திரைக் கதிர்

கார்த்தியை வைத்து "சர்தார்' படத்தில் பெரிய கவனம் ஈர்த்தவர், இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.
திரைக் கதிர்

கார்த்தியை வைத்து "சர்தார்' படத்தில் பெரிய கவனம் ஈர்த்தவர், இயக்குநர் பி.எஸ்.மித்ரன். ஷூட்டிங் சமயத்தில் இருவருக்குமிடையே ஏற்பட்ட மன வருத்தத்தால் "சர்தார்  2' எடுக்க பெரிய சம்பளம் பேசப்பட்ட நிலையிலும் அதைத் தவிர்த்துவிட்டு, கன்னட நடிகர் யாஷிடம் போய் கதை சொன்னார் மித்ரன். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சொல்லப்பட்ட அந்தக் கதை யாஷுக்கு ரொம்பவே பிடித்துப்போயிருந்தாலும், "இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேலாகும்' எனக் கைவிரித்துவிட்டாராம். யாஷ் அளவுக்குத் தமிழில் நல்ல உடற்கட்டுகொண்ட ஹீரோக்கள் இல்லை என்பதால், அடுத்து என்ன செய்யலாம் என்கிற யோசனையில் இருக்கிறாராம் மித்ரன்.

ரஜினியின் "தர்பார்', "பேட்ட' படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடந்தது. ஆனால், "அண்ணாத்த' படத்திற்கு நடக்கவில்லை. இதனால் "ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் ஷெட்டி, தமன்னா, ஜாக்கி ஷெராப் என மல்டி ஸ்டார்களின் வருகை, விழாவைப் பிரமாண்டமாக்க உள்ளது. இம்மாதம், அதாவது வருகிற 29ஆம் தேதி சென்னையில் இந்த விழாவை நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். அநேகமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறலாம் என்றும் சொல்கின்றனர்.

ஒரு பக்கம் வரவேற்பு... மற்றொரு பக்கம் எதிர்ப்பு... என வந்தாலும் கணிசமான தொகையை வாரி குவித்திருக்கிறது "மாமன்னன்'. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசுக் காரை இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி பரிசாக அளித்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி, "ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களைக் கதையுடனும் களத்துடனும் தொடர்புப்படுத்தி கருத்துகளைப் பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி...'' என பகிர்ந்துள்ளார்.

"எமர்ஜென்சி' படத்தில் அப்படியே இந்திரா காந்தியைப் போல உருமாறியிருக்கிறார் கங்கனா ரனாவத். "இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தியபோது நடந்த அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், பெரிய அளவுக்குச் சர்ச்சைகளை உருவாக்கும்' என்கிறார்கள். சமீபத்தில் ரிலீஸான டீசரும் காங்கிரஸ்காரர்களை உஷ்ணமாக்கியிருக்கிறது. இவ்வளவு சர்ச்சைகள் மிகுந்த இந்தப் படத்துக்கு நம்மூர் ஜி.வி.பிரகாஷ் மியூசிக் என்பதுதான் ஹைலைட். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com