பேல்பூரி

""என்னங்க... தீபாவளி வருது தெரியுமா...?''""எப்படி தெரியாம போகும். ஜவுளிக்கடைக்காரங்க ஞாபகப்படுத்திட்டே இருக்காங்களே...?''
பேல்பூரி

கண்டது

( திருவாடானையில் உள்ள ஓர் அரசு தொடக்கப்பள்ளியின்  தகவல் பலகையில் எழுதியிருந்த வாசகம்)

 வெற்றியின் மூன்று வழிகள்:

முதலில், மற்றவர்களைவிட அதிகமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்தது, மற்றவர்களைவிட அதிகமாகப் பணியாற்றுங்கள்.

கடைசியாக, மற்றவர்களைவிட குறைவாகவே எதிர்பாருங்கள்.

- மு.சுகாரா,
திருவாடானை.

(பொள்ளாச்சி பக்கம் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் )

 "மரம்புடுங்கிக் கவுண்டனூர்'

-ய.ஜகநாதன்,
கோவை.

(கிருஷ்ணகிரியில் சரக்கு லாரி ஒன்றில்...)

சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்!

-பி. கோபி,
கிருஷ்ணகிரி.

கேட்டது

(அரக்கோணம் ரயில் நிலையத்தில் நண்பர்கள் இருவர்)

""மச்சி.. சண்டே வந்தாலே கடுப்பா இருக்குடா...''
"" ஏம்பா...?''
""பெண்டாட்டி... கடைக்குப் போ... கறி வாங்கி வா... வீட்டு வேலை செய்யுன்னு வெறுப்பேத்துறாங்கல்ல...? அதான்...!''

-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.


(திருவல்லிக்கேணி பெரிய தெருவில் இருவர் பேசிக் கொண்டது)

""சிங்கிள் பெட்ரூம் பிளாட் இருக்கு.. எட்டாயிரம் ரூபாய் வாடகை. டூ வீலர் பார்க்கிங்குக்கு தனியா ஐநூறு ரூபாய் தரணும்...!''
""நான் வேணும்னா டூ வீலர் பார்க்கிங் ஏரியாவுல தங்கிக்கிறேன். பிளாட் ஓனர் சம்மதிப்பாரான்னு கேட்டு பாருங்க..?''

-இரா.சாந்தகுமார்,
கூடுவாஞ்சேரி.

(சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தம்பதி பேசிக் கொண்டது)

""என்னங்க... தீபாவளி வருது தெரியுமா...?''
""எப்படி தெரியாம போகும். ஜவுளிக்கடைக்காரங்க ஞாபகப்படுத்திட்டே இருக்காங்களே...?''

-பி.பரத்,
சிதம்பரம்.


யோசிக்கிறாங்கப்பா!

பணத்தைத் தேடி நீதான் போகணும். 
பணம் உன்னைத் தேடி வராது!

-தா.முருகேசன்,
திருத்துறைப்பூண்டி.

மைக்ரோ கதை


""மீனா.. நாம ஆசைப்பட்டபடி சொந்தமா பெரிய வீடு கட்டிட்டோம்'' என்று தனது காதல் மனைவியிடம் சுரேஷ் சந்தோஷத்துடன் கூறினார்.

இதற்கு மீனா, "" கூடிய சீக்கிரம் கிரஹப் பிரவேசம் பெரிய அளவில செஞ்சிடணுங்க... நம்மள விமர்சனம் செஞ்சவங்க முன்னாடி நாம வீராப்பா நிக்கணும்...'' என்றார்.

""சரிம்மா.. விழாவுக்கு வரப் போகிற முக்கியமானவங்க யார் தெரியுமா...?''
""யாருங்க...''
""நம்மை பெத்தவங்கதான்...''
""நம்மை அவங்க நிராகரிச்சாங்க.. ஆனா என் கூட பிறந்தவங்க என் பெற்றோரை நிராகரிச்சிட்டாங்க.. உன் கூட பிறந்தவங்களும் உங்க பெற்றோரை கண்டுக்கிறதே இல்லை. நாம அவங்களை மரியாதை கொடுத்து, விழாவுக்கு அழைக்கணும்''
""என்னங்க...ஒன்று சொல்லட்டா...! அவங்க நம்ப வீட்டுலே இருக்கட்டுமே...?''
""உன் பேச்சுக்கு மறுபேச்சு ஏது?'' என்று மீனாவைப் பார்த்து, கண் சிமிட்டிய சுரேஷின் சமிக்ஞையை புரிந்துகொண்டவள் வெட்கத்தில் நெளிந்தாள்.

-சுகுணா,
புல்லரம்பாக்கம்.

எஸ்எம்எஸ்

""கஷ்டப்பட்டு முன்னுக்கு வரலாம். தப்பில்லை. 
ஆனால் பிறரை கஷ்டப்படுத்தி முன்னுக்கு வரக் கூடாது.''

-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.

அப்படீங்களா!


"வாட்ஸ் ஆப்' தகவல் பரிமாற்றத்தில் ரகசியம் காக்கும் மற்றொரு அம்சத்தை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு முறை மட்டும் பகிரும் தகவல் தானாக அழியும் வகையில், "வீவ் ஒன்ஸ்' என்ற சேவையை வாட்ஸ்ஆப் அண்மையில் அறிமுகம் செய்தது. 
எனினும், இந்தத் தகவலை பயன்பாட்டாளர்கள் "ஸ்கிரீன் ஷாட்' எடுத்து வைத்துக் கொள்வதால் தனிநபரின் உரிமை மீறப்படுவதாக கருதிய வாட்ஸ் ஆப் போன்று அனுப்பப்படும் தகவல்களை "ஸ்கிரீன் ஷாட்' , "ஸ்கிரீன் ரெக்கார்டிங்' செய்ய முடியாதபடி புதிய சேவையை வாட்ஸ்ஆப் பீட்டாவில் அறிமுகம் செய்துள்ளது. இது இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது. 
எனினும், இதுபோன்று பகிரப்படும் தகவல்களை பிற போன்களை வைத்து புகைப்படமோ, விடியோவோ எடுத்து வைத்து கொள்ளலாம் என்பதால் இந்தத் தகவல் ரகசியம் உறுதியாகாது என்றே கூறலாம்.
இந்த நிலையில், வாட்ஸ் ஆப்பில் 51 சதவீதம் பயன்பாட்டாளர்கள் தொடர்பில் இருப்பதை பிறர் பார்க்கக் கூடாது என்றும் 72 சதவீதம் பேர் தங்களுடன் பேசுபவர் உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு ஏற்ப வாட்ஸ்ஆப் குழுவில் இருந்து விலகினாலும் அது மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாதவகையில் இருக்கும் புதிய சேவையையும் வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது. எனினும், குழுவில் இருந்து விலகியவரின் விவரம் அட்மினுக்கு மட்டும் தெரியும். இந்த சேவையும் விரைவில் அனைவருக்கும் வர உள்ளது.
இதேபோல், வாட்ஸ்ஆப் இணையத்தில் நாம் தொடர்பில் இருக்கும்போது யார்யார் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு செய்யும் புதிய சேவையும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

-அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com