ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கால் இழுப்பதைத் தடுக்க...!

என் வயது 66. நீண்ட நாள்களாக இடது காலில் முட்டிக்குக் கீழே ரத்தக் குழாய் சுருட்டல் உள்ளது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கால் இழுப்பதைத் தடுக்க...!

என் வயது 66. நீண்ட நாள்களாக இடது காலில் முட்டிக்குக் கீழே ரத்தக் குழாய் சுருட்டல் உள்ளது. இரவில் தூங்கும்போது, தூக்கத்திலிருந்து எழும்போது, இரு கால் தொடைப்பகுதியிலிருந்து கீழ்க்கால் வரை, விட்டுவிட்டு மாறி மாறி தசை சுருங்குவதுபோல், ஏதாவது ஒரு பக்கமாக கால் இழுக்கிறது.  வாரத்தில் 3 நாள்கள் அல்லது 4 நாள்களுக்கு இவ்வாறு ஏற்படுகிறது.  இதற்கு மருந்து உள்ளதா?

- எஸ்.செல்லத்துரை,
ரனூர்.

ரத்தக் குழாயின் உட்புறவிட்டம் சுருங்கினாலோ, அங்குள்ள வால்வுகளின் செயல்பாடுகளில் ஏற்படும் தொய்வினாலோ, நுண்ணிய நரம்புகளில் வாயுவின் சீற்றத்தினாலோ ஏற்படும் உபாதையாக நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகள் தெளிவுபடுத்துகின்றன.

உங்களுடைய கடந்த கால வாழ்க்கையில் வேலையின் காரணமாக, அதிகம் நடந்திருந்தாலோ, சைக்கிள் மிதித்திருந்தாலோ, நின்றுகொண்டு வேலை செய்திருந்தாலோ, கால்களில் ஏற்படும் சோர்வை உதாசீனப்படுத்தி, வேலைப்பளுவை கால்களுக்கு அளிந்திருந்தாலோ, வாயுவை சீற்றம் கொள்ளச் செய்யும் உணவுகளைச் சாப்பிட்டு, உடலெங்கும் வெதுவெதுப்பாக எண்ணெய் குளித்தும்  பழக்கத்தைச் செய்யாதிருந்தாலோ, அவற்றின் பாதிப்பை தற்சமயம் நீங்கள் அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

மேற்குறிப்பிட்ட செயல்களுக்கு  எதிரான நிலைப்பாட்டினை நீங்கள் உறுதிபடச் செய்தால், உபாதையின் தீவிரத்தை மேலும் வலுவாவதைக் குறைத்து ஏற்பட்டுள்ள உபாதையின் சிரமங்களை வெகுவாகக் குறைக்கலாம்.

சர்க்கரை உபாதை இல்லாதிருந்து, பசியின் தன்மை நன்கு இருந்தால் நீங்கள் இனிப்புச் சுவையை உணவாகவும், மருந்தாகவும் எடுத்துக் கொண்டால் விரைவாக குணம் பெறலாம். மாறாக, சர்க்கரை உபாதை இருந்து,  பசியும் குறைவாக இருந்தால் இவ்விரு உபாதைகளின் பிரச்னையைக் குறைத்து அதன்பிறகு உடலுக்கு ஏற்றவாறு மருந்துகளைச் சாப்பிட வேண்டிவரும். 

எதுவாக இருந்தாலும், இடுப்புக்குக் கீழுள்ள உடல் பகுதியில் ஸ்திரத்தன்மையானது வலுவாக இல்லாமலிருப்பதால், சஹசராதி தைலம், மஹாமாஷ தைலம், பலா அஸ்வகந்தாதி தைலம், பிரபஞ்சன விமர்தனம் குழம்பு எனும் தைலம் போன்றவற்றில் ஒன்றிரண்டை மருத்துவர் ஆலோசனைப்படி கலந்து, வெதுவெதுப்பாகத் தடவி, முக்கால், ஒரு மணி நேரம் ஊறிய  பிறகு வென்னீரில் குளித்து, அன்றைய பகல் உணவாக, சூடான புழுங்கலரிசிச் சாதம், கருவேப்பிலை- கொத்தமல்லி துவையல், சூடான  ரசம் சாதத்தில் ஐந்து- பத்து மில்லி லிட்டர் உருக்கிச் சேர்க்கப்பட்ட விதார்யாதிகிருதம் எனும் நெய்மருந்துடன், சுட்ட அப்பளத்துடன் சாப்பிட உகந்தது. ஐந்து கிராம் அஸ்வகந்தா சூரணத்தில், பத்து மில்லி தேன் விட்டுக் குழைத்து, இந்த மதிய உணவைச் சாப்பிடும்போது, நடுநடுவே நக்கிச் சாப்பிடுவதும் நலமே.

மாலை வேளைகளில் முட்டி உயரமுள்ள ஒரு பெஞ்ச் அல்லது நாற்காலியில் அமர்ந்து, கால்களை நிதானமாக மேலும் கீழுமாக ஆட்டி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் நோக்கில், சுமார் பதினைந்து இருபது நிமிடங்கள் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

நாற்காலியில் அமர்ந்துள்ள நிலையில், கால்களை ஆட்டிக் கொண்டேயிருக்கும் பழக்கம், ஒரு காலைத் தூக்கி மறுகால் மீது போட்டுக் கொள்ளும் பழக்கம், கால் பாதங்கள் முழுவதும் பூமியில் பதியாதவாறு ஒருகால் பாதங்கள் முழுவதும் பூமியில் பதியாதவாறு, ஒருகால் பாதத்தின் மீது மற்ற பாதத்தைப் போட்டு அமர்வது ஆகியவற்றை நீங்கள் முழுவதுமாகத் தவிர்ப்பது நலம்.

இரவில் படுப்பதற்கு முன், கால்களை இதமாகப் பிடித்துவிடுதல், பாதங்களில் விரல்களால் சுகம் தருமளவிற்கு அழுத்திவிடுதல் போன்ற சிகிச்சை முறைகளை வீட்டிலுள்ள மற்றவர்களால் உங்களுக்கு உதவி செய்வதும், உப்பு கரைத்து வென்னீரில் கால் பாதங்கள் மூழ்குமளவிற்குச் சிறிது நேரம் வைத்திருந்தலும் தங்களுக்கு நல்லது.  

குளிர்காற்று உடலில் படாதவாறு கம்பளியால் போர்த்திக் கொண்டு படுத்துறங்க முயற்சி செய்யவும். தலைப்பகுதி கிழக்கு நோக்கி வைத்து படுத்துறங்குவதால், ரத்த ஓட்டம் கால்கள் வரை சீராக இருக்கும். எந்தவொரு குளிர்ந்த பொருளையும் இரவில் படுப்பதற்கு முன் அருந்த வேண்டாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com