'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 111

அடுத்த இரண்டு நாள்களும் வாழப்பாடி ராமமூர்த்தி வீட்டிற்கும், மூப்பனாரின் அறைக்கும், காங்கிரஸ் அலுவலகத்துக்குமாக நான் எத்தனை தடவைகள் சுற்றி வந்தேன் என்பதற்கு கணக்கு வழக்கே கிடையாது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 111

அடுத்த இரண்டு நாள்களும் ஜன்பத்திலுள்ள வாழப்பாடி ராமமூர்த்தி வீட்டிற்கும், வெஸ்டர்ன் கோர்ட்டிலுள்ள மூப்பனாரின் அறைக்கும், அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்துக்குமாக நான் எத்தனை தடவைகள் சுற்றி வந்தேன் என்பதற்கு கணக்கு வழக்கே கிடையாது. 

ஐ.டி.ஓ.விலிருந்த "யங் இந்தியன்' அலுவலகம் வந்திருந்தார் சந்திரசேகர்ஜி. அவரிடம் சோ சார் ஏதாவது கூறியிருப்பார் என்று எனக்குத் தெரியும். வணக்கம் சொல்லி, அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

""ரஜினிகாந்தைக் காங்கிரஸில் சேர்க்க முனைவதாகச் சொன்னார் சோ. ரஜினிகாந்துடன் மூப்பனார்ஜி தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.''

""ரஜினிகாந்த் பிரதமரை சந்திக்கப் போவதாகத் தகவல்கள் வருகின்றனவே...''
""சோ சொல்லித்தான் நானும் கேள்விப்பட்டேன். ரஜினிகாந்த் நேரடியாக அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கை எனக்குஇல்லை. அப்படியே வருவதாக இருந்தாலும் காங்கிரஸை நம்பி அதில் இணைவார் என்று தோன்றவில்லை. சோவுக்கு இப்போதெல்லாம் ஜெயலலிதா என்றாலே பிடிக்கவில்லை. அவரிடம் கடும் அதிருப்தியில் இருக்கிறார். 

ஜெயலலிதா ஆட்சி ஊழல் ஆட்சி என்று திட்டுகிறார். சோ எப்போதும் இப்படித்தான். அவருக்கு ஏதாவது சரி என்று தோன்றிவிட்டால், அதில் பிடிவாதமாக இருப்பார்...''

""ஜெயலலிதா ஆட்சி ஊழல் ஆட்சி என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா?''

""ஜெயலலிதாவை அகற்றிவிட்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அது ஊழலில்லாத ஆட்சியாக இருக்குமா? இல்லை, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது மட்டும் யோக்கியமாக இருக்குமா? சோவுடன் நான் விவாதத்துக்குப் போவதில்லை. அவர் எதையாவது நினைத்து விட்டால், அதை முடிக்கும் வரை ஓயமாட்டார் என்று எனக்குத் தெரியும். நான் நடப்பதை வேடிக்கை பார்க்கிறேன்...''

சந்திரசேகர்ஜியுடன் பேசிக் கொண்டி ருக்கும்போது, அவரது கட்சித் தலைவர் ஒருவர் அவரிடம் ஏதோ சொல்லிவிட்டுப் போனார்.

""சோ தனது வேலையைத் தொடங்கி விட்டார். பிரதமர் நரசிம்மராவ், தொலை பேசியில் ரஜினிகாந்தை அழைத்துப் பேசியிருக் கிறார். அவரை தில்லிக்கு வந்து தன்னை சந்திக்கும்படி கூறியிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. உங்களுக்கு வேலை வந்துவிட்டது. இனிமேல் நீங்கள்கிளம்பலாம். அவ்வப்போது, என்ன நடக்கிறது என்கிற தகவலை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.''

அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்துக்கு நான் வருவதற்குள், பத்திரிகையாளர்கள் அங்கே கூடிவிட்டனர். "நடிகர் ரஜினிகாந்தை அழைத்து பிரதமர் நலம் விசாரித்தார்' என்றும், தன்னை சந்திக்க அவரை தில்லிக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்ததாகவும் செய்திக் குறிப்பை எல்லோருக்கும் தருவதுடன் அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பை வி.என். காட்கில் முடித்துக் கொண்டார்.

சோ சார், மூப்பனார் மட்டுமல்ல, திருநாவுக்கரசர், வை. கோபால்சாமி, ஆர்.எம். வீரப்பன் என்று பல்வேறு அரசியல் தலை வர்கள் ரஜினிகாந்தைத் தொடர்ந்து சந்தித்து வந்தனர். அவரது அழைப்பின் பேரில் அவர்கள் சந்தித்தார்களா அல்லது அவர்களாக அவரை சந்திக்கச் சென்றார்களா என்பது ரஜினிகாந்துக்கும் அவர்களுக்கும்தான் தெரியும்.

ஆனால் திமுக, அதிமுக தவிர்த்து அனைத்துத் தரப்பு அரசியல் தலைவர்களையும் ரஜினிகாந்த் சந்திப்பதை காங்கிரஸ் தலைமை, அதாவது பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் விரும்பில்லை என்பதை வி.என். காட்கிலிடம் பேசும்போது  தெரிந்து கொண்டேன்.

""ரஜினிகாந்த் காங்கிரஸில் சேர்ந்தால், தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் தமிழகத்தில் வெற்றி பெறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?'' - என்று நான் கேட்டேன்.

""நானும் நினைக்கவில்லை, பிரதமர் நரசிம்ம ராவும் நினைக்கவில்லை... நீ என்ன நினைக்கிறாய்?''

""நானும் எதிர்பார்க்கவில்லை. கணிசமான வாக்குகள் பெற முடியும். 1977-இல் தனித்து நின்றபோது, 27 இடங்களில் காங்கிரஸ் வென்றது. 1989-இல் 26 இடங்களைப் பெற்றது. ரஜினிகாந்த் காங்கிரஸில் சேர்ந்தால், அது அதிகபட்சம் 62 அல்லது 72 ஆகலாம், அவ்வளவுதான்.''

""திமுக, அதிமுக இரண்டும் இல்லாமல் 72 இடங்களில் வென்றால் அதுவே மிகப் பெரிய வெற்றி. அத்தனை இடங்கள் வெல்லும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், காங்கிரஸ் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதால், கூட்டணி ஆட்சிதான் அமையும். அதுகூட நல்லதுதானே...''

நான் எதுவும்  பேசவில்லை. காட்கில் போன்ற மூத்த அரசியல் தலைவர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் வயது எனக்கு இல்லை என்பது தெரிந்ததால்தான் அந்த மெளனம். நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதுபோல இருந்தது அவரது பார்வை.

""கூட்டணி ஆட்சிகூட அமைக்க முடியாது என்று நினைக்கிறாயா?''

""அப்படியெல்லாம் இல்லை. காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கும்? ராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்புள்ள கட்சி என்று விமர்சிக்கப்படும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடியாது. ஜெயலலிதாவை எதிர்ப்பதற்காகத்தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவே சம்மதிக்கிறார். காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைவதை அவர் எப்படி ஏற்றுக் கொள்வார்?''
வி.என். காட்கில் பதில் சொல்லவில்லை. யோசனையில் ஆழ்ந்தார். 

""இங்கேயே தில்லியில் சுற்றிக் கொண்டிருக்காமல், நீ சென்னைக்குப் போய் அங்கே என்ன நிலவரம் என்று தெரிந்து கொண்டு வா. எதிர்க்கட்சியாக உயர்ந்தால் காங்கிரஸூக்கு அதுவேகூட வெற்றி தானே... மூப்பனார்ஜியும், சோவும் ரஜினிகாந்தை சம்மதிக்க வைக்க வேண்டும். அவர் தனிக்கட்சி தொடங்குவது என்று முடிவெடுத்துவிடக் கூடாது...''

வெஸ்டர்ன் கோர்ட்டில் மூப்பனார் இருந்தார். போனேன். பார்த்தேன். கேட்டேன். வழக்கம்போல, "பார்ப்போம்...', "இன்னும் எதுவும் முடிவாகவில்லை' போன்ற மழுப்பல் பதில்கள் மட்டும்தான் அவரிடமிருந்து வந்தன.

ஹரீஷ்சந்திர மாத்தூர் லேனிலிருந்த மத்திய சமூக நலத் துறை இணையமைச்சர் கே.வி. தங்கபாலுவின் வீட்டிற்குப் போனேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்கவில்லை.

அப்படியே வந்தாலும், மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெற முடியாது என்பதுதான் அவரது கருத்தாக இருந்தது.

""1977-இல் தனித்துப் போட்டியிட்டோம். 27 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. 

1989-இல் பிரதமர் ராஜீவ் காந்தி 13 முறை தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வந்தார். ஏறத்தாழ 5,000 கி.மீ. தூரம் காரிலும் ஹெலிகாப்டரிலும் பிரயாணம் செய்து பிரசாரம் செய்தார். 26 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. இத்தனைக்கும் ஜெயலலிதா, ஜானகி என்று அதிமுக பிளவு பட்டிருந்தது. ராஜீவ் காந்தியால் முடியாததை ரஜினிகாந்தால் சாதித்துவிட முடியும் என்று நான் நம்பவில்லை.''

""காங்கிரஸ் இனிமேல் தமிழகத்தில் ஆட்சிக்கு வரவே முடியாது என்கிறீர்களா?''

""யார் அப்படிச் சொன்னது? திராவிடக் கட்சிகளுக்கு மாற்று காங்கிரஸ் மட்டும்தான் என்று நான் அடித்துச் சொல்வேன். ஆனால், ரஜினிகாந்தை நம்பி நாம் தேர்தலை சந்திக்க முடியாது. அவரும் காங்கிரஸை நம்பி அரசியலுக்கு வரமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்.''

சென்னை திரும்பியதும்  சோ சாரை சென்று சந்தித்தேன். தில்லியில் சந்திரசேகர்ஜி, காட்கில்ஜி போன்றவர்களுடனான சந்திப்பு குறித்தும், ஆர்.வி. சொன்னது குறித்தும் தெரிவித்தேன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். பதிலெதுவும் சொல்லவில்லை.

""நரசிம்ம ராவும்  ரஜினிகாந்தும் என்ன பேசிக் கொண்டார்களாம்?''

""அது எனக்கு எப்படி சார் தெரியும்? ரஜினிகாந்தைப் பார்த்துக் கேளுங்க சார்.''
""ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலுக்கு கொண்டுவர நீங்கதான் முயற்சிக்கிறதாச் சொல்கிறார்களே...''

""ரஜினிகாந்த் என்ன குழந்தையா சார், நான் கையால் பிடிச்சுக் கூட்டிண்டு வரத்துக்கு. "ஹி இஸ் வெரி மெச்சூர்ட் அண்ட் வெல் இன்ஃபார்ம்ட் அபெளட் பாலிடிக்ஸ்'. ஜெயலலிதா கவர்ன்மெண்ட் மேலே பரவலாக அதிருப்தி இருக்கு. எதை எடுத்தாலும் லஞ்சம், ஊழல்னு ஒரே கொள்ளையா இருக்கு. இந்த கவர்ன்மெண்ட் போகணும்னு நான் அபிப்பிராயப்படறேன். ரஜினிகாந்தும் அபிப்பிராயப்படரார். அவ்வளவுதான்.''

""ரஜினிகாந்த் வர்ரதுனால, அதிமுக தோற்கலாம். ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா? திமுக ஜெயிக்காதுன்னு என்ன நிச்சயம்?''

""அடுத்தாப்பல யார் வரப்போகிறது என்பது முக்கியமல்ல. இந்த கரப்ட் ரெஜிம் தொடரக்கூடாது, அவ்வளவுதான்.''

""நீங்கதானே திமுகவைப் பதவியிலிருந்து அகற்றி, ஜெயலலிதா முதல்வராகிறதுக்கு வழி கோலியது? இப்போ, ஜெயலலிதாவை மாத்தணும்னு சொல்வது முரணாக இருக்கே...''

""இதிலென்ன சார் முரண்? கருணாநிதி விடுதலைப்புலிகளுடன் சகவாசம் வைச்சுண்டிருந்தார். அவர் போகணும்னு போராடினேன். இப்ப ஜெயலலிதா ஆட்சியில கரப்ஷன் தாங்க முடியல. அவரும் போகணும்னு நினைக்கிறேன். கருணாநிதி கவர்ன்மெண்டைக் கலைத்தது சந்திரசேகர்ஜி, நானில்லை. அவர்தான் ப்ரைம் மினிஸ்டரா இருந்தார்.''

""ஒரே ஒரு சந்தேகத்துக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவாரா இல்லை, காங்கிரஸில் சேரப் போகிறாரா?''

""நான் என்ன சார், ரஜினிகாந்தோட கொ.ப.செ-வா (கொள்கை பரப்புச் செயலாளரா) இதுக்கெல்லாம் பதில் சொல்ல? அவருக்கு நான் நல்ல நண்பர், அவ்வளவுதான். அவர் அரசியலுக்கு வரணும்னு நான் நினைக்கிறேன். அவர் வருவாரா, தனிக்கட்சி தொடங்குவாரா, காங்கிரஸில சேரப்போறாரான்னு எல்லாம் எனக்கு எப்படி சார் தெரியும்? நீங்கள் அவர்கிட்டத்தான் போய்க் கேட்கணும்.''

""அவர் உங்ககிட்டதானே அட்வைஸ் கேட்பார்?''

""பாவம், நான் பெரிய அறிவாளின்று அவர் நினைக்கிறார். என் மேலே நம்பிக்கை வைச்சு அவர் என்னிடம்  சொல்வதை எல்லாம் நான் உங்ககிட்டச் சொல்லத் தொடங்கினா, அவர் என் மேல வைச்சுண்டிருக்கிற நம்பிக்கைக்கு என்ன அர்த்தம்?''

சோ சாரிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்காது என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. ரஜினிகாந்தை சந்திக்க நான் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.

சாஸ்திரி நகரிலுள்ள வீட்டில் வாழப்பாடி ராமமூர்த்தியை சந்தித்தேன். அவர் அப்போதுதான் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டு வந்திருந்தார். தங்களது கூட்டணி உறுதி என்று நம்பிக்கையுடன் சொன்ன வாழப்பாடியார், இன்னொரு தகவலையும் எனக்குத் தந்தார்.

திவாரி காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட ஏழு கட்சிக் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருந்ததை அவர் தெரிவித்தார். ரஜினிகாந்த் - காங்கிரஸ்  கூட்டணி ஏற்பட்டு மும்முனைப்போட்டி உருவானால் அது தங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று வாழப்பாடியார் சொன்னபோது, அது சாத்தியம்தான் என்று தோன்றியது.

சாஸ்திரி நகர் வரை போய்விட்டு பெசன்ட் நகர் அஷ்டலட்சுமிகோயிலுக்குப் போகாமல் எப்படித் திரும்புவது? அஷ்டலட்சுமிகோயில் வரை சென்றுவிட்டு, கலாúக்ஷத்ரா காலனியிலுள்ள "புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராஜனை சந்திக்காமல் திரும்ப மனம் ஒப்புமா?

ரஜினிகாந்த் குறித்து என்னிடம் அவர் ஏதாவது கேட்பார் என்று நான் நினைக்க, எனக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. அப்டேட்டாக இருந்தார் ம. நடராஜன். ரஜினிகாந்தின் அடுத்த நகர்வு என்ன என்று அவர் சொன்ன தகவலைக் கேட்ட பிறகு, அங்கே எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அடுத்த நாள் காலை விமானத்தில் தில்லி கிளம்பிவிட்டேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com