2022-ஒரு பார்வை: இணையத்தில் தேடப்பட்ட நடிகைகள்!

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பெயர்களை அந்த நிறுவனம் வெளியிட்டுவருகிறது.
2022-ஒரு பார்வை: இணையத்தில் தேடப்பட்ட நடிகைகள்!

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பெயர்களை அந்த நிறுவனம் வெளியிட்டுவருகிறது. அரசியல், சினிமா, சர்ச்சை என்று பல தளங்களில்பிரபலமான அந்தப் பெயர்களை வாசிக்கையில், கையை விட்டுக் கடந்துபோன வருடத்தில் மீண்டும் ஒருமுறை வாழ்வது போன்ற உணர்வைத் தரும். அந்த வகையில், 2022-ஆம்ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளின் பட்டியலை மட்டும் இங்கே தருகிறோம்:

சுஷ்மிதா சென்

இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட பெண்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் இந்த முன்னாள் உலக அழகி. இவர் தத்தெடுத்த மகள்களின் இன்ஸ்டாபோஸ்ட், காதல் முறிவு, சுஷ்மிதாவுடன் உறவில் இருப்பதாக தன்னுடைய சுட்டுரையில் பகிர்ந்த ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி என சமூக வலைதளங்களில் பேசப்படுபவராக இருந்தார் சுஷ்மிதா சென்.

""சினிமா நான் விரும்பியதைத் தரவில்லை என்பதால்தான், கடந்த பத்து ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை. இந்த இடைவெளியானது எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதையும், எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. என்னுடைய மகள்களுக்காக முழுமையாகச் செலவிட்டேன்'' என வெளிப்படையாக கொடுத்தவர், தற்போது, திருநங்கை சமூக ஆர்வலர் கெளரி சாவந்த் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அஞ்சலி அரோரா

சமூக வலைதள பிரபலம், நடிகை, நடனக்கலைஞர் என்று வலம் வந்துகொண்டிருக்கிற அஞ்சலி அரோரா, இன்ஸ்டாகிராமில் வைரலான "கச்சா பாதம்' பாடலுக்கு நடனமாடி ஒரே இரவில் ஸ்டார் ஆனார்.

இவரின் இன்ஸ்டா, அவருடைய கவர்ச்சி புகைப்படங்களாலும், விடியோக்களாலும் நிறைந்து கிடக்கிறது. இவரது ஆபாச விடியோ ஒன்று இணையத்தில் வைரலாக, "அது நானில்லை' என்று மறுத்தார் அஞ்சலி அரோரா. இந்த பரபரப்பு காரணமாகவே, கூகுளில் தேடப்பட்ட இந்தியப் பெண்களில் ஆறாவது இடத்தில் இருக்கிறார் அஞ்சலி.

காஜல் அகர்வால்

தென்னிந்திய நட்சத்திரங்களில் அதிகம் தேடப்பட்டவர்களில் முதலிடம் பிடித்திருக்கிறார் காஜல் அகர்வால். தன்னுடைய கர்ப்பக் காலத்தையும், மகப்பேறு காலத்தையும் சமூக வலைதளப்பக்கங்களின் வழியாக தன் ரசிகர்களுக்கு அப்டேட் செய்து கொண்டே இருந்த நடிகை காஜல் அகர்வால்தான் தென்னிந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட நடிகைகளில் முதலிடத்தைப் பிடிக்கிறார்.

சமந்தா ரூத் பிரபு

விவாகரத்துக்குப் பிறகு பலரும் சமந்தாவை பற்றிய செய்திகளை அதிகம் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அவரைப் பற்றிய விமர்சனங்களும் அதிகம் வெளிவந்தன. கணவரைப் பிரிந்ததற்கு விமர்சனம், அதிகமான ஜீவனாம்சம் கேட்டார் என்று சொல்லி அதற்கொரு விமர்சனம், ஜீவனாம்சம் வேண்டாம் என்று சொன்னார் என்றொரு விமர்சனம், ஐட்டம் பாட்டுக்கு ஆடியதற்கு விமர்சனம், சினிமா பிரபலங்கள் தங்களின் ரகசியங்களை பகிரும் "காபி வித் கரணில்' பங்கெடுத்தாலும் விமர்சனம், உடல் நலமில்லாமல் படுக்கையிலிருந்தபடியே டப்பிங் கொடுத்தாலும் விமர்சனம் என்று சென்ற ஆண்டு முழுக்க, கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட நடிகைகளில் சமந்தா முன்னணியில் இருக்கிறார்.

ராஷ்மிகா

அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் நடிகை ராஷ்மிகாவும் இடம் பிடித்துள்ளார். "புஷ்பா' படத்தில் நடித்த பிறகு ராஷ்மிகாவை தேடுபவர்களின் எண்ணிக்கை இணையத்தில் அதிகரித்திருக்கிறது. அதுவில்லாமல் தமிழ் சினிமாவில் விஜய்யுடன் "வாரிசு' படத்தில் ஜோடி சேர்ந்த போது, இன்னும் அதிகப்படியான தேடலில் இடம் பிடித்தார் ராஷ்மிகா.

நயன்தாரா

பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த விக்னேஷ் சிவனை திருமணம் முடித்தது. வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானது. உடல் மெலிந்திருப்பது என்று நயன்தாராவின் சொந்த வாழ்க்கை; சினிமா வாழ்க்கை இரண்டுமே இந்த வருடம் முழுக்க வைரலுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகிக் கொண்டே இருந்தது. இதன் காரணமாக, நயன்தாராவும் இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

பூஜா ஹெக்டே

சமூக வலைதள பக்கங்களில் ரீல்ஸ், விளம்பர படங்கள், விஜய் பட நாயகி எனச் சென்ற ஆண்டு முழுக்க பிஸியாகவே இருந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிக்கும் படத்திலும், இயக்குநர் ஃபர்ஹாத் சாம்ஜியின் ஹிந்தி படமொன்றிலும், மற்றொரு ஹிந்திப்படத்திலும் நடித்து வரும் பூஜா ஹெக்டே, கூகுளில் பலர் தேடிய பிரபலங்களின் பட்டியலில் இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com