'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 112

தில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்குச் சென்றபோது, நான் செல்ல இருந்த அதே விமானத்தில் தில்லிக்குப் பயணமாக சோ சாரும் இருப்பதை ஆச்சரியம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல?
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 112

தில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்குச் சென்றபோது, நான் செல்ல இருந்த அதே விமானத்தில் தில்லிக்குப் பயணமாக சோ சாரும் இருப்பதை ஆச்சரியம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல? சோ சார் மட்டுமல்ல, அன்றைய தில்லி விமானத்தில் ஏகப்பட்ட விஐபி-க்கள். சர்வகட்சி மாநாடே நடத்திவிடலாம் எனும் அளவுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அந்த விமானத்துக்காகக் காத்திருந்தனர். 

அவர்கள் எல்லோருமே, சோ சாரை சூழ்ந்துகொண்டிருந்தனர். அதற்கு நடுவில் நானும், அந்த விமானத்தில் தில்லிக்கு வருகிறேன் என்பதை உணர்த்தும் விதத்தில் அவரது பார்வையில் படும்படி சற்று தள்ளியே நின்று கொண்டிருந்தேன். என்னைப் பார்த்துவிட்டதை உறுதிப்படுத்துவது போல, கையை அசைத்துச் சிரித்தார்.

சோ சாரைச் சுற்றி இருந்தவர்கள் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள். விஐபி-க்களுக்கான அந்த காத்திருப்பு அறைக்கு என்னை அழைத்துச் சென்ற திண்டிவனம் ராமமூர்த்தி, சோ சாருடன் அளவளாவத் தொடங்கியபோது, நான் தனித்து விடப்பட்டேன். 

விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பு வெளியான பிறகுதான் சோ சாரை நெருங்க முடிந்தது. வரிசையில் நின்றபோது அவருக்கு அருகில் போய் நின்று கொண்டேன். அவர்தான் பேச்சைத் தொடங்கினார்.

""என்ன சார், தில்லி கிளைமேட்டெல்லாம் எப்படி இருக்கு?''

நான் கிடைத்த சந்தர்ப்பத்தையும், நேரத்தையும் வீணாக்க விரும்பவில்லை. நேராகவே விஷயத்துக்கு வந்துவிட்டேன்.

""பிரதமர் நரசிம்ம ராவை சந்திக்கப் போகிறீர்களா?''

""நான் நரசிம்ம ராவைப் பார்க்கத்தான் தில்லிக்குப் போகணுமா? சந்திரசேகரைப் பார்க்கப் போகக் கூடாதா? அத்வானி இருக்கார், மூப்பனார் இருக்கார், ஹெக்டே இருக்கார், சுப்பிரமணியம் சுவாமி இருக்கார், அவங்களப் பார்க்கறதுக்குப் போகக் கூடாதா?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

""பிரதமர் நரசிம்ம ராவ்தான் நடிகர் ரஜினிகாந்த் கிட்டப் போனில் பேசியிருந்தார். அதனால, அடுத்தகட்டமா நீங்க பிரதமரைப் பார்க்கறீங்களோ என்று கேட்டேன். நீங்க நினைத்தால்தான் ரஜினிகாந்த் - காங்கிரஸ் கூட்டணி ஏற்படும்னு தில்லியில எல்லோருமே எதிர்பார்ப்பில் இருக்காங்க...''

""அப்படியா, எனக்கே இது புது நியூசா இருக்கு... செளத் அவென்யூ வாங்க சார், அங்க பேசிக்கலாம்...''

விமானத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் ஏறியபின் இருவரும் பிரிந்து விட்டோம். செளத் அவென்யூ என்று அவர் குறிப்பிட்டது முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் இல்லத்தை.

நான் மதிய உணவு நேரத்தில் செளத் அவென்யூ சென்றபோது சோ சார், சந்திர சேகரைச் சந்தித்துவிட்டுச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அடுத்தாற்போல, அவர் ஜி.கே. மூப்பனாரை சந்திக்க வெஸ்டர்ன் கோர்ட்டுக்குத்தான் சென்றிருப்பார் என்று பொறி தட்டியது. எனது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.

உள்ளே சோ சாரும் மூப்பனாரும் முக்கியமான ஆலோசனையில் இருப்பதாகவும், இப்போது சந்திக்க முடியாது என்றும் மூப்பனாரின் உதவியாளர் பாண்டியன் தெரிவித்தார். மூப்பனாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னோர் உதவியாளர் பாலு வந்தபோது, எனக்குப் பேச்சுத் துணைக்கு ஒருவர் கிடைத்தார். வெஸ்டர்ன் கோர்ட் வராந்தாவில் உலாத்தியபடி, பாலுவின் அரசியல் வியாக்யானங்களைப் பொறுமையாகக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

சுமார் அரை மணி நேரத்துக்குப் பின் சோ சாரும் மூப்பனாரும் வெளியே வந்தார்கள். என்னைப் பார்த்த  மூப்பனார், ""சோ சாருடன் வந்திருக்கீங்களா, அவர் சொல்லவே இல்லையே..'' என்றபோது நான் நெளிந்தேன்.

"அவர் என்னுடன்தான் வந்தார். சென்னையிலிருந்து நாங்கள் இருவரும் ஒரே விமானத்தில்தான் வந்தோம். அவர் தனியா வந்தார், நான் தனியா வந்தேன். இங்கேயும் அப்படித்தான். நாங்க ஒருவிதமான கூட்டணி. அவ்வப்போது சேர்ந்துப்போம், அவ்வப்போது தனித்தனியாகப் போயிடுவோம். கம்யூனிஸ்டுகள்மாறின்னு வைச்சுக்குங்களேன்.'' சோ சார் சொன்னதும் எல்லோருமே சிரித்துவிட்டோம்.

""சார், மூப்பனார் என்னை லஞ்சுக்குக் கூப்பிடறார். நீங்களும் வரேளா?''

சோ சாரின் நாகரிகமான கேள்விக்கு நானும் நாகரிகமாக, "வேண்டாம், நீங்கள் போங்கள். பிறகு சந்திப்போம். எங்கே சந்திக்கலாம் என்று சொல்லுங்கள்' என்றேன்.

மூப்பனார் முகத்தில் எந்தவித பாவமும் இல்லாமல், வாயை மென்று கொண்டிருந்தார். நான் தர்மசங்கடமான கேள்வியைக் கேட்டுவிட்டேன் என்பதைப்  புரிந்துகொண்டேன். ஆனால், சோ சார் கொஞ்சம்கூடத் தயக்கமோ, பதற்றமோ இல்லாமல் என்னைப் பார்த்தார்.

""எட்டரை ஃபிளைட்டில நான் சென்னை திரும்பறேன். ஆறு மணிக்கு இங்கே வந்துருங்கோ. ஏர்போர்ட்டுக்கு என்னுடன் காரில் பேசிக்கொண்டே போகலாம். அந்தக் காரிலேயே நீங்க திரும்பிடுங்கோ.''

மூப்பனாரே காரை ஓட்டச் சொல்ல, சோ சார் அவருடன் கிளம்பினார். நானும் பாலுவும் வெஸ்டர்ன் கோர்ட் கேன்டீனில் சாப்பிட சென்றோம்.

வெஸ்டர்ன் கோர்ட்டிலிருந்து, கன்னாட்பிளேசிலிருந்த எனது "நியூஸ்கிரைப்' அலுவலகத்துக்குச் சென்றுவிட்டேன். முந்தைய நாள்   "புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராஜன் சொன்ன செய்திகளை அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.

நடிகர் ரஜினிகாந்தைக் காங்கிரஸ் கட்சிக்குள் இழுக்கும் முயற்சியில் மூப்பனார், சோ சார் மட்டுமல்லாமல், அவரைத் தனிக்கட்சி தொடங்க ஆர்.எம். வீரப்பன், திருநாவுக்கரசர் (அப்போது திருநாவுக்கரசு) உள்ளிட்ட பலர் வற்புறுத்தி வருவதாகச் சொன்னார். ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால் அதில் இணைந்து கொள்ளும் மனநிலையில் வை. கோபால்சாமியும் இருக்கிறார் என்பது ம. நடராஜன் என்னிடம் தெரிவித்த தகவல்.

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கிவிடக் கூடாது என்பதில் திமுகவும், அதிமுகவும் - அதாவது, கருணாநிதியும், ஜெயலலிதாவும் - அக்கறை காட்டின என்பதுதான் நடராஜனிடம் இருந்து நான் கிரகித்துக் கொண்ட தகவல். சிவாஜி கணேசன் கட்சி தொடங்கியதையும், டி. ராஜேந்தர், கே. பாக்கியராஜ் போன்றவர்கள் கட்சி தொடங்கியதையும் அவருக்கு எடுத்துக்காட்டி, அந்த முயற்சியில் அவர் இறங்கிவிடாமல் இருப்பதற்கு திமுகவும், அதிமுகவும் திரையுலகினர் சிலரைக் களமிறக்கி இருந்தன என்று தெரிந்துகொண்டேன்.

ரஜினிகாந்த் அரசியலில் முழு மூச்சாக இறங்குவதை, அவரை வைத்துப் படங்கள் தயாரிக்கும் பெரும் நிறுவனங்கள் விரும்பவில்லை. அவரது அரசியல் பிரவேசத்தால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்பது அவர்கள் கவலை. அவர்களை திமுக, அதிமுக தலைமை முழுமையாகவே பயன்படுத்திக் கொண்டது என்பது ம. நடராஜன் சொன்ன தகவல்களிலிருந்து புரிந்தது.

மதிய உணவுக்குச் சென்ற மூப்பனாரும் சோ சாரும், அதற்குப் பிறகு எங்கு செல்வார்கள் என்று எனது சிந்தனை திசை திரும்பியது. சட்டென மீண்டும் பொறி தட்டியது. ஒருவேளை, அப்படி இருக்குமோ என்கிற சந்தேகத்தில், தொலைபேசியைச் சுழற்றி, பிரதமர் அலுவலகத்தின் இணையமைச்சர் புவனேஷ் சதுர்வேதியைத் தொடர்புகொண்டேன். அவர் அலுவலகத்தில் இல்லை என்று தகவல் தெரிவித்தார், அவரது மலையாள உதவியாளர்.

என்னை அறியாமல்  ஓர் அஸ்திரத்தை எடுத்து வீசினேன்.

""பிரதமரைச் சந்திக்க சென்னையிலிருந்து வந்திருக்கும் "துக்ளக்' ஆசிரியர் "சோ' ராமசாமிக்கு எத்தனை மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் தரப்பட்டிருக்கிறது என்று கேட்டுச் சொல்ல முடியுமா?'' என்று அவரிடம் மலையாளத்தில் கேட்டேன்.

""ஒன் மினிட். பிரதமர் அலுவலகத்தில் கேட்டுச் சொல்கிறேன்'' என்றவர் இன்டர்காமில் விசாரித்து, ""மாலை 5 மணிக்கு'' என்று தகவல் தெரிவித்தார்.

சோ சார் பிரதமரை சந்திப்பது உறுதியாகி விட்டது. அவர்கள் என்ன பேசினார்கள், அதன் அடுத்தகட்ட நகர்வு என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நான் காத்திருந்தேன்.

ஐந்து மணிக்குப் பிரதமரை சந்திப்பதற்கு முன்னர், சுப்பிரமணியன் சுவாமி, ஆர். வெங்கட்ராமன் இருவரையும் சோ சார் சந்தித்த தகவல்கள் எனக்குக் கிடைத்தன. அப்போதும்கூட யாருக்கும் பிரதமரை அவர் சந்திக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியில் தெரியவில்லை என்பதுதான் வேடிக்கை.

தமிழகம் தொடர்பான ஒருசில பத்திரிகையாளர்களைத் தவிர, தில்லி பத்திரிகையாளர்கள் யாருமே, பிரதமர் - சோ சார் சந்திப்பின் முக்கியத்துவத்தை உணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சந்திப்பின் பின்னணியில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் இருக்கக்கூடும் என்பதையும், அவர் காங்கிரஸில் சேரும் வாய்ப்பு இருப்பதையும் அவர்கள் சீரியசாக எடுத்துக்  கொள்ளவில்லை.

ஐந்தரை மணிக்கே நான் வெஸ்டர்ன் கோர்ட்டிலுள்ள மூப்பனாரின் அறைக்கு வந்துவிட்டேன். மூப்பனார் அக்பர் ரோடு அலுவலகத்தில் இருந்ததால், அங்கே அவரது உதவியாளர் பாண்டியன் மட்டும்தான் இருந்தார். சோ சார் வரும்வரை அங்கே காத்திருந்தேன்.

என்னிடம் தெரிவித்திருந்தது போலவே, விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் வெஸ்டர்ன் கோர்ட்டுக்கு வந்து, அந்தக் காரில் என்னையும் ஏற்றிக்கொண்டார் சோ சார். காரில் ஏறிய பிறகு நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?

""சார், மிஷன் சக்சஸா, தோல்வியா?''

""சக்சஸூம் இல்லை, தோல்வியும் இல்லை, "டிரா'! கிரிக்கெட்டில் எந்த பந்தைப் போட்டாலும் "டொக்', "டொக்'னு மட்டையைப் போடறமாதிரி, எதுவுமே பேசாமலும், சொல்லாமலும் இருந்தா என்ன சார் பண்றது? மூப்பனார் சொன்னதால்தான் நான் பிஎம்-ஐ பார்க்கறதுக்கே சம்மதிச்சேன். பிரதமர் நரசிம்ம ராவ் எந்த முடிவையும் எடுக்கப் போறதில்லை.''

""ரஜினிகாந்த் பற்றிப் பேசினீர்களா? அவர் என்ன சொன்னார்?''

""எதுவுமே சொல்லலை. அவர் காங்கிரஸில சேர்வாரான்னு கேட்டார். "சேர்ந்தா நீங்கள் அவரைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்குவீர்களா?' என்று கேட்டேன். "அவர் முதல்ல சேரட்டும், அப்புறம் பார்க்கலாம்'னார். ரஜினிகாந்தோட ஸ்ட்ரெங்த் என்னன்னுகூட அவருக்குப் புரியலை.''

சோ சார் ரொம்பவும் அப்செட்டில் இருந்தார் என்பதும், அந்த சந்திப்பு அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது.

""ரஜினி எதுக்கு காங்கிரஸில சேரணும்? அவர் தனிக்கட்சி தொடங்கினா, காங்கிரஸ் தலைமை கூட்டணி வைக்க அவரைத் தேடி வருமே சார்'' - இது நான். 

""தனிக்கட்சி தொடங்குறது எல்லாம் அவ்வளவு எளிதல்ல. எம்.ஜி.ஆருக்கு, திமுகங்கிற அமைப்பு இருந்தது. அது வெர்ட்டிகலா ஸ்பிளிட்டாச்சு. தனிக்கட்சி தொடங்கி "ரிஸ்க்' எடுக்க ரஜினி தயாராக மாட்டார்னுதான் நான் நினைக்கிறேன். அவர் கட்சி தொடங்கலைனாலும் ஆதரித்தாலே போதும், காங்கிரஸ் தமிழ்நாட்டில "டிசைடிங் ஃபாக்டர்' ஆயிடும். நரசிம்ம ராவுக்கு அதை எல்லாம் எடுத்துச் சொன்னேன். உற்சாகமா எந்த பதிலும் சொல்ல மாட்டேங்கிறார்...''

விமான நிலையம் வரை பேசிக்கொண்டு வந்தோம். பிரதமர் தரப்பு ரியாக்ஷன் என்ன என்று தெரிந்துகொண்டு அவரைத் தொடர்பு கொள்வதாகச் சொன்னேன்.

காரிலிருந்து இறங்குவதற்கு முன்னர் சோ சார் சொன்ன வார்த்தைகள் இவை - 

""நரசிம்ம ராவ் ரொம்ப மழுப்பறார். ரஜினிகாந்தின் ஆதரவோட, ஜெயலலிதாவோட கூட்டணி வேணும்னு நினைக்கிறார் போலிருக்கு. எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை...''

பிரதமர் நரசிம்ம ராவின் தயக்கத்துக்கு என்ன காரணம் என்பது பிறகுதான் எனக்குப் புரிந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com