'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 105

சந்திராசுவாமியின் "விஸ்வ தர்மயாதன் சநாதன்' ஆசிரமம்,  ஒரு தனி உலகமாகவே இயங்கிக் கொண்டிருந்தது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 105

சந்திராசுவாமியின் "விஸ்வ தர்மயாதன் சநாதன்' ஆசிரமம்,  ஒரு தனி உலகமாகவே இயங்கிக் கொண்டிருந்தது.  எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த குடிலுக்கு அழைத்துச் சென்றார்கள். வெளியே பார்ப்பதற்குக் குடிலாகத் தெரிந்தாலும் அது அனைத்து வசதிகளும் நிரம்பிய "காட்டேஜ்'.  அதற்குள் ஏ.சி. உள்ளிட்ட எல்லா வசதிகளும் இருந்தன.

அங்கே எனக்குக் காத்திருந்த வியப்பு என்னவென்றால் எனக்குத் தேவையான வேஷ்டி, உள்ளாடை, துண்டு, டீ-சர்ட், வெள்ளை சட்டை எல்லாமே காத்திருந்ததுதான். அங்கிருந்த பீரோவைத் திறந்து, அவை வைக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தார் அந்த உதவியாளர்.

""நான் இந்தக் காட்டேஜில்தான் இருக்க வேண்டுமா, இல்லை வெளியேபோய் ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்கலாமா?'' என்று நான் ஹிந்தியில் அவரிடம் கேட்டேன். அவர் சிரித்தபடி ஹிந்தியிலேயே பதில் சொன்னார்:

""நீங்கள் குருஜியின் சிறப்பு விருந்தினர். ஆசிரமத்துக்குள் எங்கே வேண்டுமானாலும் போகலாம், சுற்றிப் பார்க்கலாம். உங்களுக்கு என்ன தேவை என்றாலும் சற்றும் சங்கோஜப்படாமல் கேட்கலாம். அதை வழங்குவது எங்கள் கடமை...''

அதாவது அந்த ஆசிரமத்தின் நான்கு சுவர்களுக்கு வெளியே மட்டும் போக முடியாது. உள்ளே எங்கே வேண்டுமானாலும் சுற்றி வரலாம் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

அழைப்பு மணி அடித்தது. உதவியாளர் போய்க் கதவைத் திறந்தார். பட்டு வேஷ்டி, பட்டு ஜிப்பாவுடன் வாய் நிறைய வெற்றிலை சீவலுடன் "வணக்கம்' என்றபடி வந்தவர் ஒரு தமிழர். அவர் நுழைந்ததும், அந்த ஹிந்தி பேசும் உதவியாளர் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

தன்னை ராமாச்சாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர். கும்பகோணத்தைச் சேர்ந்தவர். செளராஷ்டிர சமுதாயத்தவரான அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக சந்திராசுவாமியின் ஆசிரமத்தில் தங்கி இருப்பதாகச் சொன்னார். 

வெளியே போய் ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்கலாமா என்று நான் கேட்டபோது, அவர் உடனே தயாராகிவிட்டார். பேசிக் கொண்டே காலாற நடந்தோம்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ராமாச்சாரி ஜோசியரும்கூட. நடிகை ஹேமமாலினியைத் திரைக்கு அறிமுகப்படுத்திய "பேர்ஸ்ட் பிக்' ஃகாபி நிறுவனத்தின் அதிபர் அனந்த சுவாமி, தன்னை சந்திராசுவாமிக்கு அறிமுகப்படுத்தியதாகச் சொன்னார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டவர் பி. அனந்தசுவாமி.

சந்திராசுவாமியின் திறமைகள் குறித்தும் அவரது தொடர்புகள் குறித்தும் ராமாச்சாரி நிறையப் பேசினார். அதை ஒரு வகை மூளைச் சலவை என்றுகூடச் சொல்லலாம். அந்த ஆசிரம வளாகத்தில் இருந்த தியான மண்டபம், காளி கோயில், பூங்காவனம் எல்லாம் சுற்றிப் பார்த்துக் களைத்துவிட்டது. இரவு உணவு அருந்திவிட்டு, அறைக்குத் திரும்பினோம். அவர் விடை பெற்றார்.

அடுத்த நாள் காலையில் ஏழு மணிக்கெல்லாம் வந்து என்னை எழுப்பி விட்டார் ராமாச்சாரி. கருத்தரங்கு ஒன்று நடக்க இருப்பதாகவும், சந்திராசுவாமிதான் அதைத் தொடங்கி வைக்கிறார் என்றும் சொன்னார். எனக்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை. ஆனால், காலை உணவு அருந்திவிட்டு நானும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்பது குருஜியின் விருப்பம் என்று அவர் தெரிவித்தபோது மறுக்கவும் முடியவில்லை.

அது ஜோதிடம் தொடர்பான கருத்தரங்கம். ஏறத்தாழ அறுபதுக்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் அங்கே குழுமியிருந்தனர். உள்ளே நுழைந்த சந்திராசுவாமி அவர்களில் பலரையும் பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். மேடையில் அமராமல் முன்வரிசையில் சென்று அமர்ந்தார். மேடையில் வெளிநாட்டவர் ஒருவர் உள்பட ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். 

அவர்கள் அன்று விவாதித்த விஷயம் என்ன தெரியுமா?  பிரிட்டிஷ் பிரதமராக இருந்த ஜான் மேஜரின் வருங்காலம் எப்படி இருக்கும் என்று அங்கே விவாதிக்கப்பட்டது. ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மேடையில் இருந்தவர்கள் ஐந்து பேரும் அவரவர் கருத்தை தெரிவித்தனர். சந்திராசுவாமி உள்பட சிலர் இடைமறித்துக் கேள்வி கேட்டனர். எல்லாமே வேடிக்கையாக இருந்தது.

சந்திராசுவாமியின் வெற்றி ரகசியம் அப்போது எனக்கு புரிந்தது. பல்வேறு ஜோதிடர்களை அவர் தன் தொடர்பு வளையத்தில் வைத்துக் கொண்டிருந்தார். எந்தவொரு ஜாதகமும் பலரால் அலசப்படுகிறது. அதையெல்லாம் தனது கோணத்தில் சிந்தித்து சந்திராசுவாமி ஒரு முடிவுக்கு வருகிறார். அதனால்தானோ என்னவோ அவரது ஆரூடங்கள் பலிக்கின்றன. 

அந்தக் கருத்தரங்கு முடிந்த பிறகு நான் அறைக்கு வந்து விட்டேன். அதற்கு மேல் ஆசிரமத்தைச் சுற்றிப் பார்ப்பதிலும் எனக்கு விருப்பம் இருக்கவில்லை. ராமாச்சாரி அவ்வப்போது வந்து, அவரது குருஜியின் புகழ்பாடிவிட்டுச் சொல்வார். 

இரண்டாவது நாள் இரவும் வந்தபோது நான் பொறுமை இழந்துவிட்டேன். இனியும் அங்கே தங்கி இருக்க முடியாது என்று தீர்மானித்து, ராமாச்சாரியிடம் காலையில் கிளம்ப இருப்பதாகவும், அவரது குருஜியிடம் தெரிவிக்கும்படியும் சொல்லிவிட்டேன்.

அடுத்த நாள் அதிகாலையில், சுமார் 6 மணிக்கெல்லாம் அழைப்பு மணி அடித்தது. தூக்கம் கலைந்து, எழுந்துபோய் கதவைத் திறந்தேன். கைத்தடியுடன் ஆஜானுபாவனாக அங்கே சாட்சாத் சந்திராசுவாமியே நின்று கொண்டிருந்தார். நான் மிரண்டு போய் விட்டேன்.

உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தார். காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வரும்படியும், தான் காத்திருப்பதாகவும் அவர் சொன்னார். தயாராகி நான் வந்து அமர்ந்தபோது, கேட்காமலேயே சூடாக ஃபில்டர் காபி வந்தது.

""இரண்டு நாளிலேயே உங்களுக்கு இந்த ஆசிரமம் அலுத்துவிட்டது என்று ராமாச்சாரி சொன்னார். ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் உங்களால் இதில் ஈடுபாடு செலுத்த முடியவில்லை என்று நினைக்கிறேன்.''

நான் அசட்டுச் சிரிப்புடன் தலையாட்டினேன்.

""நீங்கள் சொல்லாவிட்டாலும், நான் உங்கள் பிறந்த தேதி, வருடம் எல்லாம் சான்றிதழ்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டுவிட்டேன். இதுவரையில் நீங்கள் கடந்த வந்த சோதனைகள் எல்லாம் முடிந்துவிட்டன. இனிமேல் உங்கள் வருங்காலம் பிரகாசமாக இருக்கப் போகிறது.''

அவர் பேசிக் கொண்டே போனார். நான் பதிலேதும் சொல்லாமல் தலையாட்டினேன். அவர் சற்று நிறுத்தியபோது, இதுதான் தருணம் என்று நான் அவரைக் கேள்வி கேட்கத் தொடங்கினேன்.

""பிரமுகர்கள் பலருடனும் உங்களுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. நீங்கள் நன்றாக ஜாதகம் பார்க்கிறீர்கள் என்பது மட்டும்தான் காரணமா?''

""அது எனக்கெப்படி தெரியும்? நீங்கள் அவர்களிடம்தான் அதுபற்றிக் கேட்க வேண்டும். அவர்களுக்காக ஜாதகம் பார்ப்பேன். அவர்களது நன்மைக்காகக் காளி பூஜை செய்வேன். யாகங்கள் நடத்துவேன். அவர்கள் எனது நண்பர்கள். அவர்களின் நன்மைக்காக நான் செய்கிறேன்.''

""நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ராஜீவ் காந்தி படுகொலையில் உங்களுக்குத் தொடர்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் சந்தேகப்படுகிறதே, அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

சந்திராசுவாமிக்குக் கோபம் வரும். அவரது முகம் மாறும் என்றெல்லாம் நான் நினைத்தேன். அவர் அமைதியாக இருந்தார். பிறகு பேசத் தொடங்கினார்.

""நான் ஏற்கெனவே ஜெயின் கமிஷனில் இதுபற்றி வாக்குமூலம் கொடுத்திருக்கிறேன். அதற்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. எனக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பே இருந்ததில்லை என்று சொல்லிவிடவும் முடியாது. ஆயுத விற்பனையாளர் அட்னான் கúஸாகி எனது நண்பர். ஈழத்தில் விடுதலைப் புலிகள் நடத்தும் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்களை அவர் மூலம் பெறுவதற்கு நான் உதவி இருக்கிறேன். லண்டனில் ஆன்டன் பாலசிங்கத்துடன் கஸோகி நேரடித் தொடர்பில் இருப்பவர். பிரபாகரனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ய நான் விடுதலைப் புலிகளுக்கு உதவினேன் என்று கூறுவது சுத்த அபத்தம்.''

""ஜோதிடம் மட்டுமல்லாமல் நீங்கள் அரசியல் தரகராகவும், பல ஒப்பந்தங்களுக்கு இடைத்தரகராகவும் இருப்பதாகக் கூறப்படுகிறதே...?''

""நட்பு ரீதியாக இருவேறு துருவங்களாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையே நான் பாலமாக இருக்கிறேன். அதில் என்ன தவறு? நான் இடைத்தரகராக இருந்து என்ன பெரிதாக சம்பாதித்துவிட்டேன் என்று சொல்லச் சொல்லுங்கள். எனக்கு  தேவைப்படுவதை எல்லாம் தருவதற்கு பல சுல்தான்களும், அதிபர்களும் தயாராக இருக்கிறார்கள். நான் ஏன் இடைத்தரகராக செயல்பட வேண்டும்?''

இதுபோல அவரிடம் இன்னும் சில கேள்விகளைக் கேட்டேன். அவரும் தயங்காமல், பொறுமையாக பதில் தந்தார். கடைசியில் அவர் என்னிடம் கேட்டார் .

""எனது ஆசிரமத்துக்கு வருபவர்களுக்கு நான் ஏதாவது தராமல் திரும்ப அனுப்புவதில்லை. நீங்கள் ஜோதிடம் கேட்க வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள். வேறு ஏதாவது கேளுங்கள், தருகிறேன்...''

நான் எதுவும் பேசவில்லை. அவர் என்னை கூர்ந்து பார்த்தார். 

""தயங்காமல் கேளுங்கள். நீங்கள் எது கேட்டாலும் தருகிறேன்.''

""நாம் பேசிக் கொண்டிருப்பதைப் பேட்டியாக வெளியிட அனுமதி தாருங்கள். அதுவே போதும்.''

""பேட்டியாக நீங்கள் எதுவும் எடுக்கவில்லையே...''

""தேவையில்லை. விஸ்வ தர்மயாதன் சநாதன் ஆசிரமத்தில் இரண்டு நாள்கள் 
தங்கியிருந்ததைப் பற்றி கட்டுரை எழுதி, நமது உரையாடலையும் இணைத்துக் கொள்கிறேன்.''

""உங்களிடம் சொந்தமாகக் கார் இல்லை போலிருக்கிறதே... நான் உங்களுக்குப் பரிசாக ஒரு கார் தரட்டுமா?''

""அதெல்லாம் எதுவும் தேவையில்லை. பேட்டியை வெளியிட அனுமதி தந்தாலே போதும்.''

அவர் என்னை சற்று ஆச்சரியமாகவே பார்த்தார். தலையையாட்டிச் சிரித்தார். ஆசீர்வாதம் செய்யும் பாவத்தில் கைகளை உயர்த்தினார். நான் இருகரம் கூப்பி வணங்கினேன். அவர் அறையிலிருந்து கிளம்பினார். அடுத்த சில நிமிடங்களில் நான் அந்த ஆசிரமத்திலிருந்து கிளம்பி விட்டேன். அதற்குப் பிறகு நான் சந்திராசுவாமியை சந்திக்கவே இல்லை.

அடுத்த சில நாள்களில் "நியூஸ்கிரைப்' சார்பில் நான் "ஜோஸ்யர்களின் ஜோஸ்யர்' என்று தலைப்பிட்டு எழுதிய கட்டுரை பல பத்திரிகைகளில் வெளியானது. அதைப் படித்துவிட்டு என்னை உடனடியாக வந்து சந்திக்கும்படி சொல்லி அனுப்பினார் பிரணாப் முகர்ஜி. செளத் பிளாக்கிலுள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அவரை சந்திக்கச் சென்றேன்.

அவரது பார்வை அனல் கக்கியது.

""உன்னை யார் அந்த ஆசிரமத்துக்குப் போகச் சொன்னது? வலியப் போய் ஏதாவது ஆபத்தில் சிக்கிக் கொள்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாயா?'' - கடுமையாகத் திட்டினார்.

ராஜேஷ் பைலட்டின் அறிவுரைப்படி நான் சென்றேன் என்று சொன்னபோது அவரது கோபம் மேலும் அதிகரித்தது.

""அவர்களுக்கு இடையே இருக்கும் சண்டைக்குள் உன்னையும் இழுக்கப் பார்க்கிறார் அவர். சந்திராசுவாமி மீது நாளை ஏதாவது வழக்குத் தொடரப்பட்டால், உன்னை அதில் சாட்சியாக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? நீ ஏற்கெனவே சந்திரா சுவாமிக்கு நெருக்கமான சந்திரசேகர்ஜி, அஜித் சிங் ஆகியோருடன் தொடர்பில் இருக்கிறாய். அங்கே போனது போதாதென்று அது பற்றி கட்டுரைவேறு எழுதி, உனது தொடர்பை விளம்பரப் படுத்திக் கொள்கிறாயே, எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?''

அப்போதுதான் எனது தவறு புரிந்தது. தலைகுனிந்தபடி நின்றேன். அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். நான் வெளியே போகலாம் என்று அர்த்தம். அங்கிருந்து வெளியேறினேன். நான் எனது அலுவலகத்துக்கு வந்தபோது, அங்கே எனக்காக ஒருவர் காத்துக் கொண்டிருந்தார்.

தனது அடையாள அட்டையை எடுத்து நீட்டினார் அந்த தில்லி போலீஸ் இலாகாவின் சிபிசிஐடி அதிகாரி. எனக்கு வியர்த்து விட்டது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com