோகா ஹோட்டல் வரவேற்பு ஹாலில் நானும் இன்னும் ஒருசிலரும் மட்டும்தான் இருந்தோம். பிரதமர் - ரஜினி சந்திப்புக்கு நிருபர்கள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.

ரஜினியோ, பிரதமரோ எதுவும் பேசமாட்டார்கள் என்பதும் தெரியும். பிறகு எதற்கு அங்குச் செல்ல வேண்டும் என்று நான் ஹாயாக அங்கிருந்த சோபா ஒன்றில் அமர்ந்து விட்டேன்.

பிரதமர் - ரஜினி சந்திப்பு எப்படி நடந்தது என்பது குறித்து அடுத்த நாள் நான் விவரமாகத் தெரிந்து கொண்டேன். பிரதமர் அலுவலகத்தில் எனக்கிருந்த தொடர்புகள் அதற்கு உதவின.

முதலில் ரஜினி, மூப்பனார், குமரி அனந்தன் ஆகியோர் பிரதமரை சந்தித்தனர். அதன் பிறகு, சரியாக இரவு 7.15 முதல் 7.40 வரை ரஜினியும் பிரதமரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள், என்ன முடிவெடுத்தார்கள் என்பது அவர்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும்.

பிரதமர் தரப்புத் தொடர்புகளிலிருந்தும், ரஜினியிடமிருந்தும் தெரிந்து கொண்ட மூப்பனார் உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களிலிருந்து நான் தெரிந்து கொண்ட அவர்களது உரையாடலின் சாரம் இதுதான் - ரஜினிகாந்த் காங்கிரஸில் சேர வேண்டும் அல்லது வெளிப்படையாகக் காங்கிரஸூக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என்பதுதான் பிரதமரின் விருப்பம். தேர்தலுக்கு யாருடன் கூட்டணி, யார் தலைமையில் கூட்டணி என்பதெல்லாம், ரஜினிகாந்தின் தெளிவான முடிவுக்குப் பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது அவரது கருத்து.

ரஜினிகாந்தைப் பொருத்தவரை, அதிமுக அரசு உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மீதும் அவரது அமைச்சரவைச் சகாக்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு ஊழல், முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும். தனது அரசியல் பிரவேசத்துக்கு முதல் நிபந்தனை ஜெயலலிதா ஆட்சியைக் கலைப்பது என்பதில் ரஜினிகாந்த் முனைப்பாக இருந்தார்.

பிரதமருடனான சந்திப்பு முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் அது குறித்து எதுவும் பேச மறுத்துவிட்டார். நிருபர்களின் முயற்சி பலிக்கவில்லை. பிரதமர் அலுவலகமும், அந்த சந்திப்பு குறித்த விவரங்களை வெளியிடாமல் மெளனம் காத்தது.

"மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்று இரண்டு தரப்பிலிருந்தும் மழுப்பலான பதில் மட்டுமே தரப்பட்டது.

பிரதமர் சந்திப்புக்குப் பிறகு, ரஜினிகாந்த்தும், திருநாவுக்கரசும் அசோகா ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார்கள். அது குறித்த விவரங்களை அவர்களில் ஒருவர்தான் தெரிவிக்க முடியும்.

"மூப்பனார் தலைமையில் காமராஜர் - எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்பது என்றும், அதற்கு ரஜினிகாந்த் ஆதரவு என்றும், ரஜினியும் திருநாவுக்கரசும் இணைந்து முடிவெடுத்தனர்' என்று என்னிடம் தெரிவித்தவர் இணையமைச்சராக இருந்த எம். அருணாச்சலம். மூப்பனாருக்கு நெருக்கமாக இருந்ததால், அவரது கூற்றை சந்தேகிக்க இடமில்லை.

பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு அடுத்த நாளே ரஜினிகாந்த் ரிஷிகேஷ் கிளம்பிச் சென்றுவிட்டார். ரஜினியின் பிரதமருடனான சந்திப்பு குறித்து தெரிந்து கொள்வதற்காக நான் காட்கில்ஜியை சந்திக்கச் சென்றேன். அவர் புணே சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்து கோல்ஃப் லிங்க்சில் உள்ள ஆர்.கே. தவாணை சந்திக்கப் போனேன்.

ரஜினிகாந்த் - பிரதமர் சந்திப்புக் குறித்துப் பேசத்தான் நான் வந்திருப்பேன் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும்? அது குறித்து அவர் கருத்துச்சொல்ல முற்பட்டபோது நான் கேட்டேன் - ""பிரதமர் நிஜமாகவே ரஜினிகாந்த் காங்கிரஸில் இணைவதை விரும்புகிறாரா, இல்லை அவரை ஆழம் பார்க்கிறாரா?''

ஆர்.கே. தவாணுக்குக் கோபம் வந்துவிட்டது.

""பிரதமர் என்ன வேலை இல்லாமல் இருப்பவரா, நடிகர்களை வரவழைத்துப் பேசிக் கொண்டிருப்பதற்கு? ரஜினிகாந்த் ரிஷிகேஷுக்குப் போகும் வழியில் அவரை வந்து சந்திப்பதாகச் சொன்னபோது, ஃபரூக் அப்துல்லாவுடனான அவரது சந்திப்பை தள்ளிவைத்துவிட்டு சந்தித்திருக்கிறார், தெரியுமா?''

உயர்மட்டத்தில் ரஜினிகாந்த் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது என்பது ஆர்.கே. தவாணுடனான சந்திப்பில் எனக்குப் புரிந்தது. அது மட்டுமல்ல, ஆர்.கே. தவாணுக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கக்கூடும் என்கிற சந்தேகமும் எனக்கு எழுந்தது.
மூப்பனார், திருநாவுக்கரசு போன்றவர்கள் காங்கிரஸூக்கு ஆதரவாக ரஜினிகாந்தைக் கொண்டுவர முயற்சிகள் செய்வதைப் போலவே, ரஜினிகாந்த் - காங்கிரஸ் கூட்டு ஏற்பட்டு விடக்கூடாது என்று வேறு சிலர் காய் நகர்த்திக் கொண்டிருந்தார்கள் என்பது தான் சுவாரஸ்யமான திருப்பம்.

அவர்கள் வேறு யாருமல்ல, முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் மு. கருணாநிதியும்தான். அவர்கள் சார்பில் காங்கிரஸ் கட்சியில் ஸ்லீப்பர் செல்லாகச் சிலர் செயல்பட்டு வந்தனர்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com