பெண்கள் சினிமா!

திரைக்குப் பின்னால், பெண் கலைஞர்களின் பங்களிப்பும், திரையில் பெண்களை முன்னிலைப்படுத்தியும் எடுக்கப்படும் படங்களும் தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் அதிகரித்திருக்கிறது.
பெண்கள் சினிமா!


திரைக்குப் பின்னால், பெண் கலைஞர்களின் பங்களிப்பும், திரையில் பெண்களை முன்னிலைப்படுத்தியும் எடுக்கப்படும் படங்களும் தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் அதிகரித்திருக்கிறது. இந்த வகைப் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்க, கதாநாயகியை மையப்படுத்தி வரும் கதைகளைத் தேர்ந்தெடுக்க முன்னணிக்கதாநாயகிகளும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி வெளிவரக்காத்திருக்கும் படங்களின் ட்ரெய்லர் இதோ..

ஓ மை கோஸ்ட்

"ஓ மை கோஸ்ட்'. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை மும்பையில் பல அரங்குகளை அமைத்து படமாக்கியுள்ளனர். முன் ஜென்மத்தில் பழிவாங்கப்பட்டு இந்த ஜென்மத்தில் பழி தீர்க்கும் பேயாக நடிக்கிறார் சன்னி லியோன். மகாராணியாகவும் நடிக்கிறார். யோகி பாபு, சதீஷ் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "சிந்தனை செய்' படத்தை இயக்கிய ஆர். யுவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

சொப்பன சுந்தரி

மீண்டும் ஒரு கதையின் நாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். படத்துக்கு பெயர் "சொப்பன சுந்தரி'. "லாக்கப்' படத்தை இயக்கிய எஸ். ஜி. சார்லஸ் எழுதி இயக்குகிறார்.

தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர். டார்க் காமெடி பாணியில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

கா

"கா' என்றால் இலக்கியத் தமிழில் "காடு' என்று அர்த்தமாம். மேற்குத் தொடர்ச்சி மலை, மூணாறு, அந்தமான் எனக் காடுகள் சூழ்ந்த பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள், "கா' படக்குழுவினர். இப்படத்தில் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபராக நடிக்கும் ஆண்ட்ரியா, தனியாகக் காட்டில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து மீண்டு வருவதுதான் கதை. இதில், அவர் சந்திக்கும் சவால்களை க்ரைம் திரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார், இயக்குநர் நாஞ்சில். ஆண்ட்ரியா தவிர, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இளவரசு நடித்திருக்கிறார்.

அதோ அந்த பறவை போல

இடைவெளிக்கு பிறகு "ஆடை', "கடவார்' எனத் தனக்கான படங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார் அமலாபால். ரத்னகுமார் இயக்கத்தில் இவர் நடித்த "ஆடை' படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அமலாபாலுக்கு முக்கியமானதொரு படமாகவே இது அமைந்தது. அது போல் சமீபத்தில் வந்த "கடவார்' படத்துக்கும் பரவலான வரவேற்புகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் அதோ அந்த பறவை போல!

ஆக்ஷன், அட்வென்ச்சர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த ஆண்டே வெளிவந்திருக்க வேண்டிய படம். கரோனா அச்சுறுத்தலால் சிறிய தடை. இப்போது தடைகளை கடந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராங்கி

சமீப காலமாக தனக்கான படங்களில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா, தற்போது "ராங்கி'யில் நடித்திருக்கிறார். "எங்கேயும் எப்போதும்', "இவன் வேற மாதிரி' படங்களை இயக்கிய சரவணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பத்திரிகையாளராக நடித்துள்ளார் த்ரிஷா. திரைத்துறைக்கு வந்து 20 வருடங்களை பூர்த்தி செய்துள்ள த்ரிஷா, இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com