'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 109

அடுத்தாற்போல என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. புவனேசுவரத்திலிருந்து சென்னைக்குத் திரும்புவதா இல்லை, தில்லிக்கே மீண்டும் பயணிப்பதா என்கிற குழப்பத்தில் ஆழ்ந்தேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 109

அடுத்தாற்போல என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. புவனேசுவரத்திலிருந்து சென்னைக்குத் திரும்புவதா இல்லை, தில்லிக்கே மீண்டும் பயணிப்பதா என்கிற குழப்பத்தில் ஆழ்ந்தேன்.  பிஜு பாபு என்னிடம் நீட்டிய சங்கேதக் குறிப்பின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முதலில் தில்லி செல்வதுதான் உசிதமாக இருக்கும் என்று தோன்றியது.

""அதிமுகவில் பிளவு ஏற்படுத்தி, காங்கிரஸின் ஆதரவுடன் மாற்று அரசு அமைக்க பிரதமர் நரசிம்ம ராவ் முடிவெடுத்திருக்கிறார். அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன'' என்பதுதான் அந்தக் குறிப்பில் காணப்பட்ட சங்கேதத் தகவல். அந்தக் குறிப்பை பிஜு பாபுவுக்கு நெருக்கமான உளவுத்துறை அதிகாரி ஒருவர் அளித்திருந்தார். 

தில்லிக்கே போய்விடலாம் என்றும், அங்கே போய் நிலைமையின் தீவிரத்தை உறுதி செய்து கொண்டு தமிழகம் திரும்பலாம் என்றும் முடிவெடுத்தேன். இப்போதுபோல, அப்போது புவனேசுவரத்துக்கு விமானப் போக்குவரத்து இருக்கவில்லை. ரயிலில் தில்லி கிளம்பினேன்.

நான் தில்லி திரும்பிக் கொண்டிருந்த அதே ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார் மக்களவையின் முன்னாள் தலைவரும், கேந்திரபரா மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ரபி ரே. 

சம்யுக்த சோஷலிஸ்டாகத் தனது அரசியல் வாழ்க்கைத் தொடங்கியவர். ராம் மனோகர் லோகியாவின் ஆதரவாளர்.

இந்திய அரசியலில் நேர்மைக்கும், நாணயத்துக்கும் அடையாளமாகத் திகழ்ந்தவர்களின் பட்டியலில் ரபி ரேக்கு நிச்சயமாக ஓர் இடமுண்டு. மொரார்ஜி தேசாய், சரண் சிங் அமைச்சரவைகளில் இடம் பெற்ற ரபி ரே, ஒடிஸா அரசியலில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தார் என்று கூறிவிட முடியாது. ஆனால், செல்வாக்குள்ள ஒடிஸா அரசியல்வாதிகள் அனைவராலும் மதிக்கப்பட்டவராக இருந்தவர் அவர்.

ஜனதா கட்சியின் செயலாளர்களில் ஒருவராக அவர் இருந்தது முதல் எனக்கு அறிமுகமானவர். நான் பெரிதும் மதிக்கும் இரா. செழியனுக்கு மிகவும் நெருக்கமானவர் அவர் என்பதால், அவர் மீதான மரியாதை மேலும் அதிகரித்தது. இரா. செழியன் தில்லி செல்லும்போது பெரும்பாலும் ரபி ரேயின் வீட்டில்தான் தங்குவது வழக்கம். 

மூன்றாவது வகுப்பு ஏசி பெட்டியில் எனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டு அவர் இருக்கும் இடத்தை அடைந்தேன். மொரார்ஜி தேசாய் ஆட்சி கவிழ்ந்தது; சரண் சிங் ஆட்சி; மீண்டும் இந்திரா காந்தி வெற்றி பெற்றது என்று தொடங்கி, நரசிம்ம ராவ் அரசு, அதன் பொருளாதாரக் கொள்கைகள் வரை நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அவர் சொன்னார், நான் கேட்டுக் கொண்டிருந்தேன் என்பதுதான் சரி. தூங்கப் போகும் நேரத்தில் மட்டும்தான் நான் எனது பெட்டிக்குச் சென்றேன்.

ரபி ரேயுடனான ரயில் பயணத்தில்தான் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் உண்மையான ஆளுமை எத்தகையது என்பதை நான் தெரிந்து கொண்டேன். வழக்குரைஞரான சரண் சிங், பொருளாதாரத்திலும் ஆழ்ந்த புரிதல் உள்ளவர் என்பதை ரபி ரே சொல்லித்தான் எனக்குத் தெரியும். ஆங்கிலத்தில் "இந்தியாவின் வறுமை', "வேளாண் பொருளாதாரம்' குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 

சரண் சிங் ஆட்சி கவிழ்ந்து பதவி விலக வேண்டிய தருணம். தேர்தல்தான் முடிவு என்பது அநேகமாகத் தீர்மானமாகி விட்ட நிலை. சில தொழிலதிபர்கள் பிரதமர் சரண் சிங்கை சந்திக்க அவரது செளத் பிளாக் பிரதமர் அலுவலகத்துக்கு வந்தனர்.

ரபி ரே உள்ளிட்ட சில குறிப்பிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் பிரதமர் சரண் சிங். தொழிலதிபர்கள் வந்திருக்கிறார்கள் என்பதால், பக்கத்து அறையில் அவர்களை சந்திக்கச் சென்றார். அமைச்சர் ரபி ரேயையும் உடனழைத்துச் சென்றாராம் பிரதமர் சரண் சிங். நேரத்தை வீணாக்காமல் பம்பாயிலிருந்து வந்திருந்த அந்தத் தொழிலதிபர்கள் குழு, தங்களது கோரிக்கையை முன்வைத்தது.

""தேர்தல் வருகிறது. நீங்கள் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவீர்களா, வரமாட்டீர்களா என்றெல்லாம் யோசிக்காமல் நாங்கள் உங்களுக்கு தேர்தல் நிதி தரத் தயாராக இருக்கிறோம். ஒரு சில கோப்புகள், ஜனதா ஆட்சி வந்தது முதல் தேங்கிக் கிடக்கின்றன. ஏற்கெனவே அதனால் பெரும் இழப்பை நாங்கள் எதிர்கொள்கிறோம். இனிமேல் தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி அமைய மேலும் மூன்று மாதம் பிடிக்கும். நீங்கள் பதவி விலகுவதற்கு முன்னர் அந்தக் கோப்புகளைப் பைசல் செய்து தந்தால் நன்றாக இருக்கும்...''

""யோசித்துச் சொல்கிறேன். காத்திருங்கள்'' என்று சொல்லிவிட்டு, ரபி ரேயுடன் தனது அறைக்குத் திரும்பினார் பிரதமர் சரண் சிங். பிரதமர் நாற்காலியில் அமர்ந்த பிறகு, ரபி ரேயைப் பார்த்துச் சொன்னாராம் அவர் - ""தேர்தல் வெற்றி தோல்விக்காகவோ, அரசியல் நடத்துவதற்காகவோ நான் அமர்ந்திருக்கும் இந்த நாற்காலிக்குக் களங்கம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. காரணமில்லாமல் மொரார்ஜிபாய் அந்தக் கோப்புகளைத் தனது மேஜையில் தேங்க அனுமதித்திருக்க மாட்டார். இத்தனைக்கும் இவர்களும் பம்பாய்காரர்கள். அடுத்த ஆட்சியாளர்களின் முடிவுக்கு நான் விட்டுவிட முடிவெடுத்திருப்பதாகக் கூறுங்கள். அவர்களது நன்கொடை நமக்குத் தேவையில்லை!''

அந்த நிகழ்வை நினைவுகூர்ந்த ரபி ரே, சரண் சிங்கின் நாணயத்தையும் நேர்மையையும் மட்டுமல்ல, மொரார்ஜி தேசாய் மீது அவர் வைத்திருந்த மரியாதையையும் அப்போது புரிந்து கொண்டதாகச் சொன்னார். 

அந்த ரயில் பயணம் எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு. பல புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள முடியாத பல செய்திகளை, ரபி ரேயுடன் பேசிக் கொண்டிருந்ததில் தெரிந்து கொண்டேன். 

"இந்தியாவில் சோஷலிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், வீழ்ச்சியும்' என்கிற தலைப்பில் பேசச் சொன்னாலோ அல்லது எழுதச் சொன்னாலோ, சிறு குறிப்புகூட வைத்துக் கொள்ளாமல் என்னால் பேசவும் எழுதவும் முடியும். ஏனென்றால் ரபி ரே, சந்திரசேகர்ஜி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுரேந்திர மோகன், மது லிமாயே போன்றவர்களுடன் உரையாடி நான் தெரிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம். அந்தப் பயணம் முடிந்த பிறகு, நான் தில்லி திரும்பியதும் எழுதி வைத்த குறிப்புகள் மட்டுமே சுமார் 60 பக்கங்கள்.

தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இறங்கி, ரபி ரேயுடன் ஜன்பத் சாலையில் இருந்த ரபி ரேயின் வீட்டுக்குச் சென்றேன். தனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொன்னார். அது சரியாக இருக்காது என்பதால், ஒடிஸா பவனில் தங்க அவரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன்.

தில்லிக்கு வந்திருக்கும் தகவலை பிரணாப் முகர்ஜி, வி.என். காட்கில், சந்திரசேகர்ஜி மூவருக்கும் தெரிவித்து சந்திக்க நேரம் கேட்டேன். அவர்களிடமிருந்து தகவல் வரும்வரை காத்திருக்காமல் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனையும், முன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கையும் சந்திக்கத் தீர்மானித்தேன். அடுத்த நாள் காலையில் வரும்படி ஆர். வெங்கட்ராமனின் இல்லத்திலிருந்து தகவல் வந்தது. 

"அடுத்த தடவை தில்லி வரும்போது தொடர்பு கொள்ளவும்' என்று பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்திலிருந்தும், "பலியா' தொகுதிக்குச் சென்றிருப்பதாக சந்திரசேகர்ஜி வீட்டிலிருந்தும் பதில் வந்தன. எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் அலுவலகத்திலோ அல்லது ஷாஜஹான் சாலை வீட்டிலோ வந்து சந்திக்கலாம் என்று வி.என். காட்கிலின் உதவியாளர் தெரிவித்தார். பீஷ்ம நாராயண் சிங்கிடமிருந்து பதிலே இல்லை. நான் முக்கியமாக சந்திக்க விரும்பியது என்னவோ அவரைத்தான்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனைப் போல எதிலும் ஒழுங்கும் (சிஸ்டமாடிக்), கூர்மையான அறிவும் (ஷார்ப் இன்டலக்ட்) உள்ள ஒருவரை நான் பார்த்ததில்லை. தன்னை ஒரு "விதிகளின்படி செயல்படும் ஜனாதிபதி' (ரூல் புக் பிரெசிடெண்ட்) என்று அவர் சொல்லிக் கொள்வது பேச்சுக்காக அல்ல, சத்தியமான வார்த்தைகள். அவருடைய எல்லா செயல்பாடுகளிலும் தெளிவும், ஒழுங்கும் இருக்கும்.

நான் எதற்காக சந்திக்க வருகிறேன் என்பதை அவர் முன்கூட்டியே ஊகித்திருந்தார் என்பதுதான் ஆச்சரியம். நான் போய் உட்கார்ந்தவுடன் அவரே பேசத் தொடங்கிவிட்டார்.

""நீ வந்திருக்கும் காரணம் எனக்குத் தெரியும். உனக்கு அது பற்றி எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் எனக்கும் தெரியும். ராமமூர்த்தி (வாழப்பாடி) என்னிடம் அதைப்பற்றி சொன்னார். நான் கேட்டுக் கொண்டேன். வேறு ஏதாவது பேசுவோம், அதைப்பற்றி வேண்டாம்...'' என்று அவர் தெளிவாகவும் கறாராகவும் சொன்ன பிறகு எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

சி. சுப்பிரமணியம் போல அல்லாமல், அவர் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பதவி ஏற்ற பிறகுதான் ஆர்.வி. எனக்கு அறிமுகம். அடுத்த சில ஆண்டுகளில் அவர் குடியரசு துணைத் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் உயர்ந்து விட்டார்.  ஓய்வு பெற்ற பிறகுதான் சற்று நெருக்கமாகவும், ஓரளவுக்கு சகஜமாகவும் அவரிடம் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

தேவையில்லாமல் அக்கப்போர் அரசியல் பேசும் வழக்கம் அவரிடம் கிடையாது. என்னிடம் மட்டும்தானா அப்படி என்று எனக்குத் தெரியாது. அவர் அரசியல் பேசுவதில்கூட ஒரு கட்டுப்பாடும், நிதானமும் இருக்கும். அப்படிப்பட்டவர் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.

""ரஜினிகாந்தை அரசியலுக்குக் கொண்டுவர மூப்பனாரும், சோவும் முயற்சிக்கிறார்களே, அது எந்த அளவில் இருக்கிறது?''

நான் திடுக்கிட்டேன். ஜெயலலிதா அரசுக்கு ஆபத்து இருப்பதாகக் கூறப்படுவது பற்றிக் கேட்க நான் நினைத்தால், அவர் புதிய பாதையைக் காட்டுகிறார்.

""எனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. நான் சோ சாரை சந்திக்கவில்லை. ஜி.கே.எம்மையும் பார்க்கவில்லை. ரஜினிகாந்திடம் எனக்கு நெருக்கமில்லை.''

""இதைப்பற்றி நீ விசாரி. சிவாஜியை காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் போனதற்கு மூப்பனார் முக்கியமான காரணம். இப்போது அவரே ரஜினிகாந்தை காங்கிரஸின் முகமாக்க விரும்புகிறார் என்பது நல்ல செய்தி. அப்படியாவது காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் செல்வாக்குப் பெறட்டும்...''

ஜெயலலிதா குறித்தோ, அதிமுக குறித்தோ எதுவுமே பேசவில்லை. நரசிம்ம ராவ் குறித்தும் அவர் ஒன்றும் சொல்லவில்லை. காமராஜர் பற்றிப் பேசினார். கம்யூனிச இயக்கத்துடனும், தொழிற்சங்க இயக்கத்துடனுமான தனது தொடர்பு குறித்துப் பேசினார்.

எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் முடிந்ததை உணர்த்தும் விதத்தில் அவர் கடிகாரத்தைப் பார்த்தார். நான் புரிந்து கொண்டேன். விடை பெற்றேன்.

ஷாஜஹான் சாலையில் உள்ள வி.என். காட்கிலை இரவில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தேன். பீஷ்ம நாராயண் சிங்கை சந்திப்பதுதான் எனது அடுத்த இலக்காக இருந்தது. தமிழக ஆளுநராக இருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஜெயலலிதாவிடமும், தமிழக அரசியலுடனும் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தவர் அவர்.

உளவுத் துறையில் அவருக்குத் தொடர்பு இருந்தது. தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் அவருடன் நெருக்கமாக இருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவருக்கும் ம. நடராஜனுக்கும் இடையேயான நட்பு குறித்து எனக்கு நன்றாகவே தெரியும்.

ம. நடராஜனுடன் மட்டுமல்ல, முதல்வர் ஜெயலலிதாவின் தில்லி தொடர்புகளுக்கு அவரும் ஒரு காரணமாக இருந்தார். அதனால் அழையா விருந்தாளியாக பண்டாரா பார்க்கிலுள்ள பீஷ்ம நாராயண் சிங்கின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று இறங்கினேன். 

அங்கே எனக்குக் காத்திருந்த ஆச்சரியம் என்ன தெரியுமா? வாழப்பாடி ராமமூர்த்தியும், ரங்கராஜன் குமாரமங்கலமும் வாசல் புல்வெளியில் பீஷ்ம நாராயண் சிங்குடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com