'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 108

ஒடிஸா முதல்வர் ஜே.பி.பட்நாயக் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டபோது, வீட்டில் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 108

ஒடிஸா முதல்வர் ஜே.பி.பட்நாயக் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டபோது, வீட்டில் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். ஏற்கெனவே எல்லோரும் பழக்கம் என்பதால், முதல்வரின் தனிச் செயலர் தொடர்பில் வந்தார். அதிகாலை நான்கு மணிக்கு முதல்வரின் வீட்டுக்கு வந்து விடும்படியும், முதல்வருடன் புரி ஜகந்நாதர் கோயிலுக்குப் போக வேண்டுமென்றும் தெரிவித்தார்.

கேரளாவில் எப்படி கே. கருணாகரன் எல்லா மலையாள மாதம் முதல் தேதியில் குருவாயூர் கோயிலுக்கு அதிகாலை தரிசனத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாரோ, அதேபோல ஜானகி பல்லப பட்நாயக்கும் மாதந்தோறும் முதல் தேதியன்று புரி ஜகந்நாதரை வழிபடத் தவறுவதில்லை. அது மட்டுமல்ல, அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதிகாலையில் எழுந்து, முதல்வர் வீட்டுக்குப் புறப்படத் தயாரானபோது, அரசு விருந்தினர் மாளிகை வாசலில் என்னை அழைத்துச் செல்ல ஒருவர் காருடன் காத்திருந்தார். முதல்வர் வீட்டுக்குப் போனபோது எனக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

என்னை மட்டும்தான் உடன் அழைத்துப்போக இருக்கிறார் என்று நினைத்தேன், அவருடன் செல்வதற்கு வேறு பலரும் காத்துக் கொண்டிருந்தார்கள். சில எம்.எல்.ஏ.க்கள், கட்சிக்காரர்கள், வெளியூரிலிருந்து வந்திருந்த நண்பர்கள் என்று குறைந்தது பத்து காராவது அங்கே காத்திருந்தன. அவர்களில் ஒருவனாக என்னையும் வரச் சொல்லி இருக்கிறார்கள் என்கிற ஏமாற்றம் ஏற்பட்டாலும், முதல்வருடன் போகிறோம் என்கிற மகிழ்ச்சியும் இல்லாமல் இல்லை.

""உங்களை உள்ளே அழைக்கிறார்கள்'' என்று உதவியாளர் ஒருவர் வந்து சொன்னார்.

முதல்வர் ஜெ.பி. பட்நாயக்கின் மனைவி ஜெயந்தி பட்நாயக்கும் எனக்கு நன்றாக அறிமுகமானவர். மக்களவை உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் அவர். என்னை உள்ளே அழைப்பது முதல்வர் அல்ல, அவரது மனைவி என்பதை அங்கு போனபோது தெரிந்து கொண்டேன்.

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக அவர் மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரம், மைசூரு போன்ற இடங்களுக்கு தென்னிந்தியா வந்தபோது அவருடன் பல கோயில்களுக்கு நான் சென்றிருக்கிறேன். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பத் தயாரானோம்.

முதல்வரும் அவரது மனைவி ஜெயந்தி பட்நாயக்கும் அம்பாசிடர் காரில் ஏறியபோது அவர்கள் அந்தக் காரில் தனியாகப் போவார்கள் என்றுதான் நினைத்தேன். ஓட்டுநருக்கும் பாதுகாப்பு அதிகாரிக்கும் நடுவில் என்னை முன் இருக்கையில் அமரச் சொன்னபோது அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அணிவகுப்புபோல, வாகனங்கள் புரியை நோக்கி விரைந்தன.

""பிரதமர் நரசிம்ம ராவ் குறித்து கருணாகரன் என்ன நினைக்கிறார்?'' - இதுதான் முதல்வர் ஜெ.பி. பட்நாயக் என்னிடம் எழுப்பிய முதல் கேள்வி.

""என்னிடம் பிரதமர் குறித்து அவர் எந்த விமர்சனமும் சொன்னதில்லை. முதல்வர் பதவியில் இருந்து அகற்றி, மத்திய அமைச்சராக்கியதில் அவருக்கு அதிருப்தி இருக்கிறது. மற்றபடி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.''

""கருணாகரனும் மூப்பனாரும் என்னையும் ஜெயந்தியையும் போலவே இந்திராஜியின் அபிமானிகள். ராஜீவ் காந்திக்கும் நெருக்கமாக இருந்தோம். அதே அளவிலான மரியாதையை பிரதமர் நரசிம்ம ராவிடமும் எதிர்பார்க்கிறோம். முதல்வராக இருக்கும் எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால், கருணாகரன்ஜியும், மூப்பனார்ஜியும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்.''

நான் சிரித்து விட்டேன். அவர்களை பின் நோக்கித் திரும்பியபடிசொன்னேன் -
""நீங்கள் மூவரும் நண்பர்கள். உங்களைப் பற்றியெல்லாம் அபிப்பிராயம் சொல்லவோ, உள்கட்சி அரசியல் குறித்து கருத்துக் கூறவோ என்னால் முடியாது என்பது உங்களுக்கே தெரியும். எனக்கு அதற்கான தகுதி கிடையாது. ஏன் என்னை ஆழம் பார்க்கிறீர்கள்?''

இப்படி உரிமையுடன் அவரிடம் பேசும் அளவுக்கு எனக்கு சுதந்திரம் இருந்தது. அதை அவரும் ரசித்தார். ஜெயந்தி பட்நாயக்கும் ரசித்தார். அதற்குப் பிறகு என்னுடனான அவர்களது உரையாடல் காங்கிரஸ், தில்லி, பிரதமர் போன்றவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி, தமிழ்நாடு அரசியலுக்குத் திரும்பியது. முதல்வர் ஜெயலலிதா பற்றித்தான் அவர்கள் இருவரும் மாறிமாறிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஜெயலலிதா குறித்து இவ்வளவு ஆர்வமாக ஏன் கேட்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. தனது விரலில் இருக்கும் மரகதக்கல் மோதிரத்தை என்னிடம் காட்டினார் ஜெயந்தி பட்நாயக். அவர் மக்களவை உறுப்பினராக இருந்தபோது, ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அப்போது ஜெயந்தி பட்நாயக்கின் பிறந்த நாளுக்கு, அந்த மோதிரத்தை ஜெயலலிதா பரிசளித்ததாகவும், அது அதிர்ஷ்ட மோதிரமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார் அவர்.

ஜெயந்தி பட்நாயக் முதல்வர் ஜெயலலிதாவின் ரசிகர் என்றால், முதல்வர் ஜெ.பி. பட்நாயக் திமுக தலைவர் கருணாநிதி மேல் மரியாதை வைத்திருந்தார். கொள்கை அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஜானகி பல்லப பட்நாயக்குக்கு திமுக தலைவர் கருணாநிதியைப் பிடித்ததற்கு, அவர் தன்னைபோலப் பத்திரிகையாளர் என்பதுதான் காரணம்.

மகாத்மா காந்தி, திலகர், நேருவில் தொடங்கி இந்தியாவின் பல தலைவர்கள் பத்திரிகையாளர்களாக இருந்திருக்கிறார்கள். தங்களது கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பத்திரிகை தொடங்கி நடத்தியவர்கள் அவர்கள். அவர்களிலிருந்து ஜெ.பி. பட்நாயக் வித்தியாசப்படுகிறார். முழுநேரப் பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கி அரசியலுக்கு வந்தவர் அவர்.

"சமாஜ்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார் என்பது மட்டுமல்ல, ஒடியா மொழியில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும்கூட. பிஜு பட்நாயக்கை செல்வாக்கில் எம்.ஜி.ஆருடன் ஒப்பிடலாம் என்றால், ஜெ.பி. பட்நாயக்கை அரசியல் ராஜதந்திரத்தில் கருணாநிதியுடன் ஒப்பிடலாம். நவீன் பட்நாயக் முதல்வராவது வரையில், நீண்டநாள் முதல்வர் பதவியில் தொடர்ந்து சாதனை படைத்தவர் ஜெ.பி. தான்.

புரி வந்து ஜெகந்நாதர் கோயில் தரிசனம் முடிந்து, நாங்கள் விருந்தினர் மாளிகைக்கு வந்தோம். அதுவரையில் முதல்வரும், அவரது மனைவியும் என்னை தங்களுடன் இருக்கப் பணித்ததை இப்போதும் நினைத்துப் பார்த்து நெகிழ்கிறேன். முதல்வரும், ஜெயந்தி பட்நாயக்கும் புரியிலிருந்து பெஹ்ராம்பூரில் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்ல இருந்ததால், நான் புவனேஸ்வர் திரும்பத் தயாரானேன். அதற்கு ஏற்பாடு செய்து தந்தார்கள்.

முதல்வர் கிளம்புவதற்கு முன்னால், என்னை அவர்களது அறைக்கு அழைத்தார்.

""வளர்ப்பு மகன் திருமணத்துக்கு எங்களுக்கு அழைப்பு இருந்தது. முதல்வராக இருந்த பிஜு பட்நாயக் போகிறார் என்பதால் நாங்கள் போகவில்லை. பிரதமர் நரசிம்ம ராவ் விரும்பமாட்டார் என்பதும் ஒரு காரணம். ஜெயலலிதாஜியை புரி ஜெகந்நாதர் கோயில் தேரின்போது அழைக்க வேண்டும். அவரிடம் நாங்கள் அவரை அழைக்க விரும்புவதாகத் தகவல் தெரிவியுங்கள்...''

எனக்குச் சிரிப்பு வந்தது. எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறார்கள். சக முதல்வர் ஒருவரை அழைக்க, மூன்றாவது மனிதர், அதுவும் ஒரு பத்திரிகையாளரை, நாடுவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழகத்துக்கு வெளியே, ஜெயலலிதாவுக்கு இருந்த பிம்பம் அத்தகையது!

நான் புவனேசுவரம் திரும்பிய பிறகு எனது செய்தி நிறுவனம் தொடர்பான வேலைகளில் இறங்கிவிட்டேன். முன்பே கூறியதுபோல, தத்தகத்தா சத்பதி, செளமிய ரஞ்சன் பட்நாயக், பத்ருஹரி மஹ்தாப் மூவரையும் சந்திப்பதிலும், விவாதிப்பதிலும் முனைப்புக் காட்டினேன். மூன்று பேருமே ஒடிஸாவின் முக்கியமான மூன்று ஊடக ஆளுமைகள்.

அரசியல் ரீதியாகத் தனது தந்தை பிஜு பட்நாயக்கை எதிர்த்த அவர்கள் மூவரையும், பகைமை பாராட்டாமல் அரசியல் வாரிசுகளாகக் கருதி, தனது பிஜு ஜனதாதளத்தில் இணைத்துக் கொண்டது இப்போதைய முதல்வர் நவீன் பட்நாயக்கின் பெருந்தன்மை. மூன்று பேரின் நாளிதழ்களும் இப்போது ஆளுங்கட்சிப் பத்திரிகைகளாகச் செயல்படுகின்றன.

முன்னாள் முதல்வர் நந்தினி சத்பதியின் மகன் தத்தகத்தா சத்பதி, 1998 முதல் 2014 வரை தொடர்ந்து நான்கு முறை பிஜு ஜனதாதளம் சார்பில் தனது குடும்பத் தொகுதியான தென்கனால் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, இப்போது அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். சமூக ஆர்வலராகத் தொடர்கிறார்.

செளமியரஞ்சன் பட்நாயக், காங்கிரஸ், பாஜக என்று பல கட்சிகளில் பயணித்து இப்போது முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆதரவாளராகி இருப்பவர். பிஜு ஜனதா தளம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்.

பத்ருஹரி மஹ்தாப், ஒடிஸாவின் முன்னாள் முதல்வர் டாக்டர் ஹரேகிருஷ்ண மஹ்தாபின் மகன். இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஒடிஸா முதல்வராக இருந்தவர். "உத்கல் கேசரி" என்று அழைக்கப்படும் டாக்டர் ஹரேகிருஷ்ண மஹ்தாப் மத்திய அமைச்சராகவும், பம்பாய் ராஜாதானியின் ஆளுநராகவும் இருந்தவர்.

1998 முதல் இப்போது வரை தொடர்ந்து கட்டாக் மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தொடரும் பத்ருஹரி மஹ்தாப், தலைசிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்திருப்பவர். அவர் நடத்தி வந்த "ஈஸ்டர்ன் டைம்ஸ்' ஆங்கில தினசரிதான் எனக்கு தினசரி நடத்தும் அனுபவத்தைக் கற்றுத் தந்தது.

ஒருவருக்கு ஒருவர் தொழில் ரீதியாகவும், அரசியல் களத்திலும் போட்டியாகத் திகழும் மூவர், நண்பர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர்கள் மூன்று பேரையும் பார்த்துத்தான் நான் தெரிந்து கொண்டேன். பிஜு ஜனதா தளம் அவர்கள் மூவரையும் இப்போது இணைத்துவிட்டது.

நான் ஊருக்குக் கிளம்புவதற்கு முன்னர், நேரில் வந்து சந்திக்கும்படி பிஜு பாபு கூறியிருந்ததால், சந்திக்க விரும்புவதாக அவரது வீட்டுக்குத் தொலைபேசியில் தகவல் அனுப்பி இருந்தேன். அடுத்த நாள் காலையில் வரும்படி சொன்னார்கள். அவரது வீட்டுக்குச் சென்றேன். வழக்கத்துக்கு மாறாக விருந்தினர்கள் யாரும் இருக்கவில்லை. அதிக நேரம் காத்திருக்க நேரவில்லை.

""சென்னா ரெட்டியிடம் நேற்று பேசினேன். அவருடன் ஜெயலலிதா சமாதானமாகிவிட்டதாகச் சொன்னார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் - அண்ணா திமுக கூட்டணி ஏற்படுமா?''

""இப்போதே அப்படி சொல்லிவிட முடியாது. அதிமுக காரர்கள் முதல்வர் ஜெயலலிதா சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், காங்கிரஸ்காரர்கள் ஜெயலலிதாவை ஏற்றுக்கொள்வார்களா என்பது எனக்கு சந்தேகம். ராஜீவ் காந்தியின் மரணத்தால் கிடைத்த வெற்றியல்ல என்று ஜெயலலிதா சொன்னதில் அவர்களுக்கு அவர் மீது அதிருப்தி இருக்கிறது.''

""ஜெயலலிதா காங்கிரஸூடன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கடாது. அவர் எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர வேண்டும். அவரை காங்கிரஸ்காரர்கள் ஏமாற்றி விடுவார்கள்.''

""அவர் காங்கிரûஸ ஏமாற்ற மாட்டார் என்பது என்ன நிச்சயம்?''

பிஜு பட்நாயக் பூடகமாச் சிரித்தார்.

""ஜெயலலிதாவுக்கு ஒரு தகவலை தெரிவிக்க வேண்டும். யார் மூலம் தெரிவிக்கலாம் என்பதைக் கேட்பதற்காகத்தான் என்னை சந்திக்க, உன்னை வரச் சொன்னேன். தொலைபேசியில் கூப்பிட்டுச் சொல்லக்கூடிய விஷயம் அல்ல இது...''

நான் அவரை வியப்புடன் பார்த்தேன். அவர் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு சங்கேதக் குறிப்பை (ஷார்ட் நோட்) எடுத்து என்னிடம் நீட்டினார். அதிலிருந்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com