'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 104

அஜித் சிங் குறிப்பிட்ட நபர் வேறு யாருமல்ல, சந்திராசுவாமிதான். சுதந்திர இந்தியாவின் வரலாறு எழுதப்படும்போது அதில் சந்திராசுவாமியின் பெயர் இடம் பெறாமல் இருக்க முடியாது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 104

அஜித் சிங் குறிப்பிட்ட நபர் வேறு யாருமல்ல, சந்திராசுவாமிதான். சுதந்திர இந்தியாவின் வரலாறு எழுதப்படும்போது அதில் சந்திராசுவாமியின் பெயர் இடம் பெறாமல் இருக்க முடியாது. எல்லோரும் சந்திராசுவாமி, முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகருக்கும், பி.வி. நரசிம்ம ராவுக்கும்தான் நெருக்கமானவர் என்று நினைக்கிறார்கள். அவர் ராஜீவ் காந்திக்கும், வி.பி. சிங்குக்கும்கூட நெருக்கமானவர்.

குதுப்மினாரை ஒட்டிய குதூப் இன்ஸ்டிட்யூஷனல் ஏரியாவில் ஆசிரமம் நிறுவுவதற்காக அவருக்கு நிலம் ஒதுக்கித் தந்தவர் அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி. வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ராஜீவ் காந்தி, சந்திராசுவாமியை பலமுறை சந்தித்தார். ராஜீவ் காந்திக்கும் சந்திரசேகருக்கும் இடையே பாலமாக இருந்தவரும் சந்திராசுவாமிதான். 

பிரதமராக இருந்த வி.பி. சிங்கின் நெருக்கம் காரணமாகத்தான் ஆசிரமம் எழுப்பும் முயற்சியில் சந்திராசுவாமி இறங்கினார். நரசிம்ம ராவ் பிரதமரான பிறகு நிறுவப்பட்ட அந்த ஆசிரமத்துக்கு, "விஸ்வ தர்மயாதன் சநாதன்' என்று பெயர்.

ஜைன மதத்தைச் சேர்ந்த நேமிசந்த் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஹைதராபாதில்தான். சிறு வயதிலேயே மந்திர, தந்திரங்கள், ஜோசியம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்ட நேமிசந்த், பிகார், உத்தர பிரதேச மாநிலங்களில் உள்ள இமயமலைப் பகுதிகளில் நீண்ட நாள்கள் தங்கி இருந்து, பல சித்திகளைப் பெற்றதாகவும், காளி உபாசகராக மாறித் தனது பெயரைச் சந்திராசுவாமி என்று மாற்றிக் கொண்டதாகவும் சொல்வார்கள்.

புருணே சுல்தான், சந்திராசுவாமியின் பரம சிஷ்யர். சந்திரா சுவாமியைத் தனது ராஜகுருவாக புருணேயில் இருக்கும்படி தெரிவித்ததாக, நியூயார்க் டைம்ஸூக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருக்கிறார். பெஹ்ரைன் சுல்தான் ஷேக் கியா பின் சல்மான் அல் கலிஃபாவுக்கு ஏதாவது கவலை, பிரச்னை என்றால் சந்திராசுவாமியை சிறப்பு விமானத்தில் பெஹ்ரானுக்கு அழைப்பது என்பது வாடிக்கை.

ஹாலிவுட் பேரழகியும், "கிளியோப்பாத்ரா' திரைப்பட நாயகியுமான எலிசபெத் டெய்லரின் அந்தரங்க ஆலோசகர் சந்திராசுவாமிதான். அதேபோலத்தான் இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சருக்கும் சந்திரா சுவாமிதான் ஆலோசகர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மார்கரெட் தாட்சருக்கு சந்திராசுவாமியை அறிமுகப்படுத்தியவர் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங். 

முதலாவது சந்திப்பிலேயே, அடுத்த சில மாதங்களில் இங்கிலாந்து பிரதமராக மார்கரெட் தாட்சர் உயர்வார் என்றும், தொடர்ந்து பத்து ஆண்டுகள் பிரதமராக உலகப் புகழ் பெறுவார் என்றும் சந்திராசுவாமி சொன்னபோது, நட்வர் சிங்கும் நம்பவில்லை, மார்கரெட் தாட்சரும் அதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. எதிர்பாராவிதத்தில் பிரதமரானபோது, மார்கரெட் தாட்சரிடமிருந்து நட்வர் சிங்குக்கு "டிரங்க் கால்' அழைப்பு வந்தது. சந்திராசுவாமி ராஜமரியாதையுடன் லண்டனுக்குப் பறந்தார்.

இவையெல்லாம் உலகம் அறிந்த பிரபலங்கள். சந்திராசுவாமிக்கு வெளியில் தெரியாத சில நிழல் மனிதர்களுடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சர்வதேச ஆயுத வியாபாரி ஆன்டன் கசோகியும், கடத்தல் சாம்ராஜ்யம் நடத்தும் தாவூத் இப்ராஹிமும். பெரும்பாலான ஊடக அதிபர்களும், தொழில் நிறுவன முதலாளிகளும் சந்திராசுவாமியின் நட்பு வட்டத்தில் இருந்தனர்.

சந்திரா சுவாமியைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, நான் அவரை நேரில் பார்த்ததில்லை. முதன்முதலில் நான் அவரை சந்தித்தது சென்னை விமானநிலையத்தில்தான். யாரை சந்திப்பதற்காக அவர் சென்னை வந்திருந்தார் என்பது எனக்குத் தெரியாது. தில்லி செல்லும் விமானத்தில் அவரும் பயணிக்கிறார் எனும்போது எனக்குப் பத்திரிகையாளனுக்கே உரித்தான குறுகுறுப்பு எழுந்தது. 

"எக்ஸிகியூடிவ் கிளாஸ்' எனப்படும் முதல் வகுப்புப் பகுதியில் அமர்ந்திருந்தார் அவர். சாதாரண வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த நான் விமானப் பணிப்பெண் மூலம் எனது முகவரி அட்டையை (விசிட்டிங் கார்ட்) அவருக்கு அனுப்பினேன். அழைத்தால் சென்று சந்திப்போமே என்கிற நைப்பாசைதான் காரணம். அவரைப் பேட்டி காண வேண்டும் என்று நான் விரும்பியதற்குப் பல காரணங்கள் இருந்தன. முக்கியமான காரணம், அமைச்சரும் நண்பருமான ராஜேஷ் பைலட்டின் இலாகா மாற்றம்.

அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. என்னை அவர் சட்டை செய்யவில்லை என்று கருதி நான் தூங்கிவிட்டேன். தில்லியில் விமானத்தில் இருந்து நான் இறங்குவதற்கு முன்பே அவர் இறங்கிச் சென்றுவிட்டிருந்தார். அத்துடன் நான் அதை மறந்துவிட்டேன். ஆனால் சந்திராசுவாமி என்னை மறக்கவில்லை என்பதை ஒரு மாதத்துக்குப் பிறகு தெரிந்து கொண்டேன்.

குதூப் ஏரியாவிலுள்ள அவரது ஆசிரமத்தில் வந்து சந்திக்கும்படி, சந்திரா சுவாமியிடமிருந்து அழைப்பு வந்தபோது, எனக்கு முன்பு இருந்த உற்சாகம் இருக்கவில்லை. ஒருவித பயம் ஏற்பட்டது. உள்துறை அமைச்சகத்திலிருந்து, வனம், சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டிருந்த அமைச்சர் ராஜேஷ் பைலட்டை சந்திக்க 10, அக்பர் ரோடுக்கு விரைந்தேன். எனது அதிர்ஷ்டம் அவர் வீட்டிலிருந்தார்.

நான் நடந்த விவரத்தைச் சொன்னபோது அவர் சிரித்தார். போய் பார்த்துவிட்டு வாருங்கள் என்பதுதான் அவர் எனக்குத் தந்த அறிவுரை.

""தைரியமாகப் போங்கள். ராஜீவ் படுகொலையில் தொடங்கி, அவரது பண மோசடி, நான் இலாகா மாற்றப்பட்டது என்று ஒன்றுவிடாமல் கேளுங்கள். என்ன சொல்கிறார் பார்ப்போம்...''

""அந்த ஆசிரமத்துக்குள் போய், அவரிடம் எடக்கு முடக்காகக் கேள்வி கேட்டால், ஒருவேளை நான் திரும்பி வராமல் போனால்...?''

""அப்படியெல்லாம் நடந்து விடாது. கைதுக்குப் பிறகு அவர் பயந்து போயிருக்கிறார். அதனால்தான் என்னை உள் துறையிலிருந்து மாற்ற அழுத்தம் கொடுத்திருக்கிறார். அவருக்குத் தெரியாமல் உங்களைக் கண்காணிக்க நான் ஏற்பாடு செய்கிறேன்.  அதுமட்டுமல்ல, சந்திராசுவாமி  என்ன சொல்கிறார், என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள அவருடன் தொடர்பு அவசியம். அதற்கு நீங்கள்தான் சரியாக இருப்பீர்கள்.''

உள்ளூர சற்று பயம் இருந்தாலும் ராஜேஷ் பைலட் பின்னணியில் இருக்கும் தைரியத்தில் நான் சந்திராசுவாமியை சந்திக்கத் தீர்மானித்தேன். "விஸ்வ தர்மயாதன் சநாதன்' ஆசிரமத்துக்குள் நுழையும்போது இன்னொரு உலகத்துக்குள் நுழைவது போலிருந்தது.

என்னை வரவேற்க நுழைவாயிலேயே மூன்று பேர் காத்துக் கொண்டிருந்தனர். எனது ஜிப்சியை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு அவர்களது வெளிநாட்டு சொகுசு வாகனத்தில் என்னை ஏற்றிக்கொண்டனர்.

அடுத்த அரை மணி நேரம் அந்த வாகனத்தில் ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டினார்கள். ரம்மியமான பூந்தோட்டம். பச்சைப் பசேலென்று புல்வெளிகள். ஆங்காங்கே மான்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. மயில்கள் பறந்து 
கொண்டிருந்தன.

பர்ணசாலைகள் போலத் தங்குவதற்குக் குடில்கள். தியான மண்டபம், சந்திப்புக் கூடங்கள், சிறு சிறு கோயில்கள், முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கான சிறிய மசூதி என்று அங்கே தனக்கென ஓர் உலகத்தையே சிருஷ்டித்திருந்தார் சந்திராசுவாமி. கடைசியில் அவர் தங்கியிருக்கும் இடத்தை அடைந்து, நான் ஓர் அறையில் உட்கார வைக்கப்பட்டேன்.

அந்த அறையின் ஒரு பகுதியில், பல்வேறு ஆளுமைகளுடன் சந்திராசுவாமி இருக்கும் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராஃபத்துடனும், போப்பாண்டவருடனும் சந்திராசுவாமி இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து நான் வியப்பில் சமைந்தேன்.

சட்டென்று ரம்மியமான வாசனை மூக்கைத் துளைத்தது. திரும்பிப் பார்த்தேன்.
கையில் ஒரு கைத்தடியுடன் சந்திராசுவாமி நுழைந்து கொண்டிருந்தார். நான் கரம் கூப்பி அவரை வணங்கினேன். 

பொதுவாகத் துறவியரைப் பார்த்தால், அவர்களது துறவுக்குத் தரும் மரியாதையாக நான் காலைத் தொட்டு வணங்குவது வழக்கம். ஏனோ தெரியவில்லை, சந்திராசுவாமியின் காலை தொட்டு வணங்க எனக்குத் தோன்றவில்லை. அதை அவர் தவறாக எடுத்துக் கொண்டாரா என்று எனக்குத் தெரியாது.

அங்கிருந்த சோபா ஒன்றில் அமரப் பணித்தார். இருவரும் எதிரெதிரே அமர்ந்தோம். நான் பேச வாயெடுப்பதற்குள் அவரே பேசத் தொடங்கினார்.

""நீங்கள் பிரணாப் முகர்ஜிக்கும், ராஜேஷ் பைலட்டுக்கும் வேண்டியவர் என்று சொன்னார்கள். அவர்கள் இருவருக்குமே என்னைப் பற்றித் தவறான அபிப்ராயம் உண்டு. எனது நண்பர்களான சந்திரசேகர்ஜியும், அஜித் சிங்கும்கூட உங்களுக்கு நெருக்கம் என்பதும் எனக்குத் தெரியும். எதற்காக நீங்கள் என்னைப் பார்க்க விரும்புனீர்கள்? யார் சார்பிலாவது ஜாதகம் பார்க்க வேண்டுமா?''

""யார் சார்பிலும் நான் உங்களைச் சந்திக்க வரவில்லை. எனக்கு ஜாதகம் பார்க்கவும் வேண்டாம். உங்களைப் பேட்டி எடுக்க வேண்டும் என்று எனக்கு விருப்பம்.''

""பேட்டியா? என்னையா? நான் அரசியல்வாதியல்ல, பேட்டி கொடுப்பதற்கு. நான் பலருக்கு ஆலோசகராகவும் நண்பனாகவும் இருந்து வருகிறேன். அவர்கள் பற்றி நான் தெரிவிக்க முடியாது, கூடாது. ஜோசிய சாஸ்திரம் குறித்து நீங்கள் பேட்டி எடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள். பேட்டி தருகிறேன். அதுவும் இன்றைக்கு முடியாது. வெளிநாட்டிலிருந்து எனக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள்.''

""நீங்கள் ஜோசியம் பார்த்த பிரமுகர்கள் குறித்தும், அவர்களுக்கு நீங்கள் சொல்லி அதன்படி நடந்தது குறித்தும் சொல்வதாக இருந்தால் பேட்டி எடுப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஜோசிய சாஸ்திரம் குறித்த நுணுக்கம் பற்றி என்றால், எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது.''

சிரித்தார் சந்திராசுவாமி. முகத்தைத் திருப்பாமல் தனது உள்ளங்கையால் பின்புறம் நோக்கி அசைத்தார். உள்ளிருந்து ஒரு சீடர் ஓடி வந்தார். எனக்குப் பால் தரும்படி அவருக்குக் கட்டளை இட்டார். பாலில் என்ன இருக்குமோ என்று மனதுக்குள் சற்று நடுக்கம் இருக்கத்தான் செய்தது.

""உங்களுடைய "குண்டலி' (ஜாதகம்) கையில் இருக்கிறதா?''

""இல்லை...''

""பிறந்த தேதி, நேரம் தெரியுமில்லையா?''

""தெரியும். ஆனால் எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டியதில்லை. நான் வந்திருப்பது உங்களை சந்திக்கவும், பேட்டி எடுக்கவும்தானே தவிர ஜாதகம் பார்ப்பதற்கல்ல.''

அதற்குள் பால் வந்தது. குங்குமப் பூ போட்ட பாதாம் பால். அப்படி ஒரு சுவையுடன் இந்த வாழ்க்கையில் நான் பாதாம் பால் சாப்பிட்டதில்லை.

ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று நான் சொன்னதால் சந்திராசுவாமி கோபப்படவில்லை. என்னைப் பற்றி, எனது குடும்பம் பற்றி, நான் நடத்தும் செய்தி நிறுவனம் பற்றி எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டார். தமிழகக் கோயில்கள் குறித்தும், நமது சித்தர்கள் குறித்தும்கூட உரையாடினோம்.

பொதிகை மலை, திருவண்ணாமலை, வெள்ளிங்கிரி மலை போன்ற இடங்களில் தங்கி இருந்து தியானம் செய்ததாகத் தெரிவித்தார். என்னிடம் பேச்சுக் கொடுத்து, எங்களுக்கு இடையே இருந்த இடைவெளியை அகற்றி விட்டார் அவர்.

சட்டென எழுந்திருந்தார். தனது உதவியாளர்களை சைகையால் அழைத்தார். என்னை நோக்கித் திரும்பினார்.

""எனது ஆசிரமத்துக்கு வந்து விட்டீர்கள். இங்கே இரண்டு நாள்கள் தங்கிவிட்டுத்தான் நீங்கள் போக வேண்டும். உங்களுக்கான எல்லா வசதிகளையும் தேவைகளையும் இவர்கள் பார்த்துக் கொள்வார்கள். விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். நான் போக வேண்டும். மீண்டும் சந்திக்கிறேன்...'' என்றபடி அவர் திரும்பி நடந்தார்.

மறுத்துச் சொல்ல எனக்கு அவகாசம்கூடத் தரவில்லை. திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தேன். உதவியாளர்கள் என்னை அழைத்துச் செல்லக் காத்திருந்தனர்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com