காலணி ஆதிக்கம்

சமயோசிதச் செயல்பாட்டால் தேள் கடியிலிருந்து தப்பித்துவிட்டேன்.
காலணி ஆதிக்கம்

சமயோசிதச் செயல்பாட்டால் தேள் கடியிலிருந்து தப்பித்துவிட்டேன்.

ஷூவினுள் திணித்து வைத்திருந்த சாக்ஸ் மேல் மெத்தையைப் போல சொகுசாய் படுத்துறங்கிய தேள், நான் சாக்ஸை வெளியில் இழுக்க புறங்காலில் விழுந்து என்ன செய்வதென்று தெரியாது பதறிப்போய் இரையை கவ்வி பிடிக்கப் பயன்படுத்தும் முன்பக்கத்தில் உள்ள இரு கொடுக்குகளால் என் வலப்புறக் கணுக்காலை கவ்விப் பிடித்துக் கொண்டது. பின்னர் பக்கத்தில் உள்ள அதனுடைய கணுக்களாலான வாலை மேல்புறம் வளைத்து விஷ கொடுக்கால் கொட்ட போனபோது நானும் பதறிப்போய் சாக்ஸால் தேளை இறுக்கி பிடித்து காலில் இருந்து பறித்து எட்ட வீசி விட்டேன்.

இருட்டில் எங்கு விழுந்தது என தெரியாததால் தேடிப் பிடித்து அடிப்பதற்காக போர்டிகோவின் விளக்கைப் போட்டேன். வெளிச்சம் ஜன்னல் வழியே ஊடுருவி அறையினுள் பிரவேசிக்க மகன் எழுந்து கதவை திறந்து வெளியில் வந்து என் தேடலைப் பார்த்து , ""என்ன? . . . என்னப்பா . . . என்ன?'' என்றான்.

"ஒண்ணுமில்ல ஒரு தேள் காலை புடிச்சிட்டுது. கொத்துறதுக்குள்ள புடிச்சி எறிஞ்சிட்டேன். எங்க விழுந்ததுதுன்னு தேடிகிட்டு இருக்கேன். அடிக்கிறதுக்கு'' என்றேன்.

""எங்க கடிச்சிது? . . காட்டுங்க'' என பதறிப்போய் என்னருகில் ஓடி வந்தான்.

""அது கடிக்கலைப்பா. கடிக்குறதுக்குள்ள பிடிச்சி வீசிட்டேன்'' என்றேன்.

தன்னைப் போலவே எங்களையும் அதிகாலை ஐந்தரைக்கு பரபரக்க வைத்துவிட்டு தேள் எங்கோ ஒளிந்து கொண்டது.

நிதானம் பெற்ற மகன் ""தேள் எங்கப்பா இருந்தது?'' என்றான்.

""உன்னோட ஷூவுக்குள்ள இருந்துருக்கு. சாக்ஸ வெளியே இழுத்தனா அதுல இருந்து விழுந்து காலை புடிச்சிட்டது."'

" "நீங்க ஏன் ஷூவையெல்லாம் ராத்திரியில எடுக்கறீங்க?''

" "ஓரமா எடுத்து போடுவோன்னு இழுத்தபோது, சாக்ஸ் கையோட வந்துட்டுது'' என சமாளித்தேன். அதன் கதையே வேறு.

தேள் கடிக்குப் பிறகுதான் தேளைப்பற்றி கூகுளில் தேடினேன். உலகெங்கிலும் 25 வகையான தேள் இருக்கிறதாம். நம் நாட்டில் கருந்தேள், செந்தேள் என இரு வகை தேள்தான் பெரும்பாலும் காண முடியுமாம். வாலில் உள்ள கொடுக்கின் மூலம் கொட்டும்போது வரும் விஷம் மனிதருக்கு பெரிய ஆபத்தில்லை என்றும் வயதானவர்களைக் கொட்டினால் சிகிச்சையே தேவையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேள் கொட்டினால் கிராமத்தில் இரண்டு வெற்றிலையில் ஏழெட்டு மிளகை வைத்து மடித்து மென்று சாற்றை விழுங்கச் சொல்வார்கள். சரியான மருந்துதான் போல!

அந்தக் கணுக்காலி ஒரு மனிதனை கடித்து பின்னர் வைத்தியம் பார்த்து விட்டால், அவருக்கு இதய அறுவைச் சிகிச்சையோ , ஆஞ்சியோ பிளாஸ்டோ தேவையில்லையாம். தேள் கடித்தவருக்கு மார்க்கட்டீன் என்ற விஷம் மனித இதய ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறதாம். அடிக்கடி பி.பி. அதிகமாகும். எனக்கு இந்த வைத்தியம் செய்யதான் தேள் என்னை கொட்ட வந்திருக்குமோ? அது தெரியாமல் தேளை பிடுங்கி எறிந்திருக்கிறேன். இனி அது வராது. காலையில் செடிகளுக்கு தண்ணீர் பிடித்தபோது தோட்டக்காரர் கண்ணில் பட்டு செருப்பு காலால் மிதித்து செத்தபின் வெளியே தூக்கி வீசிவிட்டதாக மதியம் சொன்னார். ஒரு டாக்டரை கொன்ற பாவம் எங்கள் இருவரையும் சும்மா விடாது.

உயர்நிலைப்பள்ளி படிப்பை முடிக்கும் வரை நான் செருப்பு அணியவில்லை. அந்தக் காலத்தில் கிராமத்தில் பெரும்பாலும் மாணவர்கள் செருப்பு போட்டுக்கொண்டு பள்ளிக்குச் செல்ல பெற்றோர் செருப்பு வாங்கித் தருவதில்லை. வகுப்பில் நான்கைந்து பேர்தான் செருப்புகளை அணிந்து வருவார்கள். காலையில் வீட்டில் கிளம்பி பள்ளிக்குச் சென்று திரும்பும் வரை வழியில் எவ்வளவு அசுத்தங்கள் மணலில் கலந்திருக்கும். அதில் உள்ள கிருமிகள் கால்களில் தோல் வழியே ஊடுருவி எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி விடுகிறது. தொற்றுநோய் எதுவும் அண்டுவது இல்லை.

காலம் அவ்வப்போது மாற்றங்களை சுமந்து வந்து நம் பழக்க வழக்கங்களில் புகுத்திவிடுகிறது.

என் மகன் ஆரம்பப் பள்ளி முதல் செருப்பு அணிந்துகொண்டு செல்ல வழிவகை செய்தேன். பேரனோ திங்கள், வியாழன் வெள்ளை நிற கேன்வாஸ் ஷூவும், மற்ற மூன்று நாள்களில் கருப்பு ஷூவும் பள்ளியின் நடைமுறையின்படி அணிந்து போகிறான். எப்போதாவது சனிக்கிழமை பள்ளி நடைபெறும் என்று அறிவித்தால் அவனுக்கு கொண்டாட்டம். அன்று கலர் டிரஸில் போகலாம். ஷூ போட வேண்டியதில்லை. செருப்பு போட்டுக் கொண்டு போகலாம். அன்றைய தினத்துக்கென்றே விலை உயர்ந்த செருப்பை வாங்கி வைத்துள்ளோம். ஒருமுறை தொள்ளாயிரம் ரூபாய் செருப்பை தொலைத்துவிட்டு வந்துவிட்டான். மறுநாளே ஆன்லைன்லில் இரண்டாயிரத்து நூறு ரூபாய்க்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொடுத்துவிட்டான் என் மகன்.

""நான் செருப்பை தொலைச்சிட்டேன்னு உங்களுக்கு கோபமே வரலையா டாடி?'' என்றான் பேரன்.

" "வேணுமின்னே தொலைச்சியா?''

""வேணுமுன்னு யாராச்சும் தொலைப்பாங்களா? எடுத்து வீசிட்டு வெறுங்கால்ல வருவாங்களா?''

""அதனாலதான் கோபப்படலை. தவறி தொலைஞ்சி போச்சி. யாரோ எடுத்துகிட்டு போய்ட்டாங்க. அவனும் பாவம்தானே. செருப்பு வாங்க வழியில்ல போல. யூஸ் பண்ணிட்டு போகட்டும் போ."

" "அப்ப தொலைச்சது புண்ணியமா டாடி?'"

" "அதுக்காவ தொலையுற மாதிரி கழட்டி போடாத. பத்திரமா பாத்துக்க. தானம் செய்ய இங்க என்ன கப்பலா ஓடுது. தொலஞ்சி போனதுக்கு ஒரு ஆறுதலுக்காகச் சொன்னேன். அவ்வளவுதான்'' என்றான் மகன்.

நானும் ஒரு செருப்பை தொலைத்தவன். முதன் முதலில் வாங்கியது அது. ஒரே நாள்தான் போட்டேன். அதன் விலை அப்போது ஐந்து ரூபாய். இன்றைய மதிப்பில் நூறு அல்லது நூற்று பத்து ரூபாய் இருக்கும்.

முதல் நாள் போட்டுக்கொண்டு பள்ளியை விட்டு வந்தபோது, மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரை வாங்க உள்ளே நுழைந்தேன். வாசலில் செருப்புகள் கிடந்ததால் நானும் கழட்டி வைத்துவிட்டு மாத்திரை வாங்கிக் கொண்டு வெளியில் வந்த நான் செருப்பை மாட்டாமல் வந்துவிட்டேன். ஒரு கிலோமீட்டர் தூரம் வந்ததும்தான் செருப்பு போடாமல் வந்தது நினைவுக்கு வர ஓட்டமும் நடையுமாக மெடிக்கல் ஸ்டோர் சென்று பார்த்தபோது செருப்பை காணவில்லை.

வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் என்று மூடி மறைத்துவிட்டேன். நான் இரண்டு மூன்று நாள்களாக செருப்பு போடாதது எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. செருப்பு போடுவது ஒரு முறை ஒரு தேவையென்று இருந்திருந்தால்தான் தொலைந்து தெரியவரும். மூன்றாம் நாள் பள்ளிக்கு கிளம்பும்போது அப்பா நான் செருப்பில்லாமல் போவதை கண்டுபிடித்துவிட்டார்.

வீட்டையே ரெண்டு படுத்திவிட்டார். போட்ட சத்தத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் பதட்டத்தில் ஓடிவந்து விசாரிக்க, "இதுக்குதானா இப்படி சத்தம் போடுறிங்க செருப்பு தொலஞ்சி போச்சின்னா இன்னொண்ணு வாங்கி கொடுங்க. ஐந்து ரூபாய்க்கு இப்படி புலம்பறீங்களே'' என ஆறுதல் கூறினார்கள்.

அப்பா ஐந்து ரூபாய் போனதற்காக வருத்தப்படவில்லை. எனக்காக முதன்முதலில் வாங்கிய செருப்பு தொலைந்து போனதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

செருப்பு தொலைத்ததற்காக என்மீது அவர் கோவப்படவில்லை. நான்கு பிள்ளைகளில் அவருக்கு நான் செல்லப் பிள்ளை. கடைக்காரனைத் திட்டிக்கொண்டிருந்தார். நாளைக்கு வந்து அவனிடம் சண்டை போடப் போவதாக தெரிவித்தார். அம்மாதான் மறுநாள் போகவிடாமல் எப்படியோ தடுத்து விட்டார்.

என்ன நினைத்தாரோ. அவரே டவுனுக்கு நடந்துபோய் நான்காம் நாள் எனக்கு ஒரு புதுச்செருப்பு வாங்கி வந்து கொடுத்தார். அது எனது காலை விட சற்று பெரிதாக அமைந்து விட்டது. வேறு வழியின்றி அதைத்தான் போட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். அந்தச் செருப்பு ஈரம் பட்டால் அள்ளி பின்புறம் டிராயர் மற்றும் சட்டையில் சேற்றை வாரி இரைத்துவிடும். மழையில்லாத காலங்களில் போட்டுச்செல்வேன். தரை ஈரமாக இருந்தால் வெறுங்காலில்தான் செல்வேன்.
பின்னால் சேற்றை வாரி இரைக்கின்ற செருப்பில் இருந்து மேலே கவர் போட்ட தரமான நல்ல செருப்பு வாங்கி அணியவே வாழ்க்கை நீண்ட ஆயுளை சாப்பிட்டுவிட்டது.

இளமையில் கொஞ்சம் வறுமை. முதுமையில் கொஞ்சம் வசதி.

வாழ்க்கை விநோதமானது. சிறுவனாக இருந்தபோதும் இளைஞனாக இருந்தபோதும் ஆடம்பரமாக வாழ வசதி இல்லை. எப்போதாவது அறைகுறையாக வசதி கிடைத்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடுவேன். விரத்தியின் வெளிப்பாடுதான் அது.

முதுமை அதைவிட விசித்திரமானது. இளமையில் நிறைவேறாத ஆசைகளைப் பூர்த்திசெய்து பார்க்க வேண்டும் என்ற தவிப்பு ஏற்படத்தான் செய்கிறது. எல்லோருக்கும் இப்படியான மனநிலை தோன்றும் என்று சொல்ல முடியாது. தோன்றலாம். மனித மனங்கள் ஏறக்குறைய பொதுவானதுதான். டை கட்டியது இல்லை. கோட் சூட் போட்டது இல்லை. ஷூ போட்டதில்லை. ஏதோ பேன்ட் மட்டும் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அலுவலகத்திற்கு பேன்ட் போட்டுக்கொண்டு போனேன். அதுவும் இன் பண்ணிக்கொண்டு போனதே இல்லை.

ஓய்வுக்குப் பின்னர் நான்கைந்து ஆண்டு கடந்த நிலையில் சின்னபிள்ளைத் தனமாக. இதையெல்லாம் அணிந்து பார்த்தால் என்ன என்ற ஆவல் எப்படித்தான் என் மனதில் உதித்ததோ நான் அறியேன். எப்படியோ உதித்துவிட்டது என்றால் ஏன் அதற்கான காரணத்தை தோண்டிக்கொண்டு இருக்க வேண்டும். தோன்றியது அவ்வளவே.

யாரும் வீட்டில் இல்லாதபோது ஒருநாள் மகனின் பீரோவை திறந்து டையை எடுத்து கட்டிப் பார்த்தேன். முழுமையடையாத நிலையில் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு அறைக்குள் அங்குமிங்கும் நடந்தேன். நிலைக் கண்ணாடி முன்பு நின்று கொண்டு ஒப்பனையை ரசித்தேன். "ஸ்டைலாகத்தான் இருக்கிறேன். இந்த வயதிலும்' என்ற வார்த்தைகளை பிற்சேர்கையாக நானே சொல்லிக் கொண்டேன். இருபது வயதிலும் முப்பது வயதிலும் இன்பம் துய்ப்பதைப் போல உணர்ந்தேன். மகிழ்த்தேன். ஆசை நிறைவேறியதை போல மகிழ்வு. வாழ்க்கையை தொடங்கி முடித்தது போன்ற ஓர் உணர்வு. கோட்டையும் டையையும் கழட்சி இருந்த இடத்திலையே எடுத்து பிரித்தது தெரியாதவாறு வைத்துவிட்டேன்.

அதன் தொடர்ச்சிதான் காலையில் நடைப்பயிற்சிக்கு கிளம்பும்போது மகனின் ஷூவை போட்டு பார்க்கலாம் என்ற ஆவலில் இருட்டில் ஷூவை எடுக்கும்போது , தேள் இருந்து என் காலை பிடித்தது. அதற்காக விடவில்லை. மறுநாள் சீக்கிரமாக இருட்டில் கிளம்பி மகனின் ஷூவை போட்டுப் பார்த்தேன். அது என் காலுக்குப் பெரிதாக இருந்தது. நைசாக நடந்து பார்த்தேன். தாத்தாவின் செருப்பை பேரன் போட்டுக் கொண்டு தத்து பித்தென நடப்பது போல இருந்தது. வெட்கப்பட்டுக் கொண்டு கழட்டி சுவடு தெரியாது வைத்துவிட்டு என் செருப்பை மாட்டிக்கொண்டு வாக்கிங் போனேன்.

பெரும்பாலான பொருள்கள் ஆன்லைனில் கொள்முதல் செய்யும் நிலைக்கு காலம் மாறிப்போச்சு. அன்று சனிக்கிழமை. டெலிவரி பாய், " சார்' என கூப்பிட்டு பார்சல் ஒன்றை கொடுத்து விட்டுப் போனான்.

பார்சலோடு வீட்டுக்குள் சென்று ""ஏதோ பார்சல் வந்துருக்குப்பா'' என மகனிடம் கொடுத்தேன்.

""எனக்கு ஷூ ஒண்ணு ஆர்டர் பண்ணிருந்தேன். அதான்'' என்றவாறு பார்சலை வாங்கி பிரித்தவன். ""இது சின்னதா இருக்கே எனக்கு பத்தாது"' என்றான்.

" "போட்டுப் பாரேன். போடாமலே பத்தாதுன்னுறே'' என்றேன்.

""பாத்தா தெரியாதா. ரொம்ப சின்னதா இருக்கு. இது ஒங்களுக்கு சரியா இருக்கும்பா. நீங்க போட்டுக்குங்க'' என்றான்.

டக்கென சந்தேகம் வந்தது. நான் அவனுடைய ஷூவை போட்டு பார்த்ததை ஒருவேளை பார்த்திருப்பானோ. வேண்டுமென்றெ சிரிய அளவில் ஷூவை ஆர்டர் பண்ணியிருப்பானோ. சுதாரித்துக்கொண்டு" எனக்கு எதுக்கு ஷூ. நான் என்னக்கி போட்டேன். திருப்பி அனுப்பி மாத்திடுப்பா" என்றேன்.

" "ஏன் நீங்க போடக்கூடாதா என்ன?''

""நான் எங்க வெளிய போறேன் ஷூ போட்டுக்க. அதும் என்னக்கியும் இல்லாத புதுசா?''

" "தாத்தா தாத்தா டெய்லி நீங்க எனக்கு ஷூ லேஸ் கட்டி விடுவிங்கல்ல. இனி நீங்க வாக்கிங் போகும்போது என்ன எழுப்பி விடுங்க நான் உங்களுக்கு லேஸ் கட்டி விடுறேன்'' என்று கூறிக்கொண்டே பேரன் ஓடி வந்தான்.

சிரிப்பை அடக்கிக்கொண்டு அப்படியே இழுத்து மடியில் வைத்துக் கொண்டேன்.

" "யாராவது லுங்கி கட்டிகிட்டு ஷூ போட்டுவாங்களா?'' என்றேன்.

கேட்டுக்கொண்டிருந்த மருமகள், ""மாமா வாக்கிங் போக ஒரு ட்ராக் ஷூட் அமேஸான்ல ஆர்டர் பண்ணுங்க. அப்ப ஷூ போட்டுதானே ஆவணும்"' என்றாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com