தூண்

நேற்றும் இந்த வாசல் வழியாகப் போனார் பிரகதீஸ்வரன் .  யாரிடமேனும் காசு கேட்கப் போய்க் கொண்டிருப்பார். அவரின் செயல் அதுவாகத்தான் இருக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
தூண்

நேற்றும் இந்த வாசல் வழியாகப் போனார் பிரகதீஸ்வரன் . யாரிடமேனும் காசு கேட்கப் போய்க் கொண்டிருப்பார். அவரின் செயல் அதுவாகத்தான் இருக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சில்லரையாக நானும் அவருக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறேன். கணக்கு வைத்துக் கொண்டதில்லை. காரணம் திரும்பி வராது என்பதல்ல; தர வேண்டாம் என்பதே. இறந்து விட்டதாக அவருடைய மகன் சொல்லிவிட்டுப் போனதில் இருந்து, மனசு வலித்து பழைய ஞாபகம் வந்துகொண்டிருக்கிறது.


நீதித் துறையில் கணக்காளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றிருந்தார். வரும் பென்ஷன் போதுமானதாக இல்லை. மூன்று பெண்கள். இரண்டு பையன்கள். எதுவும் உருப்படியில்லை. எல்லாம் வீட்டில் ஒவ்வொரு தூணாக நின்று கொண்டிருந்தன. அதனால் பணத்தின் தேவை அவருக்கு இருந்துகொண்டேயிருந்தது. எப்பொழுது அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி, பேரன்- பேத்தி எடுத்து. கண்ணால் பார்த்து, பிள்ளைகள் தேறி, வேலைக்குப் போயி..! கணக்காளராய் வேலை பார்த்தவர் வாழ்க்கையைக் கணக்குப் பண்ணவில்லை .
"நான்கு மாடுகள் வேறு. அது பரம்பரைப் பழக்கமாம். விட முடியாது' என்றார். "அவைதான் எனக்குத் துணை' என்று சொன்னதுதான் மிகுதியாக யோசிக்க வைத்தது.
எங்கிருந்து தீனி போட்டுப் பராமரிக்கிறார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். பல சமயங்களில் என் வீட்டு வாசலில் இருக்கும் முருங்கைக் கீரையைப் பறித்துக் கொண்டிருப்பார். என் வீடு, எதிர் வீடு என்று கொல்லைப்புறம் சென்று புற்களைப் பிடுங்கி சேகரித்துக் கொண்டு செல்வார். காய்கறித் துகள்களைக் குப்பைக்குப் போட வேண்டாம் என்றும் ஒரு பையில் போட்டு வையுங்கள், வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றும் சொல்வார்.
வாடகை வீடுதான். சர்வீஸில் இருந்த காலங்களில் ஒரு சொந்த வீடு கூடக் கட்டிக் கொள்ளவில்லை. ஐந்து பேரையும் கொஞ்சமாவது படிக்க வைக்க வேண்டுமே என்ற எண்ணம் இருந்திருக்கலாம். அதற்கே சரியாய்ப் போயிருக்கும் இவர் ஒருவரின் வருமானம். மூச்சு விடுவதே குடும்பத்துக்காகத்தான்.
பக்கத்துக் காலி மனையில்தான் கொட்டகை போட்டிருப்பார். யார் ஓனர் என்று தெரியாது. கேள்வியுமில்லை. அங்கே மாடுகள் கட்டப்பட்டிருக்கும். எப்பொழுது அந்தப் பக்கம் போனாலும் கொட்டடியைச் சுத்தம் செய்வதோ, சாணி அள்ளுவதோ, மாடுகளைக் குளிப்பாட்டுவதோ என்று ஏதேனும் செய்து கொண்டேயிருப்பார். வீட்டுக்குள் இருப்பதற்கு இதுவே மேல் என்பதுபோல் அந்த மாடுகளோடுதான் பொழுதைக் கழித்தார்.
அங்கேதான் குடியிருக்கிறார் என்றே சொல்லலாம். சில சமயங்களில் அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு பட்டப் பகலில் வாயைத் திறந்து கொண்டு ஆ..வென்று தூங்குவதைக் கண்டிருக்கிறேன். அது உடல் மீறிய அசதி. அந்தக் காட்சி மனதை மிகவும் சங்கடப்படுத்தும். மாடுகளைக் குளிப்பாட்டுகையில், ஒரு முறை ஒரு நீண்ட நாகம் வந்து சாணிக் கூடைக்குள் சுருண்டு கிடந்தது. பதற்றமே இல்லை. தெருக்காரர்கள் அடிக்கக் கிளம்பிய போது, "எதுக்கு...அதுவே போயிடும்' என்று சொல்லித் தடுத்து விட்டார்.
"நான் அடிக்க மாட்டேன்' என்று மறுத்துவிட்டார். "அது இடத்துல நாம வந்து குடியிருக்கோம். அது வராம என்ன செய்யும்?' என்று கேட்டார். "நாம தொந்தரவு செய்யாதவரைக்கும் அதுவும் நம்மை ஏதும் செய்யாது?' என்றார்.
இத்தனைக்கும் பக்கத்தில் ஒரு கண்மாய் இருக்கிறதுதான். அருகிலுள்ள ஒட்டுக் கிராமத்தில் இருந்து மாடு வைத்திருப்பவர்கள் குளிப்பாட்ட தினமும் எங்கள் தெரு வழியாகத்தான் ஓட்டிக் கொண்டு போவார்கள். நாலு, அஞ்சு என்று படையாய்ப் போய்க் கொண்டிருக்கும். அந்தக் கண்மாயில் தண்ணீர் தேங்கி நிற்கும்வரையில்தான் எங்களுக்கு ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர். அங்கு வற்றினால் இங்கும் கீழே போய்விடும்.
என்றுமே சாணிக்குப் பஞ்சம் வந்ததில்லை. அது என்ன கணக்கோ...கண்மாய்க்குச் செல்லும் மாடுகள் சரியாக எங்கள் வீட்டு வாசல் வரும்போதுதான் பொத்தென்று சாணி போடும். சாணி கலக்கி யார் இன்று வாசல் தெளிக்கிறார்கள்? என்று கேட்காதீர்கள். என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள் என்று ஒரு கேள்வி வந்து விழும்.
மைதிலி இருக்கிறாளே? வீதியில் கேட்பாரின்றிக் கிடக்கும் அதை வீணாக்க அவளுக்கு மனசே வராது.
சாணியை மாட்டின் கழிவு என்று நினைத்து அருவறுக்கும் தலைமுறை. அதை மருந்தாய் நாம் பார்த்தோம். இறைவனுக்கான ஓமகுண்டப் பூஜா வஸ்து. கடைசிக் காரியங்களுக்கு கண்யமாய்ப் பயன்படும் அதி முக்கியப் பொருள். அதை வைத்துத்தான் ஒரு முறை முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கடைசி எருவை முகத்தின் மேல் வைப்பார்கள். எதைச் சொன்னாலும் பெரிதாய் எடுத்துக் கொள்ளாத இளைய தலைமுறை. காசு கொடுத்தாக் கிடைக்கப் போவுது அதானே...என்ன பெரிய்ய்ய.....? முடிஞ்சு போச்சு...!! காசால் உலகத்தையே வாங்க முடியும் அவர்களால்...!.
இதைச் சொல்லும்போது கிராமத்தில் தினசரி அக்ரஹாரத்தையும், பிற தெருக்களையும் தவறாது சுற்றி வந்து கூடையில் சாணி பொறுக்கிப் போகும் செவ்வந்தி ஞாபகம் வருகிறது எனக்கு. அவள் மாட்டுக் கொட்டகையில் கிடைக்காத சாணியா, எருவா? அதுதான் அவள் பிழைப்பே எனும்போது அந்த மூலப் பொருள் எங்கு கிடைத்தாலும், வீணாகாமல் காப்பதுதானே முறை. அது அவளுக்கு வயிற்றுப் பாடு சம்பந்தப்பட்டது.
பத்துப் பன்னெண்டு மாடுகளை வைத்து மேய்த்துக் கொண்டிருந்தாள் செவ்வந்தி. எந்நேரமும் மாட்டோடுதான் அவள் வாசம். ஒரே ஒரு அறையும், திண்ணையும் அமைந்த ரொம்ப சுமாரான இடத்தில் நேர்த்தியாய் ஒரு பழைய பாயை விரித்து அமர்ந்து, சுவாரஸ்யமாய் வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பாள் செவ்வந்தி. அவளுக்கு மாடுகள் காவலா அல்லது மாடுகளுக்கு அவள் காவலா? கொட்டகை வாசல் கதவு எந்நேரமும் திறந்துதானே கிடக்கிறது! என்ன பயம்...? நம்ம ஊரு...! எல்லாம் நம் சனம்...!
ரெண்டே ரெண்டு வெற்றிலை, பாக்கு, ரெண்டு பழம்...அத்தோடு ரெண்டு ரூபாய்...இதுதான் அவள் பிரசவக் கூலி. எல்லாம் ரெண்டு ரெண்டுதான் கணக்கு. எங்கள் வீட்டில் நாங்கள் அறுவரும் அவள் பிரசவம் பார்த்துத்தான் பிறந்தோம். சொல்லிவிட்டவுடன் ஓடோடி வந்து விடுவாள் செவ்வந்தி. தான் பெற்றெடுத்த பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பதுபோல் கண்ணும் கருத்துமாய்ப் பார்ப்பாள். நாங்கள் அவள் கைகளில்தான் முதலில் தவழ்ந்தோம். குழந்தையைக் குளிப்பாட்டி தாயின் கையில் ஒப்புவித்து விட்டுக் கிளம்புவாள். அப்போது கண் மூடி தன் குலதெய்வத்தை வேண்டிக் கொள்வாள். அந்த மனமுவந்த வேண்டுதலுக்கு உலகத்தில் வேறு ஈடு இணையே இல்லை. எங்கள் பெரியம்மா செவ்வந்திதான். என் ராசா....இங்க வாடே...என்று அவள் தன் கைகளை விரித்து எங்களை வாரி அணைத்துக் கொஞ்சிய நாட்கள் எங்கள் நெஞ்சில் பதிந்த சுவடுகள். மனித்தப் பிறவிகள் தெய்வமாய் வலம் வந்த நாள்கள் அவை.
தினமும் காலையில் நடைப் பயிற்சிக்குக் கிளம்பி விடுவார் பிரகதீஸ்வரன். என் வீட்டு வழியாகத்தான் போவார். போகும்போது விட்டு விடுவேன். திரும்புகையில் கண்டிப்பாகக் கண்ணில் பட்டுவிடுவார். ஆனால் பார்வை கேட்கும். அந்தப் புன்னகை அர்த்தப்படுத்தும். அதற்கு மேலும் கண்டு கொள்ளாமல் இருந்தால் அது தன்மை ஆகாது என்று தலையை ஆட்டி வாங்க...என்று சொல்லி விடுவேன். அந்த வார்த்தையை அவர் மனம் எதிர்பார்க்கும்.
ரொம்பவும் உரிமை எடுத்துக் கொண்டு அவராகவே உள்ளே நுழைந்து விடுபவர் அல்ல. அதுதானே கெளரவமும் கூட. ஆனாலும் என்னைப் பொருத்தவரை அவர் தயங்க வேண்டியதில்லை என்பது என் எண்ணம். மைதிலிக்காக ஏதேனும் ஒரு தயக்கம் அவர் மனதில் இருக்குமோ என்னவோ? எனக்குமே அந்தத் தயக்கம் உண்டுதான்.
பல சமயங்களில் பேசத் தெரியாமல் பேசி விடுவாள்.
சிலரை சிலவற்றில், சிலவற்றால் எப்போதும் எக்காலத்தும் மாற்றவே முடியாது. சாகும்வரை அப்படியேதான் இருப்பார்கள். அதைத்தான் காரெக்டர் என்கிறார்கள்..
மிஞ்சிப் போனால் ஒரு வாய் காப்பி சாப்பிடுவார். உங்காத்துக் காப்பி ரொம்ப நன்னாயிருக்கும்...என்று தன்னை மறந்து சொல்லியிருக்கிறார். வீட்டுக்குள் வந்து விட்டால் அந்த எண்ணம் முட்டத்தானே செய்யும்? அன்று மைதிலிக்காக எனது செகன்ட் காஃபியைக் கட் பண்ணிக் கொள்வேன்.
இப்படி ஆளாளுக்கு போட்டு நீட்டிண்டிருந்தா உறை குத்தறதுக்குப் பால் வேண்டாமா? என்று ஒரு முறை சொல்லியிருக்கிறாள். அவ ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி...!
நீங்க...! என்று கேட்டுக் கொண்டே காப்பியை ருசிப்பார். எனக்கு வராது என்று அவருக்குத் தெரியும். கண்டு கொள்ள மாட்டார். அது அவா பிரச்னை....!
ஒரு அக்கெளன்டண்ட் போன்றே இருக்க மாட்டார். ரிடையர்ட் ஆயாச்சு...அப்புறம் என்ன வேண்டிக்கிடக்கு? என்பதே அவர் சித்தாந்தம்.
பஸ்-ஸ்டான்டில் உள்ள டீக்கடையில் அவரைப் பார்க்கலாம். ஓரமாய் இருக்கும் குத்துக்கல்லில் அமர்ந்திருப்பார். யாராச்சும் டீ வாங்கித் தர மாட்டார்களா? என்பது போன்று இருக்கும் அவர் பார்வை. காலையும் மாலையும் பேப்பர் படித்தாக வேண்டுமே...!
வீட்டில் இருந்தால் தாங்க முடியாத பிக்கல் பிடுங்கல்...அதற்கு வெளியே மேல்..(நானும் மேல்...நீயும் மேல்...!) ..நாலு மனுஷாளைப் பார்த்த திருப்தியாவது மிஞ்சும்....என்றுதான் மனுஷன் டேக்கா கொடுத்து விடுகிறாரோ என்று தோன்றும்.மாடுகளுக்கு வேண்டியவைகளை எல்லாம் செய்து விட்டுத்தான் புறப்படுவார். அவைபாட்டுக்கு அசைபோட்டுக் கொண்டு படுத்திருக்கும். வீட்டுக்குள் இருந்து எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். அவர் பசங்கள் ஒரு நாளும் அந்த மாடுகளுக்குப் பக்கத்தில் நின்று நான் பார்த்ததில்லை. அந்த மாமி, சாணி எடுக்க மட்டும் தலையைக் காட்டுவார்கள்.
உடம்பு முடியாதவராகவே அவர் மனைவியை நினைக்கத் தோன்றும். அதுபோல் முகமலர்ந்து பேசியும் காண முடியாது. என்றாவது வீட்டுக்குள் தலை நுழைக்கும் சமயம் வாய்த்தால், இருட்டான பகுதியில் உட்கார்ந்திருப்பது தெரியும். நிழலாய்த்தான் தோன்றுவார்கள். அந்தப் பெண்களும் ஆளுக்கொரு மூலையில் தென்படுவார்கள். ஏனிப்படி வீடு சூமடைந்து கிடக்கிறது என்ற எண்ணம் வரும். ஒரு சுமுக நிலையிருந்து என்றும் அவர் வீட்டைக் காண முடிந்ததில்லை. இயல்பான இருப்பே அப்படித்தானோ என்று நினைக்க வேண்டி வரும். ஒருவருக்கொருவர் பேசப் பிடிக்காமல் உம்மணாம்மூஞ்சியாய் இருந்து கழிக்கிறார்களோ?
எங்கள் பகுதி குட்டி பஸ்-ஸ்டான்டில் புதிதாகத் தனியார் பால் டெப்போ ஒன்று வந்திருந்தது. அங்கு உட்கார்ந்து பால் விற்க ஆரம்பித்திருந்தார் பிரகதீஸ்வரன். அந்தக் கடைப் பையன் அவரை வைத்து விட்டு அங்கே இங்கே என்று வெளியே பால் போடப் போய் விடுவான். ஏஜென்ஸி எடுத்திருந்தவனுக்கு இப்படி ஒருத்தர் உபகாரமாய் அமைவார் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டான். அவனுக்குப் பல ஜோலி. இவரை உபயோகப்படுத்தி, தன் வியாபாரத்தின் கிளைகளை விரித்துக் கொண்டிருந்தான் அவன். ஒரு வேளை அதிலேயே அவர் திருப்தியடைந்தாரோ என்னவோ...! தன் பசங்களின் உபயோகமின்மை குறித்த தாக்கம் இருக்கலாம். பொறுப்பாய் செயல்படுபவனைக் கண்ட திருப்தி.
மூணு பாக்கெட்டுக்கு மேலதான் பை கொடுக்க முடியும். ஒரு பாக்கெட்டுக்கெல்லாம் கிடையாது...என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார். அப்படிச் சொல்லி சொல்லி நிறையப் பைகளை மிச்சம் பண்ணிக் கொடுத்திருந்தார் கடைக்கு. அதுபோல் கரெக்டாகச் சில்லரை கொண்டு வரணும்...என்றும் கண்டிஷன் போட்டிருந்தார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவருக்கு ஒத்துழைத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த அளவுடைய பால் பாக்கெட் அதிகமாகப் போகிறது என்று கணித்து அதை எண்ணிக்கையைக் கூட்டி இறக்குமதி செய்ய வைத்தார். மற்றதை அதனதன் அளவுப்படி குறைத்தார். பையனும் அவரின் இஷ்டப்படி விட்டு விட்டதாகத்தான் தோன்றியது.
மதிய இடைவேளை உண்டு. அதைக் கூட அந்தப் பையனின் முன்னேற்றத்துக்காகத் தத்தம் செய்திருந்தார் பிரகதீஸ்வரன். உழைப்பே உயர்வு என்று போட்டு, பக்கத்தில் கடன் இல்லை என்றும் சுவரில் எழுதி வைத்தார்.
டிபன் பாக்ஸில் கொண்டு வந்து அங்கேயே சாப்பிட்டுக் கொண்டார். அந்த சில நிமிடங்கள்தான் ஷட்டரைப் பாதி இறக்கி விட்டிருப்பார்.
வெறும் தயிர் சாதம்தான். ஒரு பச்ச மிளகாய். மதியத்திற்கு மேல் மறுநாளுக்கான தேதி போட்டு பால் டப்புகள் வந்து இறங்க ஆரம்பிக்கும். அத்தனையையும் பொறுமையாய் வாங்கி எண்ணி, ஒழுகும் பாக்கெட்டுகளைத் திருப்பி, பதிலுக்கு வேறு வாங்கி கணக்கைத் துல்லியமாய் வைத்து விடுவார். அந்தப் பையன் வந்ததும் இந்தா பிடி என ஒப்புவித்துவிட்டு வீடு திரும்புவார். போகும்போது ஒரு பால் பாக்கெட் எப்போதும் அவர் கையில் இருக்கும்.
""சும்மாத் தருவானா..நல்லாத் தந்தானே....! .
துட்டு சார்...துட்டு....'' என்று யாரிடமோ வீச்சும் விறைப்புமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். எதுவானால் நமக்கென்ன? என்று நினைப்பதற்குள் பிரகதீஸ்வரனின் பிழைப்பு மாறிப் போயிருந்தது.
இந்த மனுஷன் எதுக்கு இப்டி நாயா பேயா அலையறார்? ஒரு எடத்துல அமர்ந்து இருக்க மாட்டார் போலிருக்கே? என்று நினைத்தேன் நான். மாடுகளைக் கவனிப்பது குறைஞ்சு போச்சா? என்றும் தோன்றியது. வீட்டு வரி கட்டுவதற்கு பஞ்சாயத்து ஆபீஸ் போயிருந்தபோது அங்கே இவரைக் கண்டேன். கையில் ஏதோ பில்டிங் வரைபடத்தை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தார். கூடவே ஒருவர் இருந்த ஒருவர், பிரகதீஸ்வரனை சுறுசுறுப்பாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.
ஆர்வ மிகுதியில், ""என்ன சார் இந்தப் பக்கம்? என்றபோது, ""சாருக்கு ப்ளாட் எதுவும் வேணுமான்னு கேளுங்க சாமி....ஆளுகளப் பிடிங்க..'' என்றார் அந்த இன்னொருவர்.
""அவரு சொந்த வீடு கட்டில்ல நம்ம ஏரியாவுல குடியிருக்காரு....அவருக்கு எதுக்கு...?'' என்றார் இவர்.
""அவருக்கில்லாட்டி என்ன? அண்ணன் தங்கச்சி யாருக்காச்சும் வாங்கிக் கொடுப்பாருல்ல. கேட்டாத்தான தெரியும். விடப்படாது....யார்ட்ட என்ன யோசனை இருக்கும்னு நமக்குத் தெரியாதுல்ல! கேன்வாஸ்ங்கிறது பிறகு எப்டி? என்று அவர் சொல்லவும்....சாயங்காலமா வீட்டுக்கு வர்றேன்'' என்றார் பிரகதீஸ்வரன். அது அவரின் வாயை அடைப்பதற்காக என்று புரிந்தது எனக்கு''
சொல்லப்போனால் ஏதேனும் இடம் வாங்கும் யோசனையில்தான் நானும் இருந்தேன். தங்கச்சி மாப்பிள்ளை வேறு எனக்கும் வேணும் என்று சொல்லியிருந்தார். நான் குடியிருக்கும் பகுதியில் இப்போதெல்லாம் வாங்க முடியாது. விலை தாறுமாறாய் ஏறியாகி விட்டது.
பக்கத்தில் "கலை நகர்' என்று ஒரு பகுதி உருவாகிக் கொண்டிருந்தது. விறு விறு என்று அங்கு ப்ளாட்டுகள் விற்றுத் தீர்ந்து கொண்டிருந்தன. அந்தப் பகுதியில்தான் இவர்களும் ப்ளாட்டுகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதற்குத்தான் பிளானை வைத்துக் கொண்டு அலைகிறார்கள் என்றும் பிறகுதான் தெரிய வந்தது.
நானாய்ப் போய்ப் பார்த்தபோது சீட்டுக் கட்டுபோல் வெறும் மூணு மூணு சென்ட்களாகத்தான் இருந்தன. வெறுமே வாங்கிப்போட்டு நாளை விலை ஏறிய பின்னால் விற்கத்தான் உதவும் அது. வீடு கட்டுவதென்றால் சுற்றிலும் செடி கொடி மரங்களுக்கு இடம் விட்டு, முன் பக்கம் கார் பார்க்கிங் இடம் செய்து, கொஞ்சம் பார்வையாய்க் கட்ட வேண்டும் என்கிற எண்ணமிருந்தது என்னிடம்.
இந்த வீட்டில் செய்யாது விட்டவற்றை, நிறைவேறாத கனவுகளை, புதிய வீட்டில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமிருந்தது. யாருமே தான் நினைத்தபடிக்கு, தன் ஆசைக்கு வீடு கட்டியிருக்க முடியாதுதான். எப்படியும் கட்ட ஆரம்பித்த பின்பு சில மாற்றங்கள் வந்து போகும். பில்டரோடு சண்டை போட முடியாது. வேலை நின்று போகும். மனத் தாங்கல் வந்து விடும். அது என் கனவு வீட்டில் நிகழக் கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தேன்.
"நாம் ஒன்று நினைக்கிறோம். தெய்வம் ஒன்று நினைக்கிறது. எடம் கிடைக்காது உங்களுக்கு. முதல்ல இடத்தைக் கேட்ச் பண்ணப் பாருங்க...அப்புறம் இந்தச் சுற்று வட்டாரத்துல எங்கேயுமே இன்னை தேதிக்கு ப்ளாட் கிடையாதாக்கும்!' என்று நெருக்கினார் பிரகதீஸ்வரன். அந்த முயற்சியின்போதுதான் மைதிலி அவரோடு கொஞ்சம் பேச ஆரம்பித்தாள்.
""மும்மூணு சென்ட் டோக் டோக்கா இருக்கு...நமக்கு ஏத்தாப்ல....அஞ்சரை சென்டா தேடினா பைசாவுக்கு எங்க போறது? என்னாலெல்லாம் லோன் போட முடியாது....இருக்கிற சேவிங்ஸ்ல வாங்கப் பாருங்கோ...பாங்க்ல டெபாசிட்டுக்கு வட்டி கம்மியாப் போச்சு. அதுக்கு இடத்தையாச்சும் வாங்கிப் போடலாம். இன்னும் எத்தனை வீடு கட்டியாகணும்? இந்த ஒண்ணு போறாதா? நம்மகிட்டே இருக்கிற சேமிப்புக்கு மூணு சென்ட்தான் சரி வரும். அகலக்கால் வச்சு எதிலயாச்சும் மாட்டிக்காதீங்கோ... உங்க தங்கை மாப்பிள்ளையும் அப்டித்தான் விரும்புவார். வேணும்னா பாருங்கோ...சரின்னு சொல்றாரா இல்லையான்னு.....! என்று பொழிந்து தள்ளினாள். என் வார்த்தையை மீறினா அப்புறம் நான் நானில்லை....அதுதான்...! ''
அதற்கு மேல் அப்பீல் ஏது? பிரகதீஸ்வரனும், அவரது ஏஜென்டும் வந்து நிற்க ஆரம்பித்து விட்டார்கள். சத்தமில்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை ஊரைக் கூட்டித் தேர் இழுத்தாற்போல் ஆக்கியாச்சு.
""என்ன விஷயம் சார்...?'' என்று எதிர்வீட்டு சாம்பசிவம் வேறு முகத்தை நீட்டினார். விஷயம் அவருக்கும் தெரியவர, உடனே கிளம்பிப் போனவர் அவர்தான்.
போய்விட்டு வந்து, ""அதென்ன சார்...ரோட்டுலேர்ந்து உள்ளே போய்க்கிட்டேயிருக்கு...! ரெண்டு மூணு பர்லாங் போகுது சார்..டூ வீலர் இல்லாமப் போறது வர்றது ஆகாது....எனக்குத்தான் வண்டியே ஓட்டத் தெரியாதே...! பஸ்லேர்ந்து இறங்கி எம்புட்டுத் தூரம் நடக்குறது? நமக்காகாது......ஆனா ஒண்ணு பின் பக்கமா மெயின்ரோடு வந்தீங்கன்னா அப்டியே நம்ம வீட்டுக்கு வந்திடலாம். அது ஒண்ணுதான் இன்னைக்குத் தேதிக்கு வசதி'' என்றார்.
தங்கை மாப்பிள்ளை வந்தார். போய்ப் பார்த்தார். .சரி என்று ஒப்புக் கொடுத்து விட்டார். எதிரெதிர் ப்ளாட்டுகள் மூன்று சென்டுகளாக அமைந்தன. வாங்கிப் பணம் கொடுத்து பத்திரம் பதிந்து எல்லாம் ஆயிற்று. அதை மைதிலி பேருக்குத்தான் நான் பதிந்தேன். அதில் அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஒரு இடத்தின் அதிபதி அவள்.
மனிதனுக்குத் தேவை ஆறடி. இந்த மண்ணிலிருந்து எடுத்ததெல்லாம் இந்த மண்ணுக்கே...இன்று உனது நாளை வேறொருவருடையது. நாளை மறுநாள் இன்னொருவருடையது.....மனதுக்குள் இந்த நினைப்பு வந்தவனுக்கு எதுவுமே பெரிசில்லை.
இதோ பிரகதீஸ்வரன் போய் விட்டார். நாளை என்பது நமக்கு ஏது? இன்றிருப்பார் நாளையில்லை. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு....! தலைமாட்டில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. நிச்சலனமாய் இருந்தது அவர் முகம். தப்பித்து விட்டேன் பார்த்தீர்களா? என்று கண்களை மூடிக் கொண்டிருக்கிறாரோ? சுற்றிலும் மூன்று பெண்கள் மூலைக்கு ஒருவராய். அருகிலே சோகமே உருவாய் அவரின் இரண்டு மகன்கள். இனி அந்தக் குடும்பம் எப்படி நிமிரப் போகிறது?
மூத்த பையனை வெளியே அழைத்து வந்து அவன் கையில் அந்தப் பணத்தை திணித்தேன். இது உங்க அப்பாவுக்கு நான் கொடுக்க வேண்டிய கமிஷன் தொகை. ரெண்டு ப்ளாட் வாங்கினதுக்கு. தெரிஞ்சிதா? அதோட ஒரு ஐயாயிரம் சேர்த்து வச்சிருக்கேன். நான் ஒருத்தரைச் சொல்லி வரச் சொல்றேன்...அவர் கொஞ்சமாத்தான் கேட்பார். சுருக்கமா முடிச்சுக் கொடுப்பார்....
சரியா?
சரி என்று தலையாட்டியது போல்தான் இருந்தது. அதுநாள் வரை நான் அவர்களோடு அதிகம் பேசியதில்லை. ஆதலால் அவர்களின் போக்கு எப்படி என்பதையும் அறிவதற்கில்லை.
வெளியே வந்தேன். துக்க வீட்டில் சொல்லிக் கொள்ளக் கூடாது. செருப்பை மாட்டிக் கொண்டு சாலையில் இறங்கியபோது, மாட்டுக் கொட்டகையில் இருந்த பசுக்கள் மிகுந்த சோர்வாய்த் தென்பட்டன என் கண்களுக்கு. அடங்கிப் படுத்திருந்தன. மனிதர்களைவிட அவை மிகுந்த வாஞ்சை மிக்கவை என்று தோன்றியது..
வீட்டுக்கு வந்தபோது மைதிலி கேட்டாள்.
""எப்போ எடுக்கப் போறாங்களாம்....? பணம் கொடுத்துட்டு வந்தீங்களா? ''
""கொடுத்தாச்சு!'' என்றேன் நிதானமாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com